Saturday, March 19, 2011

நான் மனம் அவள்

மனித உடலை விட மனம் எவ்வளவு வலிமையானது. உடலின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி உலகச் சர்வாதிகாரி போல் தன் ஆளுமையை வெளிப்படுத்தும் மனித மனத்துக்கு இங்கு வேறெதுவும் ஈடாக முடியுமா?

கண்ணீர் பெருக்கெடுக்கும், வலிமை சோரும், அந்தரத்தில் மிதக்கும், கிளுகிளுப்பில் இன்பமுறும், பகையில் தீக்கனலும், திருப்தியில் பூரிக்கும் உடலின் அனைத்து இயல்புணர்வுகளையும் உருவாக்கி வெளித் தள்ளும் உயர்ந்த சாதனமல்லவா இந்த மனம்!

பெண்ணின் வாளிப்பான அழகின் மீது உறுதி தளர்ந்து விடும் போது, அவளைக் காதலிக்கத் தூண்டுவது இந்த மனம்தான்.

வாழ்வுக்கும், மகிழ்வுக்குமான சிந்தனைகளிலிருந்து பலவந்தமாக தன்னை விடுவித்துக் கொண்டு, தேவையற்ற சிந்தனைகளிலான அற்பத் தித்திப்பை அவாவுற்று, இறுதியில் கசப்புகளையும், கவலைகளையும் முகிழ்த்து விட்டு எங்கோ ஓடி மறைந்து கொள்வதும் இந்த மனம்தான்.


அன்று, அவளைக் கண்டபோது, அவளது கொள்ளை அழகிலும், மௌனப் புன்னகையின் பலமான இழுப்பிலும் தன்னை இழந்து போனது இந்த மனம்தானே.

இன்று, அதே அழகை பிசாசுக்கும், மோகினிக்கும் சொந்தமானதெனக் கண்டு பிடித்து கர்ஜிக்கத் தூண்டுவதும் இந்த மனம்தானே.

எனக்கு சலிப்பு ஏற்பட்டது. புரிந்து கொள்ள முடியாத மனதின் இயல்புகளும், இலட்சியங்களும் சுமையாக செறிவுற்று அழுத்தின.

இங்கு அவள் என சுட்டுவது வேறு யாரையுமல்ல, என் மனைவியைத்தான். இரண்டு வருடங்களுக்கு முன், உலகின் அழகுக் கவர்ச்சிகளெல்லாம் மொத்தமாகக் கொண்டு இழைக்கப்பட்ட வசீகரமான வர்ணக் கலவையாக என் மனதில் தன்னை பதிய வைத்து, கனவுகளும், எதிர்பார்ப்பின் கொடுமுடியையும் உரசி நிற்கும் கற்பனைகளும் நிரம்பிய என் வாழ்வை தன்னுள் பலவந்தமாகப் பங்கு போட்டுக் கொண்டவள்தான் என் மனைவி.

தன் உடலைக் கிடத்தி, உலக சுகங்களின் முழுப் பரிமாணத்தையும் துகிலுரிந்து நர்த்தனமிட வைப்பதில் வெற்றி கண்ட இலட்சிய வீராங்கனை என்று அவளைக் கூறலாம்.

சந்தோஷத் தித்திப்பிலான திருப்தித் தூரிகையால் என் வாழ்வை வரைந்து காட்டியவள் அவள். சில சுமைகளும், அவற்றைச் சுமப்பதிலான சுகங்களும் அவள் மூலமாக நான் கற்றுக் கொண்ட பாடங்கள்தான்.

அப்போதெல்லாம், எங்கும் சூழ்ந்த அடரிருளின் ஆக்கிரமிப்பைத் துரத்தியடிக்கும் அழகுக் கதிர் கொண்ட ஒளிப்பிழம்பாக அவளைப் பளிச்சிட்டு அடையாளங் காட்டிய என் மனம், இன்று, பௌர்ணமி நிலவில் களங்கமேற்றும் அமாவாசையின் ஆழிழுக்காய் அவளைப் பழிப்புக்காட்ட வைப்பதேனோ!

