பலஸ்தீனம்.
புயல் வீசி ஓய்ந்தாற் போல் மயான அமைதி காத்த அப்பள்ளத்தாக்குப் பிரதேசத்தில், கனத்த இதயங்களிலிருந்து மேலெழும் எரிமலை மூச்சுகளின் தகிப்பு மட்டும் காற்றில் கலந்து கரைந்து கொண்டிருந்த இராப்பொழுது.
சற்று முன்னர்தான் வந்து விழுந்த இஸ்ரேலிய ஷெல்லின் கொடூர வீரியத் தாக்குதலில், தூக்கியெறியப்பட்டும் உறுப்புகள் துண்டாடப்பட்டும், தகர்ந்த கட்டட இடிபாடுகளிடை சிதறிக் கிடந்த மனித உடல்கள், அடங்கியதும் அடங்காததுமான துடிப்புகளுடன் வானம் பார்த்துக் கிடந்தன.
இரத்த வீச்சம் எங்கும் நிறைந்து மரணவலியின் முனகல் ஒலிகள் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தன.
அடிவானத்திற்கு அப்பாலிருந்து எழுந்து, மேல்நோக்கி நகர்ந்து, பயனற்றுக் காய்ந்து கொண்டிருந்த முழுநிலவின் தண்ணொளி, எவ்வித பிரதிபலிப்புகளையும் அவர்களிலோ, துடிப்புகளடங்காத அவர்களது கொடூர வலியிலோ ஏற்படுத்தி விடவில்லை.
இடிபாடுகளுக்குள் சிக்காத வீடுகளிலொன்றில், மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த அஹ்மத், தாயாரினதும் சகோதரிகளினதும் கலகலப்பான வழியனுப்பும் ஏற்பாடுகளில் நெகிழ்ந்து, உள்ளம் குளிர்ந்து போயிருந்தான்.
விழாக்கோலம் பூணாத குறையாக கலகலப்புற்றிருந்த அவ்வீட்டைக் காணும் எவரும் அங்குள்ள எவருக்கோ திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாகவே திடமாக எண்ணம் கொள்வர். பதினாறு வயதும் பூர்த்தியாகாத இளமொட்டாக மலர்ந்திருந்த அவன், ஒரு புனிதப் பயணம் நோக்கிய புறப்படுதலுக்கான ஆயத்தத்திலிருந்தான்.
இஸ்ரேலிய மிருகங்களின் அழுக்குப் பாதகங்களிடை துவம்சமாகியழியும் தன் சமூகத்தின் விடிவை மீட்பதற்கான பிரயத்தனத்தில், உயிரைத் துச்சமெனக் கருதித் துணிந்த தன் நண்பர்களுடன் அவனும் இணைந்து கொண்டிருந்தான். மிக வியாபகமான நம்பிக்கையும் துணிவும் அவனில் பரவிக் கிடந்தன.
வாழ்வை நிர்மூலமாக்கியழிக்கும் ஒரு கொடூர எதிரியிடமிருந்து, தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முனைப்புடன் வீறு கொண்டெழும் எவருக்கும் அந்தத் துணிவும் உறுதியும் முழுக்கச் சாத்தியமே. இழப்புகளே வாழ்வாகி விட்ட குரூரச் சூழலின் உருவாக்கம், நிம்மதியையும் மகிழ்வையும் பல வருடங்களுக்கு முன்பே அவர்களிலிருந்து காணாமற் போகச் செய்து விட்டிருந்தது.
மரணத்தின் கோரிக்கையை, அல்லது பலவந்தக் கட்டளையைக் காவிக் கொண்டு வரும் துப்பாக்கி வேட்டுகளினதும், ஷெல் தாக்குதல்களினதும் ஆக்ரோஷ மிரட்டல்கள், அடிக்கடி அங்கு ஒலிப்பதும், அநாதைகளையும் விதவைகளையும் உருவாக்கிய களிப்பில் அகோரமாய்ச் சிரிப்பதும் அவர்களளவில் பழகிப்போன ஒன்றுதான்.
