Monday, March 28, 2011

அறு

மேலேறிக் கொழுத்திய சூரியனின் கடுமுஷ்ணத்தைக் காவிக் கொண்டு செல்லும் பகற் காற்றின் வலிய விசுறல் எங்கும் நிறைந்திருந்தது. வானத்தின் வெளிச்சப் படியலை பிரதிபலித்துப் பழிப்புக் காட்டியவாறு மல்லாந்து படுத்துக் கிடந்தது பூமி. காய்ந்துலர்ந்த சருமத்தின் சொரசொரப்பாய் வரட்சியுற்றிருந்த புகழ்மிகு அறபா மலை, தன்னினத்திற்கேயுரிய சர்வாங்கமான கம்பீரத்துடன் நிமிர்ந்து நின்று உலகை வெறித்தது.

தொலைவில், பாலை மணற்பரப்பில் தன் பலத்தைப் பிரயோகிக்கும் புயலின் சீற்றம். அழகிய பறவைகளினதோ, தென்றல் தழுவும் தாவரங்களினதோ சிருங்கார ஓசைகளற்று, அந்த வரண்ட பிரதேசம் நிசப்தத்துள் புதையுண்டு கிடந்தது.

சூரியனின் செங்கதிர்கள், ஆங்காங்கே சிதறிக்கிடந்த சிறு கற்களின் முதுகின் மீதேறி பளிச்சிட்டுப் பிரகாசித்து, இயற்கையின் அழகுணர்த்தலில் முனைப்புக் காட்ட முயன்று கொண்டிருந்தன.

உச்சியை நோக்காகக் கொண்டதான வாழ்வினிடை, எதிர்கொள்ளும் சவால்களின் சமாளிப்பில், திடமனதுடனான இருப்பின் அவசியத்தை உணர்த்தி நிற்கும் ஆழ்ந்த மௌனப் பிரசாரம் அம்மலையின் தோற்ற வெளிப்பாட்டில் இறுக்கமுற்றுத் தெரிந்தது.


பின்னாளில், ஒருகலாசாரத்தின் அடையாளமாகப் பரிணாமமுறும் தன் புகழ் நிலையை சற்றும் உணராது மௌனத்தின் ஏகாந்தத்தில் கிறங்கிக் கிடந்த அதன் திண்மையான உடற் பரப்பில் கால்கள் அழுந்த பக்குவமாக நடந்து கொண்டிருந்தார் இஸ்மாயில். தெளிந்த நீரோடையாய் உள்ளுணர்வுகள் அமைதியுற்றிருந்த ஓர் அமானுஷ்யத்தின் ஆனந்தக் கமறல் அவரது நெஞ்சுக்குள் நிரம்பியிருந்தது.

தலைக்கு மேல் சூரியனின் உஷ்ணமும், பாதங்களின் கீழ் மலைப் பாறைகளின் உறை தகிப்புமான அந்த இறுகிய பயணம், அவரது நரம்புகளை முறுக்கி, தசைகளை வதைத்துக் கொண்டிருந்தது.

ஆயினும், சாமரம் வீசும் செழிய மரங்களின் பசுமைத் தோற்றப் பொலிவினிடை நடந்து செல்லும் சுகானுபவத்தின் செழுமையுற்ற வாளிப்பு தன் மனதுக்குள் மின்னலிடுவதை அவர் ஆச்சரியத்துடன் உணர்ந்தார்.

அன்பையும் மீறிய அழுத்தத்துடன் தன் கைகளை இறுகப் பற்றியிருந்த தந்தையின் வேக நடைக்கு ஈடு கொடுப்பது அவருக்கு சிரமமாக இருக்கவில்லை. ஓர் உயர்ந்த இலட்சியத்தையும், அதன் கடமையினையும் நிறைவேற்றுவதில் உறவுத் தொடர்புகளின் அன்பழுத்தத்திற்கும் அப்பால் நின்று தந்தை காட்டிய தீவிரமும், ஈடுபாடும் அவருக்கு மலைப்பை ஏற்படுத்திற்று. தாட்சண்யம் நிறைந்த ஓர் ஆழமான அர்த்தப் பார்வையை தந்தை மீது வீசினார்.

