Saturday, January 16, 2010

தகவல் தொழினுட்பத்திற்கான இலங்கையின் பணிகள்


தொழினுட்ப முன்னேற்றம் மனித வாழ்வை மிக உயர்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது மட்டுமன்றி, கடந்த காலங்களில் மிகச் சிரமமாகவும், சாத்தியமற்றதாகவும் இருந்த எண்ணற்ற பணிகளை மிக இலகுவானவையாகவும் நடைமுறைச் சாத்தியமானவையாகவும் மாற்றியமைத்துமுள்ளது. இத்தொழினுட்ப முன்னேற்றமானது கல்வி, பொருளாதாரம், அரசியல், மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், கணக்கியல், விவசாயம், பாதுகாப்பு, போக்குவரத்து, தொடர்பாடல், பொழுதுபோக்கு உள்ளிட்ட மனித சமுதாயத்தின் எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தி அவற்றின் செயற்பாடுகளை துரிதமானவையாகவும் நம்பகத்தன்மையும் துல்லியமும் மிக்கவையாகவும் ஆக்கியுள்ளன.

இவ் எல்லா வகையான தொழினுட்ப முன்னேற்றங்களும் அவற்றின் பிரதான மூல காரணியாய் விளங்கும் கணினி எனும் கருவியை மையப்புள்ளியாகக் கொண்டே விருத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பது பரவலாக அறியப்பட்டுள்ள ஓருண்மையாகும். இதனால், கணினியுடன் தொடர்புடைய அறிவும் ஆற்றலும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத தேவைகளாக இன்று மாறிப் போயுள்ளன. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு, கணினிக் கல்வியை ஊக்குவிக்கின்ற, அதற்கான வளங்களையும் வாய்ப்புகளையும் தேடிப் பெறுகின்ற உற்சாகமான ஒரு நிலையை இன்று உலகெங்கும் அவதானிக்க முடிகின்றது.

ஆயினும், இலங்கையைப் பொறுத்தவரை, அது கணினியுடன் தொடர்புடைய முன்னேற்றம், தொழினுட்ப வளர்ச்சி மற்றும் அதனூடான பொருளாதார விருத்தி என்பனவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இன்னும் இருந்து வருகின்றது. தொழினுட்ப விருத்தியிலும் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கும் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற, கண்டுபிடிக்கப்படுகின்ற தொழினுட்ப உத்திகளும் உற்பத்திகளும் இங்கு முழுமையாக வந்து சேருவதில்லை என்பதும், அல்லது காலம் தாழ்த்தியே அவை வந்து சேருகின்றன என்பதுமே இத்தகைய இலங்கையின் பின்னடைவுக்குக் காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், உண்மையில், மேற்குறித்த நாடுகளிலுள்ள தொழினுட்பவியலாளர்கள், அறிவியலாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் போன்றவர்களின் அளவுக்கு அறிவாற்றல் உள்ளவர்கள் இங்கு உருவாக்கப்படவில்லை என்பதும், அத்தகைய உருவாக்கத்திற்காக அரசோ, அரச நிறுவனங்களோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ மனப்பூர்வமானதும் முழுமையானதுமான பங்களிப்புகளையும் அர்ப்பணிப்புகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதுமே இதற்குக் காரணம் எனலாம்.

எந்தவொரு தொழினுட்ப உத்திக்காகவும், உற்பத்திக்காகவும் மேற்குலகில் தங்கியிருக்க வேண்டிய, பெரும்பாலான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கிருக்கும் நிர்ப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இலங்கை எத்தகைய பெரிய முயற்சியையும் எழுச்சியையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அவ்வாறே அபிவிருத்தியடைந்த நாடுகளிலிருந்து குறிப்பாக மேற்குலகிலிருந்து பயன்படுத்தி அப்புறப்படுத்தப்படுகின்ற தொழினுட்பக் குப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்து விநியோகிக்கும் இடைத்தரகர்களுக்குள்ள வாய்ப்புகளை முறியடிப்பதை விடுத்து, அவர்களிடமிருந்து வரிகளை அறவிட்டுக் கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டும் அரசாங்க நிறுவனங்களின் நெகிழ்வுப் போக்கும் இதுவரை மாற்றம் பெறவில்லை. அரச ஸ்தாபனங்களில் கடமையாற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு தகவல் தொழினுட்ப அறிவை கட்டாயத் தொழிற்றகைமையாகப் பிரகடனப்படுத்தும் உத்தியோகபூர்வ சட்டங்கள் எவையும் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படவில்லை. இவற்றைவிட, தகவல் தொழினுட்ப அறிவை வருமானமீட்டும் பிரதான பொருளாதார மூலமாகக் கருதி ஆங்காங்கே போலிக்கவர்ச்சிகளுடன் கூடிய விளம்பரங்களுடன் முளைக்கின்ற தகுதியற்ற கணினிசார் கல்வி நிலையங்களையும் வகுப்புகளையும் தடுப்பதற்கும் அவற்றின் பாடத்திட்டங்களைப் பரிசீலிப்பதற்குமான எந்தவோர் இறுக்கமான கட்டுப்பாட்டையும் இலங்கை கொண்டிருக்கவில்லை.

