Tuesday, September 1, 2009

விடுதலைப் போராட்டமும் ஜனநாயக நீரோட்டமும்




இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகி பல மாதங்கள் கடந்து விட்டன. சுமுகமான தீர்வோ, தீர்வுக்கான அறிகுறியோ இதுவரை தென்படவில்லை என்ற நிலை ஒரு புறமிருக்க, இந்தப் பேச்சுவார்த்தைகளில், முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றனர் என்பதுதான் கவனத்திற் கொள்ளத்தக்கது.

பேச்சுவார்த்தை மேசைகளில் முஸ்லிம் பிரசன்னத்தைத் தடுக்கின்ற விடயத்தில், அரசும் புலிகளும் மிக்க அவதானத்துடனும், தந்திரோபாயத்துடனும் காய்களை நகர்த்துகின்ற அதேவேளை, தமது செயலை வெளியுலகுக்கு நியாயமானதெனக் காண்பிக்கும் விடயத்திலும் அதிக பியரத்தனத்துடன் செயற்பட்டு வருகின்றன.

சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நிலவி வந்த யுத்தச் சூழல், இலங்கையின் பொருளாதாரம், இராணுவம், சமூகம் என சகல துறைகளிலும் பாரிய வீழ்ச்சிக்கும், பின்னடைவுக்கும் காரணமாய் அமைந்ததென்பது உண்மையே. இந்த வீழ்ச்சியும் பின்னடைவும் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து இலங்கையின் அனைத்து சமூகங்களையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. யுத்தத்துடன் பெருமளவு தொடர்புபட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் மட்டுமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளும் கூட ஏதோ ஒரு வகையில் இப்பாதிப்புகளுக்கு இலக்காகின.

மேலோட்டமாகப் பார்க்கையில் தனிநாடு கோரிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்களை அடக்குவதற்காகவும், நாட்டைப் பாதுகாப்பதற்காகவும் போராடிய சிங்கள இராணுவப் படையினரும் மட்டுமே இவ் யுத்தத்தில் அதிக பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாக்கப்பட, இரண்டு தரப்பிலும் பிரதான இடம் பெற்றிராத முஸ்லிம்கள் எவ்விதப் பாதிப்புகளோ, இழப்புகளோ இன்றி சௌகரியமாய் வாழ்ந்து வந்துள்ளனர் என்ற புறம்பான கருத்தே வல்லான்மையுடன் தொனிக்கலாம்.

இக்கருத்து, இவ்விரு தரப்பினர் மத்தியிலும் மிக ஆழமாக வேரூன்றியுள்ளமையே, பேச்சுவார்த்தை மேசையில் முஸ்லிம் தனித்தரிப்பை இரு தரப்பினரும் தொடர்ந்தும் மறுத்து வருவதற்கு முக்கிய காரணமாகும். நாம் இருபது வருடங்களாகப் போராடியது உங்களுக்காக அல்ல என்ற, புலிகளின் அரசியல் ஆலோசகரின் முஸ்லிம்களைச் சுட்டிய கருத்தும் இதனையே உறுதி செய்கின்றது.

ஆனால், வகுப்புவாத, இனத்துவேஷ உணர்வுகளைப் புறந்தள்ளி விட்டு, நடுநிலைப் போக்குடன் சிந்திக்கும் எவரும் இக்கருத்தை மறுத்துரைக்க முன்வருவர்.

விடுதலைப் புலிகளின் போராட்டத்தைப் பொறுத்தவரை, அதில் தமிழ் மக்களுக்கு இருக்கும் உரிமையிலும் பொறுப்பிலும் சற்றும் குறைவு காணாத உரிமையும் பொறுப்பும் முஸ்லிம்களுக்கும் இருக்கின்றன. ஏனெனில், தமிழ் மக்கள் மனித வளம் மூலமாக இப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல முயன்ற அதேவேளை, முஸ்லிம்கள் தமது மனித வளம் மூலமாக மட்டுமன்றி, பொருள் வளம் மூலமாகவும் இதன் வெற்றிக்கு உறுதுணையாய் நின்றனர். இவ் ஆயுதப் போராட்டமானது, முஸ்லிம்களையல்லாமல், தமிழர்களை மட்டுமே உள்ளடக்கியது என்ற யதார்த்தம், புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள், படுகொலைகள், கொள்ளையடிப்புகள் மூலம் தெளிவான பின்னரே, முஸ்லிம்கள் இதற்கு எதிரான போக்குள்ளவர்களாகத் தம்மை திடீரென சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தைம் ஏற்பட்டது.

