ஆராய்ச்சி என்பது இன்று பலராலும் பரவலாக அவதானிக்கப்படுகின்ற, நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு பணியாகவும், செயற்பாடாகவும் விளங்குகின்றது. ஒரு விடயத்தை நுணுகி அவதானித்து அதன் பண்புகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றிற்குத் தக்க தீர்வுகளை முன்வைப்பதே ஓர் ஆராய்ச்சியின் நோக்கமாக இருக்க முடியும். இவ்வகையில், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் படியாகத் தூண்டும் இஸ்லாம், அதனை மக்களுக்குப் பயன்படும் வகையில் கட்டமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றது.
ஆராய்ச்சி – வரைவிலக்கணம்
'அவதானிக்கப்படும் தரவுகளை வகைப்படுத்துதல், பொதுமைப்படுத்துதல், நிரூபித்தல் ஆகிய சென்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு வழிவகுப்பதே ஆய்வு' என்பது ஆராய்ச்சி என்பதற்குக் கொடுக்கப்பட்ட சற்றுப் பழைய வரைவிலக்கணமாகும். 'புதிய தகவல்களையும் தொடர்புகளையும் அறிந்து கொள்வதற்கும் அறிவினை விஸ்தரிப்பதற்கும் நிரூபிப்பதற்கும் பயன்படுத்தப்படும் நுணுக்கமான விசாரணை அல்லது பரிசோதனையே ஆராய்ச்சி' என்பது மற்றொரு வரைவிலக்கணமாகும். 'நோக்கங்களை நிரூபிப்பதற்கான முறைகள் மூலம் உண்மைகளைத் தேடுவதற்கான ஓர் அவசியமான ஒழுங்குமுறை விசாரணையே ஆராய்ச்சி' என்பது சற்றுச் சுருக்கமான வரைவிலக்கணமாகும். 'அறிவினைப் பொதுமைப்படுத்தவும் அதனை விஸ்தரிப்பதற்கும் திருத்துவதற்குமான நோக்கில் பொருத்தமான கருத்துக்கள், விளக்கங்கள், நோக்கங்கள், அடையாளக் குறிகள் என்பனவற்றைத் திறமையாகப் பயன்பாட்டிற்குள் கொண்டு வருதலே ஆராய்ச்சி' என சமூக விஞ்ஞானங்களுக்கான கலைக்களஞ்சியம் விளக்குகின்றது. இவை ஆராய்ச்சி தொடர்பான வரைவிலக்கணங்களுடன் கூடிய நவீன கருத்துக்களாகும்.
அதேவேளை, உலகின் பூரண வாழ்க்கைத் திட்டமான புனித இஸ்லாம், ஏனைய துறைகளுக்குப் போலவே ஆராய்ச்சி தொடர்பான பணிகளுக்கும் சிறப்பாக வழிகாட்டியுள்ளது. இஸ்லாம் முன்வைத்துள்ள கருத்துக்களின் பிரகாரம், ஆராய்ச்சி என்பது, 'செய்திகளைப் பகுப்பாய்வு செய்து உண்மைகளைக் கண்டறிதல்' என்பதாக, அல்லது, 'அல்லாஹ்வின் சிருஷ்டிகளை விளங்கிக் கொள்ளுதலும், அவற்றின் யதார்த்தங்களை உலக மக்களுக்குத் தெளிவுபடுத்தலும்' என்பதாக, அல்லது 'எதிர்காலப் பிரச்சினைகளிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாத்தல்' என்பதாக வரைவிலக்கணப்படுத்தலாம். ஆராய்ச்சி பற்றிய மேற்கின் சிந்தனை வழியிலான கருத்துகளுக்கும், இஸ்லாத்தின் கருத்துகளுக்குமிடையிலே உள்ள பெரும் வேறுபாடாக, நம்பகத்தன்மை என்ற அம்சத்தைக் குறிப்பிடலாம். செய்தியின் நம்பகத்தன்மைக்கு இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தின் அளவுக்கு, மேற்குலகின் கருத்துகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
இவ்வகையில், இஸ்லாம் முன்வைத்துள்ள கருத்துகளின் படி, ஓர் ஆராய்ச்சி எவ்வாறு அமைய வேண்டும்? ஆராய்ச்சி நூல் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.
July 1999
No comments:
Post a Comment