Sunday, April 11, 2010
தீ நிழல் - திரைப்படம்
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நிலவி வந்த போராட்டச் சூழலின் தாக்கங்களையும் அவலங்களையும் வெளிக்கொணரும் பணியிலான இலக்கியப் படைப்புகள் பல கோணங்களிலிருந்தும் முடுக்கி விடப்பட்ட தீவிரமான கால கட்டத்தின் இறுதிப் பகுதியில், போரியல் விளைவின் பேசப்படாத ஒரு பகுதியை புதிய கோணத்திலிருந்து அணுகும் படியாகத் தயாரிக்கப்பட்டுள்ள 'தீ நிழல்' எனும் திரைப்படம் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சினிமா என்ற அடையாளத்துடன் ஓட்டமாவடி பிரதேசத்தின் காவத்தமுனை கிராமத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. முற்றுப் பெறாத அழிவியல் வாழ்வின் ஒரு குறுக்கு வெட்டுமுகமாக, இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புது முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள தீ நிழலுக்கான வெளியீட்டு கடந்த 29.05.2009 இல் இடம்பெற்றபோது, பிரதேசத்தின் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள் பலரும் ஊர்ப் பொதுமக்களும் அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தமிழ் சினிமா இன்னும் மேலெழ முடியாதுள்ள நிலையிலும், தைரியமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய பரீட்சார்த்த முயற்சிகள் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நல்ல சினிமாவுக்கான பண்புகள், நோக்கங்கள் என்பவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ள சிங்கள சினிமா, சர்வதேச அளவிலான சினிமாக்களின் தரத்தை நோக்கி வெகுண்டெழுந்துள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக, இலங்கையில் தமிழ் சினிமாவைக் கட்டியெழுப்புவதற்குப் பெரும் தடையாக உள்ள இந்திய சினிமாவின் மீதான கவனக் குவிப்பு எமது சொந்த சினிமாவின் வளர்ச்சியை இன்னும் நீண்ட காலத்திற்குப் பின்தள்ளிக் கொண்டிருக்கின்றது என்ற அங்கலாய்ப்புடன் இருக்கும் மாற்று சினிமா பற்றிய கருத்தாளர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக இலங்கையின் தமிழ் சினிமாவை வளர்க்கும் நோக்குடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாக இத்திரைப்படத்தையும் நாம் அடையாளம் காண முடிகின்றது.
தீ நிழல் திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் ஆகிய பெரும் பொறுப்புக்களை முஹைதீன் ஹஸனும், தயாரிப்பு, ஒலிக்கலவை, ஒளிக்கோர்வை மற்றும் வரைபுயிர்ப்பு முதலான தொழில்நுட்பப் பொறுப்புக்களை ஜனாப் முஸ்டீனும், இசையை ஆஷ்வரி பஸாலும் ஏற்று சிறப்பாகச் செய்துள்ளனர். சிம் புரொடக்ஷன் இதனை வெளியிட்டுள்ளது. அரசுக்கும் போராளிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் பாதிக்கப்படும் மூன்றாம் வகுப்பு மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைக் காட்சிப்படுத்தும் மிகப் பெரும் பணியையும் சேவையையும் இத்திரைப்படம் தன் கையிலெடுத்துள்ளது.
திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என்பவற்றை சிறப்பாக வடிவமைப்பதில் இயக்குனர் கடுமையாக உழைத்திருக்கக் கூடும். மிக சோகமான ஒரு கதைக்கருதான் என்றாலும், முழுக்க சோகத்தை மட்டும் அள்ளித் திணிக்காது, நகைச்சுவைக் காட்சிகளையும் ஆங்காங்கே சேர்த்து பார்வையாளர்களின் அசௌகரியத்தைத் தவிர்த்தமைக்காக இயக்குனரைப் பாராட்டலாம். திரைக்கதையின் போது வசனங்களை விட காட்சிப்படுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளமை சர்வதேசத் தரத்திலான சினிமாக்களை நினைவுறுத்துகின்றது. சோகமான கதையும், அக்கதையை மிக அழகாக நகர்த்திச் செல்லும் திரைக்கதையும், உரையாடல்களின் போது வெளிப்படும் கலப்படமற்ற கிராமிய மணமும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளன. வசனங்களைத் தவிர்த்து, காட்சிகளினூடாகச் சித்திரிக்கப்படும் சில வரலாற்றுண்மைகள் பார்ப்பவர்களின் மனதை நெருடி, கண்களில் கண்ணீரை முட்டச் செய்வது மிக இயல்பாக நிகழ்ந்து விடுகின்றது. ஒளிப்பதிவில் தென்படும் முதிர்ச்சியும் அழுத்தமும் திரைப்படத்தின் ஏனைய சில பள்ளங்களைச் சமப்படுத்தியுள்ளதுடன், அதன் இசை திரைப்படத்தின் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது. சோகத்தின் பின்னணியில் இழையோடும் மிக ரம்மியமான மெல்லிசை மனதை இதமாக வருடி கதாபாத்திரங்களின் உணர்வலைகளுடன் எம்மையும் கைகோர்க்க வைக்கின்றது.