இஸ்மாயிலின் எண்ணவோட்டங்கள் தனது இரட்சகனான இறைவனின் படைப்புருவாக்கம் பற்றி சுற்றிச் சுழன்றன. சிறகு விரித்த மனவிசாரத்தில் ஆன்ம திருப்தியும், நெஞ்சுறுதியும் இணைந்து அழுத்தின.

இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்தான். அதில் தன் பிரதிநிதியாக மனிதனை உருவாக்கினான். அவனுக்குத் தேவையான வாழ்வியல் தேவைகள் அனைத்தையும் நிவர்த்தித்தான். சமூகத் தொடர்புகளின் போது இயல்பு நிலை பாதிக்கப்பட்டு விடாதிருப்பதற்காக சட்டதிட்டங்களையும் அமைத்துக் கொடுத்தான்.

ஆயினும், இறைவனின் பிரதிநிதி என்ற மிக உயர்ந்த அந்தஸ்தில் அமர்த்தப்பட்டுள்ள மனிதன், இறைவனுக்கே மாறு செய்யத் துணியும் முரண்பாடான நிலையை சிந்தித்துப் பார்க்கும் போது ஜீரணித்து கொள்ள முடியாமல் சோர்ந்து விடுவது இஸ்மாயிலின் இயல்பு.

மனிதனுக்கு ஏற்படுகின்ற உலகியல் தேவைகளும் ஆசைகளும் அவனது படைப்புருவாக்கத்தின் உயரிலட்சியத்தையே மறக்கச் செய்து விடுகின்ற இவ் அபாயகரமான நிலையை மாற்றியமைப்பதற்கான வழி என்னவென்று அவரது உள்ளத்தில் தேடல் உருவானது.

தான் செய்கின்ற மிகத் துணிகரமான ஒரு செயல், முழு வியாபகமெடுத்து, மனிதர்களது உள்ளங்களில் உறைந்துள்ள அழுக்குகளையெல்லாம் களைந்தகற்ற வேண்டும் என்று அவரது பிஞ்சு மனம் அவாவுற்றது.

அதனால்தான் தன் தந்தையினால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தும் இறைகட்டளையை பக்குவத்துடனும் பரவசத்துடனும் ஏற்றுக் கொள்வது அவருக்கு சிரமமற்று சாத்தியமாயிற்று.

இறைவனுக்காக பொருளாதாரத்தை இழக்கலாம்; எதிர்காலக் கனவுகளை இழக்கலாம்; ஏகாந்தமான வாழ்வின் மூலக்கூறுகளை இழக்கலாம்; தன் உயிரையும் கூட இழக்கலாம். ஆனால் தன் பரம்பரையின் குலக் கொழுந்தாக தான் பெற்றெடுத்த தன் செல்வக் குழந்தையை இழக்க யாரும் முன் வருவரோ!

அதுவும் தன் கைகளினாலேயே குழந்தையின் கழுத்தை அறுத்து, பீய்ச்சியடிக்கும் உதிரத்துளிகளிடை துடிதுடித்துப் பிராணனை விடும் கர்னகொடூரக் காட்சியுடன் தன் செல்வ மகனை இழக்க யார் முன்வருவார்!

இறைநம்பிக்கையின் அடித்தளத்தையே உசுப்பி விடக்கூடிய மிகப் பாரிய இந்த சோதனையையும் மனத் திண்மையுடன் முகங்கொள்ளத் துணிந்து விட்ட தன் தந்தையை நினைக்கையில் இஸ்மாயிலுக்கு பெருமிதம் ஏற்பட்டது. புளகாங்கிதமுற்று உள்ளம் குறுகுறுப்பில் மலர்ந்திற்று.

