Tuesday, March 29, 2011

பாத்தும்மா


''வெள்ளத்தம்பி....... வெள்ளத்தம்பி........''

மச்சானின் காட்டமான குரல் முற்றத்து மாமரத்துக்குக் கீழே உரத்து ஒலித்த வேளையில், கால்களைப் பரப்பிக் கொண்டே வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார் வெள்ளத்தம்பி. ஏழெட்டு உலக்கைகளை சேர்த்துக் கட்டினாற் போல் உப்பிப் பெருத்திருந்த கால்களில், கொப்புளங்கள் உருண்டு திரண்டு, உதறி விடப்பட்ட நீர்த் துளிகளாக நிறைந்து கிடந்தன. அவை சூடேறி வெடிக்கின்ற போது, உள்ளிருந்து கசிந்து வழியும் அழுக்கு நீர், பாதங்கள் வழியாக ஓடி வந்து கீழே போடப்பட்டிருந்த சாக்கில் ஊறிக் கொண்டிருந்தது.

வலியால் முனகிக் கொண்டு, தோட்டுப் பாயில் குந்தியிருந்த அவர், மச்சானின் குரல் கேட்டதும் தலையை உயர்த்தினார்.

குசினிப் பக்கமிருந்து ஓடி வந்த அவரது மனைவி பாத்தும்மா, பாயன்றை எடுத்து திண்ணையில் விரித்து வைத்து, ''வாங்க நானா'' என்று அவரை புன்னகையுடன் வரவேற்றாள்.


வெள்ளைச் சாரனும் நைலோனில் ஜுப்பாவும் அடர்ந்த தாடியும் தொப்பியுமாக, செருப்பைக் கழட்டி விட்டு, உள்ளே வந்தமர்ந்த மச்சான், எடுத்த எடுப்பிலேயே விஷயத்துக்கு வந்தார்.

''வெள்ளத்தம்பி! அந்தக் காச எப்ப தரப்போறா..?''

மௌனமாக அமர்ந்து கைகளைப் பிசைந்தார் வெள்ளத்தம்பி

''இஞ்செப் பாரு. ரெண்டு ஏக்கர் வெள்ளாம செஞ்செ. உழவடிக்க, சூடடிக்க என்ட மிசினத்தான் எடுத்துட்டுப் போனெ. வெள்ளாமயெல்லாம் வெட்டி வந்து ஒரு மாசமாவுது. இன்னும் என்ட மிசின் கூலியத் தரல்ல. நீயா தருவாயெண்டு பாத்துப் பாத்து இருந்து போட்டு, பொறுக்க ஏலாமத்தான் இப்ப வந்திரிக்கென்''

''மச்சான்! உங்களுக்குத் தெரியுந்தான. வெதச்சி கொஞ்ச நாளெல எனக்கு கிரந்தி புடிச்சி, காலெல்லாம் வீங்கிட்டு. வயலுக்கு போவ, பாக்க ஏலாம பெய்த்து. இஸ்ம் கட்டி கபுறடி மண்ணத் தூவாததால வயலுக்க பூச்சி அடிச்சிப் போட்டு. வேலி கட்டாம உட்டதால, ஆத்தில இருந்த நனெயாவெரட்டியெலாம் ஓடி வந்து வயலுக்குள்ள நிரம்பி, கதிரெல்லாம் மூடிப்போட்டு. கருவாவன் கருவாவச்சிகளுக்கு சம்பளம் கொடுக்க காசிமில்ல, படியளக்க நெல்லுமில்ல. அதால, கதிரு புடுங்கயும் ஆள் கிடெக்காம, அப்படியே கிடந்து வெள்ளாம பழுதாப் பெய்த்து. ரெண்டு ஏக்கருக்கும் நூறு மூடெயாவது கிடெய்க்குமெண்டு நினெச்சிருந்தென். சூடடிச்சிப் போட்டு பாத்தா ஆறு மூடதான் வந்திச்சி. உம்மாக்கு ரெண்டு மூடெயக் குடுத்திட்டு, மத்தத வித்து கடனத்தான் அடெச்ச. இன்னும் கடன் இரிக்கி. அதயெல்லாம் அடெய்க்கணும், வேற என்னயாவது செய்வமெண்டு இரிக்கக்குல, திருப்பியும் கால் வருத்தம் புடிச்சிட்டு''

