Monday, March 14, 2011

அராஜகம்


காலைச் சூரியனின் இரம்மியச் சுடரொளியில் அரண்மனை மினுமினுத்தது. ஆங்காங்கே தெரிந்த பனியின் வெண்மைப் படர்வு உடலுக்குக் குளிர்மையையும் மனதுக்கு உவகையையும் ஊட்டிற்று. நெஞ்சிலும் தலையிலும் கவசங்கள் அணிந்து, கையில் ஈட்டியுடன் உலாவிக் கொண்டிருந்த காவலர்களின் கனமான பார்வையில் அரண்மனையின் பாதுகாப்பு இறுக்கமுற்றுத் தெரிந்தது. நுழைவாயிலுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாயும் புலியினதான பயங்கரமூட்டும் சிலை, அதன் தத்ரூப உருவ வார்ப்பில், பார்ப்போர் கண்களை அச்சத்திற்குள்ளாக்கி மிரட்டியது.

அரண்மனைக்கு வெளியே மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். உள்ளே நடைபெறவுள்ள அராஜகச் செயலின் வக்கிரத்தனத்தைக் கண்களால் கண்டு, உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலின் உந்துதல் அவர்கள் அனைவரது உள்ளங்களிலும் பரவி இருந்தது.அரண்மனையின் உள்ளே மகாராஜாவின் சிம்மாசனம் உயர்வாக நிறுவப்பட்டிருந்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த இரத்தினக் கற்கள் பளபளத்து மினுங்கின. தங்கமுலாம் பூசப்பட்ட அதன் கைப்பிடிகளில் இயல்பான கவர்ச்சியின் ஆதிக்கம் செறிவுற்றிருந்தது.

சூழவும் அமர்ந்திருந்த அரச பிரதானிகள் மகாராஜாவின் வருகையை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். மகாராஜாவின் பயங்கரப் பெயரை சமயப் பார்த்துப் பிரயோகிப்பதில் வெற்றி கண்டிருந்த அவர்கள் மூலமாக, மகாராஜாவும் நிறைய நன்மைகளைப் பெற முடிந்திருக்கிறது. காடுகளில் இருப்பிடமமைத்து நாடுகளைக் கறுவறுக்கும் வேலைகளில் மிகப் பரிச்சயமுற்றிருந்த சில கழுதைகளும் அங்கு வீற்றிருந்தன. புலித்தோல் போர்த்தியத அவற்றின் தோற்றம்தான் பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக இருந்தது. சில கழுதைகள் அண்மைக்கால சுகபோக வாழ்வின் வருடலில் புளித்த ஏப்பமும் பெருத்த கொட்டாவியுமாக கதிரைகளில் ஆவென்று கிடந்தன. காட்டிலும் மலையிலுமாக களி தின்று விரக்தியுற்றிருந்த அவைகள், தாம் காணாமல் கண்டு விட்ட பஞ்சு மெத்தைகளையும் குளிர் அறைகளையும் கண்டு மலைத்துப் போயின. இதுவரை காலமும் இவற்றை இழந்திருந்ததையிட்டு தம்மைத் தாமே நொந்து கொள்ளவும் செய்தன. சண்டையிட்ட காலத்தினதை விட இந்த இரண்டும் கெட்டான் நிலையே தமக்கு மிகப் பொருத்தமானதென்பதை அவை உணர்ந்தன.

கழுதைகளுடன் இணைந்தாற் போல், திட்டமிட்டு வன்முறைகளைத் தூண்டி விட்டு எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கெக்கலிக்கும் சில குள்ள நரிகளும் அங்கு இருந்தன. அவைகளுக்கு அந்த சபையில் அதிக மதிப்புமிருந்தது. கொழுத்த உடலும் குற்றேவல் புரியப் பணியாளர்களுமாய் இறுமாந்திருந்த அவற்றுக்கு முன்னால் ஏனையோர் பவ்யம் பேணினர். இந்த நரிகள் பூசிய போராட்டம் என்ற போலிச் சாயத்தில் வாழ்வைத் தொலைத்துவிட்ட முயல்கள் சில தமது கவலையையும் கைசேதத்தையும் வெளிப்படுத்த முடியாது, குமுறும் உணர்வோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன.

