Wednesday, March 16, 2011

முஸ்லிமின் ஆயுதம்


'யாஅல்லாஹ்! எங்களது பாவங்களையெல்லாம் மன்னிப்பாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! எங்களது பெற்றார், உற்றார், உறவினர்கள், உலக முஸ்லிம்கள், முஃமின்கள் அனைவருடைய பாவங்களையும் மன்னிப்பாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! உலகில் இஸ்லாத்தையும் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் கண்ணியமாக வாழச் செய்வாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! நிலநடுக்கம், பெருவெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும், கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், அகதி வாழ்க்கை, இடம்பெயர்வு போன்ற செயற்கை அனர்த்தங்களினாலும் ஏற்படும் இழப்பு, கண்ணீர், சேதம் என்வபற்றிலிருந்து எமக்கு விடுதலையையும் பாதுகாப்பையும் நல்குவாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! எக்காலத்திலும் நசுக்கப்படும் நிலையே எமது வரலாறாயிற்று. இழப்பதிரும் வெறுங்கையோடும் கண்ணீர் அரிக்கும் வெற்றுப் பார்வையோடும் உன் முன்னால் நிற்கிறோம். துயர் முதிர்ந்த எம் வாழ்வின் சோகம் நீ அறியாததல்ல. அந்த சோக வடுக்களில் பசுமையைப் பொழியச் செய்யும் பணியை நீயே பொறுப்பேற்பாயாக!'

'ஆமீன்!'


