Wednesday, January 13, 2010

இளமைப்பருவம்


மனிதன் தனது இலட்சியம், குறிக்கோள் என்பவற்றையும், தனது அந்தஸ்து, உயர்வு, கௌரவம் என்பவற்றையும் வளர்த்துக் கொள்ளும் ஆரோக்கியமான காலகட்டமே இளமைப் பருவமாகும். ரசிப்பது, சுவைப்பது, உணர்வது, உயரிய குறிக்கோளைக் கொண்டிருப்பது போன்றவை இயல்பான சுபாவமாகவும், இயற்கையின் அழகாகவும் மனிதனில் செறிந்து காணப்படுகின்றன.

இவையே மனிதனின் சோம்பல், பலவீனம், அவமானம், அறியாமை முதலான இழிவுகளை நீக்கி, அவனது தன்னம்பிக்கை, நற்குணம், வீரம், தூரநோக்கு போன்ற அளுமைப் பண்புகளை வளர்க்கும் சிறப்புக் களமாகவும் காணப்படுகின்றன.

வசந்த காலத்தில் புதுப்பொலிவையும், இலாபமும் இன்பமும் மகிழ்ச்சியும் நறுமணமும் அளிக்கும் செற்பாடுகளையுமே இயற்கையில் நாம் காண்கின்றோம். மரங்களிலுள்ள மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனால் சூழல் நறுமணமும் செழிப்பும் பெறுகின்றது. வயல் நிலங்களும் தோட்டங்களும் துளிர்விட்டு இலைகளை முளைக்கச் செய்து நிழலையும் சந்தோஷத்தையும் தருகின்றன. அழகுடன் வீசும் வசந்த மிகு நறுமணக் காற்றினால் பறவைகள் கீச்சிட்டுக்க த்தி, ஆகாயத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிக்கும். இவ்வாறான இயக்கமும் மலர்ச்சியும் பொலிவுமிக்கதே வசந்த காலமாகும்.

மனித வாழ்வின் இளமைப் பருவமும் வசந்த காலத்தைப் போன்றதாகும். அது பல நன்மைகளை தன்னகத்தே பொதிந்துள்ள களஞ்சியமாகும். வாழ்க்கையின் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் செழிப்பான பாதையாகவும் அது விளங்குகின்றது. பூமியின் புது வழியாகப் பயணிக்கும் ஒரு பிரயாணி எவ்வாறான புதுமையான காட்சிகளைக் கண்டு மகிழ்வெயுதுவானோ, அவ்வாறே இளமைப் பருவத்தில் மகிழ்ச்சிகரமானதும் வாழ்நாளில் மறக்க முடியாததுமான இதமான நிகழ்வுகள் பலவற்றை அவன் சந்திக்கிறான்.

உலகில் வௌ;வேறு குணாதிசயங்களும் இயல்புகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டவர்களாக மனிதர்கள் வாழ்கின்றனர். தத்தமது வாழ்க்கை குறித்த திருப்தியுடனும் அதிருப்தியுடனும் மனிதர்கள் உள்ளனர். குடும்பம், பாடசாலை, தோழர்கள் என சமூகத்தின் பலரோடும் பலவிதமாகப் பழகும் இளைஞர்களும் யுவதிகளும் வாழ்கையை சுவையாகவும் பார்ப்பதுண்டு, கசப்பாகவும் பார்ப்பதுண்டு. எனது குடும்பம் எனக்கு ஏற்புடையதாகவோ நான் விரும்புவதை நிறைவேற்றித் தருவதாகவோ இல்லை, நான் கல்வி கற்கும் பாடசாலை எனக்கு ஏற்றதாக இல்லை. அங்கு என்னதான் போதிக்கப்படுகின்றது, இவன் என்ன நண்பன். என் விருப்பத்திற்கு ஒத்துவருபவனாக இல்லையே.

இவ்வாறு எல்லாவற்றையும் எதிர்மறையாகவே நோக்கும் பண்புள்ளவர்கள் தம் வாழ்வைக் கசப்பானதாகவும் திருப்தியற்றதாகவும் கருதித் தம் எதிர்காலத்தைப் பலவீனப்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர்.

