Saturday, January 9, 2010

இலங்கையில் முஸ்லிம் குடியேற்றம்


இலங்கைத் தீவானது ஆபிரிக்கா, சீனா, இந்தியா ஆகிய முக்கிய நிலப் பிரதேசங்களுக்கிடையே இருக்கும் கேந்திர நிலையானது, மிகப் புராதன காலம் முதற் கொண்டே அதனை ஒரு முக்கிய வணிக மத்திய தலமாக ஆக்கிற்று. அதன் வாசனைத் திரவியங்களும் இரத்தினக் கற்களும் மிக ஆரம்ப காலந் தொடுத்தே உலகின் பல பாகங்களிலிருந்தும் வணிகர்களைத் தன்பால் ஈர்த்தன. கிழக்கத்திய உலகிற்கும், மேற்கத்திய உலகிற்குமிடையிலான கடற்பாதை இலங்கைத் தீவின் பல இடங்களையும் தொட்டுச் சென்றன. எனவே, மேற்கத்திய உலகிற்கும் குறிப்பாக மேற்காசிய பகுதிக்கும், கீழைத்தேய நாடுகளுக்கும் குறிப்பாக சீனாவுக்குமிடையிலான வணிகப் பாதையின் மத்திய தலமாக இலங்கை விளங்கியது. இவ்வணிகம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னரேயே முற்றிலும் அரபிகளின் ஆதிக்கத்திலேயே இருந்தது.

இஸ்லாத்துக்கு முன்பிருந்தே அரேபியரும், பாரசிகரும் இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். கி.பி. 4ம், 5ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் துறைமுக நகர்களில் தமது வர்த்தகத்தை நிலைப்படுத்திக் கொண்ட அரேபியர் அங்கிருந்து இலங்கைக்கும் வந்த செல்லலாயினர். சீன யாத்திரிகரான 'பாஹியன்' கி.பி. 414ல் தென் அரேபிய வர்த்தகர்களை இலங்கையிற் சந்தித்தமை அறபு வர்த்தகர்கள் இலங்கையுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பின் பழைமையை எடுத்துக் காட்டுகிறது.

ஹிஜ்ரி 06ம் ஆண்டு (கி.பி. 628) 'வஹாப் இப்னு அபீ ஹப்ஸா' எனும் நாயகத் தோழர் நபி (ஸல்) அவர்களின் கடிதத்துடன் இலங்கை வந்து அக்கடிதத்தை இலங்கை அரசனிடத்தில் கொடுத்ததாகவும், அக்கடிதத்தில் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அறிஞர் எம். சீ. சித்திலெப்பை குறிப்பிடும் செய்தி கி.பி. 7ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரேபியர் இலங்கையிற் தங்கியிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பெருமானார் (ஸல்) அவர்களது காலப்பிரிவிலேயே கலாசார, பண்பாட்டு ரீதியான தொடர்புகள் அரபு நாட்டுக்கும், ஈழத்திற்குமிடையே நடைபெற்றதை அரபு வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இப்னு ஷஹ்ரயர் (மறைவு ஹி. 300) தனது அஜாயிப் அல் ஹிந்த் எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இலங்கையும், அதன் சுற்றாடல் பிரதேசங்களிலும் வாழும் மக்கள் இஸ்லாத்தின் திருத்தூதரின் அழைப்புப் பற்றி கேள்விப்பட்டதும் அவர்கள் ஆற்றல் மிக்க ஒருவரைத் தெரிவு செய்து அது பற்றி உண்மையான விபரங்களை அறிந்து வர அரேபியாவிற்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சென்றடைந்த பொழுது, பெருமானார் (ஸல்) அவர்களது மறைவும் நிகழ்ந்து, ஹஸ்ரத் அபூபக்கரின் கிலாபத்தும் முடிவடைந்து, ஹஸ்ரத் உமரின் கிலாபத் காலப்பிரிவாக இருந்தது. எனவே அத்தூதர் ஹஸ்ரத் உமரைச் சந்தித்து இஸ்லாத்தையும், பெருமானாரின் தூதைப் பற்றியும் அறிந்து நாடு திரும்பும் வழியில் மக்ரான் கரையோரப் பகுதியில் மரணமடைந்தார். ஆனால் அவரது பணியாளன் இலங்கை திரும்பி இஸ்லாத்தைப் பற்றியும், இஸ்லாத்தின் திருநபியைப் பற்றியும் மக்களிடம் கூறினார். இவ்வாறு இலங்கை மக்களுக்கு இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதனுடன் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது என்பதனை இப்னு ஷஹ்ரயாரின் இக்கூற்று உணர்த்துகின்றது. இந்தப் பரிச்சயமும் தொடர்புமே காரணமாக பெரும்பான்மை மக்களிடையே நிலவிய சகிப்புத் தன்மையும் புரிந்து கொண்ட மனப்பான்மையிடையே இக்காலப் பிரிவில் பெருமளவு அரபு முஸ்லிம் குடிகளின் குடியேற்றங்கள் ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம்.