நீண்ட ஆயுளை ஆசை கொள்ள முடியாத, எதிர்கால நிம்மதியை கனவு காண முடியாத இறுக்கமான வாழ்க்கை தம்மீது திணிக்கப்பட்டு விட்ட நிலையில், அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்காக ஆயுதமேந்துவதைத் தவிர்ந்த வேறு வழியில்லை என்ற மிகச் சிரமமான யதார்த்தத்தை மனத்திண்மையுடன் அவர்கள் உவந்தேற்றுக் கொண்டிருந்தனர்.
ஆயினும், எதிரிகளின் நவீனரக ஆயுதங்களுக்கும் பீரங்கிகளுக்கும் ஈடு கொடுக்கக் கூடிய வலுவாற்றலை, நெஞ்சில் பரவிச் செறிந்துள்ள இறை விசுவாச உணர்வினூடாகவே, தம் கைகளில் இருப்புக் கொண்டுள்ள கற்களுக்கு அவர்கள் வழங்க முடிந்தது.
ஆதரவற்று அகதிகளாய் புகலிடம் தேடி வந்தோர்க்கு, வாழிடமளித்து வசதியும் செய்து கொடுத்த தம் மூதாதையரின் பரம்பரை இயல்பு மிக்க இரக்க குணமே இன்று தம் வாழ்வுக்கும் இருப்புக்குமான அச்சுறுத்தலையும் அலைக்கழிப்பையும் வழங்கியுள்ளதென்பதை அடிக்கடி அவர்கள் நினைத்துப் பார்ப்பதுண்டு. அதற்காக, தம் மூதாதையரின் செயலையும் சிந்தனையையும் குறை காணுமளவுக்கு சரித்திரமும் வரலாறும் தெரியாதவர்களல்ல, அவர்கள்.
இன்று, வாழ்தலுக்காக இரந்து நிற்கும் இந்தப் பிச்சைக்கார்கள், நாளை தம் இளைஞர்களின் சிரசரிந்து, குழந்தைகளின் எழுத்தழித்து, பெண்களின் கற்புருவி அழிச்சாட்டியம் புரிவார்கள் என்பதை அம்மூதாதையர் எதிர்பார்த்திருக்க நியாயமில்லைதான்.
ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்வுக்காகவும் மறுதலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவும் தம்முயிர் உட்பட அனைத்தையும் பணயம் வைத்துப் போராட வேண்டிய, ஒரு பாரிய போராட்ட சூழலும் நிர்ப்பந்தமும் தம்மீது திணிக்கப்பட்டுள்ளமைக்கு விடை சொல்லியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
எதிர்காலத்திற்கான நிகழ்காலத்தை அர்ப்பணிக்கும் தியாக உணர்வும் அவமானப்பட்டு ஒடுங்கி வாழ விரும்பாத தன்மான நெஞ்சுரமுமே அவர்களது முதன்மையான மூலதனங்கள்.
அறுகப்பட்ட கழுத்தும் தோண்டியெறியப்பட்ட கண்களும் அரிந்து துண்டாடப்பட்ட கைகால்களுமாய் எவ்வித பயனுமற்று வாழ்விலிருந்து உதிர்ந்து போகுமுன், இத்தனை உறுப்புகளையும் கொண்ட இறைவனருளிய தம்முடலால், எதிரிகளில் ஒருவனையேனும் ஒழித்துக் கட்டிவிட்டு மண்ணில் சரிவதையே தம் உயர்மிகு இலட்சியமென உறுதி கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இயல்பிலேயே இருந்து வருகின்றது. அந்த இயல்புதான் அவர்களது தனித்துவத்திற்கும் மதப்பற்றுக்கும் அடையாளமாகவும் விளங்குகின்றது.
எதிரிகளின் கைகளால் அறைபட்டு, கால்களால் உதைபட்டு, வெறியால் கற்பிழந்து, மல்லாந்து, சுருண்டு, துடிதுடித்து, உயிர்மூச்செறிந்து, மண்ணோடு மண்ணாகி விழும் தன் சகோதர-சகோதரிகளையும், தாய்-தந்தையரையும் பார்த்துப் பார்த்து மனதுக்குள் புழுங்கி வெடிக்கும் ஒரு வீரமிகு இளைஞனிடம், நிச்சயம் எதிர்பார்க்கப்பட வேண்டிய இயல்புதானது.