''இஞ்செ. உன்ட தரித்திரியக் கதெயெலாங் கேக்க நான் வரல்ல. என்ட மிசின் காச தரப்போறியா இல்லியா, அதெச் செல்லு''

''என்ன மச்சான்! நான் இருந்தா தரமாட்டனா. இல்லாம இரிக்கக்குல நான் என்ன செய்யிற. குருடனப் புடிச்சிட்டு முழிமுழியெண்டு செல்ற மாதிரியில்ல இரிக்கி''

''காசில்லாட்டி, இரிக்கிற சாமான்ல எதெயாவது வித்துப் போட்டு காசப் பிரட்டுறான. இதெல்லாம் நானா செல்லிக்கிட்டு இரிக்கிற''

''அவட கழுத்தில காதில இரிந்த எல்லாத்தெயும் செட்டிட கடெயில ஈடு வெச்சிப் போட்டுத்தான் உழவடிச்சி, வெள்ளாம வெதச்ச. இப்ப ஊட்ல விக்கறத்துக்கும் சாமான் ஒண்டுமில்ல. நகயெ ஈடு மூள்றத்துக்கும் வழியில்லாமக் கிடக்கம். உங்களுக்குத் தெரியுந்தான மச்சான். போனமுற வெள்ளாம செய்யக்குல, உழவடிக்கிறத்துக்கும் சூடு போறத்துக்கும் இஸ்மாயில் ஹாஜியார்ர மிசினத்தான் கொண்டு போன. ரெண்டு சூடு. அவர்ர சூடு நாலு இருந்த. அதெ உட்டுப் போட்டு, ரெண்டு நாள் மெனக்கெட்டு, என்ட சூட்ட அடிச்சித் தந்தாரு. முடிச்சிப் போட்டு போறவுன, மழ பெஞ்சி களத்தில் தண்ணி ஏறி அவர்ர சூடு நாலும் தண்ணிக்க தாண்டு இத்துப் பெய்த்து. பெரிய நஷ்டம் அவருக்கு. அப்பயும் அவர் மிசின் கூலி ஒண்டும் கேக்கயுமில்ல, நான் குடுத்ததுக்கும் எடுக்கயுமில்ல. ஊரான் அப்பிடிச் செய்யக்குல, உறவுக்கார நாம கொஞ்சம் பொறுத்துக்கலாந்தான மச்சான்...''

''ஓஹோ... அப்ப, இஸ்மாயில் ஹாஜியார் மாதிரி நானும் மிசின் கூலிய உட்டுத் தரணும் எண்டு செல்றியா...?''

''அதில்ல மச்சான்.....''

''நல்லாரிக்கே உன்ட கதெ. அவரு பணக்காரரு, போடியாரு, செய்வாரு. நான் அப்பிடிச் செய்ய ஏலுமா. இதுக்குத்தான் சொந்தக்காரனுவளுக்கு உதவி செய்யக்கூடாதெண்டு செல்ற. உறவு கிறவெண்டு கதெ செல்லி காசி தராம ஏமாத்திப் போட்டுருவானுகள். கடெசில நஷ்டப்பர்ரது நாமதான். இந்தக் கதெ ஒண்டுஞ் செரிவராது. இப்ப என்ட காசிக்கு என்ன வழியெண்டு செல்லுங்க ரெண்டு பேரும்''

கதவு நிலையில் சாய்ந்து நின்றவாறு, விழிநீர் ததும்ப யோசனையில் ஆழ்ந்திருந்த பாத்தும்மா சட்டென முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டாள். சற்றும் மனம் இரங்காது, பணத்திலேயே குறியாய் நிற்கும் அவரைப் பார்க்கையில், விரக்தி அவளுள் வேதனையாகப் பரவிற்று.

''நானா! கொஞ்சம் பொறுத்துக்குங்க. இவகளுக்கு கால் சுகமாயினவுன, உங்கட மிசின்ல கூலிக்கு நிக்கட்டும். நீங்க சம்பளம் குடுக்க வாணா. உங்களுக்குத் தாற காசில, கொஞ்சங் கொஞ்சமா அதெக் கழிச்சிக்குங்க''

மச்சான் யோசித்தார்.