கழுதைகளும் நரிகளும் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொண்டன. பேச்சின் நடுவே எக்காளமிட்டுச் சிரித்தும் கொண்டன. கதறியழும் தாய்மாரின் கணீரைப் புறக்கணித்து விட்டு, பிள்ளைகளை இழுத்து வந்து பலவந்தமாகத் தம்மோடு இணைத்துக் கொண்டமை தொடர்பான கதை அவைகளுக்கு சுவாரஸ்யமான பேச்சாக இருந்தது. சிறுவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதில்லை என்ற தமது வழமையான கூற்றை நம்பி ஏமாந்து போன வெளியுலகத்தார்களை நினைத்து அவை விழுந்து விழுந்து சிரித்தன. கழுதைகள் தம் வசீகரமான குரலின் மீதும், நரிகள் தம் கவர்ச்சியான தோற்றத்தின் மீதும் பெருமிதப்பட்டுக் கொண்ட நிகழ்வு, உணர்ந்த பலருக்குக் கேலிச்சிரிப்பை ஏற்படுத்திற்று.

கழுதைகளும் நரிகளும் மகாராஜாவுடனான தமது நெருக்கத்தை வெளிப்படுத்துவதில் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டன. அவரின் இரவல் பேச்சுகளை தமக்கான வீரப் பேருரைகளாக வரித்துக் கொண்டிருந்தன. தமது உரிமை, சுதந்திரம் பற்றி பகிரங்கப் பேச்சில் தவிர வேறெப்போதும் அவை அக்கறை காட்டியதில்லை.

அப்பாவிகளிடம் கவர்ந்த பொருட்களும், அடித்துப் பறித்தெடுத்த பொருட்களும் அரண்மனையில் மலைபோன்று குவிந்து கிடந்தன. அவற்றைப் பார்த்த போது, கழுதைகளுக்கும் நரிகளுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. தமது செயலின் மீதான திருப்தியில் அவை புளகாங்கிதமுற்றன.

கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைப்பதை விட இது எவ்வளவு இலகுவான வழி. வருடக்கணக்காகக் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை இந்தத் தொழிலின் மூலம் ஒரே நிமிடத்தில் உழைத்தெடுத்து விடலாம். உழைப்பதற்கு மிக இலகுவான இப்படியான ஒரு வழியிருக்க அதனை விட்டு விட்டு, உறவுப் பாசம் என்றும், நாட்டுப் பற்றும் என்றும் யோசித்துக் கொண்டிருப்பது எவ்வளவு அபத்தமானது. ஆனாலும் நாட்டுப்பற்று, தாய்மண் என்பவைதானே தமது தொழிலுக்கான முக்கிய மூலதனமாக இருக்கின்ற என்பதையும் அவை நினைவுறுத்திக் கொண்ட போது ஏற்பட்ட சிரிப்பு, அவைகளின் முகத்தே மேலும் அசிங்கப்படுத்திற்று.

உழைப்பதற்கான இவ் இலகு வழியைத் தம்மைப் போலவே மற்றெவரும் கைக்கொண்டு விடக் கூடாதே என்பதில் அவை மிக்க அவதானமாக இருந்து வந்தன. அதனால்தான் நியாயமான எழுச்சிகளும் அவற்றுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. முளையிலேயே அவற்றைக் கிள்ளியெறிந்து விடுவதில் மிகுந்த முனைப்புக் காட்டின. தொழில் போட்டி என்பது இதுதானோ!

சற்று நேரத்தில், சங்கிலியால் கைகள் பிணைக்கப்பட்ட ஏழைக் குடியானவன் ஒருவன் அரசவைக்கு அழைத்து வரப்பட்டான். சமய அனுஷ்டானத்தின் பிரதிபலிப்பாகப் பளிச்சிட்ட அவனது நெற்றித் தழும்பு, தெய்வீக வீச்சத்தை அவனில் வெளிப்படுத்திக் காட்டிற்று. மயிர்களடர்ந்த அவனது தாடியும் மெலிந்து சிறுத்த அவனது பலவீன உடலும் அவனைத் தனித்துவமாக அடையாளப்படுத்திக் காட்டின. அநாவசியமாக மாட்டப்பட்டிருந்த விலங்குகள், அவனது கைகளிலிருந்து நழுவி விழுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று.

