Saturday, August 1, 2009

ஈராக்கில் அமெரிக்காவின் இழப்புகளும் அவமானங்களும்


கடந்த 2002ம் ஆண்டு, ஐ.நா. சபையினதும், பெரும்பாலான உலக நாடுகளினதும் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் மீறி, ஈராக்கில் போர் தொடுத்தது அமெரிக்கா. பேரழிவு தரும் ஆயுதங்களைக் களைந்து, பிராந்தியத்தில் அச்சுறுத்தலற்ற சுமுக நிலையை ஏற்படுத்துவதென்ற கோஷத்தை முன்னிறுத்தி, தன் அதிகார மமதையினூடாக அமெரிக்கா மேற்கொண்ட இந்த யுத்தம் ஐந்து வருடங்களையும் தாண்டியும் இன்னும் நிறைவுறாது விஸ்வரூபமெடுத்து நிற்கின்றது. சதாம் ஹுஸைனைக் கைப்பற்றினால் ஈராக்கைத் தம் முழுமையான அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம், போரையும் முடிவுறுத்தி விடலாம் என்பது அமெரிக்காவின் கற்பனையாக இருந்தது. ஆனால், சதாம் கைப்பற்றப்பட்ட பின்பும், அவர் தூக்கிலிடப்பட்ட பின்பும் ஈராக்கில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளும், அமெரிக்க இராணுவத்தினரின் தொடர் உயிரிழப்புகளும் அமெரிக்காவைப் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கி உள்ளதோடு, ஈராக்கின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, தனது பரம வைரியான ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய பின்னடைவான நிர்ப்பந்தத்திற்குள்ளும் அதனை உள்ளாக்கியுள்ளன.

சர்வதேச ரீதியாக மிகப்பெரும் அதிகாரமும், மிக வலுவான இராணுவ சக்தியும், நவீன தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய பெருந்தொகையான ஆயுதத் தளபாடங்களையும் கொண்டுள்ள அமெரிக்கா, இவை எல்லாவற்றிலும் மிகப் பின்தங்கியுள்ள ஈராக்கிய ஆயுதக் குழுக்களையும் பொதுமக்களையும் வெற்றி கொள்ள முடியாமல், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களிலும், கார்க்குண்டு வெடிப்புகளிலும் கெரில்லாச் சண்டைகளிலும் தன் படைவீரர்களை ஒருவர் பின்னொருவராக இழந்து கொண்டிருப்பது, சர்வதேச சமூகத்தின் மத்தியில் மிகப்பெரும் அவமானத்தையும், இழிவையும் அந்நாட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், ஈராக்கிய போரில் வெற்றி பெற்றது யார்? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கான விடையை, அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் ஏற்பட்டுள்ள இராணுவ மற்றும் பொதுவளங்களின் இழப்புகளை ஒப்பீடு செய்வதன் மூலம் சரியாகக் கணிக்க முடியும்.

அமெரிக்கா, உலகின் முதற்தரமான வல்லரசு நாடு. இந்த வல்லரசு என்பது, அதன் அரசியல், இராணுவம், பொருளாதாரம், நீதி, நிருவாகம், கல்வி முதலான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியது. ஈராக் எண்ணெய் வளங்கொழிக்கும் நாடு என்ற போதிலும், சரியான தலைமைத்துவ வழிநடத்தல் இன்மையால் பெரும்பாலும் அனைத்துத் துறைகளிலும் பின்னடைவையும், வீழ்ச்சியையும் கண்டு வரும் ஒரு வளர்முக நாடாகும்.

அமெரிக்காவின் இராணுவ பலம் மிக விசாலமானது. அதன் கீழ் மட்ட இராணுவ வீரர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக இராணுவப் பயிற்சிகளைப் பெறுகின்றனர். இதற்காக, உணவு, தங்குமிடம், சம்பளம், ஊக்குவிப்புப் படிகள் என்பவற்றிற்கென, ஓர் இராணுவ வீரருக்கு, அவரது பயிற்சிக் காலத்தில் மட்டும், ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேலாக செலவிடப்படுகிறது. பதவி நிலைகள் உயரும் போது இத்தொகை மேலும் அதிகரிக்கின்றது. எனவே, ஓர் இராணுவ வீரரை இழக்கும் போது பல மில்லியன் பொருளாதார நஷ்டத்தை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

ஈராக்கைப் பொறுத்தவரை, அங்கு தற்போது அமெரிக்காவுக்கெதிராகப் போராடி வரும் ஆயுததாரிகள், குறைந்தளவான பயிற்சியையும், அதற்காக மிகக் குறைந்தளவான செலவையும் கொண்டவர்கள். அவர்கள் ஈராக்கிய அரசாங்கத்தின் கீழ் நின்று செயற்படுபவர்களுமல்லர். எனவே, அவர்களில் ஒரு முஜாஹிதின் இழப்பு, அரசாங்கத்தை எவ்வகையிலும் பாதிக்கப் போவதில்லை. அவர் சார்ந்த ஆயுதக் குழுவுக்குப் பாரிய பொருளாதார நஷ்டமாக அது அமையப் போவதுமில்லை. எனவே, ஒப்பீட்டளவில், ஒரு அமெரிக்க இராணுவ வீரரின் இழப்பு, ஆயிரம் ஈராக்கிய முஜாஹிதுகளின் இழப்பின் நஷ்டத்தை ஒத்தது என்று கூற முடியும்.