முகிலென உயர்ந்து, மழையெனப் பொழியும் இஸ்ரேலிய ஷெல்களினதும் துப்பாக்கிகளினதும் மூர்க்கத்தனமான வன்முறையில் அநாதரவாகத் தனித்து விடப்படும் தன்மானமுள்ள ஓர் இளைஞனிலும் சிறுவனிலும் அந்த இயல்பு எழாதிருப்பது எப்படிச் சாத்தியமாகும்!
வெடித்துப் பறக்கும் துப்பாக்கிக் குண்டுகளினதை விடவும் கடிய பலத்தையும் வேகத்தையும் அவர்களது உள்ளங்கைகளிலிருந்து பறக்கும் வலிய பாலைக் கற்களுக்கு வழங்குவதும் அந்த இயல்புதான்.
ஆனால், இரத்தக் காயங்களை, சிராய்ப்புகளை, மண்ட பிளந்த ருத்ர வலியை மட்டுமே ஏற்படுத்த முடியுமான அந்தக் கற்கள், எதிரிகளின் வன்முறைகளுக்கும் வக்கிரத்தனத்திற்கும் பதிலடி கொடுக்கப் போதுமானதல்ல என்ற உணர்வு ஏற்படுத்திய மாற்று வழிக்கான தேடலில், மிகுந்த பிரயாசையுடன் நடைமுறைக்கு வந்ததே அந்த உயிர்த்தியாகத் தாக்குதல்.
உரிமைகளை இலட்சியங் கொண்ட ஒரு போராட்டத்தின் உச்சகட்ட நிகழ்வாக அவர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய இத்தாக்குதலே இன்று அவர்களது ஜீவிதத்தை அர்த்தப்படுத்தும் ஒரே ஆதாரமாகத் திகழ்கின்றது.
வெளியிலிருந்தான பார்வையில், அது பயங்கரமும் பீதியும் கொண்ட ரௌத்ராகரச் செயலுருவாகத் தோற்றங் கொடுக்கின்ற போதிலும், அதில் ஈடுபடுவோரின் உள்ளங்களில் மட்டும் வசந்த காலத்துச் செழிய மரங்களின் பசுமைப் பொலிவினதான மென்னுணர்வையே அது நினைவுறுத்திக் கொண்டிருக்கும்.
தன் சமூகத்திற்காகவும், நாளைய சந்ததியினரின் சுதந்திர வாழ்வுக்காகவும் உயிரை ஆயுதமாக்கி உடலை வெடிகுண்டாக்கிப் போராடும், உயிரோசைகளுடனான அவ்விறுகிய போராட்டம், மிக மென்மையான அனுபவமாக அவர்களது உள்ளங்களில் பதிவு பெறும். கசப்பான இன்பமும், இனிப்பான வலியுமாக உள்ளுணர்வுகளை சிலிர்ப்புக் கொள்ளத் தூண்டி மனதை சாந்தப்படுத்த விழையும்.
வயிற்றிலும் தோளிலும் சுமந்து வளர்த்த தம் செல்வ மக்களை சமூகத்திற்காக அர்ப்பணிக்கும் ஒவ்வொரு தாயினது முகத்திலும் பாரிய சமூகப்பணி புரிந்ததான திருப்தியின் அழுத்தப் புன்னகை விரவிச் செறிந்து அவர்களது முகங்களுக்கு அழகூட்டும். சாசுவதமான தெய்வீக வீச்சத்தை அவர்களில் பிரதிபலிக்கச் செய்து மலைப்பை ஏற்படுத்தும்.
அஹ்மத், நெஞ்சு நிரம்பிய பாசப் பூரிப்புடன் தாயாரை நோக்கினான். அருகில் வந்தமர்ந்து அவனது தலையைக் கோதி நெற்றியில் அன்பு முத்தம் பதித்த தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகளிரண்டு வழிந்துருண்டு, அவனது கன்னங்களில் தெறித்து விழுந்தன.
இன்று எத்தனை தாய்மாரின் கண்கள், பிள்ளைகளின் இழப்பிற்காகவும், அதற்குக் காரணமாயமையும் அநீதியின் கொடூரம் மிகு வெறியாட்டங்களுக்காகவும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றன. எத்தனை இரவுகள், தூக்கம் தழுவாத விரக்தியின் முரட்டுக் கரப்பிடிக்குள்ளாகி கவலையில் தோய்ந்து கரைந்து கொண்டிருக்கின்றன. எத்தனை பகற்பொழுதுகள், வாழ்தலுக்கான ஜீவிதப் போராட்டத்தில் தலைகுனிந்து மறைந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றன.
