Wednesday, March 30, 2011

அயல் வீடு


இஞ்செப்பாரு! கடெசியாச் செல்றன். உன்ட தென்ன மரம், வேலியத் தாண்டி என்ட ஊட்டுப் பக்கம் சாஞ்சிரிக்கி. நீ கணக்குக்கு தேங்காய ஆஞ்சி எடுத்துக்கிற. குரும்பெயெல்லாம் புறக்கிக் கஷ்டப்பர்ரது நான். இந்த மண்ணாங்கட்டி வேலயண்டுஞ் செரிவராது. இண்டெக்கே மரத்த வெட்டிப் போட்டுரு. இப்பிடி நிறையத் தரம் நானுஞ் செல்லியிருக்கன். நீயும் கேக்கிறமாதிரியில்ல. இனியும் கேக்காட்டி, புறவு நான் என்ட வேலயக் காட்டுவன்''

''என்ன வேல காட்டப் போற? காட்டுற வேலயக் காட்டிக்க. பாக்கிற சோளிய பாத்துக்க. மாசத்துக்கு இருபது, முப்பது காய் தாற மரம். கடெசி வரயும் நான் வெட்ட மாட்டன்''

''வெட்டமாட்டியா? பொம்புள எங்கிறத்துக்காவத்தான் இவ்ளோ நேரமும் சும்மா நிண்டு கதெச்சிக்கிட்டு இரிக்கன். ஆம்புளெயா இரிந்தா...''

''ஏன் ஆம்புளெயா இருந்தா என்ன செய்வ? அடிச்சிப் போட்டுருவியோ, அவ்வளவு தெகிரியம் இருந்தா, வேலில ஏறிக்குதிச்சி வந்து, என்ன அடியன் பாப்பம். அதுக்குப் புறவு தெரியும், நான் ஆம்புளெயா பொம்புளெயாண்டு''

''உனக்கு அடிக்கிறது ஒண்டும் பெரிய்ய வேலல்ல. அடிச்சா ஊர்ல இருக்கிறவன் என்னத்தான் மோசமாக் கதெப்பான். இந்தத் தேவல்லாத கதயெல்லாங் கதெச்சி என்னத் தூண்டி உடாம, இப்ப மரத்த வெட்டப் போறியா இல்லியா?''


''மரம் என்ட மரம். வளவு என்ட வளவு. கண்டு வெச்சி கஷ்டப்பட்டு வளத்தது நான். என்ன வெட்டச் செல்றத்துக்கு நீ யாருயா?''

''உன்ட மரமெண்டா, என்னத்துக்கு என்ட வளவுப் பக்கம் சாய உட்ட? உன்ட வளவுக்குள்ளயே வளெச்சி வெச்சிருக்கலாந்தான. இஞ்செப்பாரு, கொள்ளெயாக் கதெச்சி, தேவெல்லாம என்ட கோவத்தக் கிளறி உடாத, செல்லிட்டன்''

''ஏன் அவ்வளவு பெரிய்ய கோவக்காரனா நீ..? உன்ன விட பெரிய்ய கோவக்காரி நாந்தெரியுமா..! என்ட குடும்பத்தப் பத்தித் தெரியுமா னொக்கு..? நாயேண்டு ஏசினத்துக்காக, ஒருத்தண்ட கைய முழுசா வெட்டிப் போட்டு மறியக் கூட்டுக்குப் போனவரு எங்க வாப்பா. களவெடுக்க வந்த ரெண்டு கள்ளனுகள்ற தலயெத் திருகிக் கொண்டு போட்டு, யாருக்குந் தெரியாம கொல்லப் புறத்தில குழி தோண்டிப் புதெச்சவரு எங்க மாமா. அடிபுடியெல்லாம் எங்களுக்கு தீஞ்ச சோறு தின்ற மாதிரி''

''என்ன பயங்காட்டுறியா..? இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பர்ர ஆளில்ல நான். எனக்குஞ் சண்ட தெரியும். அடிபுடி தெரியும். நேத்துக்கூட ரெண்டு பேர அடிச்சி வாட்ல படுக்கப் போட்டுட்டுத்தான் வந்திரிக்கன்''

''போடா புழுகன். ஊருக்குள்ள குமரு தேடித் திரிஞ்ச நேரத்துல, பொம்புளெகள் சேந்து ஈக்கிமாத்தாலயும் செருப்பாலயும் சோப்பி அனுப்பினாளுகளே, அப்ப எங்க பெய்த்து உன்ட வீரம்..? பொம்புளெகள்ற கையால அடிவாங்கிட்டு வந்த ...................... நீ எனக்கு அடிக்கப் போறியாடா..? வளப்புணி நாயே''

''என்னடி வாய் கடுமையா நீளுது..?''

''என்னடா வண்டவாளத்தச் சென்னா, மச்சானுக்கு கோவம் பொத்துக்கிட்டு வருவுதோ..?''

