Tuesday, March 15, 2011

பரிசு


'யா அஹீ! இங்கே வாருங்கள்; பசுமை வழியும் அந்த மரங்களும் அவற்றில் காய்த்துக் கனிந்திருக்கும் இனிய பழங்களும் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. அதன் கீழே நின்று சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம் வாருங்கள்'

'ஆமாம் யா அஹீ! அந்த மர நிழலின் குளிர்மையும், தென்றல் வருடும் போது அதன் இலைகள் ஒன்றுடனொன்று உராய்ந்தெழுப்பும் சுகமான ஓசையும் எனக்கும் பிடிக்கும். அது மாத்திரமன்றி, உண்ண நினைத்த மறுகணமே உணவாகிச் சமைந்து வரும் வெண்ணிறப் பறவையினங்களும், உண்டு முடித்த எலும்புகளிலிருந்து அவை உயிர் பெற்றுப் பறந்து செல்லும் கொள்ளை அழகும் எனக்கு மிகவும் பிடிக்கும்'

'மர நிழலின் கீழ் வந்து நின்றதும் ஒரு சுகமான தாலாட்டுக் கேட்கின்றதல்லவா யா அஹீ! அந்தத் தாலாட்டின் இதமும் அதன் அன்பான அரவணைப்பும் உலகில் நாம் எதிர்கொண்ட எல்லாக் கொடுமைகளின் வலியையும் முற்றாக மறக்கடித்து விட்டனவே'

'உண்மைதான் யா அஹீ! எமது கைகள் கட்டப்பட்ட நிலையில் புறமுதுகில் சுடப்பட்டோம். கண்கள் தோண்டப்பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு, முகம் நசுக்கப்பட்டு, நெஞ்சு பிளக்கப்பட்டு உயிரிழந்தோம். முறைப்படி அடக்கம் செய்யப்படாமல் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டோம். வயிற்றுப் பசியைத் தீர்க்கச் சென்ற நாம், அவர்களின் கொலைப் பசிக்குத் தீனியானோம். இத்தனையும் செய்ததனால், தாம் வெற்றி பெற்றுவிட்டதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். உண்மையில் வெற்றியடைந்தவர்கள் நாமல்லவா. எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கான பிரதிபலனாக இங்கு நாம் அனுபவிக்கும் சுகபோகங்கள், செல்வங்கள், சௌபாக்கியங்கள்தான் எத்துணை விசாலமாக இருக்கின்றன!'


'மக்களுக்கு அநீதியிழைத்து அதன் மூலம் அதிகாரம் பெற முயல்பவர்கள் இங்கு அனுபவிக்கும் தண்டனைகளையும் வேதனைகளையும் பார்த்தீர்கள்தானே யா அஹீ! அதேவேளை அநீதியிழைக்கப்பட்ட நாம் மிக்க சந்தோஷமாக அல்லவா வாழ்கிறோம். இங்கு பசியில்லை; பட்டினியில்லை; அச்சுறுத்தலில்லை; கொலை மிரட்டலில்லை. உலகில் எம்மீது திணிக்கப்பட்ட இன வக்கிரங்கள், வன்முறைகள் எல்லாவற்றிலிருந்தும் எமக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சந்தோஷம், நிம்மதி, சமாதானம் என்பதைத் தவிர வேறெந்தப் பேச்சும் இங்கில்லை. தொண்டு புரியப் பணியாளர்கள் இருக்கிறார்கள். தூவி விடப்பட்ட முத்து மணிகளைப் போன்று ஒளி வீசும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. நறுமணமும், தூய அழகும் நிறைந்துள்ள இந்தக் கன்னிப் பெண்களின் அருகாமை கூட எவ்வளவு ஆறுதலளிக்கிறது. தங்க இழைகளாலான சாய்மனைக் கதிரைகளிலும், கட்டில்களிலும் ஓய்வெடுத்துக் கொண்டு உல்லாசம் அனுபவிப்பதொன்றுதானே இங்கு எமது ஒரே பணியாக இருக்கிறது. பளபளக்கும் தங்கக் கிண்ணங்களில் பால், தேன், மது என விரும்பியவற்றை அருந்திக் களிப்புறும் இந்த ஆடம்பர வாழ்க்கை எப்போதுமே அலுப்பேற்படாத அகமகிழ்வு நிலையல்லவா. சலசலக்கும் நீரோடைச் சோலைகளில், யௌவனம் வழியும் கன்னிப் பெண்களுடன் கைகோர்த்துக் கொண்டு, பறவைகளின் இசைகளையும் தென்றலின் சுவையையும் அனுபவித்துக் கிடப்பது எவ்வளவு இதமளிக்கிறது. என்றுமே மாறாத இளமைப் பொலிவும் உடம்பைப் பிரகாசிக்கச் செய்யும் அலங்கார ஆபரணங்களும் எமக்கு எவ்வளவு அழகைத் தருகின்றன. முடிவற்ற இந்த வாழ்க்கைச் செழுமைக்குள் மூழ்கிக் களிப்புற்றிருப்பதென்பது எத்துணை பெரும் பாக்கியம்!'

