Monday, March 19, 2012

"உமா வரதராஜன் கதைகள்" நூல் வெளியீட்டு விழா


மிக நீண்ட காலங்களுக்குப் பின் நூல் வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டமையினாலோ, அரங்கு நிரம்பி வழிந்த பார்வையாளர்கள் கொண்டதாக நான் கலந்து கொண்ட ஆடம்பரமான முதலாவது நூல் வெளியீட்டு விழா என்பதினாலோ, "உமா வரதராஜன் கதைகள்" நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளக் கிடைத்தமை மறக்கவியலா செழிப்பான அனுபவமாக மனதுள் குலுங்குகிறது.  

இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்கேற்பு, ஏலவே வடிவமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான உரைகள், தொலைபேசிச் சிணுங்கல்களோ வெளிநடப்புகளோ எதுவுமற்ற பார்வையாளர்களின் நான்கு மணிநேரப் பொறுமையான செவிமடுப்பு, மீதமின்றி விற்றுத்தீர்ந்த நூல்கள், பொறுக்கியெடுத்து அழைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள், விழா நிகழ்ச்சிகளின் கனதி, அரங்கைத் தன் கட்டுக்குள் வைத்திருந்த துல்லியமான ஒலியமைப்பு என என்றென்றும் நினைவுகூரத்தக்க அற்புதங்கள் பலவற்றை இவ்விழா கொண்டிருந்தது.

எண்ணிக்கையில் குறைவான கதைகளையே உமா வரதராஜன் எழுதியுள்ள போதிலும், எழுதிய ஒவ்வொன்றும் குறைகூற முடியாவண்ணம் ஏதோ ஒரு வகையில் தனித்தும் கனத்தும் மிளிர்வதனால், விழாவில் உரையாற்றிய எழுத்தாளர்களும் கல்விமான்களும் ஏக காலத்தில் வாய் நிறைய அவரைப் புகழ்ந்து தள்ளியதை ஜீரணித்துக் கொள்வதில் யாருக்கும் கஷ்டம் இருக்கவில்லை. 

சிறுகதைகள் பற்றியும் சிறுகதையாசிரியர் பற்றியுமே உரையாற்ற வேண்டிய நிர்ப்பந்தமிருந்தமையினால், உரைகளின் பல தரவுகளும் கருத்துகளும் திரும்பத் திரும்ப இடம்பெற வேண்டிய நிலை, எண்ணிக்கையில் அதிகமான உரையாளர்கள் என்பதனால் பார்வையாளர்கள் மிக அதிகமான நேரம் அசையாது உட்கார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் - இவை பார்வையாளர்களை அசௌகரியப்படுத்திய போதிலும், உரையாளர்களினதும் உரைகளினதும் சிறப்புகளும் கனதிகளும் அவ் அசௌகரியத்தைச் சற்றே தளர்த்தி விடவே செய்தன. குறிப்பாக ஒவ்வொரு உரையாளருக்கு முன்னாலும் அவரது ஆக்கங்கள் மற்றும் விருதுகள் தொடர்பான சுருக்க விளக்கமொன்று வழங்கப்பட்டமை சிறந்த மற்றும் கவர்ச்சியான அம்சமாக விளங்கியது. 

ஒப்புவிப்புப் பாணியில் அமைந்திருந்த உரைகளினால் விழாவின் ஆரம்பம் முதல் அரங்குமுழுவதும் கவ்விச் சூழ்ந்திருந்த இறுக்கத்தை எஸ்.எல்.எம். ஹனீபா, கல்வி அதிகாரி மன்சூர், சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆகியோரின் இயல்பான மற்றும் யதார்த்தமான உரைகள் மெல்லத் தளர்த்தி விட்டன. அருட்சகோதரர் மத்தியு, றமீஸ் அப்துல்லாஹ், மன்சூர் ஏ காதர், அலறி, உருத்திரா, மலரா, மலர்ச்செல்வன் போன்றோர் ஆய்வுப் பாணியில் தமது உரைகளை வழங்க, சோலைக்கிளி, அனார் போன்றோர் தங்களுக்கேயுரிய கவிதைப் பாணியில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அரங்கு அதிர முழங்கிய குரல்களுக்கு மத்தியில், அனாரின் மென்குரல், அவரது கவிதைகளைப் போலவே மனங்களை இதமாக வருடிச் சென்றது. 

எழுத்தின் சிகரங்களாக விளங்கும் பலரும் பந்தா எதுவுமின்றி நிகழ்ச்சி முழுவதும் பொறுமையுடனும் ஆர்வத்துடனும் அமர்ந்திருந்தமை சிலாகிக்கத்தக்க ஓர் அற்புதமான விடயம்.

முத்தாய்ப்பாக அமைந்த உமா வரதராஜனின் ஏற்புரை அனைவரையும் மிகவும் கவர்ந்த முக்கிய அம்சம். இத்தனை பழுத்த எழுத்தாளர்களின் செறிந்த உரைகளுக்குப் பின்னால் இடம்பெறும் ஏற்புரையில் உமா வரதராஜன் பார்வையாளர்களைக் கவரும்படி சொல்வதற்கு எதுவுமில்லை என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரது உரையில் வெளிப்பட்ட எழுத்தாளுமை அவரை உச்சியிலும் எம்மை வியப்பிலும் ஆழ்த்திற்று. 