திரைப்படத்தின் மிகப் பெரும் பலமாக அதன் ஒலிப்பதிவைக் குறிப்பிட முடியும். டிரிஎஸ் முறையிலமைந்த துல்லியமும் ஆர்ப்பாட்டமுமான ஒலியமைப்பு பார்வையாளர்களை திரைப்படத்துடன் முழுமையாக ஒன்றச் செய்து விடுகின்றது. பொதுவாக, இத்திரைப்படத்தின் தரத்தை உயர்த்துவதற்கு தொழில்நுட்ப உத்திகள் அதிகமாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திரைப்படத்தில் சுமார் 24 நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களுள் நால்வர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, சிறுமி பாத்திமா இர்பானாவின் நடிப்பு மிக அபாரமாக உள்ளது. அவளது ஒவ்வோர் அசைவும் மிக யதார்த்தமாகவும் இயல்பாகவும் உள்ளமை ஆச்சரியமானது. ஏனையவர்களுள் நஜிமுதீன், அன்வர், கமர்தீன், முஹம்மட் ஆகியோர் சிறப்பாக நடிப்பதற்கு முயற்சித்துள்ளனர். ஏனையோர் திரையில் தமது முகம் தெரியும்படியாக வந்து சென்றுள்ளனர்.
சோகம் என்பது சந்தோஷங்களின் எதிரிதான் என்றாலும், அந்த சோகத்திலும் ஒரு சுவை இருக்கும் என்பதை நிரூபிப்பது இலக்கியங்களின் முக்கிய பணிகளில் ஒன்று. திடீரெனத் தீயாக எமது இதயத்தில் பற்றிக் கொள்ளும் ஒரு சோகத்துடன் முடிவுறும் தீ நிழல், அத்தகைய பணியை மிகச் சிறப்பாக ஆற்றியுள்ளது. 'வாழ்க்கையில் எத்துணை கஷ்டங்களை எதிர்கொண்டாலும், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடக் கூடாது. போராட்டங்களின் விளைவாக அகதிகளாக, அநாதைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது பெரும்பாலும் பெண்கள்தான். ஆனால் அந்தப் பெண்களின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இழப்புகளை வெற்றிகளால் பதிலீடு செய்யக் கூடியவை' என்பன போன்ற பல செய்திகளை இத்திரைப்படம் எமக்கு வழங்கி நிறைவடைகின்றது.
இலங்கையில் தீவிர இலக்கியம் பற்றிப் பேசுவோர் தென்னிந்தியாவின் மு.மேத்தாவையும், வைரமுத்துவையும் நிராகரிப்பது போல், இங்கு மாற்று சினிமா பற்றிய கதையாடல்களில் ஈடுபடுவோர் இந்திய சினிமாக்களை கடுமையாக விமர்சிப்பதும் நிராகரிப்பதும் அதற்குப் பதிலாக ஈரானிய சினிமாவை மெச்சுவதும் பரவலாக நடைபெறும் விடயங்களாகி விட்டன. உலகத் தரத்திலான சினிமாக்களை எடுத்து வரும் ஈரானிய சினிமாவின் பாதிப்புகள் இலங்கையின் சிங்கள சினிமாவில் கணிசமாகச் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கி விட்ட நிலையில், அத்தகைய செல்வாக்கு இலங்கையின் தமிழ் சினிமாவிலும் வெளிப்பட வேண்டும் என்பது தற்போதைய மாற்று சினிமா விரும்பிகளின் மறைமுகமான விருப்பமாக உள்ளது.
