Thursday, January 7, 2010

நவீன ஓவியக் கலைஉலகில் மனிதன் பின்பற்றிய முதலாவது கலை ஓவியக் கலையாகும். மொழியியலோ, எழுத்துருவாக்கமோ, உரையாடல் சாதனங்களோ வளர்ச்சியுறாத காலத்தில் வாழ்ந்த மனிதன் தனது எண்ண உணர்வுகள், மனப்பதிவுகள், இயற்கையின் எழிற்காட்சிகளின் வினோதங்கள், விகாரத் தோற்றங்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்கும், அவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் வழிவகை தெரியாமல் தவித்தான்.

இயற்கையின் சீற்றங்கள், காலநிலை மாற்றங்கள், கொடிய இராட்சத மிருகங்களின் பீதி என்பன மனிதனை அச்சுறுத்தின. மனிதன் பெரும் பலம் கொண்டவனாக இருந்த போதிலும், இயற்கையின் மீதும், அதன் கூறுகள் மீதும் அச்சம் கொண்டான். நதிக்கரைகளிலும், மர நிழல்களிலும் வாழ்ந்த மனிதன் குகைகள், புதர்கள் என பாதுகாப்பான இடங்களை நாடினான். அவ்வாறான இடங்களில் பார்த்தவற்றை மனத்தில் இருத்தி, தான் வேட்டையாடிய மிருகங்களையும், இயற்கையின் அசைவுகளையும் தோற்றங்களையும் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் உருவாக்கினான். இம்முயற்சியே ஓவியக் கலை தோன்றக் காரணமாயிற்று.

முன்னெப்போதையும் விட கடந்த நூற்றாண்டிலிருந்து அறிவுத்துறையின் வளர்ச்சி துரித வேகம் கண்டுள்ளது. பல்வேறு துறைகளில் உண்டான கருத்தாக்கங்கள், கோட்பாடுகள் மனிதனைப் பற்றி, மனித வாழ்வைப் பற்றி, இயற்கையைப் பற்றி புதிதான தெளிவை உண்டாக்கியிருக்கின்றன. இவை நம் வாழ்க்கையை, சிந்தனையை தீவிரமாகப் பாதித்து நம் அன்றாடச் சிந்தனையிலும் ஊடுருவி கலந்து விட்டன. இவை கலையிலும் பொதுப்படையான அணுகுமுறையையும், பாத்திரப்படுத்தலையும், மரபையும் தவிர்க்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கி விட்டன. இதில் ஓவியத் துறையும் விதிவிலக்கல்ல. 19ம் நூற்றாண்டின் பிற்கூறுகளில் கமரா கண்டு பிடிக்கப்பட்ட காலம் வரை தத்ரூபமாக வரைவதே ஓவியம் என்று கருதப்பட்டு வந்தது.

ஓர் ஓவியர் இயற்கைக் காட்சியை தத்ரூபமாக வரைய நீண்ட மணி நேரம் தேவைப்படுகிறது. அதேசமயம் புகைப்படக் கமரா அதே காட்சியை மிகத் தத்ரூபமாக சில நொடிகளில் தந்து விடுகின்றது. இதனால் புகைப்படக் கருவியின் கண்டு பிடிப்பு ஓவியரிடையே ஒரு புதிய சிந்தனைக்கு வழிவகுத்தது. இதுவே மனப்பதிவுவாத நவீன ஓவிய முறைமையைத் தோற்றுவித்தது. அது தத்ரூபமாக வரைவதுதான் ஓவியம் என்ற கருத்து மெல்ல மெல்ல மாற்றமடையக் காரணமாயிற்று.

நவீன ஓவியக் கலை

மரபு ஓவியங்கள் உணர்ச்சிபூர்வமாக அமைந்தவை. இவற்றில் ஓவியரின் கற்பனைக்கு ஓரளவே இடமுண்டு. நவீன பாணி ஓவியத்தில் சொல்லப்பட வேண்டிய செய்தி நேரடியாக இல்லாமல், கலைஞனின் சொந்தக் கருத்துக்கும் (Pநசளழயெட நுஒpசநளளழைn) கற்பனை வளத்திற்கும் இடம் கொடுத்து குறித்த செய்தி மறைமுகமாக சில குறியீடுகள் மூலம் அல்லது வர்ணக் கலவைகள் மூலம் காட்டப்படுவதற்கு இடம் கொடுக்கின்றது. இந்த வர்ணத் துளிகளுக்கான அல்லது குறியீட்டுக்கான துயரத்தையும் அவலத்தையும் வெளியே நிரம்பியிருக்கும் பல்வேறு நிறங்களும் அலங்கார ரேகைகளும் தூண்டி விடும் போது அந்த ஓவியம் பார்வையாளனின் உணர்வைத் தூண்டுவதுடன் எல்லையற்ற கற்பனா வெளிக்கும் அழைத்துச் செல்கின்றது. இவ்வகை ஓவியத்தில் அதன் கருப்பொருளோடு சம்பந்தப்பட்ட செய்திகள், நிறங்கள், சம்பவங்கள் என்று எல்லா விடயங்களுமே கோர்வையாக குறியீடுகளாக ஓவியம் முழுவதிலும் விரவிக் கிடக்கும். தன்னுடைய ஓவிய அறிவிற்கும் தேடலுக்கும் ஏற்ப பார்வையாளன் அவற்றைத் தேர்ந்தெடுத்து வாசித்துக் கொள்வான். இவ்வோவியங்கள் சொந்தக் கருத்துக்கும் அனுபவத்திற்கும் உருக்கொடுப்பதால் பழைய உணர்ச்சி குறைந்து விடுவதாக கருதக் கூடாது.