'இந்த வாழ்க்கை குறித்து நாம் மகிழ்ச்சியுறுவதும் பெருமிதம் கொள்வதும் முற்றிலும் நியாயமானதுதான் யா அஹீ! இது விசுவாசிகளுக்கு ஏலவே வாக்களிக்கப்பட்ட வாழ்க்கை; உலகோரின் இறுதி இலக்காக உள்ள வாழ்க்கை. நல்லவர்களும் மனித நேயமுடையோருமே இதனை அனுபவிப்பர். வன்முறையாளர்களோ வக்கிரபுத்தியுடையோரே இதற்குத் தகுதி பெறமாட்டார்கள். போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களைக் கொன்று குவிப்பவர்களும், மாற்றுக் கருத்துகளுக்கு மரணதண்டனை விதிப்பவர்களும், சமாதானம் பேசியே சகோதரர்களின் தலையெடுப்பவர்களும், இரவுப் படுகொலைகளில் இனங்களைக் கருவறுப்பவர்களும் இந்தச் சுகவாழ்க்கையின் வாடையைக் கூட அனுபவிக்க முடியாது. அவர்களுக்குக் கொதிக்கும் நீரும், குமுறும் நெருப்பும், முரட்டு ஜந்துகளும், மூர்க்கக் கொடுமைகளும்தான் காத்திருக்கின்றன'

'ஆமாம் யா அஹீ! நம்மைச் சுட்டுக் கொன்றவர்கள் விடுதலைப் போர்வைக்குள் தம் கோரமுகத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றனர். இனமுறுகலைத் தூண்டிவிட்டு, எம் இளைஞர்களைப் பலியெடுக்கின்றனர். பொருளாதாரத்தைச் சூறையாடி எம் புஜபலத்தை நசுக்குகின்றனர். சமூக உயர்வைக் கருத்திற் கொண்டுழைக்கும் கல்விமான்களைக் கடத்திச் சென்று காணாமலாக்குகின்றனர். ஆயுத கர்வம் அவர்களது அகக் கண்களை மறைத்துள்ளது. இனப்பாகுபாடு அவர்களது இதயத்தைக் கரடாக்கியுள்ளது. ஓர் இனத்தை ஏறி மிதித்து தன்னினத்தை உயர்த்தத் துடிக்கும் முரட்டு வெறிக்குள் அவர்களது மூளை பலியாகிப் போயுள்ளது. இந்தக் கொடுங்கோலர்களின் கோரப் பிடிக்குள் சிக்கித் திணறும் எம் சகோதரர்களை நினைக்கும் போதுதான் கவலை தெரிகிறது; கண்ணீர் வருகிறது யா அஹீ!'

'இதில் கவலைப்படவும் கண்ணீர் விடவும் எதுவுமில்லை யா அஹீ! அக்கிரமம் புரிபவன் அங்கும் இங்கும் விமோசனமின்றி வேதனைக்குட்படுத்தப்படுவான். அநீதியுடன் இணைந்த எந்தச் செயலும் எப்போதும் வெற்றி பெறாது. இலக்கை அடைய முடியாமல் இடையில் கருகியழியும் அவமானச் சாவுதான் அவர்களுக்குப் பரிசாகக் கிடைக்கும். அதேவேளை, எம் சகோதரர்கள் உலகில் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும், இங்கோ அவர்களுக்கு நிம்மதிச் சுவாசம் செழிக்கும் நிரந்தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது. கஷ்டங்களோ, கவலைகளோ உலகோடு அவை தடைப்பட்டு விடுகின்றன. மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இங்கு அவர்கள் வாழ்வார்கள்'

'நீங்கள் சொல்வது சரிதான் யா அஹீ! எம் சகோதரர்கள் எதிரிகளின் மிரட்டலையும் கொடுமையையும் கண்டு இறைவனில் அதிருப்தி கொள்ளக் கூடாது. பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முடியாத போதுதான் புனிதப் போரைக் கையாள வேண்டும். நேர்மை வழுவாத எம் சகோதரர்களுக்கு இங்கு நிறைவான சந்தோஷம் இருக்கிறது; நிம்மதி இருக்கிறது. கைநிறை அல்ல் கண் நிறையப் பொருளாதாரம் அவர்களுக்குண்டு. அவர்களுக்குப் பிரத்தியேக இருப்பிடங்களுண்டு. உண்டு களிக்க அறுசுவை உணவு வகைகளும், கூடிக் குலாவ அழகு மனைவியரும், அணைத்து மகிழ அன்புக் குழந்தைகளும் அவர்களுக்குண்டு. சுவாசிக்கும் போதே சுகத்தை அள்ளிக் கொட்டும் தென்றலும், பளபளக்கும் பசுந்தரையெங்கும் ஆங்காங்கே அழகு மரங்களுமாய் அவர்கள் களிப்பில் மிதப்பார்கள். அவர்களது இருப்பிடங்களில் யாரும் அத்துமீறி நுழைய முடியாது. அவர்களது மனைவியரை மானபங்கப்படுத்த முடியாது. அவர்களது குழந்தைகளைக் குழிதோண்டிப் புதைக்க முடியாது. அவர்களது பொருளாதாரங்களைச் சூறையாட முடியாது. வாழிடங்களிலிருந்து வெளியேற்றி அவர்களை அகதிகளாக்க முடியாது. இவை எல்லாவற்றுக்கும் உலகோடு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. இங்கு மகிழ்ச்சியில் திளைப்பதொன்றே அவர்களது நாளாந்தப் பணியாக இருக்கும். எனவே, எம் சகோதரர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளுக்காக அவர்கள் மீது அனுதாபம் கொள்வோம்; அவர்கள் இங்கு வரும் போது மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்போம்'

