Friday, January 15, 2010

இலங்கையின் தகவல் தொழினுட்ப வளர்ச்சி





வளர்முக நாடுகளில் தகவல் தொழினுட்பத்தை விருத்தி செய்யும் பணிகளும் அதனூடாக சுதேச பொருளாதாரத்தைப் பெருக்கும் முயற்சிகளும் அரச மட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமகாலத்தில், அத்தகைய பணியில் இலங்கையும் ஆர்வத்துடனும் அதிக எதிர்பார்ப்புடனும் களமிறங்கியுள்ளது. இலங்கையின் பிரதான பொருளாதார மூலமாக ஏற்றுமதி வர்த்தகம் விளங்குவதுடன், இவ் ஏற்றுமதிக்காகவென மேற்கொள்ளப்படும் கைத்தொழிற் துறைகள் விரிந்த பகுதியைக் கொண்டதாகவும் விளங்குகின்றன.

இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகள் 54 வீத வளர்ச்சியை கடந்த 2003இல் காண்பித்த போதிலும், தகவல் தொடர்பாடல் தொழினுட்பத் துறை குறிப்பாக கணினி மென்பொருள் தயாரிப்புத்துறை இவ்வளர்ச்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கவில்லை.
இலங்கையின் கணினி மென்பொருள் துறை மிகக் குறைந்த வேகத்திலேயே வளர்ச்சி கண்டு வருகின்றது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும், குறைந்தளவிலான வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்காகவும் தயாரிக்கப்படும் மென்பொருள்களினூடாக 1996 வரை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2001 வரை 58 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2003 வரை 80 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு வருமானமாகக் கிடைத்தன. 2010இல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை இம்மென்பொருள் துறை மூலமாக ஈட்டிக் கொள்ள முடியும் என தற்போது பொருளியலாளர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தைகளுக்காகவும், ஏற்றுமதிகளுக்காகவும் மென்பொருள் உற்பத்திகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டு வரும் 200க்கு மேற்பட்ட மென்பொருள் அபிவிருத்தி நிறுவனங்கள் இலங்கையில் உள்ளன. அத்துடன் புகழ்பெற்ற மைக்ரோசொப்ட் மற்றும் ஒராகில் ஆகிய நிறுவனங்களும் தமது அலுவலகங்களை இலங்கையின் தலைநகரில் திறந்துள்ளன. இவை பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் திறந்த மட்டங்களில் போட்டிகளை நடத்தி, தமது சொந்த உற்பத்திகளுக்கான பிரசார மற்றும் விநியோகப் பணிகளில் ஈடுபடுவதுடன், இலங்கையிலுள்ள கணினி ஆர்வலர்களை இனங்கண்டு அவர்களை விருப்பமான துறைகளில் ஊக்குவிக்கும் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.

தற்போது உலகில் நிலவி வரும் திறந்த வள மென்பொருள் முறைமை (Open source software system) இலங்கையின் தகவல் தொழினுட்பத்துறையை எழுச்சி பெறச் செய்வதற்கும், பூகோளக் கணினித் துறையில் இலங்கை முன்னணி வகிப்பதற்குமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. திறந்த வள செயற்றிட்டங்களில் பங்கு கொள்ளும் பெரும்பாலான கணினி அபிவிருத்தியாளர்கள் (Developers) அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டவர்களாக இருக்கின்ற அதேவேளை, வெகு சொற்பமான சிலரே ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். எனினும், இந்த உண்மை இலங்கையைப் பெருமளவு பாதிக்கவில்லையாயினும், மென்பொருள் உற்பத்தியாளர்களின் தோற்றமும் அதிகரிப்பும் இலங்கையில் மிகக் குறைந்தளவிலேயே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
'லங்கா மென்பொருள் ஸ்தாபனம்' என்பது, திறந்த வள உலகினால் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி அதனூடாக இலங்கைக்கு உதவுவதற்கென உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். இவ் ஸ்தாபனம் கொழும்பு மற்றும் மொரட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களிலும் இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனத்திலும் உள்ள ஆய்வுகூடங்களை அபிவிருத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன், ஜாவா, சி ப்ளஸ் மொழிகளிலான செயற்றிட்டங்களிலும் பங்கெடுத்து வருகின்றது.
இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களும் கணினி அபிவிருத்திப் பணிகளும் அதன் தொழினுட்ப விருத்திக்கான புதிய அணுகுமுறைகளை இனங்காண்பித்துள்ளன. இவ்வணுகுமுறைகள் புதிய மென்பொருள் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கூடிய, நன்கு திறன் விருத்தி செய்யப்பட்ட, உலகத் தரம் வாய்ந்த அதிக மென்பொருள் கட்டுமானப் பணியாளர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை பரவலாக ஏற்பட்டு வருகின்றது.

