Sunday, March 13, 2011

அஃறிணையின் அலறல்


என் மனம் அழுது கொண்டிருந்தது. புயல் வீசும் போதிலானதை விடக் கடினமான நடுக்கம் இலைகளைத் தொற்றி, ஆணி வேர் வரை சென்று தாக்கிற்று. கண்ணுக்கு முன்னால் நடந்து முடிந்து விட்ட அந்தக் கோரச் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. மீண்டு வரக்கூடிய அதிர்ச்சியல்லவே அது. இப்படியரு சம்பவத்தைப் பார்ப்பதற்காகத்தானா இத்தனை நாட்களும் நான் உயிர் வாழ்ந்திருந்தேன்!

தொலைவிலிருந்து, ஹாஜிகளின் வருகை பற்றிய மகிழ்ச்சியான செய்தியைத் தாங்கி வந்த பறவைகளெல்லாம் என் தலையுச்சியில் இளைப்பாறிச் செய்தி அறிவித்து விட்டுச் சென்ற போது நான் எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். இறைவனின் புனித ஸ்தலத்தை நேரிடையாகக் கண்டு களித்துத் தம் பாவங்களைக் கழுவித் தம்மைப் பரிசுத்தமாக்கிக் கொண்டு வரும் இறைநேசர்களான அந்த ஹாஜிகளைப் பார்த்துப் பரவசமுற வேண்டுமென்ற பெரும் ஆவல் என் கண்களில் பொங்கி வழியத் தொடங்கிற்று.எங்கும் அசைய முடியாத என் இயல்பின் இயலாமை, வருடா வருடம் ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜிகளை நினைக்கும் போது, கவலையாக மனதை அரிக்கும். என்னால் அங்கு செல்லவோ, மகத்துவம் செறிந்த அந்த மாபெரும் புனித இல்லத்தைக் காணவோ முடியாது என்ற ஏக்கம் பெருமூச்சாய்ப் பறக்கும். ஆயினும் ஒரு நிம்மதி இருக்கிறது. ஹஜ்ஜுக்குச் செல்ல முடியவில்லையென்றாலும், அங்கு சென்று திரும்பும் ஹாஜிகளையாவது பார்க்க முடிகிறதே.

பிரதான வீதியோரம் ஆணி வேர் பதித்துத் தலை நிமிர்ந்து நிற்கும் என் சுயநிலையினால்தான் இந்த அரிய சந்தர்ப்பம் எனக்கு வாய்த்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தையிட்டு நான் எவ்வளவு காலம் பெருமைப்பட்டிருக்கிறேன். நடுக்காட்டில் அகப்பட்டு, நாகரிகச் சூழலை விட்டும் தனிமைப்பட்டுள்ள என் போன்றோரிடத்தில் இது குறித்து எத்தனை தடவை பெருமிதம் வழியப் பேசிச் சிரித்திருக்கிறேன்.

ஆனால், இப்போது எனக்கு வாய்த்துள்ள இந்த சந்தர்ப்பத்தையிட்டுக் கண்ணீர் விட்டுக் கதறியழ வேண்டும் போல் உள்ளுணர்வுகள் வீறிட்டலறுகின்றன. ஒன்றிரண்டல்ல, 30க்கும் மேற்பட்ட ஹாஜிகள், புனித கஃபாவைத் தரிசித்துத் தம் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடி, நன்மைகளை அள்ளிக் கட்டிக் கொண்டு, அன்று பிறந்த பாலகர்கள் போல் ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிகள், துப்பாக்கியால் சுடப்பட்டு, வாளால் வெட்டப்பட்டு, அணிந்திருந்த ஆடையின் வெண்மை கருஞ்சிவப்பாக நிறம் மாறுமளவு இரத்தம் பெருக்கெடுக்கத் தரையில் விழுந்து துடிதுடித்து இறப்பெய்துவதைக் காணும் போது உணர்வுகள் எப்படி அலறாதிருக்கும்!

பத்துப் பேர் சேர்ந்து கட்டிப்பிடித்தாலும் அடங்காத கொழுத்த உடல் எனது. மிருகங்கள் நிழல் பெற்று இளைப்பாறத் தோதான கிளைகளும் உண்டு. அவர்களும் இளைப்பாற வந்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். கரு முகங்களில் அனல் தெறிக்க, முரட்டுப் பார்வையில் வஞ்சகம் கொதிக்க என் பின்னால் அவர்கள் ஒதுங்கிய போது, மாபெரும் கொலை வெறியாட்டத்தை அவர்கள் நடத்தப் போகிறார்கள் என்று நான் சற்றும் எண்ணியிருக்கவில்லை.

