அறிமுகம்

ஸபீர் ஹாபிஸ்

  • புகைப்படங்கள் 
  • எனது நூல் வெளியீட்டு விழாப் புகைப்படங்கள் :
  1. உணர்வுகளால் வாழ்வை வரைதல் 
  2. பாலைவனத்து பயணங்கள் 
  3. அல்ஹஜ் - நடைமுறை வழிகாட்டல்கள் 
  4. தியாகச் செம்மல் இமாம் ஹுஸைன் 
  • எனது உரைகள்
  • பிரமுகர்களுடனான சந்திப்புகள்
  • பரிசுகள்
அறிமுகம்:

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூவரசை மரங்களின் சொர்க்கபுரியாக விளங்கிய ஏறாவூர் நகரில், தந்தை முஹம்மது உசனாருக்கும் தாய் பாத்தும்மாவுக்கும் நான்காவது புதல்வனாக 1978 ஜூலை 15ல் ஸபீர் ஹாபிஸ் எனும் நான் பிறந்தேன். 

இரண்டாவது சகோதரர் முஹம்மது பஷீர் அக்காலப்பகுதியில் சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளிலும் இலங்கை வானொலியின் தமிழ், முஸ்லிம் சேவைகளிலும் சிறுகதைகள் எழுதியனுப்பி, சிறுதொகைப் பணமும், வாழ்த்தும் பெற்று வந்த காலத்தில், அவரது இடுப்பில் ஏறியமர்ந்து சில்மிஷங்கள் செய்யும் சிறுவனான எனக்கும் எழுத்தின் மீது ஆசை துளிர்விட்டதில் வியப்பில்லை.

சகோதரரின் சிறுகதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகியும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டும் சமூகத்திலும் குடும்பத்திலும் வரவேற்பையும் பிரமிப்பையும் பெற்றுக் கொடுத்த நிகழ்வு, என்னுள் சிறியதொரு தீச்சுடராய் பற்றிற்று. 

எனது கையில் வந்தமர்ந்த பேனா, கவிதை, சிறுகதை எனும் பெயரில் நீண்ட காலமாய் கிறுக்கி வந்தவை, இலங்கையின் இரண்டாந்தரப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பிடித்தமை அப்போது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய உற்சாகமாகவும் அங்கீகாரமாகவும் எனக்கமைந்தன.

நானும் எழுத்தாளனானேன். 

எனினும், எனது பெரியப்பா எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுடனான நெருங்கிய உறவின் பின்பே உண்மையான சிறுகதைகள் பற்றிய அறிமுகமும் புரிதலும் எனக்குக் கிடைக்க, ஏற்கனவே எழுதிவிட்ட கதைகளுக்காக உள்ளுக்குள் வருந்திக் கொண்டு தீவிர வாசிப்பில் இறங்கியதன் விளைவாகச் சற்று ஆறுதல் தரும் இலக்கியப் படைப்புகளையும், இலங்கையில் நல்ல எழுத்தாளர்களிடையே அறிமுகமும் கிடைக்கப் பெற்றமை மகிழ்ச்சி தருவதாகும். 

சமயக் கல்வியில் நீண்ட காலத்தைச் செலவிட்டதன் விளைவாக, ஆரம்பத்தில் சமய இலக்கியங்களில் தீவிர வாசிப்பும் தேடலும் அவாவாகவும் நிர்ப்பந்தமாகவும் என் வாழ்வில் இடம்பெற்றன. அதன் விளைவாக சமய நூல்கள் பலவற்றை எழுதவும் மொழிபெயர்க்கவும் வாய்ப்புக் கிடைத்ததுடன் அவற்றுக்கு ஒரு சமூக வட்டத்துக்குள் நல்ல வரவேற்பும் கிடைத்தன. 

தமிழ் இலக்கியம் எனக் களமிறங்கிய பின், முதலாவதாக வெளியிட்ட பாலைவனத்து பயணங்கள் கவிதைத் தொகுதி, அதைத் தொடர்ந்தவையான ஆற்றங்கரை மற்றும் பிற கதைகளுடன் சிறுகதைத் தொகுதி, உணர்வுகளால் வாழ்வை வரைதல் நெடுங்கவிதைத் தொகுதி, இரவுப் போர்வையும் நானும் கவிதைத் தொகுதி, இறுக்கம் சிறுகதைத் தொகுதி என்பன ஆன்ம ஆசுவாசத்தையும் நிம்மதியையும் தருபவை. 

வெளியிடப்படாத சிறுகதைகளும் கவிதைகளும், இணையத்துடன் ஏற்பட்ட பரிச்சயத்தினால், சற்று ஆசுவாசம் தரும் வகையில் உலகிலுள்ள சிறுதொகை இலக்கிய ஆர்வலர்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. 

இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையும் வெறியும் உள்ளது. 

குடும்பச் சுமையும், பொருளீட்டல் தொடர்பான நிர்ப்பந்தங்களும், படுவேகமாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் காலத்தின் கொடூரமும் முறைத்து நிற்கையில் எழுதுவதல்ல வாசிப்பதே பெரும்பாடாக ஆகிவிட்டது. 

2004ல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்ற கலைப்பட்டதாரி பட்டமும், 2014ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற கலைமுதுமாணிப் பட்டமும் பெயருக்குப் பின்னால் எஞ்சியிருக்கும் உருப்படியான குறியீடுகளாகும்.

No comments:

Twitter Bird Gadget