அந்த ஏழைக் குடியானவனின் பலவீனமான பரதேசித் தோற்றம் கழுதைகளுக்கும் நரிகளுக்கும் கேலிச்சிரிப்பை ஏற்படுத்தியது. 'முடிவுற உறிஞ்சியெடுத்து விட்டதான அவனது சக்தியில்தான் தமது ஸ்தூலமே நிலைபெற்றிருக்கையில் அவனது ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமாகும்!' என்ற கேலியான எண்ணவோட்டமும் அவைகளுக்குச் சிரிப்பை ஏற்படுத்திற்று.

இயல்புக்கு முரணாக மனித இரத்தத்தையும் சதைகளையும் குடித்துத் தின்று பழக்கமாகிப் போயிருந்த அந்தக் கழுதைகளும் நரிகளும் ஏழைக் குடியானவனின் கன்னங்களிலும், கைகளிலும் கோடிழுத்திருந்த இரத்தத் துளிகளைப் பார்த்த போது நாவில் எச்சிலூற, வாயினால் சப்புக் கொட்டி மனதுக்குள் ருசித்துப் பார்த்துக் கொண்டன.

ஒரு கழுதை, எழுந்து வந்து குடியானவனை நெருங்கி அவனைக் கடுமையாக முறைத்தது. அவனது பிருஷ்டபாகத்தில் தன் அழுக்குக் காலினால் எட்டி உதைத்தது. தன் தாயை ஹீனஸ்வரமாய் அழைத்துக் கொண்டே மடங்கி விழுந்த அவனைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தது. அவனது தாயின் கற்பின் மீதும், அவனது சமூகத்தின் கௌரவம் மீதும் கழுதை பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்திற்று.

காவலர்கள், தொய்ந்து போன குடியானவனை பலவந்தமாக எழுப்பி நிறுத்தினர். தமது கைகளிலிருந்த ஈட்டியைக்க ஆட்டி அவனை பயமுறுத்தவும் செய்தனர்.

தன் மீது பிரயோகிக்கப்படும் பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாமற் திணறினான் குடியானவன். தான் நிம்மதியாக வாழக் கூடாது என்பதிலான இவைகளின் திட்டமிட்ட முடிவு அவனுக்குத் தெரிந்ததுதான். ஆனால், இறக்கும் போதும் நிம்மதியாக இறக்கக் கூடாது என்றுமல்லவா இவை திட்டமிட்டுள்ளன. மக்களை அழித்து அவர்களது பொருளாதாரங்களை நசுக்கி, இறுதியில் எஞ்சும் வெறும் மண்ணை மட்டும் வைத்துக் கொண்டு இவை என்ன செய்யப் போகின்றன' என்று முன்பெல்லாம் அவன் அடிக்கடி எண்ணிக் கவலைப்படுவதுண்டு. அதேவேளை, முடியுமான கொடுமைகளையெல்லாம் இழைத்து விட்டு, யாவருக்கும் பாதுகாப்பளிப்போம் என்ற தோரணையில் தம் அரண்மனை நடவடிக்கையை நியாயப்படுத்த முனையும் அவற்றின் குள்ளத்தனமான சதிகாரப் போக்கை நினைக்கையில் அவனுக்குள் எரிச்சல் கிளர்ந்தெழும். இவ்வாறானோரின் உலகம் முழுக்கப் பரந்ததான இருப்பையும், அதனால் பாதிக்கப்பட்டுத் துன்பமுறும் தன்னைப் போன்ற ஏழைக் குடியானவர்களின் துயரத்தையும் நினைத்து ரணப்பட்டு மனதுக்குள் சஞ்சலமுறுவான்.

திடீரென அரண்மனைக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சில ஒழுங்குகள் மீண்டும் அவசர அவசரமாகப் பரிசீலிக்கப்பட்டு சரிகாணப்பட்டன. எல்லோர் முகங்களிலும் எதிர்பார்ப்பின் ஆழப்பார்வை வந்தமர்ந்து கொண்டது. காவலன் ஒருவன் சத்திட்டு முழங்கினான்;

'மகாராஜா வருகிறார்; மகாராஜா வருகிறார்;மகாராஜா வருகிறார்'

அவையிலிருந்த அனைவரும் எழுந்து நின்றனர். தமது தலைகளைத் தாழ்த்தி மரியாதை செலுத்தினர்.