'யாஅல்லாஹ்! அன்று உன்னை வணங்க கைகளைக் கட்டிக் கண்களை மூடினோம். எம் பிடரிகளிலும் முதுகிலும் தமிழ்த் தோட்டாக்கள் நெருப்புக் கங்குகளாய்ப் பாய்ந்து உதிரம் உறிஞ்சி உயிரைக் குடித்தன. பரிசுத்தமான பள்ளிவாயல் பயங்கரமான போர்க்களமாயிற்று. போர்க்களமாயினும், சரணடைந்தால் எதிரிக்கும் அபயமளிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய நாம் போராட்டம் எதுவுமின்றியே புறமுதுகில் சுட்டுச் சரிக்கப்பட்டோம். உனக்காகத் தொழச் சென்றவர்கள்; தமக்காகத் தொழப்படும் நிலைக்காளானார்கள். இரவின் இருளைக் கிழித்த பெண்களின் இழப்பு வலி திமிறும் கதறல் உன் அர்ஷையே அசைத்திருக்குமே. அந்த ஷ§ஹதாக்களை நீ பொருந்திக் கொள்வாயாக! அவர்களை இழந்த துயரத்தை எம்முள்ளங்களில் ஆற்றுப்படுத்துவாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! மற்றொரு நாள், மதுவெறியையும் மீறிய கொலை வெறி ஓலமிடும் தமிழ்க் கரங்கள், இறுக்கிப் பிடித்திருந்த வாள் முனையூடும், நீட்டிப் பிடித்த துப்பாக்கிக் குழல் வழியூடும், உறக்கத்திலிருந்த எமது உயிர்களை உறிஞ்சியிழுத்து அவற்றை அந்தரத்தில் உறுமித் துப்பிக் கொக்கரித்தன. பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாட்டுப் பரிவுகள் சற்றேனும் அவர்களுள்ளங்களில் தலை காட்டவில்லை. எம் யுவதிகளின் கற்பைப் புசித்தும், கற்பிணிகளின் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளியெடுத்துச் சுவரில் அறைந்தும், படித்தவர்களின் தலையைப் பிளந்து மூளையை வெளியே எறிந்தும் அவர்கள் கட்டவிழ்த்து விட்டுச் சென்ற வெறியாட்டத்தின் கொடூரங்கள், விடிகாலை வெளிச்சத்தையும் அச்சத்திலும் அனுதாபத்திலும் உறையச் செய்தனவே. இன்று வரையும் மாறாதிருக்கும் அந்தத் துயர் வடுக்களுக்கு நீயே ஒத்தடமாய் அமைவாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! ஒரு தசாப்தமாக, சொல்லொண்ணா கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி விட்டோம். உரிமை மீட்பு எனத் தொடங்கப்பட்ட ஒரு போராட்டம், எங்கள் உடமைகளையெல்லாம் பறித்து, உயிரை மட்டும் பிச்சையிட்டு அனுப்பி வைத்தது. பரம்பரை பரம்பரையாக நாம் வாழ்ந்து வந்த வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், விவசாய நிலங்கள், கோடிக்கணக்கான பொருளாதாரங்கள் எல்லாவறையும் இழந்து, சொபின் பேக்குடன் வடக்கிலிருந்து துரத்தப்பட்டோம். நாங்கள் யாருக்கும் அநீதியிழைக்கவில்லை. யாருடைய பொருளாதாரத்தையும் சுரண்டவில்லை. யாரையும் ஏமாற்றி வாழவில்லை. முஸ்லிமாகப் பிறந்ததொன்றே இங்கு எங்கள் குற்றமாகக் கருதப்பட்டது. முஸ்லிம் என்ற அடையாளத்துக்காகவே நாம் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டோம். எங்களுக்கு நீதி வழங்குவோன் உன்னையன்றி வேறு யாருமில்லை. எங்களை நீயே பொறுப்பேற்பாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! இத்தனை காலமும் நாம் மொழியால் இணைந்திருந்தோம். இன்ப துன்பங்களில் ஒரே வீட்டார் போன்று பங்கெடுத்து வாழ்ந்தோம். உதவிகளைப் பரிமாறிக் கொண்டேம். ஒன்றாய் உண்டு, ஒன்றாய் உறங்கினோம். இணைந்து தொழில் புரிந்தோம். சமாதானம் பற்றிய பிரசாரங்களோ, இன ஐக்கியம் தொடர்பான மாநாடுகளோ, மத நல்லிணக்கம் குறித்த கருத்தரங்குகளோ எதுவுமில்லாமலேயே நாம் எவ்வித வேற்றுமையுமின்றி சகோதரத்துவம் பேணி வாழ்ந்தோம். ஆனால், எங்கள் ஒற்றுமையைக் கூறுபடுத்தி, எங்கள் இனத்தை அந்நியப்படுத்தி, எங்களது சொத்துகளையும் சூறையாடி, எங்களைக் கையேந்தி வாழும் அகதிகளாய் மாற்றி விடுமளவுக்கு நாம் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லையே. அவ்வாறிருந்தும் நாம் அநீதிக்குள்ளானோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பதிலிறுப்பை நீயே மேற்கொள்வாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! தலைமுறை தலைமுறையாக செல்வந்தர்களாய் வாழ்ந்து வந்தோர், இங்கு ஒருவேளைச் சோற்றுக்கும் தவியாய்த் தவிக்கிறார்கள். மாளிகை போன்ற வீடுகளில் வசித்தோர் மண் குடிசையுமின்றிச் சீரழிகின்றார்கள். புதுமணத் தம்பதிகள் ஒதுங்க இடமின்றி மனம் வெதும்புகின்றார்கள். வயோதிபர்கள், நோயாளிகள் உடல் கிடத்தத் தளமின்றி அல்லலுறுகின்றார்கள். குழந்தைகளின் அழுகையும் இளைஞர்களின் பெருமூச்சும் விண்ணை முட்டுகின்றன. பசி, பட்டினி, பிணி, விரக்தி, இயலாமை, கவலை என உடலும் உள்ளமும் துவண்டு போன மாபெரும் ஆற்றாமை வாழ்க்கை எம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடிய வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான மனோபலத்தையும் உடல் வலுவையும் எமக்கு முழுமையாகத் தந்தருள்வாயாக'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! ஒரே மொழியென்ற பேச்சிணைப்போ, ஒரே நாடென்ற சுதேச உணர்வோ எமக்குப் பாதுகாப்பளிக்கவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தமிழும், தெற்கிலும் மேற்கிலும் சிங்களமும் இணைந்து எம் கழுத்தில் கத்தி வைத்துள்ளன. சுயத்தை இழந்து உயிரைக் காப்பதா? உயிரைத் துறந்து சுயத்தை மீட்பதா என்ற தீர்மானப் போராட்டம் எம் முன்னே திணிக்கப்பட்டுள்ளது. சுயம் என்பது மதம் என்ற கொள்கையில் உடைந்து விடாத உறுதி கொண்டுள்ள எமது நெஞ்சுரம் எந்நிலையிலும் தளர்ந்து விடாதிருக்க நீயே தயை புரிவாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பிய ஹாஜிகள் வழிமறிக்கப்பட்டு, வாளுக்கும் துப்பாக்கிக்கும் இரையாக்கப்பட்டார்கள். சமூக விழிப்புணர்வுக்காகப் பாடுபட்ட கல்விமான்கள் கடத்தப்பட்டும், குண்டு வைத்தும் இல்லாதொழிக்கப்பட்டார்கள். பல கோடி பெறுமதி மிக்க கால்நடைகள், வயல் நிலங்கள், வாகனங்கள் ஆயுத முனையில் அபகரிக்கப்பட்டன் அல்லது பயமுறுத்திப் பறிக்கப்பட்டன. வடக்கில் எம்மீது ஆயுத முனையிலான இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டு பலன் கண்டோர், சமூகப் பொருளாதாரத்தை நசுக்குவதன் மூலம் கிழக்கிலும் ஓர் இனச்சுத்திகரிப்பை நடத்தத் திட்டம் தீட்டிய போது, அந்தச் சதியை நீ முறியடித்தாய். எமது வாழ் நிலங்களையும் குடியிருப்புகளையும் பாதுகாத்தாய். எந்த நிலையிலும் வீழ்ச்சியுறாத பொருளாதார பலத்தையும் எமக்கு நல்கினாய். அதற்காக உனக்கு நன்றி கூறுகின்றோம். உனது பாதுகாப்பை எமக்கு மென்மேலும் வழங்குவாயாக. பொருளாதாரத்திலும் கல்வியிலும் எமக்குத் தொடர்ச்சியான முதலிடத்தை வழங்குவாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! நன்கு திட்டமிடப்பட்ட ஆயுதச் சதிகளுக்குப் பலியாகி நாம் பறிகொடுத்துள்ள உயிர்கள்தான் எத்தனை! வளங்கள்தான் எத்தனை! இந்த இழப்பின் வலியை விட, அவை இருட்டடிப்புச் செய்யப்படும் வலி எவ்வளவு கொடூரமானது! 'அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்' என்ற உனது கூற்றுக்காகவே எல்லா வலியையும் தாங்கிக் கொண்டு நாம் பொறுமையாக இருக்கிறோம். எம் பொறுமைக்கு நீயே பரிசளிப்பாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! நீ ஆளுமையில் நிகரற்றவன்; அதிகாரத்தில் இணையற்றவன். உன்னை ஏற்று நம்பிக்கை கொண்டுள்ள இந்தச் சமூகத்தின் மரியாதையைப் பாதுகாப்பாயாக. இந்நாட்டில் உன் பெயர் உச்சரிக்கப்படக் காரணமாயுள்ள இந்தச் சமூகத்தின் அவலங்களைப் போக்குவாயாக. அடிமைக் குரலாய் ஒலிக்கும் எம் உணர்வுகளின் வேர்களில் அதிகாரப் பசளையை அள்ளியிறைப்பாயாக. ஒற்றுமையின் மூலம் எம் குரலைப் பலப்படுத்துவாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! எந்தச் சந்தர்ப்பத்திலும் கண் முன்னால் நடைபெற்று வருவது போன்றதொரு வன்முறைப் போராட்டத்தைக் கைக்கொள்ளும் நிர்ப்பந்த நிலைக்கு எம்மைத் தள்ளிவிடாதே யாஅல்லாஹ்!