எம்மைச் சூழவுள்ள அனைத்தும் அழகும் திருப்தியும் தருவன என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. என்றாலும் பெரும்பாலானவை மனிதனுக்குப் பயன்பாட்டையும் மகிழ்ச்சியையும் தருவனவாகவே உள்ளன என்பதை மறுக்க முடியாது. அதாவது வாழ்கையை நாம் எவ்வாறு நோக்குகின்றோம் என்பதைப் பொறுத்தே அவை அமைகின்றன.
அதேவேளை, வாழ்வில் தாம் எதிர்நோக்கும் சவால்களைத் திறமையாகச் சமாளித்து தம் எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்வதில் தன்னம்பிக்கையுடன் உழைத்து வரும் ஆளுமை வர்க்கத்தினரும் உலகில் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கையை நண்பயன் மிக்கதாகவும் அதிலுள்ளவற்றை மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் கருதும் பண்பைக் கொண்டுள்ளனர். இப்பண்பு அவர்களது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அற்புதமான பலத்தை அவர்களுக்கு நல்குகின்றது.

ஆகவே, எம்மைச் சூழவுள்ள விடயங்களில் நல்லதும் கெட்டதும், அழகும் அவலட்சணமும், நன்மையும் தீமையும், இன்பமும் துன்பமும் இணைந்தே உள்ளன. பிள்ளை பிறப்பது மனச்சந்தோஷத்தையும், அது இறப்பது மன வேதனையையும் தருகின்றன. தேகாரோக்கியம் நன்மையையும், நோய் தீமையையும் தருகின்றன. இவ்வாறே நன்மையும் தீமையும் இணைந்ததே வாழ்க்கையாகும்.

வாழ்க்கையை சாதகமாக நோக்குவது எப்படி என்பது பற்றி வாழ்வியலாளர்கள் கூறும் அறிவுரைகள் எவை?

1. மனிதன் தன்னிடமுள்ள நன்மைகளையும் நற்பாக்கியங்களையும் எடைபோட்டு தன்னில் திருப்தி கொள்ள வேண்டும்.

2. உலகை சற்று ஆழமாக நோக்கி, இறைவனின் சக்தியை உணர்ந்து அந்த சக்தி ஒருபோதும் தீமையைத் தராது எனும் உறுதிப்பாட்டைக் கொள்ள வேண்டும்.

3. எப்போதும் பயனுள்ள செயற்பாடுகள் பற்றிச் சிந்திக்கத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. எம்மிடம் அபூர்வமிக்க ஆற்றல்கள் உள்ளன. அவைகளை வெளிக்கொணர்வது எப்படி எனும் எண்ணப்பாட்டில் வாழ வேண்டும்.

5. ஒருபோதும் எதையும் அழிப்பதற்கோ நாசமாக்குவதற்கோ சிந்தனையைப் பயன்படுத்தாது, ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கே தம் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

6. தற்பெருமை, மமதை, ஆணவம் என்பனவற்றைக் கடந்து தன்னைத்தான் நேசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

7. சிலவேளைகளில் துன்பங்கள், துயரங்கள், தோல்விகள் ஏற்பட்டால் காலவோட்டத்தில் எவ்வாறான பிரச்சினைகளாயினும் அவை மறைந்து, மறந்து போய்விடும் எனும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

8. தவறுகள், பிழைகள் நேர்ந்து அசம்பாவிதமாக ஏதும் இடம்பெற்றால், திட்டமிடல், போதிய கவனமின்மை என்பவற்றினாலேயே இவ்வாறு நிகழ்ந்துள்ளது என எண்ணி, அடுத்து வரும் நிகழ்வுகளை நன்கு திட்டமிட்டும் போதிய கவனத்துடனும் கையாள வேண்டும்.

வாழ்க்கையின் வெற்றிக்காக உளவியலாளர்களும் வாழ்வியலாளர்களும் வழங்கியுள்ள இத்தகைய அறிவுரைகளும் உபதேசங்களும் அதிகமுள்ளன. அவற்றை அறிந்து நடைமுறையில் கொணர முயலும் போது அது எமக்குப் பெரும் பயனையளிக்கும் எனத் துணிந்து கூறலாம்.

இளமைப்பருவத்தை எதனாலும் ஈடு செய்ய முடியாது. மனித வாழ்க்கையின் செழிப்பான காலகட்டமாகிய அப்பருவம், உள உடல் ரீதியாக வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்வாங்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்டதாக விளங்குகின்றது. எனவே, சென்றால் திரும்பாத அந்த இளமைப் பருவத்தை நாம் எமக்கு சாதகமானதும், எமது எதிர்காலத்தைப் பிரகாசிக்கச் செய்யக் கூடியதுமான வழியில் பயன்படுத்திக் கொள்ள முனைய வேண்டும்.

செல்வம், பொருள் அழிவது பற்றிய கவலையை விட, காலமும் நேரமும் வீணாகுவது பற்றிய கவலையே பெரியது.
December 1998

No comments:

Twitter Bird Gadget