இதென்ன ஆக்கினை! அவளை மறக்கவும் முடியாமல், கோபத்தை மறைக்கவும் முடியாமல்!

சமூகத்தின் சகல புறத்திலிருந்தெழும் எதிர்ப்புகளுக்கெல்லாம் முகங்கொடுத்து உறுதி பெற்ற என் மனம், தெளிந்த நீரோடையில் தெறித்து வீழும் வலுக்கல்லென நெஞ்சுக் கூட்டுக்குள் உணர்வுகளை உரசி, சலனத்தை ஏற்படுத்த விழையும் அவளது நினைவுகளுக்கு முன்னால் மட்டும் தோல்வியை ஒப்புக் கொள்ள முனைவதேனோ!

அந்தத் தோல்வியிலும் ஏதோ ஓர் அமானுஷ்யமான ஆனந்த சுகத்தின் கசிவு மனதை உசுப்புகிறதே, இதென்ன ஆச்சரியம்!

ஆழப்புரிந்துணர்வுக்குப் பின்னாலான வாழ்க்கையென்பதால், விட்டுக்கொடுப்பும், பொறுமையும் இருவராலும் பலமாக எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பில் திருப்தி கிடைக்காத தருணங்களில், விரக்தியின் சாயல் இழையோடும் பரிச்சயமான ஊடல், இருவர் மேலும் அழுத்தமாக கவிழ்ந்து, இரண்டு மூன்று நாட்களுக்கு சந்தோஷத்தைத் துன்புறுத்தித் தூரப்படுத்தி விடும். கனமான பாதங்களின் கடூர மிதித்தலுக்குள் அகப்பட்டுப் போன சிறு எறும்புக் குஞ்சுகளாய் மனம் நசிவு கண்டு துவழும்.

பாவம் இந்த மனம், எத்தனை நசிவுகளைத்தான் அது தாங்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றது! சந்தோஷமோ, கவலையோ எதுவாயினும், அவை பற்றிய உணர்வும், உணர்விலான தாக்கமும் இந்த மனதைத்தானே குறிவைக்கின்றன!

ஆனாலும், இதற்கு நன்றாக வேண்டும். முதற் பார்வையிலேயே என்னை விட்டு விட்டு அவளிடம் ஓடிச்சென்று, பஞ்சுப் பொதியென மென்மை படர்ந்த அவளது நெஞ்சுக் கூட்டுக்குள் அடைக்கலம் பெற்றுக் கொண்ட இந்த மனத்திற்கு இந்த வலியும், அவஸ்தையும் தேவைதான்.

இன்றோடு மூன்று நாட்கள் பூர்த்தியாகின்றன. இதுவும் ஒரு தவம் போலும்! அன்புப் பரிமாற்றத்தின் தொடர்விலான சோர்வை அகற்றிக் கொள்ளவும், பழையதாகி விட்ட உணர்வுகளை புதுப்பித்துக் கொள்ளவும் துணை நிற்கும் நடைமுறை வாழ்வியல் தவம். இடையறா வேலைப்பழுவில் இடுப்பொடிந்து வீழ்ந்து கிடக்கும் ஏழைக் குடியானவனுக்குக் கிடைக்கும் சற்று நேர ஓய்வின் திருப்தியான ஆறுதல்தான் இந்தத் தவத்தின் மோட்ச நிலை.

இதில் ஒரு முரணுண்மையும் உண்டு. நன்மையுண்டென நினைத்து, வருந்தி வரவழைக்கப்படுகையில், இதன் பரிசுத்த நிலை கெட்டுப்போய், பயன்பாடும் அற்றுப் போய் விடக்கூடும். எவ்வளவு அரிதான கண்டு பிடிப்பு இது!

சரிதான், வாய்க்கு வந்த படியெல்லாம் மனைவியைத் திட்டித் தீர்த்து விட்டு, இப்போது அதனை நியாயப்படுத்த முனைகின்றாயா! அண்ணாந்து காறி உமிழ்ந்து ஆகாயத்தை அழுக்காக்க நினைக்கும் உன்னை என்ன சொல்ல!