''ம்......... அதுவும் நல்ல யோசினதான். அப்பிடித்தான் செய்யணும். வேற வழியில்ல. எண்டாலும், மொத்தமா எனக்கு வரவேண்டிய காசி. அரிஞ்சி அரிஞ்சி வாற மாதிரி இருக்கும். முறப்படி இதுக்கு வட்டியெலாம் போடணும். உங்களுக்கு போடேலுமா! சொந்தக்காரங்களா வேற பெய்த்தீங்க. பரவால்லெ, மிசின்ல கொஞ்ச நாள் கூடுதலா நிண்டா செரியாப் பெய்த்திடும்''

சொல்லி முடித்த போது, அவரது முகம் இறுக்கம் தளர்ந்து புன்னகை துப்பியது.

பாத்தும்மா கொடுத்த தேனீரைக் குடித்து, கிளாசை கீழே வைத்து விட்டு, விடைபெற்றுக் கொண்டு வெளியே புறப்பட்டார்.

'பாத்தும்மா! இஞ்செ வா....'

அவள், அருகில் வந்தமர்ந்தாள்.

''இப்பிடி கடன அடெய்க்க நான் மச்சான்ட மிசின்ல வேலெ செஞ்சிக்கிட்டு இருந்தா, ஊட்டுச் செலவுக்கு என்ன செய்ற...?''

''அதெப்பத்தியெலாம் நீங்க ஒண்டுக்கும் கவலப்படாதீங்க. நான் பாயிழைக்கிறென். நெல்லு குத்துறென், பெட்டி தட்டு செய்றென். கோழி முட்ட விக்கிறென். இதால வாற காச வெச்சி நாம காலத்த ஓட்டிக்கலாம். முதல்ல கடன அடெய்க்கணும். அதுவும் சொந்தக்காரங்கள்ற கடனத்தான் முதல்ல அடெய்க்கணும். ஏனெண்டா, ஊரவன் பொறுத்தாலும் உறவுக்காரன் பொறுத்துக்கமாட்டான்''

பாத்தும்மாவைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். வீட்டில் எப்போதுமே சும்மா இருப்பதில்லை அவள். எதையாவது இழுத்துப் போட்டு ஓடியாடி வேலை செய்து கொண்டேயிருப்பாள். தாயால் பழகிய பழக்கம்.

காலையில் வீடு வாசல் கூட்டிப் பெருக்குவது தொடக்கம், இரவில் சோறு கறியை சுண்ட வைத்து விட்டு தூங்கச் செல்வது வரை, ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலைதான்.

கல்பன் புல்லு, பயித்தம் புல்லு என கட்டுக்கட்டாக புற்களை வாங்கி அடுக்கி, அவற்றுக்கு பச்சை, சிவப்பு, கறுப்பு என சாயமிட்டு, வெயிலில் காயவைத்து, பருத்திமனையில் வைத்து அரைத்து, குந்தியிருந்து பாயிழைப்பாள்.

அவளது வாளிப்பான அனுபவத் திரட்சியுற்ற கைகள், ஒரு தேர்ந்த ஓவியக் கலைஞனது தூரிகையின் இலாவகத்துடன் அந்த புற்களில் அசைந்து அசைந்து நர்த்தனமிடும்.

ஒவ்வொரு நிறப்புல்லும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, ஊடுருவி செழுமையுற்ற நிறக்கோர்வையாக மின்னும். அதன் ஒரு மூலையில் இழைக்க ஆரம்பித்தால், எதிர்ப்பக்கமாக உள்ள மறுமுனையில் போய் முடியும்.

எட்டு முழத்துக்கு நீண்டு கிடக்கும் அந்தப் பாய்களை சுருட்டியெடுத்து அசவில் அடுக்குவாள்.

எஞ்சிய புற்களை வைத்து பல பல வடிவங்களில் பெட்டி தட்டுகளை இழைத்தெடுப்பாள். 'பாயிருக்கோ பாய்.....' என்று கூவிக்கொண்டே வரும் பாய்க்காரனை கூப்பிட்டு, அவனிடம் பேரம் பேசி, பாயையும் பெட்டி தட்டுக்களையும் விற்று, பணத்தை பெட்டிக்குள் பத்திரப்படுத்திக் கொள்வாள்.