இந்தக் கண்ணீருக்கும் கவலைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதான கடமைச் செயற்பாட்டில் தானும் இணைந்து பங்கேற்கப் போவதை நினைக்கையில் அஹ்மதின் உள்ளத்தினோரத்தில் சிறு ஆசுவாசமொன்று வெளிப்பட்டும் பரவிற்று.
இஸ்ரேலியத் துப்பாக்கிகளுக்குப் பலியாகிப் போன தந்தையும், அவர்களது இராணுவக் கூடாரங்களைத் தகர்த்தெறிந்து உயிர்த்தியாகமடைந்த மூத்த சகோதரனும் அவனது கண்களில் பரவி நெஞ்சுரத்தை அழுத்த முயன்றனர்.
முடிவு பற்றித் தெளிவாக அறிந்து கொண்ட தன் வாழ்வினோட்டத்தில், சுவாரஸ்யம் மிக்க மறுமை வாழ்வின் உயிர்ப்பது கண் சிமிட்டி மறைவதை அவன் மனதால் உணர்ந்து ஆன்ம திருப்தி கொண்டான்.
தனக்குப் பின்னால், தன் குடும்பத்தினர் ஆண் துணையற்று அல்லலுறுவார்களே என்ற அச்சம் அவனுக்கிருக்கவில்லை. தனக்குப் பின் தன் சகோதரிகளும் பிற்பாடு தாயும் ஒருவர் பின்னொருவராக உயிர்த்தியாகத் தாக்குதலில் ஈடுபடவிருப்பதை அவன் நன்கறிவான்.
சுகந்தமும் சௌந்தர்யமும் மிக்க இனிய வாழ்வில் தந்தையுடனும் சகோதரனுடனும் இணைந்து கொள்ளத் தூண்டும் ஆன்மீக நறுமணம் வீசும் மன உணர்வு, அவனுள் மன அமைதியுடனான சுகானுபவமாகப் பரவிற்று.
சகோதரிகளில் ஒருவர் முன்வந்து, அந்தத் தானியங்கி வெடிகுண்டை அவனது இடுப்பில் கட்டிவிட்டுக் கண்ணீர் சிந்திய போது, அந்தக் கண்ணீர்த் துளிகளைக் கைகளால் ஒற்றியெடுத்துத் தன் நெஞ்சில் அழுத்திக் கொண்டான் அஹ்மத்.
கண்ணீர்த் துளிகளும், அவற்றை உலர வைக்கும் நீண்ட பெருமூச்சுகளுமாய் வாழும் வாழ்க்கையை முடிவுறுத்தும் முயற்சியிலான தன் பங்களிப்பு இன்னும் சொற்ப நேரத்தில் துவங்கி, துவங்கிய நொடியிலேயே முற்றும் பெறப் போவதை நினைக்கையில், ஆனந்தக் கண்ணீரில் அவனது கண்கள் பளிச்சிட்டன.
சற்றுத் தொலைவில், இஸ்ரேலிய பீரங்கிகளின் வருகை ஓசை சரசரத்து ஒலித்தது.
வாழ்விடங்களைத் தகர்த்து, பல நூறு உயிர்களையும் காவு கொள்ளும் ஷெல் தாக்குதல்களும், அதன் பின் எஞ்சியிருப்பவற்றை நசுக்கியழிக்கும் பீரங்கிகளின் வருகையில் அவர்களுக்குப் பரிச்சயமான ஒன்றுதான்.
ஆனால், இம்முறை இந்தப் பீரங்கிகள் தம் கொடூரத்தனம் கக்கி யாரையும் அழிக்கப் போவதில்லை. வீறாப்புடன் திரும்பிச் சென்று தம்மிடத்தை அடையப் போவதுமில்லை. ஏனெனில், அஹ்மதின் உயிர்த்தியாகத் தாக்குதலில் இன்று துகள் துகளாகிச் சிதறப்போவது இந்தப் பீரங்கிகள்தான்.
