Wednesday, January 6, 2010

குழந்தைகளுக்குப் பால்குடி மறக்க வைத்தல்


ஒவ்வொரு தாயும் எதிர்கொள்ளும் மிகச்சிரமமான விடயங்களில் ஒன்று தமது குழந்தைகளுக்குப் பால்குடி மறக்க வைத்தலாகும். இது தொடர்பான அறிவின்மையும், மரபுகளுமே இதனை ஒரு சிரமமான விடயமாகக் காண்பித்து வருகின்றன. எனவே, இவ்விடயம் தொடர்பான தெளிவான அறிவூட்டல் தாய்மாருக்கு அவசியமாக உள்ளது.

ஆராய்ச்சி முடிவுகளின் பிரகாரம், பால்குடி மறக்கச் செய்வதற்குப் பொருத்தமான காலம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களாகும். குழந்தை ஆறு மாதங்களைக் கடந்த பின்னர், தாய்ப்பால் மட்டும் என்ற நிலையை மாற்றி இலகுவான வேறு சில உணவுகளையும் குழந்தைகளுக்கு வழங்கலாம். பால் குடியை படிப்படியாகக் குறைக்க முயற்சிக்கலாம். இக்காலப்பகுதியில் குழந்தைகளின் ஈரலில் இரும்புச்சத்து குறைவாகவே காணப்படும். தாய்ப்பாலிலும் இரும்புச்சத்து குறைவாகவே கிடைப்பதனால், இக்காலத்தில் இரும்புச்சத்துள்ள உணவுகளை அதிகமாக குழந்தைகளுக்கு வழங்குவது அவசியமாகும்.

ஆறு மாத்தத்தின் பின்பே, தாய்ப்பால் தவிர்ந்த, ஏனைய உட்கொள்ளும் உணவுகளை சமிபாடு அடையச் செய்யும் உடற்திறன் குழந்தைகளுக்குக் கிடைக்கின்றது. எனவே, இக்காலத்தில் இரும்புச்சத்துள்ள உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவது பல வகையில் பயன் மிக்கதாக அமைகின்றது.

குழந்தை நோயின்றி தேகாரோக்கியத்துடன் காணப்படுமானால், ஆறு மாதம் கழிந்தவுடன் பால்குடி மறக்கச் செய்யலாம். இதனைப் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும். தாய்ப்பாலுடன் வேறு சில உணவுகளையும் சேர்த்துக் கொள்ள முடியும்.

பால்குடியை முற்றாக மறக்க வைக்கின்ற போது, பல முக்கிய விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும். அதாவது ஜனவரி, பெப்ரவரி போன்ற மாரி காலங்களிலேயே நிரந்தரமாக பால்குடி மறக்க வைக்க வேண்டும். ஏனெனில், அக்காலப் பகுதியிலேயே வயிற்றோட்டம் என்பது குறைவாக, அல்லது முழுமையாக அற்றதாக இருக்கும். கோடை காலத்தில் இதற்கு முரணான நிலையே காணப்படும் என்பதால், மாரி காலமே இதற்குப் பொருத்தமுடையதாகும். மேலும், குழந்தைக்குப் பல் முளைக்கும் போது, அல்லது வாந்திபேதி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் காலத்தின் போது, பால்குடி மறக்கச் செய்வது கூடாது. அதேவேளை இரண்டு வயது நிரம்பிய குழந்தைக்குத் தொடர்ந்தும் பாலூட்டுவதும் பிழையான விடயமாகும். அதனைத் தவிர்ந்து கொள்வது அவசியம்.

குழந்தை வைத்திய நிபுணர் ஒருவரின் கூற்றுப்படி, குழந்தைக்கு பால்குடியை மறக்கச் செய்யும் போது அது குழந்தையைப் பாதிக்கின்றது. குழந்தையை வேதனைக்குள்ளாக்குகின்றது. எக்குற்றமுமின்றியே தனக்கு உணவு தடுக்கப்பட்டு விட்டதாக குழந்தை உணர்கின்றது. இதனால், உளத்தாக்கமுறும் குழந்தை, கலகம் புரிந்து அழத் தொடங்குகின்றது. ஏனைய உணவுகள் அனைத்தையும் நிராகரித்து விடுகின்றது. எனவே, பால்குடி மறக்கச் செய்வதை படிப்படியாகவே மேற்கொள்வது அவசியமாகும்.

தினமும் பால் கொடுக்கும் நேரத்தைக் குறைத்து, அதற்கு மாற்றீடாக வேறு பொருத்தமான உணவுகளை குழந்தைக்கு ஊட்ட வேண்டும். சிறிது காலத்தின் பின் தாய்ப்பாலை மேலும் குறைத்து, வெளி ஆகாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து நாளொன்றுக்கு ஒரு முறை வீதம் தாய்ப்பாலை வழங்கி அவற்றுக்குப் பதிலாக வேறு உணவுகளை ஊட வேண்டும். இவ்வாறு படிப்படியான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், குழந்தைகளுக்கு பால்குடியை மறக்கச் செய்வது மிக இலகுவான ஒரு விடயமாக அமைந்து விடும்.

குழந்தைகள் மீதான தாய்மாரின் அவதானிப்பும், அறிவுமே இவ்வாறான விடயங்களில் முதன்மை நிவாரணி என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

March 2004

No comments:

Twitter Bird Gadget