முழுக்க மழித்த முகத்துடனும், அறியாமைப் பலவீனத்தின் அடையாள முழிப்புடனும் அரசவையில் பிரசன்னமானார் மகாராஜா. தளதளக்கும் தொந்தியைக் கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டே, வடிந்த நெஞ்சை நிமிர்த்திக் காட்டும் பலப் பரீட்சையுடன் நடந்து வந்த அவர் கைகளைப் பரப்பிக் கொண்டே தன் சிம்மாசனத்தில் தொப்பென அமர்ந்தார். அந்தக் கொழுத்த உடலின் கனமான சுமைத் தாக்குதலில் சிம்மாசனம் ஒரு கணம் அதிர்ந்தோய்ந்திற்று.

பின்னால் தொடர்ந்து வந்த பணிப்பெண்கள், தமது கையிலிருந்த மயிலிறகில் சாமரம் வீச, அதில் பட்டுத் தெறித்த குளிர் காற்றின் உபயத்தில் உடல் குறுகுறுத்த மகாராஜா, அந்த சுக உணர்வுடன் அவையை நிமிர்ந்து நோக்கினார்.

அவரது தலையில் மாட்டி வைக்கப்பட்டிருந்த தங்கக் கிரீடம் இயற்கை ஒளியில் பளிச்சிட்டது. புலிநகம் பொருத்திய வீரமாலை, சம்பந்தமில்லாமல் அவரது நெஞ்சில் புரண்டு விளையாடியது. புலித்தோலில் அலங்கரிக்கப்பட்ட அழகிய உடை அவருக்கு எடுப்பாகத்தான் இருந்தன.

தென்றலின் சுகந்தம் வீசும் காட்டு மரங்களின் கீழ், வயிறு புடைக்க உண்டு உறங்கியதான சொகுசு வாழ்வின் தேர்ந்த அடையாளம் கழுத்தின் கீழ் சதையாகக் கன்றியிருந்து. கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் கட்டளையிட்டும் பழகிப் போன நாவின் அசூசையான இருப்பில் முகம் கறுத்துத் தெரிந்தது. திருதிருவென்ற வித்தியாசமான பார்வை காண்போரைக் கலவரத்திற்குள்ளாக்கிப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

சங்கிலிகள் சகிதம் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழைக் குடியானவன் மீது மகாராஜாவின் பார்வை பதிந்தது. கடுமையான முறைப்பினூடு விகாரமாக சிரித்து ஓய்ந்தார்.

கழுதை ஒன்று எழுந்துந இன்று மகாராஜாவை வணங்கியது. தன் கரகரப்பான குரலைக் கொஞ்சம் கனைத்துக் கொண்டது.

'மாட்சிமை பொருந்திய மகாராஜா அவர்களே! இந்தக் குடியானவன் எமது நீண்ட கால எதிரி. நாம் இவனை எதுவும் செய்துவிடவில்லை. அவனிடமிருந்து பணத்தை பலவந்தமாகப் பெற்றுக் கொண்டோம். சிலவற்றை தீயிட்டுக் கொளுத்தினோம். அவனது பிள்ளைகள் மூவரையும் சுட்டுக் கொன்றோம். அவனது மனைவியைக் கற்பழித்துக் கடலில் எறிந்தோம். அவனது வீட்டை எமது அரச கருமபீடமாக்கினோம். சாதாரணமாக இவனைப் போன்ற ஏனையோருடன் நடந்து கொள்ளும் போக்கையே இவனிடமும் கடைப்பிடித்தோம். மாறாக எந்த வன்முறையையோ அராஜகத்தையோ நாம் இவனுக்கு இழைக்கவில்லை. ஆனால் இவனோ எமது ஜனநாயக வழிமுறைகள் மீது பெருத்த சந்தேகத்தை எழுப்புகின்றான். எமது கொள்கைகளை இழித்துரைக்கின்றான். அடாத செயல் புரியும் அராஜகர்களாக எம்மை வெளிக்காண்பிக்க முயல்கின்றான். அதனால்தான் இவனை தங்களிடம் அழைத்து வந்துள்ளோம்'

அவையதிரும் படி கத்திய கழுதை மகாராஜாவை மீண்டும் ஒரு முறை வணங்கிவிட்டு பவ்யமாக அமர்ந்தது.