நெல்குத்துவதிலும் பாத்தும்மா கெட்டிக்காரி. உரலையும் உலக்கையையும் கையிலெடுத்தாளென்றால், எத்தனை மூடை நெல்லானாலும் தனியாளாய் நின்று குத்தி முடித்து அரிசாக்கி விடுவாள்.

முதலில் பெரிய சட்டிக்குள் தண்ணீரை ஊற்றி நெல்லைக் கொட்டி அவிக்க வேண்டும். அவிந்த பின், வெயில் உள்ள இடத்தில் நீட்டுக்கும் பாய்களை விரித்து, அதில் நெல்லைக் கொட்டிப் பரவி காய வைக்க வேண்டும்.

காகம், கோழிகள் வந்து கொத்தித் தின்று விடாதபடி நீண்ட கம்புடன் காவலிருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரலில் கொட்டி இடித்து, சுளகில் எடுத்துப் புடைத்து அரிசாக்கி எடுக்க வேண்டும்.

இவையெல்லாம் பாத்தும்மாவுக்கு கைவந்த கலை. இடுப்புக் கடுப்பையும் பொருட்படுத்தாது, குனிந்து, நிமிர்ந்து, ஓடியாடி உற்சாகமாக வேலை செய்து கொண்டேயிருப்பது அவளது இயல்பு.

என்றாலும், கோழிக்குஞ்சு வளர்ப்பதில்தான் அவளுக்கு விருப்பம் அதிகம். ஓர் ஆத்மார்த்தமான மனநிறைவு அதில் இருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.

ஒரு மாட்டுவாளிக்குள் அரைவாசி அளவுக்கு மண்ணை நிரப்பி, அதில் சுத்தமாகக் கழுவிய பத்துப் பதினைந்து கோழி முட்டைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்து, அவற்றின் மேல் குறுக்குக் கோழியன்றை அடைவைப்பாள்.

கோதுகளை உடைத்துக் கொண்டு வெளியே தலைநீட்டிப் பார்க்கும் சிறிய கோழியின் உருவிலான உயிர்க்குஞ்சுகளைப் பார்க்கும் போது, அவளது உடலெங்கும் ஊமை மகிழ்ச்சி செழுமையுற்றுப் படரும். தாய்மை உணர்வுகள் சிலிர்ப்புற அதனை ரசிப்பாள்.

குஞ்சுகளைக் கூட்டிக் கொண்டே தீனி பொறுக்கித் திரியும் தாய்க்கோழி, இவளைத் தவிர வேறு எவரையும் தன் குஞ்சுகளை அண்ட விடுவதில்லை. திரத்தி வந்து கொத்தி விடும்.

குஞ்சுகள் பெருத்ததும், பெட்டைக் கோழிகளை முட்டைக்கு வளர விட்டு விட்டு, சேவல்களை நல்ல நாள் பெருநாளன்றைப் பார்த்து அறுத்துக் கறிசமைத்துச் சாப்பிடுவார்கள்.

தனியாளாய் நின்று குடும்பத்தை நடாத்த வேண்டிய நிலை வந்தாலும், சிரமமின்றி சமாளிக்கக் கூடியவாறு, தன்னம்பிக்கையுடன் சகல கைத்தொழில்களையும் கற்று வைத்திருந்தாள் பாத்தும்மா.

அவளது பேச்சு கொடுத்த தைரியத்தில், மன அமைதியுற்று சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார் வெள்ளத்தம்பி.

தனது கால்வருத்தம் விரைவாக குணமடைந்து, கடனையெல்லாம் அடைக்க வேண்டுமேயென்று அவரது உள்மனம் இறைவனைப் பிரார்த்தித்தது. குணமடையா விட்டாலும், எழுந்து வேலைக்குச் செல்ல வேண்டும் போல் ஓர் அசாதாரண உத்வேகமும் அவருள் கிளர்ந்தது.

கஞ்சிப் பானையை அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பாத்தும்மா, அதில் கொஞ்சத்தை கோப்பைக்குள் கவிழ்த்து, செம்பில் தண்ணீரும் நிறைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்.