மனம் என்னை குத்திக் காட்டியது. இந்த மனமே இப்படித்தான். தேவையில்லாமல் சூடேற்றி உசுப்பி விட்டு, பின் அதனாலான செயலின் இயலாமை நிலைகளைச் சுட்டி நின்று எள்ளி நகையாடி கேலிச்சிரிப்பை உமிழும். இனிமேல் இச்செயலில் ஈடுபடக் கூடாது என்ற திடசங்கற்பத்தை எடுக்கச் செய்யும். பின், அதுவே அதில் தளர்வையும் ஏற்படுத்தி விடும்.

அடிக்கடி எங்களுக்குள் சிறு சண்டைகள் எழுவது வழக்கம். இந்தச் சண்டைகளுக்கு பெரிய காரணங்கள் எதுவும் அவசியப்படுவதில்லை. சோற்றில் உப்பில்லை, தொட்டியில் தண்ணீர் நிறைக்கவில்லை, வீடு திரும்புகையில் வாசலில் வந்து நின்று வரவேற்கவில்லை என சின்னச் சின்ன நிகழ்வுகளையே போதுமாக்கிக் கொள்வது இவற்றின் சிறப்பியல்பு.

வார்த்தைகள் தடிப்புப் பெறத் தொடங்குகையில், அதனோடு தனக்கோர் எல்லையை வரையறுத்துக் கொண்டு, அதன் பின்னாலான முழுச் சுதந்திரத்தையும் எனக்கு வழங்கி விட்டு மௌனமாகி விடுவது அவளின் இயல்பு.

என் கோபத்தை நான் முழுமையாகக் கொட்டித் தீர்த்து விடுவேன். அவளோ கண்ணீர்த் துளிகளில் தன் கோபத்தைக் கவிழ்த்து விடுவாள். மிச்சமுள்ளவற்றை இரவில் என் ஸ்பரிசிப்புகளுக்கான மறுப்பில் அள்ளியெறிவாள்.

இரண்டு நாட்கள் தாண்டி விட்டால் போதும். மனதின் இறுக்கம், அவிழ்த்து விடப்பட்ட அழகுக் கூந்தலாய் உறுதி தளர்ந்து விடும். அவளது அருகாமையிலும், அளவளாவுதலிலுமான ஏக்கப் பெருமூச்சின் உஷ்ணம் உடலை சுட்டெரிக்கும். எதிர்பார்ப்பின் ஆரத்தழுவலில் கண்களின் ஓரங்களில் நீர் கசியும்.

இது இருவருக்கும் ஏற்படக்கூடிய நிலைதானெனினும், இருவரிடையேயும் இரும்புத் திரையென விஸ்வரூபமெடுத்துள்ள இந்த ஊடலை முதலில் தகர்ப்பது யார் என்ற வினாவுடன், தத்தமது சுய கௌரவ விட்டுக் கொடுப்பிலான இயலாமைக் கர்வத்தின் அழுத்தம் இருவரையும் திணறச் செய்யும்.

சுதந்திரமான தென்றல் வீசும் அழகிய பொழிலினிடை, திடீரென உட்புகுந்து அக்கிரமம் புரியும் சீற்றம் மிக்க புயலின் தோற்றத்தை உருவகித்து நிற்கும் அந்தப் பொல்லாத ஊடல் மீது தீராத கோபம் எகிறும்.

என்ன செய்ய! இந்தப் பிரிவுகளும், அவஸ்தைகளும் இல்லாது வாழ வேண்டுமென்று எனக்கும் ஆசைதான். இந்தப் பாழாய்ப்போன மனம் விட வேண்டுமே.

உணவு நேரங்களில் சமைத்தவற்றையெல்லாம் மேசையில் பரப்பி வைத்து விட்டு ஒதுங்கிக் கொள்வது தொடக்கம், படுக்கையில் நீண்ட இடைவெளி விட்டு முதுகு காட்டி படுப்பது வரை, தன் போராட்டத்தை தொடர்ந்து முன் கொண்டு செல்லும் என் மனைவியின் வீறாப்பு எனக்குள் சிரிப்பை ஏற்படுத்தும். பாவம் அவள்!

