என் உடலின்
ஒரு கோடி உணர்ச்சி நரம்புகளிலும்
நிம்மதிச் சுவாசம்
நிரம்பி விம்மிற்று
உன்னை என்னவளாக்கிக் கொண்ட
அன்றில்.
என் வாழ்வுப் பாதையின்
இரு மருங்குகளிலும்
வெண் சாமரம் வீசிச் செழிக்க
உன் கரம் பற்றினேன்.
யுக யுகாந்திரமாய்
உன்னோடு ஜீவிக்க வேண்டுமென்ற
என் கனவை
உன் அழகுக் கண்களினூடு
அமைதியான நெஞ்சுக்குள்
பத்திரப்படுத்திக் கொண்டாய்
மடியை மஞ்சமாக்கி
இமைகளை அரணாக்கிக் கொண்ட
பாசச் செழுமை மிக்க
உன் பட்டுக் கரங்களினூடு
தொடர்கிறது
நம் காதல் பயணம்
இப்போதெல்லாம்
என் அழுகுரல்கள்
என் செவியை அண்டுவதில்லை
என் கஷ்டங்கள்
என் கையைக் கடிப்பதில்லை
என் படுக்கைகள்
என் முதுகைக் குத்துவதில்லை
என் ஓய்வு நேரங்கள்
என் பெருமூச்சில் விம்முவதில்லை
நீ வந்த பிறகே
நடைபெறுகின்றன தேவி
இந்த மாற்றங்களெல்லாம்
உனக்குத் தெரியுமா?
நீ துயிலெழும்
ஒவ்வொரு காலைப் பொழுதிலும்
நான் உறுதியெடுத்துக் கொள்கிறேன்
உன்னை ஒருபோதும்
இழப்பதில்லையென
July 2006
No comments:
Post a Comment