''என்ன படுத்துட்டீங்களா? குறுணல் கஞ்சி காச்சியிருக்கென். எழும்பிக் குடிங்க. ராவும் ஒண்டுந் தின்னயுமில்ல''

கண்களைத் திறந்து சோர்வுடன் கஞ்சிக் கோப்பையை வாங்கிக் கொண்டார் வெள்ளத்தம்பி. சூடு தணிய வாயால் ஊதி ஊதி அதை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த போது, கடப்பைத் தாண்டி மீண்டும் சத்தம் கேட்டது.

''வெள்ளத்தம்பி..............வெள்ளத்தம்பி...........''

''மாமா வாறாக போலயிருக்கு'' சேலையை சரி செய்து கொண்டே எழுந்து சென்று வரவேற்றாள் பாத்தும்மா.

''என்ன புள்ள சுகமா இருக்கிறியா...?''

''ஓம் மாமா''

கஞ்சிக் கோப்பையை கீழே வைத்து விட்டு ''வாங்காப்பா, இரிங்க'' என்றார் வெள்ளத்தம்பி.

பாயில் அமர்ந்து கொண்ட வாப்பா வெள்ளத்தம்பியைப் பார்த்துச் சொன்னார்.

''மகன்! உன்ட கால் வருத்தம் சுகமாவணுமெண்டு நேத்திக் கடன் வெச்சிருந்தென். நீ தந்த ரெண்டு மூட நெல்லுலெ ஒரு மரைக்கால வேறயா எடுத்து, நிய்யத்துப் பாணி காச்சி, ஹயாத்து நபி பேர்ல பாத்திஹா ஓதணுமெண்டு நினெச்சிருந்தென். அவ, உன்ட உம்மா அதெயும் தேடிக் கண்டுபுடிச்சி கொட்டித் திண்டுட்டா. இனி என்ன செய்றெண்டு யோசிச்சிப் போட்டுத்தான் இஞ்செ வந்தெ. நேத்திக்கடன், நிறைவேத்தினாத்தான் வருத்தம் சுகமாவும். அதால, இஞ்செதான் பாத்திஹா ஓதுற வேலெயப் பாக்கணும்''

அவர் சங்கடப்பட்டுக் கொண்டே தயங்கித் தயங்கிச் சொன்ன போது, புன்னகைத்து சிரித்தாள் பாத்தும்மா.

''பரவால்ல மாமா. இஞ்செ கொஞ்சம் அரிசி கிடக்கு. நான் நிய்யத்துக் காச்சிறென். பாத்திஹாவெ ஓதிடுவொம்''

அரிசை அரித்து, பானைக்குள் கொட்டி, பக்கத்து மாட்டுப் பண்ணையில் பசும்பால் அரை போத்தல் கடனாகப் பெற்று, ஒரு மணி நேரத்திற்குள் நிய்யத்துப் பாணியை தயாரித்து முடித்து விட்டாள்.

பாணியை பீங்கான்களில் அள்ளிவைத்து, தட்டினால் மூடியெடுத்துக் கொண்டு வந்து கணவருடன் பேசிக் கொண்டிருந்த மாமாவின் முன்னால் வைத்தாள். அங்கிங்கு தடவி ஊதுபத்திக் குச்சி இரண்டைக் கண்டெடுத்தாள்.

'விடியிற வெள்ளிக்கிழம. ராவைக்கு கொழுத்தி வெய்க்கிறத்துக்கும் சந்தனக்குச்சி வாங்கணும்' மனதுக்குள் எண்ணிக் கொண்டே ஒரு கிளாசில் சிறிது மண்ணை அள்ளிப் போட்டு, அதற்குள் ஊதுபத்திக் குச்சியைக் குத்திப் பற்ற வைத்தாள்.

எரிந்து மணம் பரப்பிய அதனை திண்ணையில் வைத்து விட்டு, முக்காட்டுடன் ஓரமாக ஒதுங்கிக் கொண்டாள். பாத்திஹாவும் துஆவும் ஓதி ஸலவாத்தும் சொல்லி முடித்து விட்டு, நிய்யத்துப் பாணியை கைகளால் தூக்கி உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தனர் இருவரும்.

