Sunday, September 23, 2012

வாப்பா மட்டும் பார்க்கலாமா?



அவளுக்கு வயது பன்னிரண்டு என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். மிக அவதானமாகச் செதுக்கி முடிக்கப்பட்ட அழகிய சிற்பம் போன்ற தோற்றம், கன்னங்களில் நிரம்பி வழியும் முரட்டு வசீகரம், அண்மையில்தான் பருவத்திற்கு வந்ததைப் பகிரங்கப்படுத்தும் இளமைச் செழுமை, நடந்து செல்கையில் பிதுங்கித் திணறும் உடல்வாகு. 

இன்று காலையில், இரண்டு தெருக்கள் தள்ளி வசிக்கும் பதினாறு வயதுச் சிறுவன் ஒருவனை அழைத்துக் கொண்டு அவள் திருட்டுத்தனமாக ஓடிப் போய்விட்டாள். 

தலைகவிழ்ந்திருந்த புஹாரியின் கண்களில் கண்ணீரையும் மீறிய அவஸ்தையும் சங்கடமும் நெளிந்து கொண்டிருந்தன. சவூதியில் கழித்த இரு வருடங்களைத் தள்ளி, பத்து வருடங்களாக அன்பைக் கொட்டி வளர்த்த மகள் றிஹானாவின் கேள்வி அவன் மனதில் கடலலையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. 

"வாப்பா மட்டும் பாக்கலாமா?"

பௌசியாவிடம் அவள் அப்படித்தான் கேட்டாள். புஹாரிக்கு முதலில் எதுவும் புரியவில்லை. 

பால்ய வயது நண்பனொருவனிடமிருந்து இரகசியமாகப் பெற்று வந்த அந்த டிவிடி, மனைவியும் மகளும் வெளியில் சென்றிருந்த அந்த ஒரு மணித்தியால அவகாசத்தில் அவனை கிளுகிளுப்பில் முக்கியெடுத்த போது, நடைபெறப்போகும் விபரீதம் பற்றி அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென அறுந்த மின்சாரத்தைச் சபித்துக் கொண்டு அறையிலிருந்து வெளிப்பட்டவன், வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே கிளம்பி விட்டான்.

வியாபாரக் கெடுபிடிகளுக்கு மத்தியில் மகளின் சமவயதுப் பிள்ளைகளின் அதிகரித்த வருகை பற்றிக் கவனிக்கவோ, பார்த்து விட்டு இடையில் விட்ட டிவிடி பற்றிச் சிந்திக்கவோ அவனுக்கு நேரமற்றுப் போனது. 

சரியாக ஒரு வாரத்தின் பின், சமையலறையில் எழுந்த உரத்த சத்தம், பகல் தூக்கத்தில் லயித்திருந்த புஹாரியைத் தட்டியெழுப்பிற்று. 

"வாப்பா மட்டும் பாக்கலாமா?"

மகள் றிஹானாவின் குரல்தான் என்பதை உறுதி செய்து கொண்டபின், கலவரத்துடன் படுக்கையிலிருந்து எழுந்த புஹாரியை, அடுத்தடுத்து காதுகளில் வந்து விழுந்த பேச்சுகள் அதிர்ச்சியில் உறைய வைத்தன. சட்டென ஏதோ நினைவு வரப்பெற்றவனாக, அவிழ்ந்திருந்த சாரனை அள்ளியெடுத்துக் கொண்டு ரிவி இருந்த பக்கம் ஓடினான். டிவிடி பிளேயரில் டிஸ்க் இல்லாதிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ந்தான். அறையெங்கும் இறைந்து கிடந்த நொறுக்குத் தீனித் தூசுகளும் கலைந்து கிடந்த தலையணைகளும் சற்றுமுன்னர்தான் ஒரு குழு இவ்வறையைப் பயன்படுத்தி விட்டுச் சென்றுள்ளது என்பதை உறுதிப்படுத்தின. திடீரெனத் தலைக்கேறிய கலவரம், முறுகித் திரண்டு புஹாரியின் முகத்தைக் கறுப்பாக்கியது. 

சினிமாப் படங்களைப் பார்ப்பதில் பெரும் ஆர்வமும், நாளின் பல மணி நேரங்களை ரிவிக்கு முன்பாகவே கழிக்கும் வழக்கமும் கொண்ட என் மகளை எப்படி நான் மறந்தேன்?

சமையலறையில் தடிப்பாகிக் கொண்டு போன பௌசியாவின் குரலுக்கு றிஹானாவில் குரல் கொஞ்சமும் பின்வாங்கியதாகத் தெரியவில்லை. தாய்-மகள் சண்டையில் எப்போதும் நடுவராக வந்து நிற்கும் புஹாரி, இப்போது மகளின் முன் தோன்ற முடியாது கூனிக்குறுகி நின்றான். வாழ்க்கை முழுவதையும் ஒட்டுமொத்தமாகப் பாவத்தில் கழித்து விட்டதான தவிப்பு அவனது பதட்டத்தை மேலும் பெருக்கிற்று. 

மனைவியினதும் மகளினதும் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்த இரண்டு நாட்களில், அச்செய்தி அவன் காதுகளை முட்டியது. 

ஓஎல் படிக்கிற முனாஸை கூட்டிக் கொண்டு றிஹானா ஓடிப் போய்விட்டாள்.


No comments:

Twitter Bird Gadget