குடியிருப்புகளோ, சனநடமாட்டமோ அற்ற பகுதியென்பதால் எப்போதும் என்னைச் சூழ மயான அமைதியன்று படுத்துக் கிடக்கும். நீண்ட நேரத்துக்கொரு தடவையாக தூரப் பயண வாகனங்கள் கடந்து செல்லும் போது மட்டும் இரைச்சல் ஒன்று புள்ளியாய்த் தோன்றிப் பெருத்தலறி மீண்டும் புள்ளியாய் மறைந்து போகும். சிறிது நேரத்துக்கு சூழலில் மிதந்து கொண்டிருக்கும் அந்த இரைச்சல் தவிர, இரை தேடிப் பறந்து செல்லும் பறவைகளின் கீச்சொலிகளும், தென்றல் சீண்டிவிட்டுச் செல்லும் போது எமது இலைகள் ஒன்றுடனொன்று உரசியெழுப்பும் சலசலப்புச் சத்தங்களும் மட்டுமே அங்கு பழக்கமாகிப் போன நிசப்த எதிர்ப்புகள். இன்று விண்ணெட்டு மட்டும் ஓங்கி ஒலித்த 'யா அல்லாஹ்...!' என்ற அபயக்குரல் அந்தச் சூழலில் புதியதாக மட்டுமல்ல, எம் இதயத்தைப் புண்ணாக்கி ரணப்படுத்தும் கோரமாகவும் ஆயிற்று.

தூரத்தே வாகனம் ஒன்று வரும் சத்தம் கேட்டது. என் பின்னால் ஒளிந்திருந்த அவர்கள் தமது உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த அந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். பளபளக்கும் கூரிய வாள், கறுத்து நீண்ட துப்பாக்கி. பயம் என்னைக் கௌவிற்று. ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்து உள்ளம் பதைபதைக்கத் தொடங்கிற்று.

அவர்கள் ஒருவர் பின்னொருவராக வெளியே வந்தனர். கருமை குமுறும் அவர்களது முகங்களில், நண்பகற் சூரியனும் தோற்றுப் போனது. தூரத்தில் புள்ளியாய்த் தோன்றிய பஸ்ஸைக் கண்டதும் அவர்கள் பரபரப்பாயினர். கைகளிலிருந்த ஆயுதங்களின் பிடியை இறுக்கமாக்கிக் கொண்டு, ஓரமாகக் கிடந்த நீண்ட மரக்கட்டையை எடுத்து பாதைக்குக் குறுக்காய்ப் படுக்கப் போட்டனர்.

இவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். பஸ்ஸைக் கொள்ளையடிக்கப் போகிறார்களா? பஸ்ஸில் வரும் யாரையாவது கடத்திச் சென்று கப்பம் கோரப் போகிறார்களா? அல்லது பயணிகளை இறக்கி விட்டு, பஸ்ஸைக் கொழுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டம் விளைவிக்கப் போகிறார்களா? ஆனால், அவர்களது முகங்களில் கொப்பளித்துக் கொண்டிருக்கும் குரூரத்தின் முன் இவையெல்லாம் வெகு சாதாரணம். அப்படியானால், இவற்றை விடப் பெரிய கைங்கரியமொன்றை அரங்கேற்றப் போகிறார்களா?

சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்த பஸ், மரக்கட்டையின் முன்னால் வந்த போது, படிப்படியாக வேகத்தைக் குறைத்து அமைதியாயிற்று. நான் உள்ளே நோட்டமிட்டேன். முழுக்க மழித்த தலையில் மொட்டு விட்டாற் போல் முளை தள்ளியிருக்கும் தலை முடிகளும், சூரியனைக் கண் கூசச் செய்யும் வெண்ணிற ஆடையும், கஃபாவைக் கண்களால் கண்டு களித்த மகிழ்ச்சிப் பிரவாகத்தின் அடையாளமுமாக அவர்களைக் கண்ட போது, 'இதோ ஹாஜிகள் வந்து விட்டார்கள்' என என் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அவர்களைப் பார்த்து விட்ட திருப்தியில் உடலெல்லாம் புத்துணர்ச்சி தலைநீட்டிற்று. இவ்வளவு நேரமும் காத்திருந்தது வீணாகவில்லை என்ற புளகாங்கிதத்தில் மனதுக்குள் உற்சாகம் கரை புரண்டோடிற்று. ஆனாலும் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