அஹ்மத் எழுந்து நிமிர்ந்து நின்றான். எதிர்கால வெளிச்ச விடியல்களும் அவற்றின் பூரண ஒளியில் வாழ்விருள் அகன்ற தன் சமூகத்தினரின் திருப்திப் புன்னகையின் செழிப்புகளும் அவன் முன்னால் விஸ்தாரமாகப் பரந்து விரிந்து வெளிச்சம் பரப்பின.
அனைவரிடமும் முகமன் கூறி, நிறை கண்ணீர்த் துளிகளுடனான கண்களும் முழுக்கப் பரவிய மகிழ்ச்சிப் பூரிப்புடனான முகமுமாக விடை பெற்றான். அவனைக் கட்டியணைத்து உச்சிமோந்து விட்டு வாயிற் கதவருகில் வந்து நின்ற தாயை அன்பொழுக ஏறிட்டான். அவரது கையில் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருந்த புனித குர்ஆனை முத்தமிட்டு, அதன் கீழால் பணிந்து தலைசாய்த்து வெளியே வந்தான்.
'சுவர்க்கத்தில் சந்திப்போம்!'
மிக அழுத்தமாக அவனது உதடுகளைக் கிழித்து வெளிப்பட்ட உறுதியான வார்த்தையும் சற்றும் தளர்வுக்குட்படாத அவனது புயம் புடைத்த நடையும் அந்தத் தாயின் பாசமொழுகும் கண்களில் மிக அநாயாசமாக நின்றாடி நம்பிக்கையை விதைத்து, கண்ணீரையும் பெருக்கெடுக்கச் செய்திற்று.
அவன் நடந்தான்.
அவனை வயிற்றில் சுமந்த போதும் பெற்றெடுத்து சீராட்டி வளர்த்த போதும் எதிர்காலத்தை அவாவுற்று, கண்களிலும் நெஞ்சிலும் நிரப்பிக் கொண்ட அந்த அன்புத் தாயின் மென்மையான கனவுகளையெல்லாம் வாரிச் சுறுட்டியெடுத்துக் கொண்டே அவன் நடந்தான். அந்தக் கனவுகளும் தாய்மையின் எதிர்பார்ப்புகளும் இஸ்ரேலிய பீரங்கிகளின் இரும்புப் பாதங்களின் கீழ் நசிவுற்று மிகப் பரிதாபமாகக் கருகியழிந்து போகப் போவது அந்தத் தாய் நன்கறிந்ததுதான்.
கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தமர்ந்த போது, மிகச் செறிமானம் மிக்க பாரிய சுமையன்று திடீரென வந்து விழுந்து, அவரது நெஞ்சு முழுவதையும் அவஸ்தையாக அழுத்திற்று.
மகனுக்கு முன்னால் பலவந்தமாக இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்த வைராக்கிய நெஞ்சுறுதியனைத்தும் சட்டெனத் தளர்வுக்குட்பட்டதாகி, உடைந்து போய் கண்ணீர்க் கண்களுடன் விசும்பத் தொடங்கினார். இனி, தன் மகனைப் பார்க்கும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற யதார்த்தம் அவருள் விஸ்வரூபமாகக் கனத்தது. உள்ளம் முழுவதும் இரத்தங் கன்றியதான அசுரவலி.
எதிர்காலம் கேள்விக் குறியாகிப் போன மூன்று ஜீவன்கள், தேற்றுவாரற்ற அநாதைகளாகி, சிதிலமடைந்த அந்த நான்கு சுவர்களினுள் மடிந்தமர்ந்து தலை கவிழ்ந்திருந்தனர்.
தொலைவில், நன்கு பரிச்சயமான தானியங்கி வெடிகுண்டொன்று வெடித்துச் சிதறும் கடூர ஒலி திடும்மென ஒலித்து ஓய்ந்தது. இஸ்ரேலிய கொடிய பீரங்கிகளையும் மிருகங்களையும் தகர்த்தழித்து, உடல் சிதறி, தான் அன்புடன் ஊட்டி வளர்த்த தன் செல்வ மகன் இந்நேரம் உயிர் நீத்திருப்பான் என்பது அந்தத் தாயின் மனதில் இனிப்பான வலியாக அழுத்திற்று.
கருவறையில் சுமந்து பெற்ற அடிவயிறு சில்லிட, வழிந்த கண்ணீர்த் துளிகளிடை, அவரது உதடுகள் மெல்ல அசைந்தன.
'இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்'
No comments:
Post a Comment