பாத்தும்மா குசினிக்குச் சென்று, பானைக்குள் எஞ்சியிருந்த பாணியை வளித்தெடுத்து, மாமரத்துக்குக் கீழ் கூடி நின்ற வாண்டுகளைக் கூப்பிட்டுப் பங்கு வைத்தாள்.

அகம் நிறைந்து சிரித்த முகத்துடன் விடைபெற்றுச் சென்ற வாப்பாவை வழியனுப்பிவிட்டு சுவரில் சாய்ந்து கொண்டார் வெள்ளத்தம்பி.

உம்மாவைப் பற்றிய நினைவுகள் மனதுக்குள் கசப்பாக மண்டின. வெள்ளாமை செய்து பெற்ற ஆறு மூடைகளில், இரண்டை அவவிடம் கொண்டு போய் கொடுத்த போது, 'ரெண்டு மூட எனக்கு என்னத்துக்குக் காணும்..!' என்று பழிபோட்டது நினைவுக்கு வந்தது. சலித்துக் கொண்டார்.

உள்ளம் முழுக்க அப்பிய வேதனை, கூரிய முள்ளாக அவருள் அழுத்தம் கொடுத்திற்று.

சேலையைத் தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டு, கையில் கோப்பையும் சீலையுமாக பக்கத்தில் வந்தமர்ந்தாள் பாத்தும்மா.

கையிலிருந்த அழுக்குச் சீலையால் அவரது கால் கொப்புளங்களில் வழிந்து கசிந்திருந்த நீரை ஒற்றியெடுத்துத் துடைக்கத் தொடங்கினாள்.

''பாத்தும்மா.....''

''ம்...''

''என்னால உனக்கு எவ்வளவு கஸ்டம்''

''கஸ்டமெண்டு நினெச்சா கஸ்டம்தான். எனக்கு ஒண்டு வந்தா நீங்க பாக்கணும், உங்களுக்கு ஒண்டு வந்தா நான் பாக்கணும். இதுக்காவத்தான கல்யாணம் முடிக்கிறது. சரி அதிருக்கட்டும். மத்தியானத்துக்கு இளையவன் வாறெண்டு செல்லியிருக்கான். அவன்ட மோட்ட சைக்கிள்ளயே புளியந்தீவு ஆசிவத்திக்குப் போனா, லேசா மருந்தெடுத்திட்டு வந்திரலாம். ஊரானெண்டாலும் அவன்தான் சமயத்தில நமக்கு உதவுறவன். நேத்து என்ட தம்பிக்கிட்ட சென்னென், 'மச்சானுக்கு கால் வருத்தண்டா. உன்ட மோட்ட சைக்கிள்ள ஆசிவத்திக்கு கூட்டிட்டுப் போடா'ண்டு. சொத்தைல அடிச்ச மாதிரி, ஏலாண்டு செல்லிட்டுப் பெய்த்தான். போண்டு உட்டுட்டென்''

நீரை ஒற்றியெடுத்து, வெள்ளைத் துணியால் காலில் கட்டுப் போட்டு விட்டு குசினிப் பக்கம் நுழைந்து கொண்டாள் பாத்தும்மா.

வெள்ளத்தம்பி, சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார். கால் சுகமானதும் மச்சானின் மிசினுக்கு வேலைக்குப் போக வேண்டும். மிசினோடி ஓடி கடனை அடைக்க வேண்டும். எத்தனை மாதம் பிடித்து வைக்கப் போகிறாரோ தெரியவில்லை.

வாழ்க்கை பாலைவனமாக வரட்சியுற்ற காட்சி, அவரது மூடிய விழிகளுக்குள் ஊமைப் படமாக ஓடிற்று. அந்தப் பாலைவனத்தில், ஒரு பசுந்தளிர் ரோஜா மலர்ந்து சிரிக்கிறது. அது தன் மனைவி பாத்தும்மாதான் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியும். மூக்கில் வந்து மொய்த்த கொசுவை கைவீசித் துரத்தியவாறு நிம்மதியாக உறங்கத் தொடங்கினார் வெள்ளத்தம்பி.

No comments:

Twitter Bird Gadget