இத்தகைய எண்ணற்ற பாதக நிலைகளின் விளைவாக, இலங்கையின் தகவல் தொழினுட்ப விருத்தி மிகத் தாமதமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, தகவல் தொழினுட்பத்தை விருத்தி செய்வதில் இலங்கை அரசு இதய சுத்தியுடனான பல்வேறு செயற்பாடுகளையும் திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றது என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. எனினும், அத்தகைய திட்டங்கள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றிலுள்ள குறைகள் இனங்காணப்பட்டு, மிகப் பொருத்தமானதும் திருப்தியானதுமான வழிமுறைகளும் திட்டங்களும் பதிலீடு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

தகவல் தொழினுட்பத்தை விருத்தி செய்வதற்காக இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளுள் முக்கியமான ஒன்றாக தகவல் தொடர்பாடல் தொழினுட்ப முகவர் நிலையத்தின் உருவாக்கத்தைக் குறிப்பிட முடியும்.

இந்நிலையம் இலங்கையின் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தகவல் தொழினுட்பம் என்பவற்றின் கொள்கை நெறிப்படுத்தல் என்பவற்றுக்குப் பொறுப்பான அதியுயர்ந்த தனியானதொரு தாபனமாகும். இது இலங்கை அரசுக்குச் சொந்தமானதாகும். இலங்கை அரசினால் பிரகடனப்படுத்தப்படும் தகவல் தொழினுட்ப வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற, மற்றும் அரச துறையில் தகவல் தொழினுட்பக் கொள்கைகளை இலங்கையில் நெறிப்படுத்துகின்ற பணிகளை இந்நிலையம் ஆற்றி வருகின்றது. இலங்கையில் பின்தங்கிய வறிய மக்களிடையே தகவல் தொழினுட்பத்தை விருத்தி செய்வதையும் அதன் நன்மைகளையும் பயன்பாடுகளையும் அம்மக்களும் அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும் அது இலக்காகக் கொண்டுள்ளது.

இந்நிலையத்தின் கீழ் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுள் ஈ-ஸ்ரீலங்கா எனும் முன்னெடுப்பு முக்கியமானதாக விளங்குகின்றது. ஈ-ஸ்ரீலங்கா என்பது தகவல் தொழினுட்பத்தினூடாக இலங்கையின் வறுமையை ஒழித்து, பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதையும் மேம்படுத்துவதையும் பிரதான இலக்காகக் கொண்ட வேலைத்திட்டமாகும். உலக வங்கியைப் பிரதானமாகக் கொண்ட பல்வேறு தாபனங்கள் இந்த முன்னெடுப்புக்கு நிதியுதவியளிக்கின்றன.

அவ்வாறே, வறிய மக்கள், வலது குறைந்தோர் மற்றும் வயது முதிர்ந்தோரின் தகவல் தொழினுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் கூடிய ஈ-சமூகம் எனும் வேலைத்திட்டமும் இந்நிலையத்தினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. 70 மில்லியன் மக்கள் வாழும் வறிய, பின்தங்கிய இலங்கை இன்னும் தகவல் தொழினுட்பத்தின் அனுகூலங்களை முழுமையாகப் பெற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மையின் அடிப்படையில், புத்தாக்கமான தகவல் தொழினுட்பத்தின் உத்திப் பிரயோகங்களுடன் இலங்கையின் வறிய, பின்தங்கிய சமுதாயத்திற்கு சமூக, பொருளாதார அத்தியாவசியங்களைப் பெற்றுக் கொடுத்தல், வெற்றிகரமான பிரயோகத்துக்கான பிரயோக அளவீடுகளை அபிவிருத்தி செய்தல், அணுகக் கூடிய இயைபான சுதேச நிறைவுடனான தகவல் தொடர்பாடல் பயன்பாட்டுடன் பொதுச்சமூகத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய இலக்குகளை அடித்தளமாகக் கொண்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் பிரடகனப்படுத்தப்பட்டுள்ள '2009 – ஆங்கிலத்துக்கும் தகவல் தொழினுட்பத்துக்குமான ஆண்டு' எனும் பிரகடனத்தையும் இந்நிலையமே முன்னெடுத்து, அதற்கான பணிகளையும் ஆற்றி வருகின்றது.

இந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் மற்றொரு முக்கிய கணினி அபிவிருத்தி வேலைத்திட்டமாக நெனசல (அறிவகம்) எனும் அரச கணினி நிலையங்களைக் குறிப்பிட முடியும். நாடெங்கும் 570க்கு மேற்பட்ட அறிவகங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அவற்றினூடாக கிராமப்புறங்களுக்கும் கணினி அறிவை வழங்கும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசினதும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களதும் செயற்பாடுகள் தகவல் தொழினுட்பத்தினூடாக நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றமை இலங்கையில் ஏற்பட்டு வரும் திருப்திகரமான மாற்றமாகும். அரசாங்கத்தின் சேவைகளை 24 மணி நேரமும் பெற முடியுமாக இருக்கின்றமை, நம்பகமான, துல்லியமான, இலகுவான அரசாங்க சேவைகள் சாத்தியமாகியிருக்கின்றமை போன்ற பயன்பாடுகளை மக்கள் இதன் மூலம் பெற்று வருகின்றனர். இத்தகையதொரு நவீனமயப்படுத்தல் அரச துறைகளை விட தனியார் துறைகளிலேயே அதிகமாகவும் பரவலாகவும் இடம்பெற்று வருகின்றன என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.