அந்த இடத்தில் பஸ் நின்றதுதான் தாமதம். அதற்காகவே காத்திருந்த அவர்கள் திமுதிமுவென உள்ளே பாய்ந்தனர். மற்றும் சிலர் துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்தவாறு பஸ்ஸைச் சூழ்ந்து நின்று கொண்டனர். ஹாஜிகள், என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல் கலவரம் சூழ்ந்த முகங்களுடன் அங்குமிங்கும் பார்வையை எறிந்து அச்சத்தில் உறைந்து போய் நிற்க, உள்ள ஏறியவர்கள், ஹாஜிகளைப் பிடித்திழுத்து பஸ்ஸ§க்கு வெளியே எறிந்தனர். அவர்களது கன்னங்களில் அறைந்து, பிடரியில் குத்தி, பிஷ்டத்தில் உதைத்து, புறத்துப்பாக்கியால் இடுப்பில் விளாசி உலகமகா காடைத்தனத்தை அந்த பஸ்ஸ§க்குள் அரங்கேற்றினர். எதிர்ப்புக் காட்ட முனைந்தோரைத் துப்பாக்கி முனையில் அடக்கி, முதுகெலும்புகளை முறித்தெறிந்தனர். அந்த அப்பாவி ஹாஜிகளைப் போலவே நானும் அதிர்ந்து தடுமாறிப் பயத்தில் உறைந்து போனேன்.

'யார் இந்தக் கொடுங்கோலர்கள்? ஏன் இப்படியரு காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்?' எனக்குள் எழுந்த அதே கேள்வியை, அந்த ஹாஜியும் அவர்களில் ஒருவனிடம் தைரியமாகக் கேட்டு விட்டார். 'நாங்கள் தமிழீழம் பெறுவதை சோனியால் மட்டுமல்ல, வேறு எந்த நாயாலும் தடுக்க முடியாது' என்று அவன் பதிலிறுத்த போது, குழப்பமும் வெறுப்பும் பொங்கச் சீற்றத்துடன் அவர்களைப் பார்த்தேன்.

'இதை முட்டாள்தனம் என்பதா? வடிகட்டிய இனத்துவேஷம் என்பதா? அல்லது கொடிய வக்கிரத்தனம் என்பதா? தமிழீழம் கோரிப் போராடுகிறவர்கள் தமிழின் பாங்காளிகளாக இருக்கும் முஸ்லிம்களைக் கொன்று குவிக்க நினைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. தமிழ் பேசுவோருக்கான போராட்டம் என்ற அடைமொழிகளெல்லாம் வெறும் போலிக் கவர்ச்சிகள்தானா? பேரினவாதிகளின் அடக்குமுறைக்கெதிரான போராட்டம், இன்னொரு சிறுபான்மையை நசுக்கும் கொள்கையைக் கொண்டிருக்க முடியுமா?'

இளமைத் துடிப்புடன் காணப்பட்ட அந்த ஹாஜி, இவ்விதம் அவர்களைப் பார்த்துத் துணிவுடன் கேள்வி எழுப்பிய போதுதான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது. அவருக்கு முன்னால் துப்பாக்கியை நீட்டிப் பிடித்திருந்தவன், சரியாக இலக்கு வைத்து அவரது நெஞ்சுக்கு நேரே சுட்டான். 'யா அல்லாஹ்...!' என்ற பரிதாபமான அபயக்குரலுடன் இரு கைகளாலும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தார் அந்த ஹாஜி. அழுத்திய கைகளையும் மீறிப் பொங்கி வழிந்தது தூய இரத்தம். அதன் பிறகு எண்ணற்ற 'யா அல்லாஹ்...!' அபயக்குரல்கள் அந்த நிசப்தப் பிரதேசத்தின் வளிமண்டலத்தை ஆக்கிரமித்துச் சூழ்ந்தன. துப்பாக்கிகளின் தொடர் வேட்டொலிகளும், சதைகளிடையே புகுந்து வெளியேறும் வாள் முனைகளின் சதக் சதக் சத்தங்களும் அந்த அபயக்குரல்களுக்குள் அமுங்கிக் காணாமல் போயின. தலை, நெற்றி, கன்னம், நெஞ்சு, முதுகு, வயிறு, கை, கால் என ஒவ்வோர் உறுப்பிலும் துப்பாக்கிச் சூட்டின் துளைகளும், வாள் வெட்டுக் காயங்களுமாய் இரத்தக் குழத்தில் முங்கியெழுந்தாற் போல் குப்புற விழுந்தும், மல்லாந்தும், கைகளை நீட்டியும், சுருண்டும், வாய் திறந்தும், கண் மூடியும் உயிரிழந்து ஷஹீதாகிக் கிடந்தது அந்த ஹாஜிகள் கூட்டம்.