புதுமை உணர்வும், நெஞ்சுரமும் உடைய புதுமை ஓவியர்கள் மரபை மீறி பாரம்பரிய எல்லைகளைக் கடந்து புதிய போக்கு ஒன்றை மேற்கொண்டு ஓவியங்களைப் படைத்தார்கள். ஒரு குறிப்பிட்ட இட வரம்புக்குள் எல்லைகள் கடந்த புதியதோர் உலகத்தை இவர்கள் உருவாக்கினார்கள். இந்த வகையைச் சேர்ந்த ஓவியர் தன்னைக் கேள்விக்குட்படுத்தி தன்னிலிருந்து வெளியே வந்து உண்மையான ஓவியத்தைப் படைக்கின்றார். இந்த ஓவியங்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் ஸ்திரம் பெறுகின்றன. இத்தகைய ஓவியங்கள் ஆரம்ப காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் மையங் கொண்டு பிரான்ஸ், பாரிஸ் மூலம் இன்று எல்லைகள் கடந்து வந்திருக்கின்றன.

இந்நவீன பாணி ஓவியங்களை புரிந்து கொள்ள முடியாதுள்ளது என்பது பரவலான குற்றச்சாட்டாகும். ஆயினும், இதற்கு கலைத் தொடர்ச்சியின்மையே காரணம் எனலாம். ஓவியங்களில் காட்சிப் பாதிப்பு, தெரிவிக்கும் செய்தி, எளிமை, படவரைவு, நுட்பம், குறியீடுகள் என்பவற்றை விரித்துப் பார்க்க வேண்டும். ஷஷஓவியம் என்பது படிக்கப்பட வேண்டியதேயன்றி பார்க்கப்பட வேண்டியதல்ல|| என்ற ஓவியர் ஷமாற்கு|வின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. விரிந்த தேடல், ஆழிய கண்ணோட்டம் முதலானவற்றின் அடிப்படையில் பல பரிமாணத்தைத் தரும் கருத்துடனும், உயர்வான கலையம்சத்துடனும் படைக்கப்படும் ஓவியங்கள் விமர்சனங்களுக்கும் அப்பால் புகழ்பரப்பி நிற்கும் என்பது உறுதி.

இத்தகைய சிறப்பு மிக்க ஓவியக் கலையானது ஈழத்தைப் பொறுத்தவரை உரிய முறையில் வளர்ச்சியடையவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

ஈழத்தின் இன்றைய சூழலில் நவீன ஓவியத் துறை சார்ந்த ஓவியர்களுக்கும், அவர்களின் ஓவியப் படைப்புகளுக்கும் கிடைக்கின்ற வரவேற்பு மிகச் சொற்ப அளவிலேயே காணப்படுகின்றது. பிற படைப்புகளில் உள்ள ஆர்வத்துடன் ஒப்பிடுகையில், கலைஞர்களுக்கு ஓவியத்துறையிலுள்ள ஈடுபாடு மிகக் குறைவானதே. இவ்வகைப் போக்கு ஈழத்து நவீன ஓவிய வளர்ச்சிக்கு உகந்ததாய் இல்லை.

எனவே, ஓவியக் கலை தொடர்பாக கவனம் செலுத்தக் கூடிய ஆர்வம் படைப்பாளிகளுக்கு ஏற்பட வேண்டும். ஓவியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பரந்த மனப்பாங்கு ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் தோன்ற வேண்டும். ஓவியங்கள் பற்றிய விமர்சனங்களும் கருத்தாடல்களும் நாடளாவிய ரீதியில் முன்வைக்கப்பட வேண்டும். சஞ்சிகைகள், பத்திரிகைகள் இவர்களின் படைப்புகளை முன்னுரிமை அளித்து பிரசுரிக்க வேண்டும். ஓவியக் கண்காட்சி, நுண்கலைக் கூடங்கள் உருவாக்கப்பட்டு ஓவியர்களது படைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஈழத்து நவீன ஓவியத் துறையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். எனவே, இவ்விடயத்தில் கலை ஆர்வலர்களும் விமர்சகர்களும் அதிக கவனம் செலுத்துவது சமகாலத்தின் முக்கியத் தேவையாகும். அத்தேவை நிறைவேற்றப்படுவது சிறந்த பெறுபேறுகளை படைப்புலகில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
March 2003

No comments:

Twitter Bird Gadget