2001ம் ஆண்டில் பொதுத் தகவல் தொழினுட்பம் எனும் பாடத்தை க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், 2007ம் ஆண்டில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் எனும் பாடத்தை க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கும் அரசு அறிமுகப்படுத்தியது. தகவல் தொழினுட்பத்தை விருத்தி செய்வதற்கு அரசு மேற்கொண்ட மிக முக்கிய பணியாக இதனைக் குறிப்பிட வேண்டும். ஏனெனில், தலைமுறை இடைவெளியும் காலமாற்றங்களும் இளஞ்சிறார்களின் அறிவிலும் திறனிலும் பெரும் வேகத்தையும் மாற்றத்தையும் உண்டாக்கியுள்ளமையால், அவர்களது எதிர்பார்ப்பும் தேடற் பரப்பும் முந்திய தலைமுறையிலிருந்து பெரிதும் மாற்றத்திற்குள்ளாகி நிற்கின்றன. எனவே, அவர்களது எதிர்பார்ப்புக்கும் தேடலுக்கும் ஏற்ப அறிவையும் கல்வியையும் வழங்குவது சமூகத்தின் பொறுப்பாகும். இவ்வகையில், பாடசாலை மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழினுட்பப் பாடங்கள் இளஞ்சந்ததியினரின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கி அவர்கள் எதிர்கொள்ளவுள்ள பெரும் சவால்களை சமாளித்து முன்னேறுவதற்கான ஆற்றலையும் ஆளுமையையும் அவர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

இவற்றோடு இலங்கையின் பல பாகங்களிலும் இயங்கி வருகின்ற அரச தனியார் கணினிக் கல்வி நிலையங்களும் இத்துறையிலான மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குவதுடன், இத்துறையிலான உயர்கல்விக்குரிய வாய்ப்புகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக கணினிக் கற்கைகளையும் பயிற்சிகளையும் வழங்கும் கிராமிய கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் விதாதா வள நிலையங்கள் என்பன இலங்கையின் பல பாகங்களிலும் நிறுவப்பட்டுள்ளதுடன், மேலும் பல உயர்கல்விக்கான நிறுவனங்களும் கொழும்பு, கண்டி போன்ற நகர்ப்புறங்களிலும் நிறுவப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பயனுள்ள பல வேலைத்திட்டங்கள் இலங்கை அரசினால் தகவல் தொழினுட்ப அறிவு விருத்தியை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அவ்வேலைத்திட்டங்களின் அமுலாக்கலிலும் அதற்கென நியமிக்கப்படுகின்ற ஆளயிணிலும் மறைந்திருக்கும் சில குறைபாடுகளின் விளைவாக, அவற்றின் முழுமையான பயன்பாடுகள் மக்களைச் சென்றடைவது தாமதமானதாகவோ சாத்தியமற்றதாகவோ ஆகிவிடும் நிலையுள்ளது. பிரதானமாக, பொறுப்புகளுக்கு ஆளணியிடுதல், திட்ட அமுலாக்கலை முகாமை செய்தல், வளப்பங்கீடும் பராமரிப்பும் போன்ற விடயங்களில் வெளிப்படும் குறைபாடுகளும் பலவீனங்களுமே இந்நிலைக்குக் காரணியாய் அமைந்துள்ளன.

அத்தோடு, இவ்வேலைத்திட்டங்கள் நகர்ப்புறங்களில் செலுத்தி வரும் செல்வாக்கின் வீரியத்தை கிராமப்புறங்களில் கணிசமாக அவதானிக்க முடியாதிருக்கின்றமையும், இந்நிலையை மாற்றியமைப்பதற்காக கிராமப்புறங்களுக்கென அரசாங்கம் பிரத்தியேகமாக அமுல்படுத்துகின்ற செயற்றிட்டங்கள் அம்மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம் பெறாதிருக்கின்றமையும் இப்பின்னடைவுக்கான மற்றொரு காரணியாகக் குறிப்பிட முடியும்.

எனவே, தகவல் தொழினுட்பத்தை இலங்கையில் விருத்தி செய்யப் பாடுபடும் அரசின் முனைப்புகள் எதிர்பார்க்கப்படும் இலக்கையும் பயனையும் எட்ட வேண்டுமானால், நிருவாக ரீதியான பயனுள்ள மாற்றங்களையும் புதிய அணுகுமுறைகளையும் வகுப்பதுடன், ஏற்கனவே அமுலில் உள்ள திட்டங்களின் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும் முன்மொழிய வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
September 2009

No comments:

Twitter Bird Gadget