1996இலிருந்து உலகின் நவீன தகவல் தொழினுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதில் இலங்கை ஆர்வம் காட்டி வருகின்றது. 1985களுக்குப் பின்புதான் கணினிப் பாவனை இலங்கையில் அறிமுகமானபோதிலும், அரசம ற்றும் தனியார் நிறுவனங்களில் பரவலாக அது பாவனைக்கு வந்தது 1996க்குப் பின்புதான். தற்போதைய நிலையில், ஒரு நிறுவனத்துக்கு அல்லது ஓர் அலுவலகத்துக்கு அவசியப்படும் முதன்மைத் தளபாடமாக கணினி மாறிவிட்டது. இது இலங்கையின் தொழினுட்ப வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். அவ்வாறே, தமக்கென மின்னஞ்சலையும் இணையத்தளத்தையும் கொண்டிருக்கும் நிலையை ஒவ்வொரு நிறுவனமும், அதற்கு மேல் ஒவ்வொரு தனிநபரும் பெற்றுள்ளனர்.
இணையத்தைத் தமது கல்வி, பொருளாதார மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் வழக்கத்தை நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலானோரும், கிராமப்புறங்களில் உள்ள சிறுதொகையினரும் கொண்டிருக்கின்றனர். இணையத்தளப் பாவனை மிக வேகமாக வளர்ந்து வரும் நடைமுறையாக சராசரியாக இலங்கை முழுவதும் அவதானிக்கப்படுகின்றது. 1996இல் 2504 ஆக இருந்த இணையக் கணக்குகள் (Internet accounts), 2003ல் 85,500 ஆகவும், 2008இல் 200,000 ஆகவும் அதிகரித்துள்ளது. 2000க்கு முன்னர் சுமார் 5 வருடங்களாக ஏற்பட்டு வந்த அதிகரிப்பு வீதத்திலும் பார்க்க கூடிய அதிகரிப்பை கடந்த 2008ன் ஒரே ஆண்டில் மட்டும் அவதானிக்க முடியுமாக இருக்கின்றமை விசேட அம்சமாகும். இவ் அதிகரிப்புக்கான சாத்தியங்களில் தனிநபர் கணினிப் பாவனைப் பெருக்கம், தொடர்பாடல் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் காண்பிக்கும் போட்டி, அதற்காக வழங்கும் சலுகைகள் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன.

எனினும், அயல்நாடான இந்தியாவுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வளர்ச்சி வேகம் என்பது மிகத் தாமதமாகவே நிகழ்ந்து வருகின்றது. ஏனெனில், தகவல் தொழினுட்பத் துறையில் இந்தியாவானது அமெரிக்காவுக்குப் போட்டியாக எழுந்து நிற்கும் ஒரு நாடாகும். அமெரிக்காவின் பொருளாதாரத் துறை விருத்திக்கான பெரும் பங்களிப்பை தகவல் தொழினுட்பத் துறை வழங்குகின்ற போதிலும், அமெரிக்காவின் தகவல் தொழினுட்பத்துறையில் பெரும் பங்கு வகிப்போர் இந்தியர்களாவர். அவர்கள் தமது ஆரம்பக் கல்வியை இந்தியாவில் கற்று, உயர் கல்விக்காக அமெரிக்காவுக்குச் சென்று, அங்கு தமது கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, உயர்ந்த சம்பளத்துடன் ஒரு வேலையையும் தேடிக் கொண்டு அங்கேயே குடியமர்ந்தவர்கள். இன்று அந்த இந்தியர்கள் இல்லையெனில், அமெரிக்காவின் தகவல் தொழினுட்பத்துறை ஒரேயடியாகக் கீழே விழுந்து விடும் என்ற நிலையுள்ளது.

இந்தியாவின் தகவல் தொழினுட்ப வளர்ச்சி மிகத் தாமதமாகவே தோன்றியதெனினும், மிகத் துரிதமாக வளர்ச்சி கண்ட ஒன்றாகும். இந்தியாவில் 3000க்கு மேற்பட்ட நிறுவனங்கள் மென்பொருள் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. 1996இல் 734 அமெரிக்க டொலர்களாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி வர்த்தகம் 2001இல் 6,200 மில்லியனாக வளர்ந்தது. 2001இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இரண்டு லட்சம் மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்கள் வருமானத்தை இந்தியாவின் தகவல் தொழினுட்பத்துறை ஈட்டியுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான திணைக்களங்கள் தகவல் தொழினுட்பத்தினூடாக நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான நகரங்களில் பொலிஸ் சேவைகள் மற்றும் நிருவாக சேவைகள், நீர்க்கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் மற்றும் வரிகள் முதலான கட்டணச் செலுத்தல்கள் என்பன இன்டர்நெட் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

