Monday, December 5, 2011

பழிவாங்கல்ஆகாயத்தில் கருமேகங்கள் சூழத் தொடங்கி விட்டால்,நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து பற்றிப் பரவும் அச்சத்தின் அழுத்தத்தில் தவித்துப் போய்விடுவது மீராசாஹிபின் இயல்பாகி விட்டது. 

தொலைவுக்குச் சென்று, விறகு வெட்டியெடுத்து சைக்கிளில் கட்டிக் கொணர்ந்து விற்றுப் பிழைக்கும் தனது அன்றாட வாழ்க்கைக்கு மழையொரு பெரிய பாதிப்பில்லை என்றிருக்க, அவரது இவ்வதீத அச்சத்திற்கான காரணம் என்ன?

“அந்தப் பக்கம் போவாதீங்க நானா, காண் வெட்டிப் போட்டிருக்கானுகள்…”

“கரபாப் போவானுகள். காண் வெட்டிப் போட்டு, இப்பிடித் துறந்து போட்டுட்டுப் போயிருக்கானுகள். எவ்வளவு காலமா இப்பிடியே கிடக்குது…”

“போன கிழம, எடுகேசன் ஒபிஸ்ல வேல பாக்கிற சுபைர் நானா, நேத்து கரீம் சேர், இண்டைக்கு ஆட்டாக்கார ஹனீபா. காணுக்குள்ள உழுந்து கால உடெச்சிக்கிட்டு வாட்ல கிடக்காங்க. மழ பெஞ்சி வெட்டின மடுவுக்குள்ள தண்ணி தேங்கி நிண்டா, மடுவு மட்டயெல்லாம் எப்பிடி விளங்கும்…?”

“இந்தப் புதினமான டெங்கு நுளம்பெல்லாம் யாருக்குத் தெரியும்! எப்ப இந்தக் காண் மண்ணாங்கட்டிகளக் கொண்டாந்தானுகளோ அப்பயிருந்து புடிச்சிச்சி சனி”

“ஓம் ராத்தா, ஊட்டுக் கேட்ட எப்பயும் பூட்டித்தான் வெக்க வேண்டிக் கிடக்கு. கேட்டுக்கு முன்னால, போன மாசம் காண் போடுறதுக்கு மடு வெட்டிப் போட்டுட்டுப் போனானுகள். அப்பிடியே கிடக்கு. வெளிய போனா புள்ளெ உழுந்துருவானே…”

அங்குமிங்குமிருந்து வந்து விழும் இப்படியான கதைகளும் விமர்சனங்களும் மீராசாஹிபின் உள்ளத்தை வருத்திப் பயமுறுத்திச் செல்வது வழக்கமாகி விட்டன.

மழை காலத்தில், விறகு சேகரித்து வருகையில் பள்ளங்குழிகளறியாது சைக்கிளுடன் சேர்ந்து கீழே விழுந்து கைகால் உடைந்து மருத்துவமனையில் போய்ப் படுத்து விட்டால், தனது நாளாந்த சிறு வருமானத்தையே நம்பியிருக்கும் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஏழைக் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்ற கவலையும் அச்சமும் ஒரு பக்கம் இருந்தாலும், அதை விடவும் கோபமும் விரக்தியுமே அவரில் மேலோங்கியிருந்தன. 

அந்தக் கோபத்திற்கும் விரக்திக்கும் காரணம் இல்லாமலில்லை. 

சென்ற வருடத் தேர்தலில் எத்தனை சண்டைகள், குழப்பங்கள், ஏச்சுப் பேச்சுகள்! ஊர்ப்பிரதிநிதியின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதில், தொழிலைத் துறந்து குடும்பத்தை மறந்து காயம்பட்டுப் பாடுபட்டோர்களில் முக்கியமானவராக மீராசாஹிப் இருந்தார்.

ஊர்ப்பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவது என்ற அப்பாவிக் குறிக்கோளைத் தவிர வேறொரு தேவையும் அவரிடம் இருக்கவில்லை என்ற போதிலும், வெற்றி பெற்ற பிறகு, கண்டுகொள்ளாது விட்டுவிட்ட பிரதிநிதியின் அலட்சியம், உள்ளத்தின் மெல்லிய சுவர்களைக் கூரிய முள்ளொன்று குத்திய வலியின் உணர்வைத் தன்னில் ஊன்றியதை அவரால் தவிர்ந்து கொள்ள முடியவில்லை. 

அபிவிருத்தியின் பெயரில் இடம்பெறும் பழிவாங்கல் நடவடிக்கைகள் மற்றும் ஊழல்கள் பற்றிய உரையாடல்கள் அவரை மேலும் வருத்தத்தில் தோய்த்தெடுத்தன.

உயிரைப் பணயம் வைத்தது போல் நின்று, ஊர்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக் கொடுத்த தன் முட்டாள்தனத்துக்குத் தண்டனையாக, கழிப்பறையில் நின்று, தன் காற்செருப்பையெடுத்து, யாருமறியா வண்ணம் கன்னத்தில் சில இழுப்புகளை விட்டுக் கொண்ட பிறகும், அவரது குற்றவுணர்வு அடங்கியதாகத் தெரியவில்லை. 

அக்குற்றவுணர்விலிருந்து விடுபட அவருக்கு நான்காண்டுகள் ஆயின. 

அப்போது அவர், அயல் வீடொன்றில் பேரார்வத்துடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். 

தான் வாக்களிக்காது விட்டதனால்தான் ஊர்ப்பிரதிநிதி தேர்தலில் தோற்றுப் போனார் என அப்போது மீராசாஹிப் எண்ணிக் கொண்டார். 

No comments:

Twitter Bird Gadget