மூன்றாவது நாளின் முடிவில், 'வந்து சாப்பிடுங்கோ' என்று கூறும் போது, அவளது மன உணர்வுகளின் எழுச்சியை படம் பிடித்துக்காட்ட விழையும் அந்தச் சின்ன இதழ்களின் துடிப்பு, அதைக் காணும் போதில் எனக்குள் பிரவகிக்கும் உணர்வு, இதை அனுபவிப்பதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அப்போது தோன்றும்.

பின், அன்றிரவு எலும்புகள் நொறுங்க இறுக்கிப் பிடித்து ஆரத்தழுவும் அவளது அழகுக் கலசங்களின் அழுத்தத்தில் மனது கிறங்கிப் போகும். இரவு, இன்பத்தின் அமுதசுரபியென முகத்தில் கவிழும். அவளது மூச்சுக்காற்றின் உஷ்ணம் என் நாசியூடாக உட்சென்று, இதயத்துள் இறங்கி, இன்ப அதிர்வை ஏற்படுத்தும். ஊர்ந்து, தேர்ந்து, உற்சாகம் கண்டு, வீறு கொண்டு, ஆர்த்தெழுந்து, மூர்க்கத்தனமாகி, இறுதியில் மூச்சிரைப்புடன் முழுமை பெறும் அந்தப் பணி.

முகத்தில் விரவும் திருப்தியின் செழுமையுடன், கண்களை மூடி அந்த இனிய இன்ப அனுபவத்தை, மனதுக்குள் இறக்கி, மகிழ்ச்சியை பத்திரப்படுத்துவோம்.

மூன்று நாள் ஏற்பட்டிருந்த கொலைப் பட்டினிக்கு போதும் போதும் என்ற தாராள விருந்து. என்னிடமிருந்து அவளுக்கும் அவளிடமிருந்து எனக்கும்.

அதற்கு இன்னும் நேரம் இருக்கிறதே!

கால ஓட்டத்தின் தாமத நகர்வின் மீது சலிப்புத் தோன்றியது.

இது தேவைதானா?

காரணமே இல்லாமல் சண்டை செய்வதும், பின் பேசாதிருந்து அவஸ்தையுறுவதும் எதற்காக? உனக்காக அவளும், அவளுக்காக நீயும் என்றாகி விட்ட பிறகு, சுயகௌரவ வீறாப்புக்கள் ஏன்? புரிதலை விட்டு, முரண்டு பிடித்து, வெளிப்பட்டு நிற்கும் இந்த செயற்கைத்தனமான வாழ்க்கை முறை சரிதானா? 

மனதின் கேள்விகளுக்கு என்னால் விடை சொல்லமுடியவில்லை. அந்தக் கேள்விகளில் கனன்று கொண்டிருந்த தகிப்பு என்னை வதைத்தது. ஊடலும், கூடலும் குடும்ப வாழ்க்கையில் சகஜமே என்ற ஆறுதலான என் நியாயப்படுத்தல்களை மனம் ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லை.

என்னை விட்டு விட்டு, என் மனைவிக்கு வக்காலத்து வாங்க முனையும் இந்த மனதின் மீது எனக்கு ஆச்சரியமும், கோபமும் ஒருசேரத் தோன்றின.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது! ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. நல்லவற்றைக் காணும் போது அவற்றைத் தட்டிக் கொடுத்து வரவேற்பதும், தீயவற்றைக் காணும் போது, அவற்றைக் கண்டித்து வெறுத்தொதுக்குவதுமே அதன் இயல்பு. அது மனசாட்சியாகவும் இருக்கலாம்.

அப்படியானால், நான் செய்வது தவறா? அதனால்தான் முரண்பாடான சிந்தனைகளுக்கும், பதிலளிக்க முடியா உஷ்ணக் கேள்விகளுக்குமிடையே சிக்குண்டு தவிக்கிறேனா?

இதென்ன அநியாயம்! என் மனைவியின் மீது கோபம் கொள்வதற்குமா எனக்கு உரிமையில்லை? சராசரி வாழ்வு நிலையின் சுதந்திரத்தையும் மறுக்குமானால், இந்தத் திருமணத்தின் மூலமான பயன்பாடு என்னவாக இருக்க முடியும்?