தீ நிழலின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரைக்கும் அத்தகையதொரு செல்வாக்கை ஆங்காங்கே காண முடியுமாக உள்ளமை, அத்திரைப்படத்தின் தரத்தை மேம்படுத்தியுள்ளது எனலாம். எனினும், தீ நிழல் ஓர் இஸ்லாமிய சினிமாவென அடையாளங் காண்பிக்கப்பட்டமைக்கான நியாயங்களை ஏற்றுக் கொள்வதற்கு, அத்திரைப்படத்தின் காட்சிகள் போதுமானவைதான் என்பதை எவ்வளவு பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்பதைப் பொறுத்தே அதன் இஸ்லாமியத்தைத் தீர்மானிக்க முடியும். முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசுவது, முஸ்லிம்களின் கலாசார ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது, சமயத்தால் விலக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பண்புகளையும் தவிர்ப்பது போன்ற விடயங்கள் மாத்திரம் சினிமாவின் சமய நிலையைத் தீர்மானிக்க முடியுமா என்பது இன்னும் முடிவற்ற முரண்பாடாக நிலைத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சில சிறப்புகளுக்குப் புறம்பாக, கதைக்கரு, திரைக்கதை வடிவம், வசனம் என்பனவற்றில் பெரும்பாலும் புதுமையையோ, நவீனத்துவத்தையோ காண முடியாதிருப்பது திரைப்படத்தின் முக்கிய பலவீனமாகும். திரைக்கதையின் கோர்வை சரியாக அமையாமையால், வெ வ்வேறு சினிமாக்களிலிருந்து பெறப்பட்ட துண்டுகளைப் பொருத்தி உருவாக்கப்பட்டது போன்ற தொடர்பறுந்த நிலை திரைக்கதைக்கு ஏற்பட்டு விடுகின்றது. திரைக்கதையின் முடிவு அற்புதமாக இருக்கின்றது. ஆயினும், அதை இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்லியிருக்கலாமே, அல்லது முடிவின் இறுக்கத்திற்கேற்ற அழுத்தமான, மிக இயல்பான நடிப்பை கதாபாத்திரத்திடமிருந்து வரவழைத்திருக்கலாமே என்ற அங்கலாய்ப்பொன்று எம்மிடையே ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தொழில்நுட்ப உத்திகளையும் ஆர்ப்பாட்டங்களையும் தவிர்த்துப் பார்க்கும் போது, படம் பெரும் பரிதாபத்திற்குரியதாகி விடுகின்றது. ஏனெனில், ஒலி-ஒளிப்பதிவு, இசை என்பன படத்தின் தரத்தை முன்னணிக்கு இழுக்க, அதே சம பலத்துடன் நடிகர்களின் செயற்றிறன்கள் அதன் தரத்தைப் பின்னணிக்கு இழுக்க, இரு பக்க இழுப்புக்கு மத்தியில் சிக்குண்டு துவம்சமாவது படத்தின் துர்ப்பாக்கியங்களில் ஒன்று.
இவ்வகையில், திரைப்படத்தின் மிகப் பெரும் பலவீனம் அதில் நடித்த நடிகர்களின் நடிப்பாற்றல்தான். நடிகர்களில் குறித்த சிறுமியைத் தவிர்த்து மற்றெவரது நடிப்பும் இயல்பாக இல்லை. எல்லோரும் தமக்கு சொல்லித்தரப்பட்ட வசனங்களை, கிளிப்பிள்ளையைப் போல் ஒப்புவிப்பதில் மட்டுமே கவனமாக இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் துல்லியமான, இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரும்பாலும் தோற்றுப் போயுள்ளனர். போதாததற்கு, ஒவ்வொருவரது உரையாடலுக்கும் இடையில் விழும் நீண்ட நிசப்தம் பார்ப்பவர்களில் சோர்வைத் திணிக்க முனைகின்றது. எவ்வாறாயினும், நடிப்புத் துறையில் எவ்வித அனுபவமும் பயிற்சியுமற்ற சிலரை வைத்துக் கொண்டு, தைரியமாக பெரும் படமொன்றைத் தயாரிக்க முனைந்துள்ள தயாரிப்பாளரையும் இயக்குனரையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
அதேவேளை, திரைப்படமொன்றை இயக்க வேண்டுமென்ற ஆர்வமும் துடிப்பும் மட்டும் ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கமாட்டாது. அதற்காக, தீவிரமான தேடலும் முயற்சியும் அவசியம். இந்தத் தேடல் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்களை மட்டுமன்றி, அனுபவப் பகிர்வு, ஆலோசனை கோரல், போதிய பயிற்சி என்பவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் உண்மையான ஹீரோ அதன் இயக்குனர்தான். அந்த இயக்குனர், நடிக்கத் தெரிந்தவராகவும், நடிப்பைப் பிறரிடமிருந்து வரவழைக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அப்போதே சிறந்த திரைப்படங்களை அவரால் உருவாக்க முடியும். அதற்காக அவர் சிறந்த முன்னனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். இன்று உலகளவில் பெரும் இயக்குனர்களாக இருப்பவர்கள் அனைவரும் பெரும்பாலும் யாரோ ஓர் இயக்குனரின் கீழ் துணை இயக்குனர்களாக, அல்லது உதவி இயக்குனர்களாகப் பணியாற்றியவர்களே. எந்தவொரு பணியினது வெற்றியிலும் அனுபவத்தின் பங்கு கணிசமாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். நூல்களை மட்டும் போதுமாக்கிக் கொள்வதை விடுத்து, சினிமா தொடர்பான போதிய அனுபவத்தையும் பயிற்சியையும் பெறும் போதே எவரும் எதிர்காலத்தில் சிறந்த திரைப்படங்களை உருவாக்கும் ஆற்றலைப் பெற முடியும்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, அவர்கள் நவீன தொழில்நுட்பங்களுடனான பரிச்சயத்திலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் பெரும்பாலும் பின்னிற்பவர்களாகவே இருக்கின்றனர். பெண்கள் தம்மை முழுமையாக மறைத்துக் கொள்வது கட்டாயமானது என்றும், புகைப்படம் எடுப்பது மார்க்கத்தால் விலக்கப்பட்டது என்றும் இன்னும் தமது அறியாமையால் ஒரு சிலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். சினிமா எனும் உலகின் மிகப் பெரும் அருட்கொடையை இன்னும் மார்க்க விரோதச் செயல்களில் ஒன்றென விலக்கியும் வைத்துள்ளனர். இத்தகைய தருணத்தில், முஸ்லிம் ஆண்களை மட்டுமன்றி முஸ்லிம் பெண்களையும் வைத்து சினிமா எடுத்திருப்பதென்பது உண்மையில் துணிச்சலான முயற்சி என்றுதான் கூற வேண்டும்: பாராட்ட வேண்டும். இது மரபுகளை மீறிய செயல்தான் என்றாலும், மகத்தான ஒரு சமூகப் பணி என்பதை காய்தல் உவத்தலின்றிச் சிந்திக்கும் எவரும் ஏற்றுக் கொள்வர்.
