- ஹாபிஸ்
நாட்டில் கல்விச் சமூகமொன்றை உருவாக்குகின்ற பாரிய பணியை பாடசாலைகள் நிறைவேற்றுகின்றன. பாடசாலைகளின் இப்பணிக்கு அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களே உறுதுணையாக நிற்கிறார்கள். பாடசாலைகளின் வெற்றி, தோல்விகளில் ஆசிரியர்களின் பங்கு பிரதானமானது. அவர்கள் தமது பங்கை சிறப்பாக மேற்கொள்ள தொழிற்பயிற்சி, வாண்மை விருத்தி என்பன அவசியமாவது போலவே அவர்களது
கற்பித்தல் செயன்முறையை மதிப்பீடு செய்வதும்
முக்கியத்துவம் பெறுகின்றது.
நடைமுறையில் ஆசிரியர் மதிப்பீடு
என்பது, உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் பாடசாலைகளில் இடம்பெறுகின்றது. உள்வாரி
மதிப்பீடு என்பது, ஒரு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களை அதே பாடசாலையை
மேற்பார்வை செய்யும் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர் போன்றவர்கள் மதிப்பீடு செய்வதைக்
குறிக்கின்றது. வெளிவாரி மதிப்பீடு என்பது, பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களை
கோட்டக் கல்வி அலுவலகம், வலயக் கல்வி அலுவலகம், மாகாணக் கல்வி அலுவலகம் போன்ற
அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலய மற்றும் மாகாணக்
கல்விப் பணிப்பாளர்கள் போன்றவர்கள் மதிப்பீடு செய்வதைக் குறிக்கின்றது.
இந்த மதிப்பீட்டுச் செயன்முறையின் போது, ஆசிரியர்களின் கற்பித்தல் செயன்முறை, அவர்களது செயலாற்றுகை, அவர்களிடம் கற்கும் மாணவர்களின் அடைவுகள், வகுப்பறை கவிநிலை, பாடசாலைச் சூழல் போன்றன மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒழுங்கொன்றில் புள்ளிகள் இடப்பட்டு பொதுமைப்படுத்தப்படுகின்றன.
ஆசிரியர்களது கற்பித்தல் செயற்றிறனை
மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டதாக வெளிவாரி மதிப்பீட்டுச் செயன்முறை அமைந்துள்ள
போதிலும், அது பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக, மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும் ஆசிரியர்களினால் வலுவான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
வெளிவாரி
மதிப்பீடுகளில்
உள்ள
குறைபாடுகள்
வெளிவாரி மதிப்பீட்டின் போது ஆசிரிய
ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் மதிப்பீட்டு அதிகாரிகளாகச் செயற்பட்டு ஆசிரியர்களை மதிப்பீடு செய்கின்றனர். இவ்வாறு மதிப்பீடு செய்பவர்களில் பல்வேறு குறைபாடுகளை அடையாளங் காண முடிகின்றது. இவர்கள், ஆசிரியர்களை மதிப்பீடு
செய்யும் செயன்முறை தொடர்பாக கற்கை நெறிகளையோ, பயிற்சிகளையோ பூர்த்தி செய்தவர்கள் அல்ல. கற்றல், கற்பித்தல் செயலொழுங்கில் ஏற்பட்டு வரும் அண்மைக்கால மாற்றங்கள், நவீன சிந்தனைகள் தொடர்பாக தம்மை இற்றைப்படுத்திக் கொள்பவர்களும் அல்ல. பலர், அரசியல் சிபாரிசுகளினால் பொறுப்புகளுக்கு வந்தவர்களேயன்றி, முறையான தகுதி அல்லது முறையான நியமனத்தின் அடிப்படையில் வந்தவர்கள் அல்ல. இதனால், ஆசிரியர்களுடன் சுமுகமான நல்லுறவைப் பேண அவர்களால் முடிவதில்லை.
மதிப்பீட்டுப் பணியில் அமர்த்தப்படுபவர்கள், ஓர் ஆசிரியரை, ஒரு பாடவேளையின் போது அவதானிப்புக்கு உட்படுத்துவர். இவ் அவதானிப்பில், ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடு, ஆளுமை, கற்பித்தலுக்கான திட்டமிடல், மாணவர் பிரதிபலிப்புகள், மாணவர் அடைவுகள் போன்றன தொடர்பாக கவனம் செலுத்தி, போதுமான பின்னூட்டங்களை ஆசிரியர்களுக்கு வழங்குவர். இவற்றிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. மதிப்பீட்டுச்
செயன்முறையின் பிரதான பகுதி பின்னூட்டல் வழங்குவதாகும் என்ற போதிலும், மதிப்பீட்டின் முடிவில் பொருத்தமான எவ்விதப் பின்னூட்டங்களும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. 40 நிமிடங்கள் கொண்ட ஒரு பாடவேளை, ஆசிரியர்களின் கற்பித்தல் செயலாற்றுகைகளை முழுமையாக மதிப்பீடு செய்வதற்கு ஒரு போதும் போதுமானதல்ல என்பதனால், வழங்கப்படும் மதிப்பீட்டுப் புள்ளிகள் மிக நியாயபூர்வமானதாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், வெவ்வேறு மதிப்பீட்டாளர்கள் வெவ்வேறு ஆசிரியர்களை மதிப்பீடு செய்கின்றனர். இதனால், மதிப்பீட்டாளர்களின் தனியாள் வேறுபாடுகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளில் செல்வாக்குச் செலுத்தும் நிலை தோன்றுகின்றது. சில மதிப்பீட்டாளர்கள், தாம் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு குறைவான புள்ளிகளை வழங்குவதே தமக்குப் பெருமை என்று கருதிக் கொள்கின்றனர். வேறு சிலர், ஆசிரியர்களுடன் முரண்பட்டுக் கொள்ளக் கூடாது என்பதற்காக தாராளமாக புள்ளிகளை அள்ளி வழங்குகின்றனர். மற்றும் சிலர் தமக்குப் பரிச்சயமான ஆசிரியர்களுக்கு பொருத்தமற்ற விதத்தில் அதிக புள்ளிகளை வழங்கும் நிலையும், தமக்கு விரோதமான ஆசிரியர்களுக்கு அநீதியான
முறையில் மிகக் குறைவான புள்ளிகளை வழங்கும் நிலையும் உள்ளன.
அத்தோடு, மதிப்பீட்டுப் படிவத்தின் புள்ளித் திட்டத்தில் உள்ள சுட்டிகள் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டனவாக உள்ளமையால், திட்டமான புள்ளி வழங்க முடியாத நிலை தோன்றுகின்றது. உதாரணமாக, குறைவாக லீவு எடுத்தல், சிறந்த ஆளுமை, மனதைக் கவரும் பாடத்தொடக்கம் போன்ற சுட்டிகள் உள்ளன. இவற்றுக்கு புள்ளியிடுவதில் மதிப்பீட்டாளருக்கு துல்லியமான புள்ளித்திட்டம் வழங்கப்படவில்லை. மற்றும், மதிப்பீட்டுப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மதிப்பீட்டாளர்கள் முழுமையாகப் பின்பற்றுவதில்லை. உதாரணமாக, தனிநபர் பொறுப்பும் ஆளுமையும் விடயத்திற்கு உரிய புள்ளியிடும் போது, அதிபர் அல்லது முகாமைத்துவக் குழுவுடன் கலந்துரையாடி உரிய கோவைகளைப் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், குறித்த புள்ளியிடலின் போது, இது பின்பற்றப்படுவதில்லை.
மதிப்பீட்டுக்
குறைபாடுகளினால்
ஏற்படும்
பிரச்சினைகள்
வெளிவாரி மதிப்பீட்டுச் செயன்முறை மேற்குறிப்பிடப்பட்ட பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளமையினால், அச்செயன்முறையினால் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் முழுமையாக அடையப்படுவதில்லை. அத்தோடு, அது ஆசிரியர்களுக்கும் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்கும் பிரச்சினைகளையும் உண்டுபண்ணுகின்றது.
மதிப்பீடு நடைபெறும் நாளின் கற்றல்
கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவது முக்கிய பிரச்சினையாகும். அதிகாரிகளின்
வினாக்களுக்கு விடையளித்தல், அவர்கள் கேட்கும் தகவல்களையும் கோவைகளையும்
உடனுக்குடன் வழங்குதல், அவர்களை உபசரித்தல் போன்ற நடவடிக்கைகளிலேயே ஆசிரியர்கள்
ஈடுபட பணிக்கப்படுவதால், அன்றைய நாளுக்குரிய கற்பித்தல்களை சரிவரக் கவனிக்க
முடியாத நிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுகின்றது.