முட்டாள்! சமூக வாழ்வின் பிரதான கடமையென்றாகிவிட்ட திருமணத்தை உன் குறுகிய சிந்தனைக்குள் சிறைப்படுத்தி வைத்துக் கொள்ள முனைகின்றாயா? விட்டுக் கொடுப்பிலும், புரிந்துணர்விலும் அகலமுறச் செய்யவேண்டியதான அதன் இலட்சியங்களை வெறுப்பிலும், ஊடல் என்ற போர்வையிலான விரோதத்திலும் குறுகியதாக்கி விட முனைவதில் என்ன நியாயத்தையும், பயன்பாட்டையும் கண்டு விட்டாய்?

தலையை பிடித்துக் கொண்டே தரையில் அமர்ந்தேன். என்றுமில்லாதவாறு சிந்தனைகளை அரித்து இம்சைப்படுத்தும் மனதின் குரூரச் செயல் எரிச்சலை ஏற்படுத்திற்று.

பக்கத்து அறையிலிருந்து கசிந்து வந்த விசும்பல் சத்தம் மனதை சலனப்படுத்தியது. அவள்தான்! கஷ்டங்களோ, கவலைகளோ வரும் போது, அவற்றை எதிர்கொள்ள முடியாத தன் ஆற்றாமையை கண்ணீர்த் துளிகளாகவும், சிணுங்கல்களாகவும் கொட்டி விட்டு ஒடுங்கிப் போய் விடுவது என் மனைவியிடம் எனக்குப் பிடித்தமான இயல்பு.

பெண்ணென்றால், ஆணுக்கு அடங்கிப் போய்விடுபவளாக, சின்ன விடயங்களிலும் சிணுங்கிக் கண்ணீர் விடும் மென்னுள்ளம் கொண்டவளாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

அந்த எதிர்பார்ப்பின் முறையற்ற ஆணாதிக்க நிலை அடிக்கடி என் நெஞ்சை விரல் நீட்டி அழுத்துகின்ற போதிலும், இந்த மனமோ பெரும்பாலும் அதனை இலட்சியம் செய்வதேயில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த மனம்தானே!

எதிரே தெரிந்த முருங்கை மரம், தென்றலின் மிதமான தழுவலில், சூரியன் மினுமினுக்கும் தன் பச்சை நிற சிறு இலைகளுடன், கிளைகளை அசைத்து காற்றில் தளர்ந்து ஆடியது. உச்சிக் கொப்பில், மிக நெருக்கமாக அமர்ந்திருந்த ஜோடிப் பறவைகள் இரண்டு, முருங்கையின் திடீர் அசைவில் துணுக்குற்று விர்ரென மேலுயர்ந்து எங்கோ பறந்து போயின.

இயற்கையை மறந்த இளமைப் பூரிப்பிலான தித்திப்பில், மனதுடலிணைத்து செழுமையுற்ற காதலின் நிறைவில் லயித்திருந்த அந்தப் பறவைகளை உசுப்பி விட்டுத் துரத்தியடித்த காற்றின் செயல் எனக்கு நியாயமாகப் படவில்லை. இரு மனங்களின் இணைவுச் சுகத்தை பலவந்தமாகப் பறித்தெடுக்கும் கொடூர அரக்கனின் அச்சுறுத்தும் தோற்றத்தை அது நினைவுறுத்திற்று.

இந்தக் காற்றுக்கும், மனைவியுடனான என் ஊடலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக மனது உணர்த்தியது. காற்று, அந்தப் பறவைகளின் சந்தோஷ நிலையை தகர்த்தது எனில், இந்த ஊடல் இருவரது வாழ்வின் மகிழ்வை நிர்மூலமாக்கி விடக்கூடியதல்லவா!

காற்றின் மீது எரிச்சலுறுவது நியாயமாயின், இந்த ஊடலும் அத்தகையதுதானே. பின், அதனை ஏன் கட்டாயமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்! இந்த முரண்நிலையை எந்த வகையில் நியாயப் படுத்த முடியும்!