தன்னை அறுப்பதை அங்கீகரித்துத் தயாரான தன் தந்தையின் தியாகத்தை விட அறுக்கப்படுவதை ஏற்றுக் கொண்டதான தன் தியாகம் ஒன்றும் பெரிதல்ல என்பதை நினைக்கையில், தந்தையின் தியாக உணர்வு ஏற்படுத்திய சந்தோஷச் சலனம், அவரது இதயத்தின் ஆழம் வரை சென்று ஆன்ம சுகத்தை அழுத்திக் காட்டியது.

தொலைந்து விட்ட வாழ்வினது தேடலின் மீது வெற்றி கண்டு மலரும் மனிதாத்மாக்களின் மகிழ்ச்சிப் பூரிப்பு அவருள் செறிவுற்றுப் படர்ந்தது.

செழிப்பான இளமைப் பருவத்தின் கட்டுக்கோப்பிலிருந்து விடுபடாது மலர்வுற்றிருந்த இஸ்மாயில், வயதுக்கு மீறிய தன் பக்குவத்தையும், சிந்தனையையும் நினைத்து இறைவனுக்கு நன்றி கூறினார். தன் சுயநிலை பற்றியதான சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டபோது, அவருள் ஆச்சரியம் கிளர்ந்தது.

'இன்னும் சில நாழிகையில், கழுத்து அறுபட்ட நிலையில் துடிதுடித்து உயிரிழக்கப்போகும் என் வாழ்வின் இறுதி மூச்சுக்கள் பற்றி தெளிவாக அறிந்த பின்னும் எப்படி என்னால் சலனமற்று இருக்க முடிகின்றது. இதுதான் இறைவிசுவாசம் என்பதா!'

மனதுக்குள் இறைவனைப் புகழ்ந்து கொண்டே நடக்க ஆரம்பித்த இஸ்மாயிலின் சிந்தனையில் அவரது தாயாரின் நினைவுகள் சட்டென தொற்றிக் கொண்டன. கனத்த சோகத்தை தொனித்துப் பிரவகிக்கும் கண்ணீர்த் துளிகளிடை, பதறும் நெஞ்சை அழுத்தி ஆறுதல்படுத்திக் கொண்டு, வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த தாயின் சோக முகம், அவரது மனக் கண்களில் நிழலாடிற்று. முகத்தில் பரிதாபம் காட்டினார்.

இயல்பிலேயே இளகிய மனம் கொண்ட பெண்களிடம் இத்தகைய ஒரு பாரிய சோதனைக்கான திடமான எதிர்கொள்ளலை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்.

என்றாலும், இறைவனின் நோக்கில் தூய்மைப்படுத்தலென்ற செயற்பாங்கு இனவேறுபாடுகளை மட்டுமன்றி, பால் வேறுபாடுகளையும் கூட புறக்கணித்து விடும் குணவியல்பு கொண்டதாகத்தானே இருக்கிறது.

தாயன்பு பற்றியதான சிந்தனையில், தளர்வுக்குட்பட முனையும் தன் மனோவுறுதியை உணர்ந்து எச்சரிக்கையுற்ற இஸ்மாயில், கவனத்தை வேறு பக்கங்களில் திருப்ப முயன்றார். பின்னால் திரும்பி, தன்னை ஒரு முறை ஆழமாகப் பார்த்து விட்டு நடையைத் தொடரும் தன் தந்தையின் மனப் போராட்டத்தை அவரால் சிறிதளவேனும் உணர முடிந்தது. இருவரது முடிவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விடாதிருப்பதற்காக இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டார்.

மலையுச்சி அண்மித்துக் கொண்டிருந்தது. ஏற்றப் பாதையிலான தொடர் நடையில் கால்கள் தளர்வுற்றன. நாசித் துவாரங்களினூடு மூச்சுக்காற்று வேகமாக எகிறத் தொடங்கிற்று.