மிக அற்புதமான ஒரு விழா. எனினும், குறைகளும் இல்லாமலில்லை. இவ்வளவு எண்ணிக்கையிலான உரைகள் தேவையா? மிகச் சிறந்த பேச்சாளரும் இலக்கியவாதியுமான பஷீர் சேகுதாவூத், ஓர் அரசியல்வாதி என்பதனால்தான் மேடைக்கு அழைக்கப்படவில்லையா? வரவேற்புரையிலும் தலைமையுரையிலும் இடம்பெற்ற உமா வரதராஜன் பற்றிய அறிமுகம் பின் வந்த உரைகளிலும் ஏன் இடம்பெற வேண்டும்? உரை நிகழ்த்தியோரில் பெரும்பாலானோரின் முகங்களில் தெரிந்த பதட்டமும் இறுக்கமும் ஏன்? கலாநிதி நுஃமானிடம் அனுமதி பெறப்படாமல்தான் அழைப்பிதழில் பெயர் பொறிக்கப்பட்டதா? 

எவ்வாறாயினும், உமா வரதராஜனுக்கு நான் பிரத்தியேகமாக நன்றி கூற வேண்டும், மிக நீண்ட காலமாகப் பார்க்க வேண்டுமென நான் அவாவுற்றிருந்த என் ஃபேவரைட் கவிதாயினி அனாரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது இவ்விழாவில் எனக்குக் கிட்டிய முக்கிய சந்தோஷம். அனாரை நேரடியாகச் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி. அதை விட மகிழ்ச்சி, அவருடன் அருகில் நின்று நேரடியாக உரையாடக் கிடைத்தமை. அதைவிடப் பெரும் மகிழ்ச்சி, அழகாக இருக்கிறார் என என்னைச் சுட்டி என் பெரியப்பா எஸ்.எல்.எம்மிடம் அனார் குறிப்பிட்டது. (என்னைப் பிறருக்கு அறிமுகம் செய்யும் போது காதுகளில் கிசுகிசுக்கும் இரகசியத்தை அனாரிடமும் பெரியப்பா சொல்லியதன் விளைவுதான் அனாரின் இக்கூற்று) பணக்காரக் குழந்தைகளின் கைகளில் தவழும் மொழு மொழு பஞ்சு பொம்மையாக அனார் அறிமுகமான போது என் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது கவிதைகளின் வசீகரத் தோற்றம் மட்டுமே. 

உமா வரதராஜன் தொடர்ந்து எழுத வேண்டுமென விழாவில் உரையாற்றிய பலரும் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், ஏற்கனவே எழுதியதைப் போன்ற கனதியான படைப்புகளைத் தர முடியாவிட்டால், தன் பெயரைப் பாதுகாத்துக் கொண்டு வாசகனாக மட்டும் இருந்து விடுவதையே நான் அவருக்கு பரிந்துரைக்கின்றேன்.

2 comments:

simproduction said...

மிக நீண்ட நாட்களாக ஸபீரின் தளத்தைத் தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன் இன்றுதான் அதை முழுமையாகப் பார்க்க முடிந்தது. தங்களின் அகேமான கதைகளை ஏற்கனவே படித்திருக்கிறேன். கருத்துரையாடல் செய்யத்தான் அவகாசம் கிடைப்பதில்லை. சிறையில் இருந்து மீண்ட பின்னர் எழுத்துக்கள்தான் வலுவான ஆறுதல். அதைவிட எழுதுவது மன அமைதியைத் தருகிறது. ஸபீர் தங்களின் தளத்தில் உள்ள பெருவாரியனவற்றைப் படித்துமுடித்துவிட்டேன். சந்தோசமாக இருக்கிறது. யாருக்காகவும் எதற்காகவும் அஞ்சத் தேவையில்லை நீங்கள் நினைப்பவற்றை எழுத்தில் வடித்து முடித்து விட்டு மீளாய்வு செய்து வெளியிடுங்கள். அவசரப்பட்டு எதையும் ஆர்வத்தில் செய்துவிடவேண்டாம். பின்னர் பின்னூட்டம் என்ற கத்தியோடு வாசிப்பவர்கள் வருவார்கள். கருத்துக்களை வாசிப்பவர்களின் போக்கிற்கே விட்டுவிடுங்கள். தேவையில்லாத தலை குனிவைவிட்டும் அது தடுக்கக் கூடும். நிறைய எழுத வேண்டும் அவை படைப்பிலக்கியமாக இருக்க வேண்டுமென மனதார இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்

முஸ்டீன்

irukkam said...

நன்றி முஸ்டீன்.
சில மாதங்களுக்கு முன்பு நான் வெளியிட்ட சிறுதையொன்று ஏற்படுத்திய அதிர்வை, அதற்காகக் கொட்டப்பட்ட பின்னூட்டங்களிலிருந்து அறிந்து கொண்டேன். மனதில் பட்ட நியாயத்தை, கண் முன் தெரியும் அநியாயத்தை எழுத்தில் வடித்து ஊரறிய உலகறியச் செய்வதன் பின்னணியிலுள்ளது, நியாயத்தை வாழ வைக்கவும், அநியாயத்தைத் தடுத்து நிறுத்தவும் வேண்டும் என்ற ஆதங்கம் மட்டுமே.

Twitter Bird Gadget