அறையுள்ளிருந்து எழுந்து, தளர்ந்த நடையுடன் வெளியே வரும் என் மனைவியைப் பார்த்தேன். அவளது சிவந்த கண்களும், உப்பிய கன்னமும் அவள் மீதான என் கோபத்தையிட்டு, என் மேல் நானே சினம் கொள்ளத் தூண்டிற்று.

நேற்று முன்தின நிகழ்வில் தடிப்புப் பெற்ற என் வார்த்தைப் பிரயோகங்களின் கொடூரத்தன்மையை அவளது மௌன அழுகையில் உணர்ந்தேன்.

அவளது மென்மையும், பலவீனமும் சாட்டையாக உருக்கொண்டு என் கன்னங்களிலும், முதுகிலும் இரத்தக் கோடிழுத்தன. அவஸ்தையில் உடல் சிலிர்த்தது.

இதுவே வெளிப்படையாகத் தெரிந்திருக்குமானால், ஓடிவந்து என்னை விலக்கி விட்டு, அந்த இரத்தக் கோடுகளையெல்லாம், மெல்லிய தன் உடலின் மேல் பெற்றுத் திருப்தி கொண்டிருப்பாள் என் மனைவி.

இத்தகைய அன்பின் உயிருருவான அவளை, ஊடல் என்ற பெயரால் வதைக்க முனையும் என் செயலின் மீது இப்போது எனக்கே வெட்கமேற்பட்டது.

இந்த மனம் பலே கில்லாடிதான். கடைசியில் என்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி வைத்து விட்டதே!

ஏதோ ஓர் அமானுஷ்ய சுகந்த நிலை என்னுள் சிலிர்ப்பை ஏற்படுத்திற்று. விம்மிப் புடைத்த நெஞ்சுக்குள் மனைவியின் அழகான உருவம் பளிச்சிட்டு நின்றது. முதன் முதலில் கண்டபோது, கண்களை மயக்கி மனதைப் பறித்த அதே அழகு!

நிமிர்ந்து பார்த்து விட்டு, பின் தலை குனிந்து அப்பால் செல்லும் அவளின் மீது என் அன்பும் இரக்கமும் பரிதாப உருவெடுத்துக் கவிழ்ந்தன.

அந்தப் பார்வையின் வனப்பும், அதில் புதையுண்டிருந்த எதிர்பார்ப்பின் ஜொலிப்பும் மிக அநாயாசமாக என் கண்களைக் கவர்ந்திழுத்தன. போதையை உட்கொண்டவனின் கிறங்கிய கண்களாய் நினைவுகள் தள்ளாடின.

வெற்றிப் பெருமிதத்தில் புளகாங்கிதமுற்ற மனதின் துடிப்பு இப்போது சுகமாக இருந்தது. அர்த்தமற்ற பிதற்றல்களாக எரிச்சலூட்டிய அதன் உரசல்களில் செறிவான உள்ளர்த்தங்கள் வெளிப்பட்டு கண்களை சிமிட்டின.

போதும், போதும்! இந்த தேவையற்ற ஊடலுக்கு இன்றோடு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடு. வாழ்வின் சுகத்தையும், உன் சுயத்தையும் யதார்த்தத்தில் மட்டும் தேடப் பழகிக்கொள். சுயகௌரவம் பேணுவதாக நினைத்து உன் சிந்தனைகளையும், சந்தோஷங்களையும் சிறைப்படுத்தாதே.  வாழ்வின் நிலையாமைகளில் சிக்குண்டு, உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளும் அறியாமை நிலையிலிருந்து முற்றாக விடுபட்டு விடு.

மனதின் ஆணை இனித்தது. முன் வாசலுக்கு வந்து, படிக்கட்டுகளில் அமர்ந்து, மாலை இருள் கௌவும் அந்த அழகிய செவ்வானை வெறித்துக் கொண்டிருக்கும் என் மனைவியை நோக்கி நடக்கவாரம்பித்தேன்.

இதில் தோற்கப் போவது நானா, மனமா, அவளா?

விடை தெரியாத வினாவின் வலிய கரம், பிடரியில் பிடித்து அவளின் பக்கம் என்னை உந்தித் தள்ளியது.

No comments:

Twitter Bird Gadget