சொற்ப வருடங்களிலான பிஞ்சுப் பருவத்தின் வாழ்வு நிலையோடு, தனது பிரதிநிதித்துவப் படைப்புருவாக்கம் முற்றுப் பெறப் போவதை நினைக்கையில், நெஞ்சுக் கூட்டுக்குள் மெல்லெனப் படர்ந்த தயக்கம், அவரது உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்திற்று. மனதைத் திடப்படுத்திக் கொண்டு மேல் நோக்கி நகர்ந்தார்.

உள்ளத்தைக் குடையும் முரண்பாடான சிந்தனைகள் கோவையாகப் படர்ந்து அவரை அச்சுறுத்தத் தொடங்கின.

உலக வாழ்விலே சமூகத்துடனான தொடர்பும் இணைப்பும் பிரதானமானது. வாழ்வின் மூலக்கூறுகளினது போதிய அடைவை மனிதன் சமூகத்திடமிருந்தே பெறவேண்டியுள்ளது.

மனிதனுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சமூக வாழ்வின் பிரதான மூலமான குடும்பத்தில் தாய்மைக்கு இணை கிடையாது. உடலுக்குள் உடல் வளர்த்து, உலகுக்கு வளமளிக்கும் தாயின் மேத்திய நிலையே சமூகவியலின் செழுமையுற்ற படிமுறை வளர்ச்சிக்கு பிரதான களமாகும்.

அதனால்தான் பிறரெவரையும் விட தாயுடனேயே அதிக நெருக்கமும் தொடர்பும் வைத்துக் கொள்வதன்பால் இயல்பிலேயே பிள்ளைகள் தூண்டப்படுகின்றன. அத்தகைய, அன்பின் முழு அடையாளமாகத் திகழும் தாயை கண்ணீரில் மூழ்கி அழவைத்து விட்டு, பெற்ற பிள்ளையை அறுத்துப் பலியிடுவதனால், சமூகமோ உலகமோ அடைந்து கொள்ளக் கூடிய நன்மை என்ன?

யதார்த்த ரீதியான கேள்வி திடீரென அவருள் கிளர்ந்தெழுந்த சற்றைக்கெல்லாம், மனதுக்குள் ஆழ்ந்த அச்ச நிலை அழுத்தமாக அப்பிக் கொண்டது. மனதின் ஊசலாட்டம் பயங்கரமாக நர்த்தனமிடலாயிற்று.

'இஸ்மாயிலே! உன் மழலை மொழிகளிலும் உன் மீதான அன்புப் பிரவாகத்திலும் நெக்குருகி, உன்னை வாரியெடுத்து உச்சிமோரும் உன் தாயின் ஆழ்ந்த அன்பை நீ இழந்து விடப்போகின்றாயா!

'பிஞ்சுப் பருவத்திலே, கவலைகளற்று துள்ளி மகிழ்ந்து உலகை ரசிக்கும் வாழ்வின் முக்கிய கட்டத்தை பரிதாபமாகத் தொலைத்து விடப்போகின்றாயா? இப்போதுதான் எழுந்து நடமாடத் தொடங்கியுள்ள உன் சின்னஞ்சிறு உயிரைக் கொன்றொழித்து விடுவதன் மூலமாக இறைவனுக்கு என்ன நன்மைதான் கிடைத்து விடப்போகின்றது.

'ஒரு மொட்டின் கனவுகளைக் கசக்கியெறியும் கொடுங்கரத்தின் கோரச்செயல் இதுவென்பது உனக்குப் புரியவில்லையா?

'உன் வாழ்வை நிர்மூலமாக்கி, உன் சுவடுகளை முற்றாகத் துடைத்தழித்து விடும் ஒரு மாபாதகச் செயலுக்கு எப்படி உன்னால் உடன்பட முடிகிறது?