கடல் கடந்து சென்று அல்லாஹ்வின் புனித இல்லத்தைத் தரிசித்து விட்டு, மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்த அந்த ஹாஜிகள், தமக்கு இப்படியரு முடிவு இருக்கும் என்பதை சற்றேனும் எண்ணிப் பார்த்திருப்பார்களா? நரை தாடியுடனான வயது முதிர்ந்தவர்கள், மொட்டு விடும் மீசையுடனான இளைஞர்கள், அமைதியே உருவான பெண்கள் என ஆன்மீகக் களையுடன் வந்து கொண்டிருந்த அப்பாவி நிராயுத பாணிகளை பூண்டோடு கொன்று குவிப்பதென்பது மனித வர்க்கத்தில் பிறந்தோரால் ஆற்றவே முடியாத மாபெரும் கொடூரம் என்பது இவர்களுக்குத் தெரியாதா!. அப்படியானால் இவர்கள் மனிதர்களில்லையா? மனிதன் என்ற போர்வையில் நடமாடும் முரட்டு மிருகங்களா? மிருகங்களானாலும் தமது சொந்த இனத்தை இவ்விதக் கொடூரத்துடன் கருவறுக்க முனைவதில்லையே! அவ்வாறெனில், இவர்கள் கொடிய மிருகங்களை விடவும் மோசமானவர்களா?

அஞ்சியதுங்கும் ஓர் அப்பாவி உயிரை இழுத்து வந்து நெற்றிப் பொட்டில் சுட்டுச் சாகடிப்பதென்பது எவ்வளவு பெரிய ஹிம்சை. இத்தகைய வெறியாட்டத்துக்குப் பெயர்தான் தமிழீழப் போராட்டமா? எல்லோரையும் கொன்றொழித்த பின், சடலங்களின் மேல் நின்று 'தமிழீழம் வாழ்க' என அவர்கள் கோஷம் எழுப்பியதன் அர்த்தம் என்ன? இனத்துவேஷம், உயிர்க்கொலை, வெறியாட்டம் என்ற அடித்தளங்களின் மேல் உருவாக்கப்படும் ஒரு கனவுக் கோபுரமா இந்தத் தமிழீழம்!

என் மனம் தாங்க முடியாதவாறு அலறித் துடித்தது. நண்பகல் வெயிலுக்கும், தார்ச்சாலையின் தகிப்புக்குமிடையே ஹாஜிகளின் சடலங்கள் பரிதாபமாய்ச் சிதறிக் கிடந்தன. அகன்று படர்ந்த கிளைகளிருந்தும் அவற்றால் அவர்களுக்கு நிழல் கொடுக்க முடியவில்லையே என்ற இயலாமையினால் நான் மனதுக்குள் குமைந்தேன். வாட்களில் படிந்திருந்த ஹாஜிகளின் உதிரத் துளிகளை, என்னுடலில் தேய்த்துத் துடைத்துக் கொண்டு செல்லும் அந்தக் கொலைப் போராளிகளை, நரம்புகள் புடைத்தெழ எரித்து விடுவது போல் நான் பார்த்தேன்.

ஹாஜிகளின் எதிர்ப்பில் கையில் ஏற்பட்டு விட்ட சிறு சிராய்ப்பைக் குறித்து, முஸ்லிம் இனம் மொத்தத்தையும் வார்த்தைகளால் துவம்சம் செய்யும் அவர்களின் பேச்சுகள் என் காதுகளில் நெருப்புத் துண்டங்களாய் வந்து விழுந்தன. ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி விட்ட பெருமிதத்துடன், முக இறுக்கம் களைந்து, காட்டுக்குள் நுழைந்து, மரங்களின் அடர்த்தியிடையே அவர்கள் காணாமல் போயினர். 'இனந்தெரியாத நபர்கள்' என்போர் இவர்கள்தான் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

என் மனம் அழுது கொண்டிருந்தது. கண்ணுக்கு முன்னால் நடக்கும் ஓர் அநீதியைத் தடுத்த நிறுத்த முடியாமற் போன என் இயலாமை, நடந்து முடிந்து விட்ட கொடுமைக்குச் சாட்சியமளிக்க முடியாதுள்ள என் இயல்பு நிலை என்பவற்றையெண்ணி நான் மனதுக்குள் புழுங்கிக் குமுறினேன். அழுவதைத் தவிர என்னால் ஆற்ற முடியுமானது வேறென்னதான் இருக்கிறது. எனக்கு மட்டும் சபிக்கின்ற வல்லமை இருந்திருந்தால், 'இந்தக் கொலைகாரர்களும், இவர்களது கூட்டமும் இப்போதே எரிந்து பொசுங்கிச் சாம்பலாகக் கடவது' எனச் சபித்து, அவர்களுக்கு ஒரு முடிவு கட்டியிருப்பேன்.

ஆனாலும், எல்லாவற்றையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் மிக நீதியாளன். அநீதியாளர்களுக்குத் தண்டனை வழங்க அவனே போதுமானவன். அவனிடம் மனமுருகப் பிரார்த்திப்பதொன்றே இப்போதென் கடமை என மனம் எனக்கு உணர்த்திற்று. நான் கண்களை மூடி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கலானேன். தென்றலின் தழுவலும், பறவைகளின் ஒலிகளும், வாகனங்களின் இரைச்சலும் இப்போது என் காதுகளைத் தீண்டவில்லை.

No comments:

Twitter Bird Gadget