“சந்திரமண்டல வீதி: பள்ளங்குழிகளற்ற இரும்புப் பாதை”
எங்களது ஊரின் முக்கிய வீதியொன்றுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சூட்டியிருந்த பட்டப்பெயர் இது.
ஊரின் எல்லா வீதிகளுக்கும் இப்பெயர்ப்பலகை கனகச்சிதமாகப் பொருந்தியிருந்த காலமொன்றிருந்தது.
சல்மான் ஹாஜி, அந்தக் காலப்பகுதியில், மாட்டு வண்டில் வைத்து, லோடு ஏற்றிக் கொடுத்து நாள் கூலி பெற்றுக் கொண்டிருந்தார்.
இரண்டடுக்கு மாடி வீடும், ட்ரக்டர் மிசினும், மோட்டார் சைக்கிளுமாகத் திரியும் அவரது இன்றைய செழிப்புக்கு, ஊர்ப்பிரதிநிதித்துவம் ஒதுக்கிய வீதி அபிவிருத்தி நிதிகளும் முக்கிய காரணம்.
கொன்ட்ரக் வேலைகளைத் தவிர்த்து, வேறெந்தப் பெரிய தொழிலையும் அவர் செய்யவில்லையாயினும், தொழிலதிபர் என்ற அடைமொழியை தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளுமாறு, நூல் வெளியீட்டு விழாக்களில் முதற்பிரதி பெறவும், பாடசாலை பரிசளிப்பு விழாக்களிலும் கடைதிறப்பு விழாக்களிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவும் அழைக்க வருபவர்களை அவர் கட்டாயப்படுத்துவார். அவர், கவருக்குள் வைத்துக் கொடுக்கும் ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய்களுக்காக இந்தக் கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டிய தலையெழுத்து அவர்களுக்கு.
கார்ப்பட் ரோடு போடும் பிரதான வீதிகளை விடுத்து, கொங்க்ரீட் ரோடு போடும் உள்வீதிகளையே சல்மான் ஹாஜி கொன்ட்ரக்டாக எடுத்துக் கொள்ள முனைவார். கமிஷன் என்ற பெயரில் ஊர்ப்பிரதிநிதிக்கும் அரசாங்க நிருவாகிகளுக்கும் கணிசமான தொகையொன்றைப் படியளப்பதனால், கொன்ட்ரக் பணிகளில் அவர் புரியும் தவறுகள் பாதிக்கப்படும் மக்கள் தவிர வேறெவராலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.
“போன கிழமதான் போட்ட ரோடு, இப்பிடி இடிஞ்சி கிடக்குதே” என்று யாரேனும் கேட்டால், “எவனோ, லோடு ஏத்தின மாட்டு வண்டிலக் கொண்டு போயிருக்கான். அதுக்கு நான் பழியா?” என்பார்.
“உங்கட கொங்க்ரீட் ரோட்ல மழத்தண்ணி தேங்கி நிக்குதே, வழிஞ்சி ஓடுதில்லியே” எனக் கேட்டால், “மழ கொஞ்சம் உட்டு உட்டுப் பெஞ்சாத்தானே தண்ணி ஓடி முடிய வசதியாயிருக்கும். நான் என்ன பண்ண?” என்பார்.
“நீங்க போட்ட ரோட்ல பள்ளங்குழிகளாக் கிடாக்குதே” எனக் கேட்டால், “கம்பனிக்காரன் சீமெந்தில கலப்படம் பண்ணியிருக்கான்” எனத் திட்டுவார்.
அவரது உண்மைகளெல்லாம் மக்களுக்குப் புரிந்து போனதில், மக்கள் அதிரடி மாற்றமொன்றை ஏற்படுத்தினர்.
எனினும், பதவியிழந்து ஊருக்குள் எட்டியும் பார்க்காது தலைநகரில் படுத்துக் கிடக்கும் முன்னாள் ஊர்ப்பிரதிநிதியின் தோல்வியில் தனக்கு எவ்விதப் பங்குமில்லையென சல்மான் ஹாஜி இப்போதும் சொல்லித் திரிகின்றார்.
No comments:
Post a Comment