'தீ நிழல்' பிரதானமாக மூன்று விடயங்களை சாதிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்று- சினிமா பற்றிய முஸ்லிம் சமூகத்தின் தவறான புரிதலை அகற்றி அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல். இரண்டு- இலங்கையில் தமிழ் சினிமாவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் தமிழ், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் பலரை ஆர்வத்துடன் களமிறக்குதல். மூன்று- மாற்று சினிமா தொடர்பான பிரத்தியேக சஞ்சிகைகள், பத்திரிகைகளின் வரவைத் துரிதப்படுத்தி, இலங்கையின் தமிழ் சினிமாவுக்கான ஆரோக்கியமான பாதைகளையும் இலக்குகளையும் தெளிவுபடுத்தல்.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து உருவாக்கப்பட்ட முதலாவது முழு நீள சினிமா என்ற புகழ் முத்திரை குத்தப்பட்டாலும், தீ நிழல் பெரும் சவால்களை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்படக் கூடும். குறிப்பாக, சினிமா என்பது தடுக்கப்பட்ட செயல் எனக் கருதிக் கொண்டிருக்கும் சில பிற்போக்குவாதிகளிடமிருந்து வெளிப்படுத்தப்படும் அச்சுறுத்தல், தீ நிழல் தயாரிப்பாளர்களை உளவியல் ரீதியாகப் பாதிப்புறச் செய்து, அதன் பிரபல்யம் மற்றும் விநியோகம் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சினிமா பொதுவானது, அதில் பிரிவினை கிடையாது என்று கூறிக் கொண்டிருப்போர், தீ நிழல் ஓர் இஸ்லாமிய சினிமா என்பதை மறுத்துரைப்பதனூடாக அதன் தனித்துவத்தை இல்லாதொழித்து, அதனை பத்தோடு பதினொன்றாக்கி அதன் படைப்பியல் இலக்குகளைத் தகர்க்கலாம். அத்தோடு, சமயம் சார்ந்த அதன் பிரகடனமானது ஊடக அனுசரணைகள், தொடர்பாடல் வாய்ப்புகள், பொது அங்கீகாரம் மற்றும் அரசாங்க ரீதியான வரவேற்பு என்பவற்றை விட்டும் அதனைத் தூரப்படுத்தலாம்.
பொதுவாக எந்தவொரு செயற்பாடும் பொருளாதார விருத்தியை மையப்படுத்தியதான, அல்லது பொருளாதார இழப்பைத் தவிர்க்கக் கூடியதான இலக்கைக் கொண்டிருப்பது இயல்பு. மிகப் பெரும் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தீ நிழல், அதற்கான முதலீடுகளை இலாபத்துடன் மீளப் பெற்றுக் கொடுக்குமா, இல்லையா என்பது அது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுள் ஒன்றாகும். வர்த்தக ரீதியான தோல்விகளே பெரும்பாலான பணிகள் இடைநிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணியாய் அமைகின்றன என்ற வகையில், இத்தகைய தோல்வியையும் ஏனைய சவால்களையும் முறியடித்து தீ நிழல் வெற்றி பெற வேண்டும் என்பதே எல்லோரினதும் ஆவலாயுள்ளது. அத்தகைய வெற்றி, இலங்கையின் தமிழ் சினிமாச் சூழலிலும், குறிப்பாக தனித்துவமான முஸ்லிம் சினிமாச் சூழலிலும் பெரும் தாக்கத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தும் என்பது உறுதி.
February 2009
Labels:
விமர்சனங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment