Saturday, April 2, 2011

புரட்சிக்கனல்



மேலிருந்து சூரியன் உதிர்க்கும் உஷ்ணப் பிரகாசத்தை முழுவதுமாகத் தன் மணலின் இடுக்குகளில் உள்வாங்கிச் சீறிக் கொண்டிருந்தது, அந்த நிலம். உஷ்ண மூலகங்களைச் சேமித்து வைத்துச் சீற்றத்துடன் வெளிப்படுத்தும் கொதிப்பும், கொடூரமும் அதன் பிரத்தியேக இயல்பு. அந்த இயல்புதான், பாலைவனம் என்ற பெயரை அதற்கு வழங்கியிருக்கக் கூடும். தண்ணீர், அந்த நிலத்தின் தன்மை குறித்து அச்சம் கொண்டிருந்தது. எத்தனை துளிகள் விழுந்தாலும், விழுந்த மறுகணமே புதைந்து மறைந்து காணாமல் போய்விடுகின்றன. ஆவியாகி மேலே செல்கின்றதா? அடியில் கனலும் உஷ்ணம் உறிஞ்சிக் கொள்கிறதா? என்பதை நிதானமாய் நின்று கவனிப்பதற்கெல்லாம் அவகாசம் இருப்பதில்லை. 

செங்குத்தாக விழும் சூரிய ஒளியின் கொடுந்தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் பாங்கிலமைந்த கூடாரமொன்றின் உட்புறத்தில் குளிர்மையான பிரகாசம் வழியும் புதுமையான அழகு மிதந்து கொண்டிருந்தது. மிக உஷ்ணமான அந்தக் கணப்பொழுதிலும், குளிர்மையைப் பிரசவிக்கும் அற்புதப் பிரகாசமாய் அது எழுந்து நிற்பதற்குரிய காரணத்தை அங்கிருந்த எல்லோரும் அறிந்திருந்தனர். ஏனெனில், அது இமாம் ஹ§ஸைனின் ஒளி. ஆன்மீகத்தினதும், தியாக நெறியினதும் செழுமை கட்டிப்புரளும் தெய்வீகத்தின் மூல ஊற்றிலிருந்து பொங்கிப் பிரவகிக்கும் சத்தியத்தின் ஒளி, அது.


நேரடியாகக் காண்பவர்களினதும், எழுத்துகள், வாய்மொழிப் பரிமாற்றங்கள் மூலம் அறிபவர்களினதும் கண்களில் ஜீவகளையைத் தோற்றுவித்து வாழ்வின் அறியாமை இருளில் வெகுண்டெழும் அழிவின் கிரணங்களை முற்றாகத் தகர்த்தெறியும் பண்பை முழுமையாகக் கொண்ட ஒளிவெள்ளம் அது. ஆன்மீகத்தின் நறுமணம் முழுவதுமாகக் கொண்ட நேர்வழியின் பவித்திரமான இழைகளால்தான் அது இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. அந்த நேர்வழியில்தான் உலகின் ஒட்டுமொத்த வாழ்க்கை இலட்சியமும் இழுபட்டு நேர்பட்டுள்ளது.

இமாம் ஹ§ஸைன் எழுந்து நின்றார். சிறிய அந்தக் கூடாரத்தில் தன்னைச் சுற்றி அமர்ந்துள்ள குடும்பப் பெண்களையும் குழந்தைகளையும் பரிதாபம் வழியும் தன் அன்புப் பார்வையால் தழுவினார்.

உலகத்தை நேர்வழிப்படுத்தத் தோன்றிய உத்தம நபியின் பரிசுத்தக் குடும்பத்தினர், அவலங்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் உள்ளாகிச் சடைவுற்றுத் துவண்டுள்ள நிகழ்காலக் குரூரம் அவரது கண்களில் பனித்துளியாகப் படர்ந்தது. 

என்ன கொடூரம் இது!

ஒரு சமூகம் குறிக்கோளின்றி வாழலாமா? குறிக்கோளை இனங்காண்பித்துத் தந்தவருக்கு, அவரது குடும்பத்தினரைக் கொடுமைப்படுத்திக் கொலை செய்வதுதான் கைம்மாறா? உலகின் எந்தவொரு பாவச்செயலும் இதை விடவும் இழிவானதாக இருக்க முடியாது.

பெண்களின் கண்கள் சிந்திக் கொண்டிருப்பது வெறும் கண்ணீரல்ல என்பதை இமாம் ஹ§ஸைன் நன்கறிவார். முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால ஒழுக்கச் சூழல் குறித்த ஐயமும், அதன் வெளிப்பாட்டுச் சோகமும், அவர்கள் வடிக்கும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியின் ஈரத்தன்மையுடனும் இணைந்து இறுகியுள்ளன. அந்தக் கண்ணீரும் அவர்களது இறுதி முயற்சிதான். தமது பிள்ளைகளையும் சகோதரர்களையும் களத்தில் இறக்கி, அடக்குமுறையும் வழிகேடும் குமுறும் கொடூர அதிகாரத்தை நோக்கிய பலமான எதிர்க்குரலை ஏலவே அவர்கள் பதிவு செய்துவிட்டார்கள். அந்தப் பதிவு முயற்சியில் இழந்த தம் பிள்ளைகளுக்காகவும், சகோதரர்களுக்காகவும் அவர்களது கண்கள் சிந்தியது, ஐயமற ஆனந்தக் கண்ணீர்தான்.

அங்கு நிலவிய துன்பியற் சூழல் இமாம் ஹ§ஸைனின் புனித நெஞ்சில் சோகமாய் மண்டியது. அவரைப் பொறுத்தவரை இப்போது எஞ்சியிருப்பது அவரது உயிர் மட்டுமே. அதையும் கொத்திச் சென்று குதறுவதற்கு, இரத்த வெறி பிடித்த வெற்றுக் கூட்டமொன்று, கூடாரத்திற்கு வெளியே பரந்துள்ள பாலைநில மணலில் பாதங்கள் அழுந்தக் காத்துக் கொண்டிருக்கிறது.

தான் ஷஹீதாகி விட்டால், இந்தப் பெண்களினதும், குழந்தைகளினதும் நிலை என்னவாகுமோ என்பதே இமாம் ஹ§ஸைனின் பிரதான கவலைக் களமாயிற்று. தன் கண்ணெதிரே, சிறுவர்களின் பிஞ்சு நெஞ்சங்களைத் தம் அம்பால் துளைத்தும், தாகத்தால் துடித்த குழந்தைகளின் குரல் வளையை அறுத்தும் தம் செயலின் கொடூரங்காட்டி அச்சுறுத்திய மிருக நடத்தையுடையவர்களிடமிருந்து, பெண்களுக்கான கண்ணியத்தையும் பாதுகாப்பையும் எப்படி எதிர்பார்க்க முடியும்!

குழப்பம் விளைவிக்கவோ, சமூகத்தைக் கூறுபோடவோ எண்ணி இமாம் ஹ§ஸைன் இங்கு வரவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றி, அரண்மனையைக் கட்டியாள வேண்டுமென்ற குறுகிய உலகாசைகளெவையும் அவருக்கிருந்ததில்லை. அவரது நோக்கம் புனிதமானது; இலட்சியம் தூய்மையானது.

கூபாவாசிகள் தொடராக அனுப்பிக் கொண்டிருந்த அழைப்புக் கடிதங்கள் மட்டும் இமாம் ஹ§ஸைன் இங்கு வருவதற்குக் காரணமல்ல. முஸ்லிம் சமூகத்தின் தோற்றுவிப்பாளரான அவரது பாட்டனார், தீமைகளுக்கெதிரான புரட்சியை வாழ்க்கைக் கடமையெனப் பிரகடனப்படுத்தி விட்டுச் சென்றுள்ள போது, இமாம் ஹ§ஸைன் அநீதியைக் கண்டு மௌனம் சாதித்திருப்பதென்பது எப்படிச் சாத்தியமாகும்!

இஸ்லாமிய தலைமைத்துவம் என்பது புனிதமானது. வெறும் அதிர்ஷ்டமும் அதிகாரச் சூழ்ச்சியும் தலைமைத்துவக் களத்தில் இருள் விழுத்திக் கொண்டிருக்கும் போது, இறைத்தூதரின் பேரர், எவ்வித உறுத்தலுமின்றி எப்படி அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்!

சண்டையிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென இமாம் ஹ§ஸைன் நினைக்கவில்லை. இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமான உமையா ஆட்சியின் கொடூரத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பதும், அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே தோற்றுவிப்பதுமே அவரது பிரதான குறிக்கோள்களாயின.

ஆயுதங்களினால், அதிகார வெறியர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என சிறுபிள்ளைத்தனமாய் எதிர்பார்ப்பதற்கு இமாம் ஹ§ஸைன் ஒன்றும் உலக விவகாரம் பற்றிப் பூரண அறிவில்லாதவர் அல்லர். முஸ்லிம் சமூகத்தின் புனிதத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்; நடைமுறையிலுள்ள உமையா ஆட்சியின் சமய முரண்பாட்டுப் பண்புகளை உலகறியச் செய்ய வேண்டும். இல்லையெனில், அரண்மனை ஆடம்பரங்கள், மன்னராட்சி முறைமை, சமயக் கடமைகளின் புறக்கணிப்பு, பெண்மோகம், பாவச் செயல்களின் கட்டவிழ்ப்பு முதலானவையே முஸ்லிம் உலகின் பிரத்தியேக அடையாளங்களாய் நிறுவப்படும் பெரும் அபாயச் சூழலொன்று ஏற்பட்டுவிடும் என்பதை இமாம் ஹ§ஸைன் தெளிவாகவே அறிந்திருந்தார். அந்த அபாயத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை விடுவிக்கும் தூய நோக்குடனேயே தன் புரட்சியை அவர் மேற்கொண்டிருந்தார். 

சூரியன் மேற்கு நோக்கிச் சரியத் தொடங்கிற்று. சேமித்து வைத்த சொத்துகளை வெளிப்படுத்துவது போல், மணல் பரப்பு உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருந்தது. கூடாரத்திலிருந்து வெளிப்படுவதற்கு இமாம் ஹ§ஸைன் தயாரானர். முன்றலில் அவரது குதிரை காத்திருந்தது. நிலைமைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் ஏற்பத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளப் பயிற்சி பெற்றிருந்த அது, புழுதிப் படலம் வானுயரக் கிளம்பிச் செறிந்திருந்த கர்பலாத் திடலை உக்கிரமாகப் பார்த்தவாறே கனைத்துக் கொண்டிருந்தது.

இமாம் ஹ§ஸைன், தன் அருமைச் சகோதரி ஸைனபின் அருகில் வந்தார். கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடத் தன் உதடுகளைக் குவித்து நெற்றியில் பதித்த சகோதரியின் அன்பு முத்தத்தில் நெஞ்சம் இளகிக் கண்களை மூடிக் கொண்டார். தன் இதயத்தின் விதைக்குள் இருக்கின்ற இஸ்லாத்தின் கண்ணியத்தை, இறுக மூடிய விழிகளுள் மேலும் பத்திரப்படுத்திக் கொள்ள முயன்றார். உதிரும் ரோஜாவின் இரகசியத்தை வெளிப்படுத்தும் ஒளிமயமான பனித்துளிகள் போல், அவரது விழிநீர் மின்னிற்று.

தன் சகோதரியைப் பார்த்துச் சொன்னார்: “ஸைனப்! நான் புறப்படுகிறேன். இங்கிருந்து வெளியேறிச் செல்லும் நான், மீண்டும் இங்கு வருவதோ, மீண்டும் உங்களைச் சந்திப்பதோ சாத்தியப்படப் போவதில்லையென்பதை நான் நன்கறிவேன். அதனால் எனக்குப் பின் அஹ்லுல்பைத்தினரை வழிநடத்தும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன். எனக்கென்று ஒரு கடமை இருக்கிறது. அநீதிக்கும், அராஜகத்துக்கும் எதிரான புனித பாதையில் என் பாதங்கள் பயணிக்கின்றன. அல்லாஹ்வின் மார்க்கத்தை அலட்சியப்படுத்தவும் அவமானப்படுத்தவும் விழையும் நயவஞ்சகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்து, அவர்களது மூர்க்கத்தனத்தையும், சமயச் சுவர்களுக்குப் பின்னாலான கொடுமைகளையும் உலகறியச் செய்யவும், இஸ்லாத்தின் புனிதத்துவம் இத்தகைய இழிவுகளை விட்டும் வெகுதூரமானது என்பதைப் பகிரங்கப்படுத்தவும் கருதியே நான் இங்கு வந்தேன். என் நோக்கம் நிறைவேறும் இறுதித் தருணம் இது. அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் வழிமொழிந்து வாழ்த்துரைத்த பரிசுத்தப் பாதையில் நான் புறப்படுகிறேன். எமது தூய இலட்சியங்களை அல்லாஹ் நிறைவு செய்து தருவானாக!”