''இஞ்செப் பாருடி. உன்ட வண்டவாளமும் எனக்குத் தெரியும். செல்ல ஆரம்பிச்சனெண்டா, நீ நஞ்சி குடிச்சிச் சாவா... ஓ...''

''நான் ஏண்டா நஞ்சி குடிக்கணும்! நீதாண்டா கழுத்தில தூக்குப் போட்டுக்கிட்டுத் தொங்கிச் சாவா. எப்பயாவது ஒருநாள் அது நடக்கத்தான் போவுது. மூலக்கடுப்பு தாங்க ஏலாம, அப்பிடி ஒரு நாளெக்கி தொங்கிறியா இல்லியாண்டு பார்ரா''

''ஏய் கொள்ளெயா கதெக்காதடி. என்னப்பத்தி உனக்குத் தெரியாது. ஊட்டுக்குள்ள பூந்தண்டா, புறவு, ஊட்டத் தலகீழாப் பிரட்டிப் போட்டுட்டுத்தான் மத்த வேல பாப்பன்''

''சும்மா போடா! உன்னப்பத்தி எனக்குத் தெரியாதா! நீ ஒரு பொம்பளச் சின்னான். ஊரெல்லாம் மேஞ்சி திரிஞ்சி கூத்தடிச்சத்தாலதான பொஞ்சாதி நாண்டுக்கிட்டு செத்தா. திறமான ஆள் மாதிரி கதெக்கிறியே, சொந்த மகளெயே கூட்டிக் குடுத்த மாமாக்காரன்தானடா நீ. இப்ப பெரிஸ்ஸா கதெக்க வந்திட்டாரு''

''அடியே ரோட்டு மாமி. நீ மட்டும் திறமான ஆளாடி. புருசன்காரன வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டு, அவன் அனுப்புற காச எடுத்து, ஊர்ல இரிக்கிறவனயெல்லாங் கூப்புட்டுக் கூப்புட்டு, கட்டில்ல வெச்சி சாப்பாடு போட்டவள்தானடி நீ. அதாலதான ஆண்டவன் உனக்கு புள்ளயே இல்லாம ஆக்கிப்போட்டான்''

''என்ட திறத்தப் பத்தி நீ கதெக்கிறியாடா. உன்ட குடும்பமே ரோசங்கெட்ட, மானங்கெட்ட குடும்பண்டா. உம்மா, ஊடு கட்ட வந்த மேசனக் கூட்டிக்கிட்டு ஊர உட்டே ஓடிப்போனா. வாப்பா, ஊரெல்லாங் கடன வாங்கித் திண்டுபோட்டு, அடெக்க ஏலாம, கடெசில அலரிக்காய அரச்சித்திண்டு செத்துப்போனாரு. காக்காக்காரன் கள்ள மூதேவி. ஊர்ல இரிக்கிறவங்கட கோழியயும் வாழக்குலயயும் களவெடுத்துக் களவெடுத்துத் திண்டே, கிடாமாடு மாதிரி விளெஞ்சி போய்க்கிடக்கான். தங்கச்சிக்காரி, கடுப்பெடுத்துத் திரியிறாள். ஊர்ல இரிக்கிற படிக்கிற பொடியன்மாரயெல்லாங் கெடுத்து, அவனுகளுக்கு கடிதம் அனுப்பி அனுப்பி, அவனுகள் குடுக்கிற பிஸ்கெட்டயும் சொக்லெட்டயும் திண்டு திண்டே, வவுத்த நிரப்பிக்கிட்டிருக்காள். டேய்! உன்ட குடும்பத்தப் போல, போக்கணங்கெட்ட குடும்பம் உலகத்தில வேற எங்கடா இரிக்கப் போவுது?''

''அடியே தெவ்டியாள்! உன்ட குடும்பம் மட்டும் என்ன பெரிய மகாராணிக் குடும்பமாடி! என்ட குடும்பத்த விட மோசண்டி உன்டது. கடன வாங்கி வாங்கித் திண்டு போட்டு, புறவு போய் கேட்டவுன, வாங்கல்ல வாங்கல்லெண்டு பள்ளில சத்தியம் பண்ணினவதானடி உன்ட உம்மா. நல்லா குடி குடினெ குடிச்சிப் போட்டு, சாரன உரிஞ்சி தலப்பா கட்டிக்கிட்டு, நடுரோட்டில நிண்டு மூத்திரம் அடிச்சவர்தானடி உன்ட வாப்பா. எல்லாரும் வெளிநாட்டுக்குப் போய் உழச்சி காசி கொண்டு வருவாங்க. உன்ட அக்கச்சிமாரு என்னடி செஞ்சாங்க. அரபிக்காரனோடக் கிடந்து போட்டு, வவுத்தில புள்ளயோடல்ல வந்தாங்க. ஊரே கைகொட்டிச் சிரிச்சிச்சே, மறந்து பெய்த்தாடி! கரண்டு பில்லு கொண்டு வந்த பொடியன, கட்டி வெச்சி கல்யாணம் முடிச்சிப் போட்டு, தங்கச்சியும் நீயுமா மாறி மாறிப் பாவிச்சவங்கதானடி நீங்க. என்ட குடும்பத்தப் பத்திக் கதெக்க உங்களுக்கு என்னடி யோக்கியம் இரிக்கி?''