மேலும், சில மதிப்பீட்டு அதிகாரிகள்,
பெரும் அதிகாரத் தொனியுடன் நடந்து கொள்வதனால், அவர்கள் வகுப்பறையில் மாணவர்கள்
முன்னிலையில் ஆசிரியர்களை அவமானப்படுத்த முனைகின்றனர். இவ்வாறான அவமானங்கள், பாரபட்சமான புள்ளி வழங்கல்கள் போன்ற செயற்பாடுகளினால்,
பாதிக்கப்படும் ஆசிரியர்கள் கடமையில் விரக்தியுற்று பொறுப்புகளை உதாசீனப்படுத்தும்
நிலைக்கு ஆளாகின்றார்கள். வெற்றிகரமான கற்பித்தலில் ஈடுபட்டு
வந்த ஆசிரியர்கள் கூட, இதன் பின்னர் தமது கடமையில் அலட்சியமாக
நடந்து கொள்ளும் நிலைக்கு உட்படுகின்றார்கள்.
மதிப்பீட்டுப் பெறுபேறுகள் திருப்திகரமாக
இல்லாத போது, அதிபர் - ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் - ஆசிரியர்கள் முரண்பாடுகள்
தலைதூக்குகின்றன. இது பாடசாலையின் நாளாந்த கற்றல் கற்பித்தல்
செயற்பாட்டை மட்டுமன்றி, ஆசிரியர்களின் மனநிலை மற்றும் ஆளுமையைக்
கூடப் பாதிப்பதாக அமைந்து விடுகின்றது.
அத்தோடு, வெவ்வேறு அதிகாரிகளினால் வெவ்வேறு ஆசிரியர்கள்
தொடர்பில் பெறப்பட்ட மதிப்பீட்டுப் புள்ளிகள், முடிவில் பொதுமைப்படுத்தப்படுவது
ஆசிரியர்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.
ஏனெனில், துல்லியமான புள்ளித் திட்டம் இன்மை,
மதிப்பீட்டாளரின் பாரபட்சம், இறுக்கம்,
தளர்வு போன்றன இப்புள்ளிகளில் செல்வாக்குச் செலுத்துவதனால், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகள் மிகத் திருத்தமானவை எனக் கூற முடியாதுள்ளது.
மேலும், மதிப்பீட்டுக்காக வருகின்ற அதிகாரிகள் சிலர்,
மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுகின்ற ஆசிரியர்களை விட வயது, அறிவு, தகுதி, அனுபவம்,
சமூக அந்தஸ்து போன்றவற்றில் குறைவான நிலையைக் கொண்டுள்ளமையினால்,
அவர்களது மதிப்பீட்டை ஏற்றுக் கொள்ளும் மனநிலை சிரேஷ்ட ஆசிரியர்கள் பலருக்கு
இருப்பதில்லை. இது இரு சாராருக்குமிடையே மனக்கசப்பையும் முரண்பாடுகளையும்
உண்டுபண்ணி விடுகின்றது.
வெளிவாரி மதிப்பீட்டுச் செயன்முறையிலுள்ள
குறைபாடுகளால் மேற்குறிப்பிடப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர். இது ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி, அவர்களிடம் கற்கும் மாணவர்களுக்கும் பாடசாலைச் சமூகத்துக்கும் பெரும் இழப்புகளையும்
சங்கடங்களையும் ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது.
எனவே, ஆசிரியர்களின்
கற்பித்தல் திறனை மேம்படுத்துவதை பிரதான நோக்காகக் கொண்டு வெளிவாரி ஆசிரியர் மதிப்பீட்டுச்
செயன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், இந்நோக்கத்தை
முழுமையாக அடைந்து கொள்ள முடியாதளவு பல்வேறு குறைபாடுகள் அவற்றில் பிணைந்துள்ளன.
இக்குறைபாடுகளை இனங்கண்டு மாற்றியமைத்து, நோக்கத்தை
முழுமையாக அடைந்து கொள்ளும் வகையில், இச்செயன்முறை திட்டமிடப்படுவது
காலத்தின் தேவையாகும்.