Tuesday, January 5, 2010

பேச்சுக்கலை பற்றிய முப்பது முக்கிய விடயங்கள்


1. பேசும்போது அமைதியாகவும் அவசரப்படாமலும் பேச வேண்டும்.

2. போதிய முன்னேற்பாடுகள் இன்றி பேச எழ வேண்டாம்

3. அதிக கவலை, அதிக சந்தோஷம், நிம்மதியற்ற நிலையில் இருக்கும் போதும், மலசல கூடத்திற்கு செல்லும் தேவை இருக்கும் போதும் பேசுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இவைகள் சுமுக நிலைக்கு மாற்றமாக அமையும்.

4. பேச்சின் இடையில் சப்தம் ஏற்பட்டால் அவைகளை அமைதிப்படுத்தும் விதத்தை கோபப்படாமலும் அதிக சப்தம் இன்றியும் மேற்கொள்ள வேண்டும்.

5. பேசும் பொது உங்களது பேச்சை மற்றவர்கள் அவசியம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் மனப்பாங்கில் பேசாதீர்கள். அவ்வாறெனில் உங்களது பேச்சில் தூய்மை இல்லாது போய் விடும்.

6. அதிக பசியுடன், அல்லது வயிறு புடைக்கச் சாப்பிட்ட நிலையில் பேசாதீர்கள். சிறிதளவு உணவை உட்கொண்ட நிலையிலேயே பேசுங்கள்.

7. களைப்புற்ற நிலையில் பேசாது சிறிது ஓய்வு எடுத்த நிலையில் சிந்தனைகளை ஒருமைப்படுத்திப் பேசுங்கள்.


8. பேச்சை மேற்கொள்ளும் போது இடத்துக்கு ஏற்றவாறு உங்களது தோற்றத்தையும் உடையையும் அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

9. உங்களது பேச்சைக் கேட்பவர்கள் அவர்களை சந்தித்தாலும் அவர்களோடு உரையாடுவதாலும் நீங்கள் மகிழ்ச்சி அடைகின்றீர்கள் என்று உணரும் அளவு உங்களது புன்முறுவலை வெளிப்படுத்துங்கள்.

10. உங்களது பேச்சைக் கேட்பவர்களை ஒரு குறித்த இடத்தில் அமர வைப்பதற்கு முயற்சித்துக் கொள்ளுங்கள். அவர்கள் பரந்து அங்குமிங்கும் உட்காரும் போது அவர்களது சிந்தனை சிதறி உங்களது பேச்சை உள்வாங்காத நிலை ஏற்படும்.

11. உங்களது பேச்சை மேற்கொள்ளும் இடம், பங்குபற்றும் தொகையினர், அவர்களின் தரம் என்பவற்றுக்குப் பொருத்தமானதாகவும் இருப்பதோடு பங்குபறறுவோர் குறைவாக இருப்பின் வானொலி போன்றவற்றைப் பாவிக்காமல் இருத்தல் அவசியம்.

12. பேசும் இடம் சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் உள்ளதுடன் போதியளவு வெளிச்சம் உள்ளதாகவும் இருத்தல் நல்லது.

13. நீங்கள் பேசும் போது யாராகிலும் ஒரு குறித்த நபரை உங்களுக்கு முன்னிலையில் அமர வைக்காதீர்கள். உங்களது பார்வை அவரை நோக்கியதாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக.

14. தேவையற்ற அபிநயங்களையோ அசைவுகளையோ தவிர்ந்து கொள்ளுங்கள்.

15. சொல்நயம் மிக்கதாகவும், தெளிவாகவும் அதிக அவசரமோ அதிக தாமதமோ இன்றியும் பேசுங்கள்.

16. பேச்சை ஆரம்பிக்குமுன் உங்களது சிந்தனையில் சரியெனப் பட்டவைகளை நன்றாக சிந்தித்துப் பேசுங்கள்.

17. சபையை உயிரோட்டமுள்ளதாகவும் சுறுசுறுப்பானதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். பொருத்தமான கேள்வி, பதில்களை முன்வைத்தல் சமுகம் தந்திருப்போரின் சிறு தூக்கத்தை அகற்றும் வகையில் சிறிய பொருத்தமான சம்பவங்களையும் கதைகளையும் கூறல் நல்லது.

18. குறித்த நேரத்தில் பேச்சை ஆரம்பிக்கவும் குறித்த நேரத்தில் முடிக்கவும் பழகிக் கொள்ளுங்கள்.

19. அவசியம் ஏற்படாத பட்சத்தில் குறிப்பேடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

20. பேசும் விடயத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை பேச்சின் அமைப்பைப் பேணிக் கொள்ளுங்கள். ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி அலுப்படையச் செய்யாதீர்கள். பேச்சை முடிக்கும் போது நீங்கள் இதுவரை பேசிய பேச்சின் சுருக்கத்தைச் சொல்லி முடிப்பதில் குற்றமில்லை.

21. உங்களது பேச்சில் மற்றவர்களை பிரதிசெய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென தனித்துவமான ஒரு பாணியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

22. உஙகளது பேச்சைக் கேட்பவர்களது சிந்தனைகளை திருப்பக் கூடிய வகையிலான விடயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக உங்களது சட்டைப் பொத்தானைப் பூட்டுதல், தஸ்பீஹ் உருட்டுதல், உட்கார்ந்திருக்கும் போது ஏதாகிலும் ஒன்றில் சாய்ந்து கொள்ளல் போன்றவை

23. பேசும் போது சபைக்கு வருபவர்களின் பக்கம் சபையில் இருப்பவர்களின் கவனம் செல்லாதவாறு அச்சபையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

24. பேச்சை ஆரம்பிக்க முன் பங்குகொள்வோரின் எண்ணிக்கை அவர்களின் தரம் அவர்களின் சிந்தனைப்போக்கு அவர்களின் ஆத்மீக சிந்தனைகளை அறிந்து கொள்வது அவசியம்.

25. பேச்சில் முக்கியமான விடயங்களை விபரித்ததன்பின் சபையோர்கள் சிந்திப்பதற்கு ஒரு குறுகிய நேரத்தை கொடுத்தல் நல்லது.

26. பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்னரும், அதன் இடையிலும், அதன் பின்னரும் நீண்ட மூச்சை விட்டுக் கொள்வது களைப்பைப் போக்கும்.

27. உங்களுக்கு விசுவாசமான நண்பர்களிடம் உங்களது பேச்சில் உள்ள தவறுகளையும் குறைகளையும் தெளிவுபடுத்துமாறு கேட்பது, எதிர்வரும் பேச்சுக்களில் அக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும்.

28. பேச்சு என்பது எமது கடமையும் எமது பொறுப்புமாகும். அவ்வாறான உணர்வே உள்ளத்தில் பிரதிபலிக்க வேண்டும்.

29. முடிவு இல்லாமலும் நோக்கமில்லாமலும் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தை மீட்டும் போது கேட்பவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும்.

30. நீங்கள் பேசும் போது உங்களது பார்வையை சபையோர் அனைவரின் பக்கமும் செலுத்துங்கள். அது அனைவரின் மீதும் நல்ல தாக்கம் செலுத்தும்.

September 2009

3 comments:

Anonymous said...

Useful information,
Thanks for your share

அ.சின்னதுரை said...

அருமையான கருத்துகள்

அ.சின்னதுரை said...

அருமையான கருத்துகள்

Twitter Bird Gadget