'இதுதான் இறைவிசுவாசம் போலும் என்ற உன் உளத்தீர்மானம் எத்துணை அறிவீனமானது?

'இஸ்மாயிலே! நில்; உன்னையும் உன் எதிர்கால வாழ்வையும் காப்பாற்றிக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பமே இப்போது உனக்கிருக்கிறது. அதனை நன்கு பயன்படுத்திக் கொள்!'

இஸ்மாயில் நின்று நிதானிக்கவில்லை. அவரது மூளை நரம்புகள் வீறு கொண்டு புடைத்தெழுந்தன. வசீகரமான ஒரு வெளித்தோற்றக் காட்சியின் பால் ஈர்க்கப்பட்டு பின் ஏமாற்றமுற்றதான மன உளைச்சலில் உள்ளம் அந்தரிக்க உடலுலர்ந்து போனார்.

'பிறந்தவுடனேயே செயற்கையாக இறந்து போய்விட வேண்டுமென்றால் இந்தப் பிறப்பிற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?'

ஆயினும், இவ் எதிர்மறையான தூண்டுதலை எதிர்த்துப் புறக்கணிக்கும் அழுத்தமான உள்ளுணர்வின் முணுமுணுப்பையும் தன்னுள்ளே அவரால் உணர முடிந்தது. பகுத்தறிவு, தர்க்கவியல் என்ற போர்வைகளில் உலவும் சமூகக் களைகளையும் அழுக்குகளையும் உள்வாங்கிக் கொள்ளும் அபாயகரச் செயலுக்கான எச்சரிக்கையை அந்த உணர்வுகள் அவருக்கு வழங்கின.

உலக வாழ்க்கையென்பதும், அதில் செறிந்துள்ள இன்பங்களென்பதும் மனிதர்களுக்கு இறைவனால் கனிந்து வழங்கப்பட்ட தற்காலிக சுகங்களாயிருக்கையில், அவற்றின் மீதான இழப்பின் மூலம் இறையன்பைப் பெற்றுக் கொள்வதில் மனிதர்கள் தயக்கம் காண்பிப்பது எந்த வகையில் நியாயமாகும்!

யதார்த்தம் என பாவ்லாக் காட்டிக் கொண்டு, தன் ஆன்ம பலத்தை ஆட்டங்காணச் செய்ய முனையும் முரண்பாடான சிந்தனைப் போக்குகளையெல்லாம் இஸ்மாயில் முற்றாக நிராகரித்தார்.

படைத்தவனின் எதிர்பார்ப்புகளையும் கட்டளைகளையும் புறக்கணித்து விட்டு, படைப்புகளின் மூலமாக சுகம் காண முயலும் நிலையை துரோகத் தனத்தின் உச்ச கட்ட நிகழ்வாகவே அவரால் உணர முடிந்தது.

மனிதன்- சுயநலம், துரோகம் முதலான பண்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான முனைப்பில் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதை நினைத்து உள்ளத்தில் கவலையுற்றுப் புழுங்கினார் இஸ்மாயில். தியாகம், விட்டுக் கொடுப்பு போன்ற உயர் பண்புகளிலான மனிதனின் புறக்கணிப்பு அவருள் வலியை ஏற்படுத்திற்று.

ஆன்மீக விரோத சக்திகளின் மோசமான ஆசையூட்டல்களில் மனிதன் மிகப் பாதகமான நிலைக்கு இட்டுச் செல்லப்படுவதை இஸ்மாயில் தன் மனதுக்குள் வன்மையாகக் கண்டித்தார்.

இறைவனின் வளங்களை அனுபவித்துக் கொண்டே அவனுக்கு மாறிழைக்கத் துணியும் மனிதனின் நன்றி கெட்ட உணர்வு அவருக்குள் சலனத்தைக் கொடுத்திற்று..