உறையுள் தூங்கிக் கொண்டிருந்த வாளை உருவியெடுத்துக் கொண்டு, கூடாரத்தின் வாயிலை விலக்கியவாறு வெளிப்பட்டார் இமாம் ஹ§ஸைன். அவரது பரிசுத்த தேகத்தின் பிரகாச வெள்ளம் கண்டு, சூரியன் விழிபிதுங்கி, கருமேகக் கூட்டங்களின் பின் பயந்து பதுங்கிற்று. வாளில் பட்டுத் தெறித்த ஒளிப்பிழம்பு, புழுதியை ஊடறுத்துப் பாய்ந்து சென்று எதிரிகளின் பயமுறுகும் கண்களினூடு நடுக்கமாய்ப் படிந்து அவர்களது இருள் விழுந்த மனச்சுவர்களை இறுகப் பிசைந்திற்று.

நடையை நிறுத்தித் திரும்பி, ஆங்காங்கே, மணலில் நட்டு வைக்கப்பட்டிருந்த தனது குழுவினரின் கூடாரங்களை நோக்கிப் பார்வையை எறிந்தார் இமாம் ஹ§ஸைன். ஒவ்வொரு கூடாரமும் நேர்வழியின் வெளிச்சப் படிமங்களை உள்வாங்கித் திமிறும் கொழுத்த சுவர்க்கச் சோலையை அவருக்கு நினைவுபடுத்தின. சற்றுத் தொலைவிலுள்ள கர்பலாவின் கொதி மணலிலிருந்து விஷப் பாம்பின் தீநிழலாய் விஸ்வரூபமெடுத்து வரவுள்ள தன் இறப்பின் செய்தி, இந்தக் கூடாரங்களின் உள்ளக நிலையில் ஏற்படுத்தவிருக்கும் அவலம் தழுவிய சோகமாற்றம் பற்றிய சிந்தனை அவரை வாட்டிற்று. ஆனாலும், அந்த அவலம் பிற்காலத்தில் தோற்றுவிக்கவிருக்கும் சமூக விழிப்புணர்வுத் தீபங்களையெண்ணித் தன் கவலைகளை மனதுக்குள் புதைத்துக் கொண்டார் இமாம் ஹ§ஸைன்.

குதிரை அவரை நெருங்கிற்று. ஐம்பத்தேழு வயதிலும் இளமை முறுக்குக் குறையாத ஆரோக்கிய உடலைக் கொண்டிருந்த இமாம் ஹ§ஸைன், இலாவகமாகத் தாவிக் குதிரையில் ஏறினார். கண்களில் தீட்சண்யம் வழியக் கைகளைச் சூடேற்றினார். இடது கை, குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்க, வலது கையோ வாளைச் சுழற்றியது. தலைக்கு மேலே ஒவ்வொரு முறையும் சுழன்று வரும் போது, வாளின் நீண்ட கூர்மை காற்றைக் கிழித்துக் கனமான கீற்றொலியைக் கிளப்பிற்று.

பல்லாயிரக் கணக்காகத் திரண்டிருந்த போதும், ஆஜானுபாகுவான குதிரையிலேறி வாளைச் சுழற்றிக் கொண்டே புயலாய்ச் சீறிவரும் இமாம் ஹ§ஸைன் எனும் தனிமனித ஆளுமைச் சீற்றம் கண்டு, உமையாப் படை மிரண்டு பின்வாங்கிற்று.

இஸ்லாத்தை இழிவுபடுத்தத் தோன்றிய அந்த நயவஞ்சகக் கும்பலை நோக்கிச் சீறிக் கொண்டு செல்லும் இமாம் ஹ§ஸைனின் வீரச்செழுமையைக் கூடாரத்திலிருந்தவாறே பதட்டம் புடைக்கப் புடைக்கப் பார்த்துக் கொண்டிருந்தது பெண்கள் குழு. இமாம் ஹ§ஸைனின் வலிமையான கை இறுக்கிப் பிடித்துள்ள கூர்மையான வாள், அல்லாஹ்வுக்குப் பிடிக்காத சமய விரோதிகள் பலரின் தலைகளைத் துண்டாடி பூமியைச் சுத்தப்படுத்தப் போகிறது என்பது அவர்கள் எல்லோரும் நன்கறிந்ததுதான்.

No comments:

Twitter Bird Gadget