ஆயினும், உண்மையில் இந்தியா கணினித்துறையில் பெருவளர்ச்சி கண்ட ஒரு நாடு அல்ல. உலக வங்கி 2001இல் வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையொன்று, கணினிப் பாவனையாளர்களை அதிகமாகக் கொண்ட முதல் 14 நாடுகளைப் பட்டியலிட்டிருந்தது. அதில் 1000 பேருக்கு 510 பேர் தொடர்ச்சியாகக் கணினியைப் பயன்படுத்துவோர் எனும் விகிதத்தில் ஐக்கிய அமெரிக்கா முதலிடத்திலும், 1000 பேருக்கு 360 பேர் எனும் விகிதத்தில் கனடா இரண்டாம் இடத்திலும், 1000 பேருக்கு 297 பேர் எனும் விகிதத்தில் ஹொங்கொங் மூன்றாம் இடத்திலும் இடம்பிடிக்க, இந்தியாவோ 1000 பேருக்கு 3 பேர் எனும் விகிதத்தில் இறுதி ஸ்தானத்தையே பெற்றிருந்தது.

இதுதவிர, இன்டர்நெட் மற்றும் தகவல் தொழினுட்பச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மற்றும் இன்டர்நெட் பாவனைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில், 'குளோபல் இன்போர்மேஷன் டெக்னோலஜி' எனும் அமைப்பு 2007இல் வெளியிட்ட தரப்படுத்தல் ஒன்றில், டென்மார்க், சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, ஐஸ்லாந்து, பிரித்தானியா, நோர்வே என்பன முறையே உலகின் முதற் பத்து (டொப் டென்) நாடுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், இந்தியா 44ஆம் இடத்தையும், இலங்கை 86ஆம் இடத்தையும் பெற்றிருந்தன.

இத்தகைய தரப்படுத்தல்களில் முதனிலை நோக்கி முன்னேற வேண்டுமாயின், அதற்காக இலங்கை கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களும் கொள்கைகளும் இலங்கையின் தகவல் தொழினுட்பத்துறை வளர்ச்சியில் தாக்கம் செலுத்தத் தொடங்கி விட்டுள்ள நிலையில், அவற்றுக்கு மேலதிகமாக துறைசார்ந்த விற்பன்னர்களையும் நிபுணர்களையும் உருவாக்குவதற்கும் இலங்கை அரசு துரித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழினுட்ப பாடவிதானங்கள், இலங்கையில் கணினிப் பாவனையின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகியுள்ளன. பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கணினி கற்கை நிலையங்களையும் கணினி ஆய்வுகூடங்களையும் அமைப்பதற்காக, திறைசேரியின் பெரும் பகுதியை ஒதுக்கி இலவச கணினிகளையும் அதனுடன் தொடர்புடைய தொழினுட்பக் கருவிகளையும் வழங்குவதற்கும், அவற்றில் கற்பிக்கும் ஆசிரியர்களை இலவச கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் மூலமாக வளப்படுத்துவதற்கும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவைதவிர, இவ்வாண்டு தகவல் தொழினுட்ப ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டமையும், ஈ-ஸ்ரீலங்கா உள்ளிட்ட முன்மொழிவுகளும் இலங்கையின் தகவல் தொழினுட்பத்தை விருத்தி செய்வதற்கான சிறந்த முயற்சிகளாக விளங்குகின்றன.

இத்தகைய திட்டங்களின் பயனாக, மூத்த தலைமுறையினர் தவிர்ந்த ஏனையோர் தகவல் தொழினுட்பத்துடன் மிகச் சிறியளவிலேனும் பரிச்சயம் கொண்டவர்களாக மாறிவருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் தமது கல்வி, பொழுதுபோக்குத் தேவைகளுக்காக கணினியைப் பயன்படுத்தும் வீதமும் அதிகரித்து வருகின்றது.

இத்தகைய ஓர் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதற்காக அரசுக்கு நன்றி செலுத்த வேண்டியதுடன், வழங்கப்படுகின்ற இத்தகைய பெரும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி, தமது துறைசார் திறனையும் தகைமையையும் வளர்த்துக் கொண்டு, அவற்றினூடாக தமக்கும் தமது தாய்நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் பாடுபடுவதும் இலங்கை மக்கள் அனைவர் மீதுமுள்ள முக்கிய கடமையாகும்.

No comments:

Twitter Bird Gadget