இதன் பின் புலிகளது போராட்டத்திற்கு முஸ்லிம்கள் வழங்கி வந்த மனித வளம் நிறுத்தப்பட்ட போதிலும், பொருள் வளமோ தொடர்ந்தும் வழங்கப்பட்டுக் கொண்டே வந்தது. சரியாகச் சொல்வதானால், இதன் பின்னர்தான் முஸ்லிம்களது பொருள் வளம் புலிகளுக்கு மிகக் கூடுதலாக வழங்கப்பட்டு வரலாயிற்று. ஆயினும், இவை பலவந்தமான முறையில் முஸ்லிம்களிடமிருந்து பிடுங்கப்பட்டதேயன்றி, புலிகளின் போராட்டத்தைச் சரிகண்டு, முஸ்லிம்கள் மனமுவந்து வழங்கியவையல்ல. ஏனெனில், இது விடுதலைப் போராட்டமல்லாமல், சர்வதேசத் தரம் மிக்க ஒரு பயங்கரவாதமே என்பதை முஸ்லிம்கள் சரியாக இனங்கண்டு கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில், இன்னும் நிலவுகின்ற கப்பம், வரி பெயர்களிலான பணப்பறிப்புகளும், உடைமைக் கொள்ளையடிப்புகளும், வடக்கில் பலவந்தமாக புலிகளினால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களது கோடிக்கணக்கான பொருளாதாரங்கள் சூறையாடப்பட்டமையும் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். முஸ்லிம்களது இந்த பொருளாதார வளங்கள் இன்றேல், உண்பதற்கு கவளம் உணவு கூட இன்றி நொடிந்து வீழ்ந்த நிலையில் புலிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டிருப்பார்கள் என்பது உறுதி.

புலிகளின் ஆரம்ப கால வரலாற்றில், அவர்களது தலைவர்களைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குப் புகலிடம் வழங்குவதிலும் முஸ்லிம் தலைவர்களும் பொதுமக்களும் காண்பித்த ஆர்வம், ஈடுபாடு என்பன அந்தப் புலிகள் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகின்றன. எனினும், இந்த நம்பிக்கைக்குப் பிரதியுபகாரமாக புலிகள் வழங்கிய கைம்மாறுகள் மிகவும் கசப்பானவை.

இன்று, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக புலிகள் சிறிது பலத்துடன் விளங்கினாலும், இதற்கு ஆரம்ப அடித்தளமாக அமைந்தது முஸ்லிம்களது பொருளாதாரமேயன்றி வேறில்லை. தவிரவும், முஸ்லிம் இளைஞர்களின் ஆரம்ப கால தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் கூட விதந்துரைக்கத்தக்கவையாகும்.

விடுதலைப் போராட்டம் என்ற பசப்பு வார்த்தைகளில் மயங்கி இயக்கத்தில் இணைந்து கொண்ட இந்த முஸ்லிம் இளைஞர்களே பின்னாளில் சண்டை ஆரம்பித்த போது, யுத்த களத்தில் கவசமாக நிறுத்தப்பட்டு, தமிழர்களின் உயிர் காக்கக் காரணமாக அமைந்தார்கள்.

மேலும், தமது ஆயிரக்கணக்கான வயல் நிலங்களையும், அவற்றின் மூலமான கோடிக்கணக்கான வருமானத்தையும் இழந்து, அவையனைத்தையும் உத்தியோகபூர்வமற்ற வகையில் புலிகளுக்கு வழங்கியதாகவுள்ள முஸ்லிம்களின் நிகழ்கால வாழ்வு நிலை, புலிகளது போராட்டத்திற்கு முஸ்லிம்களது பங்களிப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்பதையே எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

பத்திரிகைகளுக்கும், வானொலிகளுக்கும் அறிக்கைகள் விட்டு, முஸ்லிம்களது நிலங்களை மீளக்கொடுத்து விட்டோம் என்று வெளியுலகத்தை நம்ப வைக்க கபட நாடகம் ஆடும் புலிகள், நடைமுறையில் அதனைச் சற்றும் பின்பற்றாது, தொடர்ந்தும் அவற்றைத் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டு, அவற்றின் விளைச்சலைiயும் வருமானத்தையும் தமக்குள்ளேயே பங்குபோட்டுக் கொள்ள முயல்வதானது, அவர்களது அராஜகம் மிக்க சர்வாதிகாரப் போக்கையும், முஸ்லிம்கள் மீதுள்ள தீராத துவேஷ உணர்வையும் தெளிவாகப் பிரதிபலித்துக் காட்டுகின்றது.