மகாராஜா நிமிர்ந்து உட்கார்ந்தார். சுட்டெரிக்குமாப்ப ஓல் குடியானவனை வெறித்தார். உதடுகளைப் பிதுக்கி எரிச்சலை வெளிப்படுத்தியவாறு பிரதானிகளை நோக்கினார்:

'இதற்கெல்லாம் ஏன் என்னிடம் அழைத்து வருகிறீர்கள். விசாரணை என்பதும், நியாயமான தீர்ப்பு வழங்கல் என்பது எமது ஜனநாயக ஆட்சிக்குப் புறம்பான விடயங்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? வழமை போன்று கண்ட இடத்திலேயே கழுத்தை வெட்டி எறிந்திருக்கலாமே. இந்தச் சின்ன விடயங்களிலெல்லாம், சாப்பிடுகின்ற தூங்குகின்ற எமது தனிநாட்டைக் கனவு காணுகின்ற என் பெறுமதியான நேரங்களை நான் வீணடிக்க முடியுமா'

பிரதானிகளைக் கண்டித்து விட்டு காவலாளிகளின் பக்கம் திரும்பிய மகாராஜா, 'கொண்டு சென்று இவனது சிரசைக் கொய்தெறியுங்கள். எமது ஜனநாயகத்தை எதிர்க்கும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும்' என்றார் அவையதிர.

மறுகணமே, கைகளில் விலங்கிடப்பட்டிருந்த அந்த ஏழைக் குடியானவன், அரசவையிலிருந்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வரப்பட்டு, முற்றத்தில் விடப்பட்டான். முறுக்கு மீசையும், ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்ட ஒரு கறுப்பு உருவம் பளபளக்கும் கூரிய வாளுடன் அவனை நெருங்கியது. ஆணை கிடைத்த மறு நொடியில், அவனது கழுத்தைக் குறிபார்த்து தன் வாளை ஆக்ரோஷமாக வீசியது.

அந்தோ பரிதாபம். பல நாட்கள் பட்டினியில் உடல் சோர்ந்து போயிருந்த அந்த ஏழைக் குடியானவன் தலை வேறு, உடல் வேறாக துடிதுடித்துத் தரையில் விழுந்தான். அவனது மெலிந்த உடல், பிராணனை இழக்கும் தன் இறுதி வேதனையைத் தாங்கச் சக்தியற்று பூமிப் புழுதியில் புரண்டுரண்டது. கால்களையும் கைகளையும் அடித்துக் கொண்டு துடித்தது. சற்று நேரத்தில் துடிப்புகள் அடங்கி சர்வாங்கமும் ஒடிந்து போயிற்று.

அரண்மனைக்கு வெளியே இவ்வக்கிரத்தனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பீதியிலும் திடுக்கத்திலும் உறைந்து போயினர். மனதுக்குள் அள்ளித் திணிக்கப்பட்ட குரூர அச்ச நிலை, தம் வாழ்க்கையின் தொடர் பற்றியதான பலத்த சந்தேகத்தை அவர்களுள் ஏற்படுத்திற்று. ஆழமான உளக் காயங்களின் தோற்றுவிப்பில் அவர்களது உடல்கள் சோர்ந்து போயின. இவ் அராஜகத்தின் அடுத்த பலி, தம்மில் யாராய் இருக்குமோ என்ற சிந்தனை ஏற்படுத்திய கிலியுடன், நெஞ்சை சாந்தப்படுத்திக் கொண்டே அங்கிருந்து கலைந்து செல்லலாயினர். எல்லோர் இதயங்களிலும் ஒரு கனமான சோகத்தினதும் எதிர்காலம் பற்றிய சந்தேகத்தினதும் இருப்பின் வலி தொடர்ந்து அரிக்கலாயிற்று.

தூரமாகிச் செல்லும் அந்த அரண்மனை, மனிதாபிமான உணர்வுகளை விட்டும் தனிமைப்படுத்தப்ப கொடூர பேய்கள் வாழும் பயங்கரமிக்க மயான வெளியாக அவர்களுக்குக் காட்சி தந்து அச்சுறுத்தத் தொடங்கிற்று.

No comments:

Twitter Bird Gadget