இலங்கையில் ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டிலிருந்தே அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டன என்பதை றூல் - பலாஸுரி எனும் வரலாற்றாசிரியர் தனது 'புதூஹுல் புல்தான்' எனும் நூலில் குறிப்பிடும் வரலாற்றுச் சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.

'மாணிக்கத் தீவின் (ஜஸீரத்துல் யாகூத்) அரசன் இலங்கையில் பிறந்த, தமது பெற்றோர்களை இழந்த சில முஸ்லிம் அனாதைப் பெண்களை உமையா கவர்னரான ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபிடம் அனுப்பினார். ஆனால் இந்த அனாதைகளைக் கொண்டு சென்ற கப்பல் தேபல் (தற்போதைய கராச்சிக்கு அண்மைப் பிரதேசம்) எனும் இடத்தில் கடற் கொள்ளைக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. அப்பொழுது பனூயர்பூக் எனும் குழுவைச் சேர்ந்த ஒரு பெண் யா ஹஜ்ஜாஜ் என அபயக்குரல் எழுப்பினாள். ஹஜ்ஜாஜ் இதுபற்றிக் கேள்வியுற்றதும் முஹம்மத் பின் காசிமின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார்.

அல் - பலாஸுரி குறிப்பிடும் முஹம்மத் பின் காஸிமின் சிந்துப் படையெடுப்பு கி.பி. 711ம் ஆண்டு நிகழ்ந்தது. எனவே அல் - பலாஸுரி குறிப்பிடும் வரலாற்று நிகழ்ச்சி கி.பி. 8ம் நூற்றாண்டில் ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் முஸ்லிம் குடியேற்றங்கள் இருந்ததற்குச் சான்றாக விளங்குகின்றது. வணிக முயற்சிகள் காரணமாக ஏற்பட்ட குடியேற்றங்களுடன், வேறு வகையிலும் அரபுக் குடியேற்றங்கள் நடைபெற்றன. கி.பி. 8ம் நூற்றாண்டில் உமையா ஆட்சியில் இழைக்கப்பட்ட கொடுமைகள் காரணமாக ஹாஷிமீக்களில் சிலர் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வந்து குடியேறியதாக கூறப்படுகின்றது.
கி.பி. 1787ல் டச்சு உத்தியோகத்தர் ஒருவரால் கொழும்பு முஸ்லிம் மையவாடியிலிருந்து ஹிஜ்ரி 337ல் பதிக்கப்பட்ட கல்லறை நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதில் உள்ள வாசகங்களின்படி ஹிஜ்ரி 317ல் காலமான இப்னு பகாயாவின் ஞாபகார்த்தமாக ஹிஜ்ரி 337 றஜப் மாதம் பிறை 05ல் இக்கல் நடப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்களின் சமய மேம்பாட்டுக்காக அப்பாஸிய கலீபாவால் கொழும்புக்கு அனுப்பப்பட்ட காலித் இப்னு பகாயாவின் இந்த ஞாபகார்த்தக் கல் அறபு நாட்டுக்கும் இலங்கைக்குமிடையிலான கலாசார ரீதியான தொடர்பை மட்டுமன்றி கி.பி. 10ம் நூற்றாண்டில் இலங்கையில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் குடியிருப்பொன்று இருந்துள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

கொழும்புக்கு அண்மையில் உள்ள முதராஜவெல எனுமிடத்தில் கலீபா வலீதின் (கி.பி. 705 - 715) காலத்து நாணயமொன்றும் கலீபா ஹாரூன் ரஷீத் (கி.பி. 786 - 809) காலத்து நாணயமொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அரேபியாவுக்கும் இலங்கையருக்குமிடையே வர்த்தகத் தொடர்புகள் இருந்ததையும், இலங்கையில் ஆரம்பகால முஸ்லிம் குடியேற்றங்கள் இருந்ததையும் எடுத்துக் காட்டுகின்றது.

No comments:

Twitter Bird Gadget