'ஆமாம் யா அஹீ! உரிமைக்காகச் சண்டையிடுவதாகக் கூறி உயிர்களைக் கொன்று குவிக்கும் அந்த விடுதலை வீரர்கள், உண்மையில் வீரர்களல்ல் வெறும் கோழைகளே. அவர்களது தனிநாட்டுக் கனவு வெறும் கனவாக மட்டுமே இருந்து அழிந்து போகப் போகிறது. மண்டையோடுகள் மீதமர்ந்து மனிதாபிமானம் பேசும் அந்தக் கிராதகர்களின் அழிவு நெருங்கி விட்டது. உள்ளகப் பிளவும், அதில் உருவான பின்னடைவும் அவர்களது கனவு வாழ்க்கையில் விழுந்த முதலாவது அடி. அடுத்தடுத்து விழவுள்ள அடிகள் அவர்களது முகத்தை மட்டுமல்ல, முள்ளந்தண்டையும் முறித்து அடுப்புக்குள் வைக்கப் போகின்றன'

'தாம் விரும்பியவற்றையெல்லாம் தம்மால் ஆற்ற முடியும் என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் யா அஹீ! அவர்களது கைகளில் தவழும் ஆயுதங்களும் பைகளில் புரளும் வரிப்பணமும் இத்தகையதோர் அதிர்ச்சியான எண்ணத்தை அவர்களிடையே தோற்றுவித்துள்ளது. தாம் விதிப்பதெல்லாம் சட்டமெனவும், அச்சட்டத்தை ஏற்க மறுப்போரும் எதிர்த்துரைப்போரும் துரோகிகளெனவும் பிரசாரம் செய்கின்றனர். இனப்பாகுபாட்டுணர்வால் உந்தப்பட்டு, செயற்கை அனர்த்தங்களைத் தூண்டுகின்றனர். படுகொலைகள், பொருளழிப்புகள் மூலம் ஒரு சமுதாயத்தின் உயிர்க்குரலை நசுக்க முனைகின்றனர். ஆனால், இறைவனின் உதவி நல்லோருக்கு மட்டுமேயுரியது. இவர்கள் அழிக்க நினைத்த இடங்களிலெல்லாம் இறைவன் செழிப்பின் விதைகளைத் தூவியுள்ளான். இவர்கள் நாசம் செய்த இடங்களையெல்லாம் இறைவன் வாசம் கமழும் மலர் வனமாக்கியுள்ளான். எத்தகைய கொடிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட போதிலும், ஒரு சமூகத்தை வேரோடு அழிக்க உலகின் எந்தப் படைப்பாலும் முடியாது. அது இறைவனால் மட்டுமே முடியுமான மாபெரும் வல்லமை'

'முற்காலச் சமூகங்கள் கல்மாரி பொழியப்பட்டு அழிக்கப்பட்டார்கள். சிலர் நில நடுக்கம் மூலமாக, மாபெரும் வெள்ளம் மூலமாக, காதைச் செவிடாக்கும் இடியின் மூலமாகவெல்லாம் வேரோடு அழிக்கப்பட்டார்கள். இவை இறைவனால் மட்டுமே முடியுமானவை. அவ்வாறிருக்க கொள்ளையடித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சில இரும்புக் குழாய்களை வைத்துக் கொண்டு, உலகாளப் பிறந்த ஒரு உம்மத்தை உருக்குலைத்துவிட நினைப்பது எத்தகைய முட்டாள்தனம்; எவ்வளவு கோழைத்தனம்!'

'பொறுமையில் அமைதியாயுள்ள சமூகத்தை, வெறுமையான வீரர்களெனக் கருதிவிடலாகாது யா அஹீ! தென்றலாய்த் தவழ்வது கண்டு காற்றைச் சோம்பேறியெனலாமா? புயலாய் அது சீறியெழுந்தால் இந்தப் பூமிச்சுற்றம் தாங்குமா?'

'மிகவும் உண்மை யா அஹீ!'

-------------------------------------------------------------------

குறிப்பு 01: 'யா அஹீ!' - எனது சகோதரனே என்ற கருத்துள்ள அரபுச் சொல்.

குறிப்பு 02: இக்கதையை அரபு மொழிக்கு மாற்றம் செய்தும் வாசிக்கலாம். ஏனெனில், சுவர்க்கவாசிகள் பேசுவது அரபு மொழியிலாகும்.

No comments:

Twitter Bird Gadget