இந்த இழிவான உணர்வுகளின் பாலான தூண்டுதலுக்கு காரணமாய் அமையும் தீய சக்திகளின் மேல் தீராத எரிச்சலும் சீற்றமும் அவருக்கேற்பட்டன. தன்னையும் வெற்றிகொள்ளப் பிரயத்தனங்காட்டும் அந்த தீய சக்திகளை அவர் கர்னகடூரமாக முறைத்தார்.

கைகளை வீசி தூரப்படுத்த முயன்றார். கற்களைப் பொறுக்கியெடுத்து, ஆவேசங் கொண்ட மட்டும் எறிந்து அவற்றைத் துரத்திவிடத் துடித்தார்.

சரியான புரிதலும், சந்தர்ப்பத்திற்கேற்ற துணிகரச் செயற்பாடும் தளம்பலுற்றிருந்த அவரது உள்ளத்தில் தெளிவை ஏற்படுத்தின. ஆன்மீக பலம் இருக்கும் வரையில், அதன் எதிர்ச் சக்திகளின் வெற்றியென்பது, சிறிதும் சாத்தியமற்றதே என்ற உண்மையின் வெளிப்பாட்டில், அவரது உள்ளத்தின் ஆழத்திலிருந்து திருப்தியும் மகிழ்வும் பிரவகித்து எழுந்தன. அவற்றின் இதமான வருடல் மனதுக்குள் நிம்மதியையும் நிறைவையும் ஏற்படுத்திற்று.

சுதந்திரக் காற்றின் சுகமான சுவாசிப்பின் தித்திப்பை அவரது உள்ளுணர்வுகள் தெளிவுற உணர்ந்து லயிப்புக் கொண்டன.

'தியாகம் என்ற மிக உயர்ந்த குணவியல்பினுள், வாழ்வின் அனைத்து நற்கருமங்களும் உள்ளடக்கப்பட்டு விடுவதை உணர்ந்தார் இஸ்மாயில். மனிதன், இதனை நன்குணர்ந்து தன் வாழ்வில் பிரயோகிக்க முனையும் செயற்பாட்டின் பிரதிபலிப்பாய், சமூகம் எத்துனை சிறப்புகளையும் உயர்வுகளையும் அடைந்து கொள்ள முடியும்!'

ஆதிக்க வெறியும், ஆளையாள் கொல்லும் அதீத தீய பண்பும் மிகைத்துள்ள இன்றைய சூழ்நிலையில், தியாகம் என்ற நற்பண்பின் செயலுருவாக்கத்திலேதான், வாழ்வின் வெற்றியும் மகிழ்ச்சியும் இருக்கின்றதென்ற உண்மையை தான் விளங்கிக் கொண்டது போலவே, தன் சமூகத்தினராலும் அது புரிந்து கொள்ளப்பட வேண்டுமே என்ற ஏக்கம் நிறைந்த ஆசை இஸ்மாயிலின் பிஞ்சு மனதில் கவலையை ஏற்படுத்திற்று.

அந்த ஏக்கமும், அது ஏற்படுத்திய கவலையும் உள்ளத்தை அழுத்த, தந்தையை பின் தொடர்ந்தவாறே மலையுச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தார் இஸ்மாயில்.

தீய சக்திகளின் ஊசலாட்டங்களை துரத்தியடித்து விட்டதான வெற்றிப் புளகாங்கிதத்தில் நிறைவுற்றிருந்த அவரது உள்ளம், எவ்வித சலனங்களுக்கும் ஆட்பட்டு விடாமல் ஆன்ம பலத்துடனான இறுக்கத்தில் தெளிவும் புனிதமும் பெற்று இலங்கலாயிற்று.

இருவரினதும் வேக நடையில் மலையுச்சி அண்மித்துக்கொண்டிருந்தது. வரலாற்றுப் புகழ் மிக்கதான ஒரு மாபெரும் சரித்திர நிகழ்வு அவர்களை மிக்க மரியாதையுடன் வரவேற்கத் தயாரானது........

No comments:

Twitter Bird Gadget