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! ஜனநாயகத்தையும் மனிதாபிமானத்தையும் சமூக வாழ்வின் முக்கிய இரு பண்புகளாய் நாம் பின்பற்றி வருகின்றோம். அந்தப் பின்பற்றுதலில் எமக்குள்ள பிடிப்பை நீ உறுதிப்படுத்துவாயாக! அதை உலகறியச் செய்வாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! உள்ளக முரண்பாடுகள், பொறுப்புணர்ச்சியற்ற தலைமைகள், சதிகளை உணர முடியா அறியாமை, கல்வித் துறையில் ஈடுபாடற்ற தன்மை, பிற கலாசார நெருக்கடிகளுக்கு அஞ்சும் பலவீனம் என எம் சமூகம் எதிர்கொண்டுள்ள வீழ்ச்சிக் குறியீடுகளிலிருந்து முழுமையான விடுதலையை வழங்கும் ஆற்றல் உனக்கேயுள்ளது. ஆகவே, அத்தகையதொரு விடுதலையையும் ஈருலக வாழ்வியல் விமோசனத்தையும் பூரணமாக எமக்கு வழங்கியருள்வாயாக!'

'ஆமீன்!'

'யாஅல்லாஹ்! உனது தாழ்மைக்குரிய அடியார்களாகிய நாங்கள் கேட்ட பிரார்த்தனையை, உலகம் முழுவதும் வியாபித்துள்ள உனது அருளின் பொருட்டினால் ஏற்றுப் பயனளிப்பாயாக!'

'ஆமீன்!'

No comments:

Twitter Bird Gadget