நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி. நோயின்றி வாழவே மனதர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். ஆரோக்கியமான சுகதேகியாக இருப்பதை பெரும் வரப்பிரசாதம் என நம்புகின்றனர். பொருளாதார ரீதியாக எவ்வளவு உச்சத்தில் இருந்த போதிலும், உடல் ஆரோக்கியமாக இல்லையெனில் வாழ்க்கையில் நிம்மதியோ மகிழ்ச்சியோ சற்றும் எஞ்சியிராது. எனவே ஆரோக்கியம் என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாதது.
ஆரோக்கியமாக வாழ விரும்பும் மனிதன், தனது உடலாரோக்கியத்துக்குப் பயன்படுபவை எவை, அதனைப் பாதிப்பவை எவை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளல் வேண்டும். இவை தொடர்பான அறிவும், அறிவை முறையாகச் செயலுருப்படுத்தும் திறனும் உடலாரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான காரணங்களாகும்.
உடலாரோக்கியத்தைப் பாதிக்கும் அம்சங்காளகப் பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்:
உடற்பயிற்சியின்மை
தவறான உணவுப் பழக்கம்
மனக்கவலை
போதைப் பொருள் பாவனை
சமநிலை மாற்றங்கள்
சூழல் மாசு
கிருமிகளின் தாக்கம்
இக்குறைபாடுகளைத் தவிர்ந்து கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகப் பயனுள்ள விடயமாகும். குறிப்பாக உடற்பயிற்சியானது ஆரோக்கியத்துக்கு முக்கியத் தேவையாக அமைந்துள்ளது.
உடற்பயிற்சி என்பது, உடல் உறுப்புகளைச் சீரான வேகத்தில் இயங்க வைப்பதைக் குறிக்கின்றது. அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்துவதே உடற்பயிற்சியாகும். எனவே, நடப்பது, ஓடுவது, ஓர் ஒழுங்கின் பிரகாரம் உறுப்புகளை அசைப்பது முதலான அனைத்தையும் உடற்பயிற்சியெனலாம்.
உடற்பயிற்சியானது, பல்வேறு வகையில் உடலுக்குப் பயனளிக்கின்றது. மனித உடலில் இயல்பாக உள்ள உஷ்ணம், அவ்வுடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் பிரதிபலிப்பாகும். சீரான அளவில் உஷ்ணம் அதிகரிக்கும் போதெல்லாம் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கின்றது. அது நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயற்பட்டு அவற்றை அழிக்கின்றது. உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்வதில் உடற்பயிற்சியே பிரதான பங்கு வகிப்பதாகும். உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, இரத்த ஓட்டம் துரிதப்படுகின்றது. உடல் உஷ்ணமடைகின்றது. அதனால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, கிருமிகள் அழிக்கப்படுகின்றன. உடலாரோக்கியம் உறுதிப்படுகின்றது. சுறுசுறுப்புடன் உடற்பயிற்சி செய்யும் போது உடல் உஷ்ணமாகி வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் செயலாற்றும் திறனும் அதிகரிக்கின்றன. உடலில் உட்புகும் நோய்க் கிருமிகளுடன் போராடி அவற்றை அழிப்பதுதான் வெள்ளை அணுக்களின் முக்கிய வேலையாகும்.
உண்ணும் உணவு, செயல் என்பவற்றைப் பொறுத்து மனித உடலில் கிடோன் யூரியா, லேக்டிக் அமிலம், ஹிஸ்டோமைன் போன்ற நச்சுத்தன்மை மிக்க கழிவுப் பொருட்கள் தோன்றுகின்றன. இவை தோல், நுரையீரல், சிறுநீரகம், ஜீரணமண்டலம் முதலியவை மூலம் நீக்கப்படுகின்றன. உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை இவற்றை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இக்கழிவுப் பொருட்கள் வெளியேறும் போது உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டு வியாதிகளும் அகன்று விடுகின்றன.
உணவையும், பிரதான வாயுவையும் இரத்தக் குழாய்கள் வழியாக உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்வதுதான் இரத்தத்தின் வேலை. உண்ட உணவும், பிராண வாயுவும் இரத்தக் குழாய்கள் மூலம் உடலிலுள்ள நுண்ணிய செல்களை அடைந்து சக்தியாய் வெளிப்படுகின்றன. இந்த செல்களுக்கு உயிர் கொடுப்பது இரத்த ஓட்டமே. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது.
உடற்பயிற்சியின் போது அதிகளவு பிராண வாயு தேவைப்படுகின்றது. அப்போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால், போதிய பயிற்சி பெற்று மற்ற நேரங்களிலும் திறமையாய் செயற்படுகிறது. இது உடல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கப் பயன்படுகிறது.
உடற்பயிற்சியின் போது இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகின்றது. உடற்பயிற்சி செய்யும் நேரம் அதிகரிக்கும் போது, கரையும் கொழுப்பின் அளவும் அதிகரிக்கின்றது. இதனால் உடலிலுள்ள கொழுப்பு வேகமாகக் கரைந்து உடலுக்குத் தேவையான சக்தி ஆகிறது. ஆகவே உடல் எடையைக் குறைக்கத் தகுந்த சாதனமாய் உடற்பயிற்சி விளங்குகின்றது.
முழுமையான உடற்பயிற்சியானது, உடலை மாத்திரமன்றி, உள்ளத்தையும் சீர்படுத்துவதாக அமையக் கூடியதாகும். மனக்கவலையைக் களைந்து உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்குவதற்கான பயிற்றுவிப்பை உள்ளத்துக்கு ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாளாந்தம் தன்னம்பிக்கைப் பயிற்சிகளை உள்ளத்துக்கு வழங்க வேண்டும். கண் விழிக்கும் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் 'எனக்குத் தைரியமுண்டு', 'எனக்குத் திறமையுண்டு', 'எனக்கு வீரமுண்டு' போன்ற சொற்பிரயோகங்களை மனதுக்குள் பலமுறை சொல்லிக் கொள்ள வேண்டும். இது காலப்போக்கில் மனஉறுதி, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பக்குவம் முதலான நல்ல பயன்களைத் தரக்கூடிய உளப்பயிற்சியாக அமையும்.
உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரக்கூடிய நல்ல பயிற்சிகளை யோகாசனம் உள்ளடக்கியிருக்கிறது. இதனை முறைப்படி கற்றுச் செயற்படுத்துவது பல்வேறு நோய்களுக்கு நிவாரணமாகவும் முழுமையான உடலாரோக்கியம் பெறுவதற்கான நல்ல வழியாகவும் அமையும்.
எனவே, உடலாரோக்கியத்துக்கு இன்றியமையாத உடற்பயிற்சியை நாளாந்தம் கடைப்பிடித்து நோயற்ற செல்வச் செழிப்பான வாழ்க்கையை அனுபவிப்போம்.
March 2005
1 comment:
மிகவும் பயனுள்ள கட்டுரை
நன்றி ஹாபிஸ்
Post a Comment