அமெரிக்கா, தன் முழுமையான இராணுவ பலத்தை ஈராக்கில் பிரயோகித்துள்ளது. ஆகாய மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் அதிநவீன தொழில்நுட்பங்களினூடாகத் தனது ஒவ்வொரு படை வீரருக்குமான பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. ஒருவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் இடம்பெற்றால், அதே நொடியே, தலைமையகம் அதனை அவதானித்து நடவடிக்கை எடுப்பதற்குத் தோதான நவீனரக வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. இத்தனை வசதிகள் இருந்த போதிலும், நாளொன்றுக்குக் குறைந்தது மூன்று அமெரிக்கர்களாவது ஈராக்கிய முஜாஹிதுகளின் தாக்குதலுக்குப் பலியாகும் நிலை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களில் எண்ணிக்கையளவில் அமெரிக்கக் கூட்டுப்படையினரை விட, ஈராக்கியர்களே அதிகம் உயிரிழந்துள்ள போதிலும், பொருளாதார இழப்பு எனும் வகையில், ஈராக்கியர்களை விட அமெரிக்கர்களே பன்மடங்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் மொத்த புள்ளிவிபரம் இதனை உறுதிப்படுத்துகின்றது. அதாவது, ஐந்து ஈராக்கியர்களுக்கு ஒரு அமெரிக்கர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள அதேவேளை, பொருளாதார ரீதியாக, ஈராக்கியருக்கு ஒரு அமெரிக்க டொலர் இழப்பு எனில், அமெரிக்கருக்கு 1200 அமெரிக்க டொலர் இழப்பு என்ற வகையில், அமெரிக்காவே பெருமளவு இழந்துள்ளது. இதுவரை 30இ000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் ஈராக்கில் உயிரிழந்துள்ளனர் என்பது வெளிவராத ஓர் உண்மையாகும்.

இத்தனை இழப்புகளுக்குப் பின்னும், ஈராக்கைத் தம் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாதுள்ள நிலை, அமெரிக்காவை மேலும் பின்னடைவுக்கு உள்ளாக்கியுள்ளது. உயிராபத்து தொடர்பான அச்சத்துடனேயே ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகள் ஒவ்வொரு நொடியையும் கழித்துக் கொண்டிருக்கின்றன. இவ் அச்சுறுத்தலானது படைவீரர்களுக்கு மத்தியிலே பெரும் அதிருப்தியையும் உளவியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையை மாற்றி படை வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக படைத்தலைமையகம் பல்வேறு கைங்கரியங்களை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில், பகிரங்க ரெஸ்லிங் போட்டியொன்றை தலைமையகம், படைவீரர்களுக்காக மட்டும் ஒழுங்கு செய்திருந்த்து. ஜோன் சீனா உள்ளிட்ட புகழ்பெற்ற அமெரிக்க ரெஸ்லிங் வீரர்கள் இதில் கலந்து கொண்டு போட்டியிட்டு, படைவீரர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து விட்டுச் சென்றனர். ஆயினும், படைவீரர்களின் போக்கில் எதிர்பார்த்தளவு முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

இவை தவிர, தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஈராக் விவகாரம் தொடர்பான எதிர்ப்புணர்வு, புஷ் அரசாங்கத்தை மிகவும் பாதித்துள்ளது. ஈராக்கில் படைகள் உடனடியாக திருப்பியழைக்கப்பட வேண்டுமென அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் காலக்கெடு விதித்துள்ளமையும், அண்மையில் நடைபெற்ற உள்மட்டத் தேர்தலில் புஷ்ஷின் குடியரசுக் கட்சி படுதோல்வியடைந்தமையும், புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பலமான கண்டனங்கள் எழுந்துள்ளமையும் என ஈராக்கில் ஏற்பட்ட தோல்வி பல்வேறு கோணங்களில் புஷ் நிருவாகத்தைப் பாதித்து வருகின்றது.

இந்நிலையிலேயே, ஈராக்கின் பாதுகாப்பு விவகாரம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா இறங்கி வந்த்து. சுமார் 29 வருடங்களுக்குப் பின் இரு நாடுகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஈராக் பிரதமரும் இதில் கலந்து கொண்டார். இது ஈராக்கிற்கும் மற்றொரு வகையில் ஈரானுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றியாகும்.

பொருளாதாரத் தடை குறித்த அமெரிக்காவின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சாது நெஞ்சுயர்த்தி நிற்கும் ஈரான், தன் பலத்தையும் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் சர்வதேசத்துக்கு நிரூபிக்க இது சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது. ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத், மிகத்துணிவுடனும் திட்டமிட்ட வழியிலும் நாட்டை வழிநடத்திச் செல்வது குறித்து, அந்நாட்டு மக்கள் தமது ஜனாதிபதிக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் வழங்கி வருகின்றமை, அமெரிக்காவை பல வகையிலும் இடியாக நொறுக்கியுள்ளது.

எனவே, ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் தற்போதைய நிலை, ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான். அண்மையில் லெபனானில் ஹிஸ்புல்லாக்களிடம் படுதோல்வியடைந்த இஸ்ரேல், தாமே வெற்றி பெற்றதாகப் பீற்றிக் கொண்டது போலவே, ஈராக்கில் படையெடுத்ததன் மூலமாக மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள அமெரிக்காவும் தாமே வெற்றி பெற்றுள்ளதாகக் கூறிக் கொண்டு தனது இழப்புகளையும் அவமானங்களையும் மூடி மறைத்து வருகின்றது. அமெரிக்கா, தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, தனது குற்றங்களுக்காகப் பகிரங்க மன்னிப்புக்கோரி, வாலைச் சுருட்டிக் கொண்டு மூலைக்குள் முடங்கும் காலமொன்று நிச்சயம் வரும். அந்த மகிழ்ச்சியான காலத்திற்காக நாமும் பிரார்த்தனையுடன் காத்திருப்போம்.

August 2002

No comments:

Twitter Bird Gadget