Friday, November 11, 2011

இருட்டடி


நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. வீதியில் குவிக்கப்பட்டிருந்த கொங்க்ரீட் கற்கள், ஆற்று மணல், இரும்பு முறுக்குக் கம்பிகள் என்பவற்றில் பட்டுத் தெறித்தும் புதைந்து வழிந்தும் ஜாலம் காட்டிக் கொண்டிருந்த மழை நீர் மீது பார்வையை வெறித்தவாறு நின்று கொண்டிருந்தேன். 

ரஹீம் இன்னும் வந்தபாடில்லை. மாலையில் சரியாக ஆறு மணிக்கெல்லாம் அலாரம் வைத்தாற் போல் ஆஜராகி விடும் அவனது வருகை இன்னும் தாமதப்படுவது மேலும் எரிச்சலைக் கிளப்பிற்று.

நேற்று இடம்பெற்ற நிகழ்வுகள், ஆழ்மனப் பதிவாகிக் கோர்வையாய் கண் சிமிட்டிச் செல்வது சற்று ஆறுதலை ஏற்படுத்தினாலும், இனம்புரியாத குற்றவுணர்வொன்று எங்கோ ஒரு மூலையில் நெருடலாய்த் துருத்திக் கொண்டிருப்பதை மட்டும் தவிர்க்க முடியவில்லை.

நாசர் சேரின் அலறல் சந்தோஷமா? சங்கடமா?

அப்போது, எதையோ சாதித்து விட்ட பெருமிதமும் கர்வமும் உள்ளம் முழுக்க நிரம்பி சந்தோஷத்தை மொத்தமாகக் கவிழ்த்து விட்டிருந்ததென்னவோ உண்மைதான்.

பிருஷ்டத்திலும் பின்தொடைகளிலும் ரத்தக் கோடாய்ச் சிவந்திருந்த பிரம்புத் தடங்களின் வலி, இரண்டங்குலக் கல்லை விட்டெறிந்து சேரின் தலையிலிருந்து இரத்தத்தைப் பீறிட வைத்த அருஞ்சாதனையின் பின்னும், எவ்விதக் குறைவுமின்றி எரிந்து கொண்டிருப்பதன் மர்மம் எனக்குப் புரியவில்லை.

உண்மையில், பெரிய தைரியசாலிதான் நான்! பிள்ளைகள் நிமிர்ந்து பார்க்கவே பயப்படும், தண்டனைகளை வழங்குவதொன்றே தன் கடமையென வரித்துக் கொண்டவராய் நடமாடும் ஒரு கொடூர ஆசிரியனுக்கு என்னாலியன்ற ஒரு சிறு தண்டனை. இது ஆரம்பந்தான்.

ஏன் ஷூ போட்டு வரல்ல? ஏன் ஹோம் வேர்க் செய்யல்ல? ஏன் நகம் வெட்டல்ல? ஏன் முடி வெட்டல்ல? ஏன் சுணங்கி வந்த? ஏன் கொப்பி இல்ல? ஏன்... ஏன்... எல்லா ஏன்களுக்கும் பின்னால் சரமாரியாக வந்து விழும் பிரம்படிகள், அந்த அழகான காலைப் பொழுதை அப்படியே புரட்டிப் போட்டு அன்றைய நாள் முழுக்கவும் ஏக்கத்தையும் விசும்பலையும் கொட்டிக் கவிழ்த்து விட்டுச் செல்லும்.

வாப்பா இல்லை, உம்மா இல்லை, இருமி இருமி நாளொன்றுக்கு ஒரு வேளைச் சோறு போடும் மூத்தம்மாவிடம் ஷூ வாங்கவோ, முடி வெட்டவோ, கொப்பி வாங்கவோ பணம் கேட்க முடிவதில்லை. இப்படி எந்த இல்லைகளும் சேரையோ அவரது கையிலிருக்கும் சூடான பிரம்பையோ சற்றும் தணித்து விடுவதில்லை.

நிராயுதபாணியுடனான கொடூர யுத்தமாய் காலை தோறும் அரங்கேறும் இக்கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற ஆக்ரோஷ விதையை ரஹீம்தான் மனத்தில் ஊன்றினான். 

இரண்டு நாட்கள் தீவிரக் கண்காணிப்பின் பின், எட்டு மணிக்குப் பின்னால் எப்போதும் இருள் சூழ்ந்திருக்கும் ஆல மர அருகாமையில் வைத்து நாசர் சேருக்குப் பழி தீர்த்தாயிற்று. பின் வழுக்கையிலிருந்து கசிந்த அந்த இரத்தத்திற்கு, இருட்டிலும் பளீரிடும் என்னவொரு பிரகாசம்!

இரண்டு நாட்கள் பாடசாலை சுகமாக இருந்தது. அந்த இரண்டு நாட்களுக்குள்தான் இன்னொரு இலக்கை நிர்ணயித்தான் ரஹீம். 

காதர் சேர்!

மாலை ஆறு மணி தாண்டிவிட்டது. அதே இடம், அதே அளவு கல், அதே எறியும் கரம். அடிபடுபவர் மட்டும்தான் வேறு. 

இருள் இறுகத் தொடங்கிய சற்றைக்கெல்லாம் ரஹீம் வந்து சேர்ந்து விட்டான். என்னை விட்டுச் சற்றுத் தள்ளி நின்ற அவனிடமிருந்து அந்த சமிக்ஞை வெளிப்பட்டது. 

புரிந்து கொண்டு நான் தயாரான போது, புள்ளியாய்த் தோன்றிப் பெருத்து வந்தார் சைக்கிளில் இருந்த காதர் சேர்!

1 comment:

Sahana said...

இதில் ஆசிரியர்களைப் பிழையென்பதா? அல்லது மாணவர்களைப் பிழையென்பதா?

எவ்வாறாயினும், ஆசிரியர்கள்தான், மாணவர்களின் தவறுகளுக்குக் காரணமாகி விடுகின்றார்கள் என்பது மட்டும் விளங்குகின்றது.

Twitter Bird Gadget