இத்தகைய அக்கிரமங்கள், அராஜக வெறியாட்டங்களை அனுபவித்த பின்னும் கூட புலிகளுக்கு எதிராக இதுவரை கிளர்ந்தெழாதிருப்பதிலிருந்து முஸ்லிம்களின் பொறுமைக் குணாம்சத்தையும், இன ஒற்றுமையின் பால் அவர்கள் காட்டும் அதீத ஈடுபாட்டையும் பூரணமாக அறிந்து கொள்ள முடியும்.

ஆயினும், புலிகளோ ஏனைய தமிழ் அரசியல்வாதிகளோ முஸ்லிம்களை சமாதானத்திற்கு விரோதமானவர்களாகக் காட்டுவதிலும் அவர்களது உரிமைகளையும் சுதந்திரங்களையும் மறுப்பதிலுமான தமது நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்திக் கொண்டே வருகின்றனர் என்பதுதான் விசனத்திற்குரியதாகும்.

இத்தகைய இனத்துவேஷச் செயல்களில் வீரகேசரி, தினக்குரல் மற்றும் தினகரன் உள்ளிட்ட தமிழ் பத்திரிகைகள் பலவும் கைகோர்த்து நின்று இனவாதத்தை உமிழ்ந்து வருவதுதான் ஜீரணிக்க முடியாது சீற்றம் கொள்ளத் தூண்டுகின்றது. பத்திரிகாதர்மமும் கூட கேள்விக்குறியாகி விட்டது.

முஸ்லிம்களையும், அவர்களது வாழ்வியல் கூறுகளையும் ஒழித்துக் கட்டுவதான திட்டமிட்ட சதிமுயற்சியின் ஆரம்ப கட்டமே பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களுக்கான தனித்தரப்பை அவர்கள் மறுப்பதாகும்.

புலிகள் மட்டுமன்றி, அரசும் கூட இதே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, இலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக வடகிழக்கு வாழ் முஸ்லிம்களின் எதிர்கால சூனிய நிலையைக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. முஸ்லிம்கள் தமது வாழ்வு தொடர்பாக தீவிர சிந்தனைக்கும், தீர்வெடுத்தல்களுக்கும் ஆட்பட வேண்டிய தருணம் இதுவாகும்.

ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சார்ந்த தீர்வாலோசனையின் மீதும் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையில், இன்று வரை களங்கமின்றி வாழ்ந்து வரக்கூடியவர்கள் முஸ்லிம்கள். தாம் எதிர்கொண்ட அனைத்துப் பிரச்சினைகளின் போதும், விடுதலைப் போராட்டத்தையல்லமால், ஜனநாயக நீரோட்டத்துடனான தீர்விலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர். இவ் உண்மையை சுதந்திரத்தக்கு முன்னாலிருந்து இன்று வரையுள்ள இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆதாரங்களூடாக ஊர்ஜிதம் செய்ய முடியும்.

அதேவேளை, ஆயுதப் போராட்டத்தையே தமது பிரச்சினைக்கான தீர்வாகக் கொண்டிருந்த புலிகள், ஜனநாயக வழிமுறைகளின் ஆரம்பத்தில் காலடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஆரம்பந் தொட்டு இன்றுவரை, ஜனநாயகத்தின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த முஸ்லிம்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற மிகப் பெரும் கொடுமையும் அக்கிரமமுமாகும். சிங்கள அரசு சிறுபான்மை இனமாகிய தமிழர்களுக்கு வழங்கும் உரிமையும், தமிழ்ச்சமூகம் பெரும்பான்மை இனமாகிய சிங்களவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் கௌரவமும் முஸ்லிம்களுக்கும் கிடைக்கின்ற வரை, இலங்கையின் இனப்பிரச்சினையானது தொடர்ந்தும் பிரச்சினையாகவே இருந்து வரும் என்பது உறுதி.

அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலேயுள்ள முரண்பாடுகள், விட்டுக்கொடுப்பின்மைகள் முதலானவற்றினூடாக சூடிபிடித்துள்ள தற்போதைய அரசியல் களநிலவரத்தின் படி, இந்தப் பேச்சுவார்த்தைகளும் சமாதான முன்னெடுப்புகளும் அளிக்கும் வெற்றி தொடர்பான விடயங்களில் பலத்த ஐயப்பாடுகள் எழுந்துள்ள நிலையிலும், முஸ்லிம்கள் தமது சுதேசியத்தை மறுக்காத எதிர்காலத்திற்காகப் போராட வேண்டியது அவசியம் என்ற யதார்த்தத்தை உள்வாங்கி, தமது செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அப்போதே எதிர்கால இருப்பும், பின் சந்ததியினரின் வாழ்வும் நம்பிக்கையானதாக அமையும்.
May 2004

No comments:

Twitter Bird Gadget