''யோக்கியத்தப் பத்தி நீ கதெக்கிறியாடா துப்புக்கெட்டவன?''

''யார்ரி துப்புக்கெட்டவன். நீதாண்டி மானங்கெட்டவள். உன்ட அவமானத்தத் தாங்க ஏலாம வெளிநாட்டில இரிக்கிற உன்ட புருசன்காரன் செத்துப் போய் திரும்பி வாறானா இல்லியாண்டி பார்ரி''

''டேய் கண்ணத் திண்டிருவா. நீ நல்லா இரிப்பியாடா. என்ட புருசனார மௌத்தாக்கயாடா பாக்காய். நீ நாசமாப்போ.... நாசமாப்போ....''

''அடியேய் எனக்காடி மண்ணள்ளி எத்திறா! இந்தக் கல்லால எறிஞ்சே உன்னக் கொல்லுவன்டி''

''ஆ... கல்லாலயாடா எறியிறா கறுப்பு நாயே. பொம்பளக்கிட்டயாடா வீரத்தக் காட்டுறா வளப்புணி. இஞ்செப்பாருடா, எனக்குக் கல்லால எறிஞ்ச மட்டுக்கும் உன்ன நான் சும்மா உடமாட்டன். என்ட ஆக்களச் செல்லி, நடுரோட்ல வெச்சி, உன்ட கையக் கால உடச்சி உன்ட உடுப்பெல்லாத்தெயும் கழட்டி, உரிவாணத்தோட ஓட உட்டுக்காட்றன் பார்ரா''

''செஞ்சிரிவியாடி? நீ செஞ்சா, நான் உன்ன சும்மா உட்றுவனாடி? உன்னப்பத்தி எல்லார்கிட்டயும் எல்லாக் கதெயயும் போய் செல்லுவன்டி. உன்ட ஊட்ல பீ முட்டி அடிப்பன்டி''

''டேய் நண்டி கெட்டவன. பொஞ்சாதி இரிக்கக்குல, அவளோட சண்ட புடிச்சிட்டு வந்து எத்தினெ தரண்டா என்ட ஊட்ல படுத்துக் கிடந்திரிக்கா. எத்தினெ தரண்டா என்ட ஊட்ல நக்குச்சோறு திண்டிரிக்கா. நக்குத்திண்ணி நாயே. ஊர் மேஞ்சி திரிஞ்சி பொம்புளெகள்ற கையால அடிவாங்கி சொத்த வீங்கி வந்தவுன, நாந்தானடா னொக்கு சுடு தண்ணி வெச்சி ஒத்துப் போட்டன். இப்ப என்ட ஊட்லயே பீ முட்டி அடிக்கப் போறியாடா ஹராங்குட்டி''

''ஓண்டி, உன்ட ஊட்ல சோறு திண்டந்தான். நானா வந்து கேட்டன். நீதானடி கூப்புட்டுக் கூப்புட்டுத் தந்தா. அதுவும், முருங்கக்காயும் சீலா மீனும் ஒரு கறி, மாசியும் வெங்காயமும் ஒரு சம்பல். இதெல்லாம் என்னத்துக்குண்டு எனக்குத் தெரியாதா. புருசன்காரன் வெளிய போனவுன உனக்கு கடுப்பெடுத்திட்டு. ஆம்புள தேவப்பட்டிச்சி. என்னெ வளெச்சிப் போட்டுக்கிட்ட. நான் உன்ட ஊட்ல வந்து படுத்தது உண்மெதான். ஆனா, என்னெ நித்திர கொள்ள உட்டியா நீ? ........................................''

''டேய் டேய் மானங்கெட்டவன பொத்துடா வாய''

''என்ட வாயப் பொத்தச் செல்றத்துக்கு நீ யாருடி? இஞ்செப் பாரு, இப்பவே நான் பெரிய பள்ளிக்குப் போப்புறன். பள்ளி ஆலிமுக்கிட்ட இதுக்கு முதல்ல நடந்த உண்ம எல்லாத்தெயும் செல்லுவன். மார்க்கஞ் செஞ்சி ஹத்து அடிப்பாங்க. உன்னெயும் கூட்டிக்கிட்டுப் போவ ஆக்கள் வருவாங்க. கூட்டிப் போய், பள்ளில எல்லாருக்கும் முன்னால, குப்புறப் படுக்க வெச்சி, ஈச்ச மட்டயால ஓங்கி ஓங்கி அடிப்பாங்க. ரெடியா இருந்துக்க, வரட்டா...........''

No comments:

Twitter Bird Gadget