அஹமதுலெவ்வைப் போடியார் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். ஆறு மாதத்திற்குப் போதுமான அரிசி மூடையும் தேங்காய்ச் சாக்குகளும் வாசலில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
''சுறுக்கா தூக்குங்கடா. நேரம் போகுது''
போடியாரின் உந்துதலில் வேலையாட்கள் பரபரப்புடன் அந்த மூடைகளையும் சாக்குகளையும் தோள்களிலும் முதுகிலும் சுமந்து தூக்கிச் சென்று, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டில்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
பின்னிரவில் இருளை மௌனமாக விழுங்கத் தொடங்கியிருந்த விடியற் பரிதியின் மந்தமான வெளிச்சத்தில் போடியாரின் தேங்காயெண்ணெய் பூசிய வழுக்கைத் தலை பளபளத்து வெண்மை துப்பியது.
உள்ளே அணிந்த சிறுவாலின் கால்கள் தெரியுமளவு சாரத்தை உயர்த்தி மடித்துக் கட்டியிருந்த போடியாரின் ஆங்காரமான வார்த்தைகள் வேலையாட்களின் செவிகளூடாக மாந்த்ரீக பீதியாக கார்வையுற்றுக் கொண்டிருந்தன.
கடப்பைத் தாண்டி வீதிக்கு வந்து வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டில்களை நோட்டமிட்டார். ஆஜானுபாகுவான இரட்டைக் கொம்புக்காளை பூட்டப்பட்டிருந்த வண்டில்கள், கூடுகள் அமைக்கப்பட்டு, சிறு குடிசைகள் போன்று உசும்பிக் கொண்டிருந்தன.
தம் உடல் மேல் அமர்ந்து இரத்தம் உறிஞ்சும் கொசுக்களைத் துரத்துவதற்காக மாடுகள் தோலை சிலிர்த்து தலைகளை உதறிக் கொள்ளும் போது, அவற்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த சலங்கைகள் 'சங் சங்' என்று அசைந்து ஒலி எழுப்பின. சுருதி பிசகினாலும், ஸ்வானுபாவம் உமிழும் இனிய சாரீரமாக அது ஒலித்துக் கொண்டிருப்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
போடியார் ஒவ்வொரு வண்டிலாக அவதானித்துக் கொண்டே வந்தார். மொத்தமாக பத்து வண்டில்கள். ஒவ்வொரு வண்டிலிலும் அரிசி தேங்காய் மூட்டைகளும் இதர பொருட்களும் ஏற்றி அடுக்கப்பட்டிருந்தன.
காய்ந்த மரங்களின் முறிந்த கிளைகள் பலவும் விறகுக்கென கட்டுக்கட்டாகக் கட்டி ஏற்றப்பட்டிருந்தன.
புகையிலை வாடி செய்வதெனத் தீர்மானித்த பின், சுமார் ஒரு மாத காலமாக ஓடியோடி பணம் புரட்டி, பொருள் சேர்த்து மேற்கொண்ட ஏற்பாடுகள் இவை. சென்ற வருடச் செய்கையில், எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகவே செழிப்புற்று விளைந்து, கைகளிலும் பைகளிலும் வழிய வழியப் பணம் நிரம்பிய மகிழ்ச்சியின் பூரிப்பு, மீண்டும் அதனைத் தொடர்வதற்கான உந்துதலையும் அழுத்தத்தையும் அவருள் குத்திற்று.
அந்த உந்துதல், உடலைச் சக்கையாகப் பிழிந்து வருத்தும் புகையிலைச் செய்கையின் கொடிய சிரமத்தைக் கூட மறக்கச் செய்து விட்டிருந்தது.
போதாததற்கு, 'கஸ்டப்படாம காசி உழெக்கேலுமா..?' என்ற மனைவியின் ஊசியேற்றலும் அவரை வெகுவாகத் தூண்டி விட்டது.
கண்களால் துழாவிக் கொண்டே சிந்தனையுடன் நடந்து வந்த போடியார், ஒரு வண்டிலை மறைவாக்கிக் கொண்டு குந்தியிருந்து சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த வேலையாட்களில் ஒருவனான மம்மனிவாவைக் கண்டார். சுறுக்கென்று அவரது மூக்கு நுனியில் கோபம் ஆர்த்தெழுந்து பற்றியது. ஆத்திரத்தில் அதட்டிச் சத்தமிட்டார்.
''டேய் மம்மனிவா...! இஞ்செ வாடா நாயே...''
போடியாரைக் கண்டதும் அவனுக்கு உதறல் எடுத்தது. சுருட்டைத் தூர வீசிவிட்டு நடுங்கும் கால்களுடன் எழுந்து நடந்து அவரை அண்மித்தான்.
''பளீர்! பளீர்!!''
அவனது வலது கன்னம் கன்றிச் சிவந்து போனது.
''பற நாயே. இஞ்செ என்னடா கிழிச்சிக்கிட்டு இரிக்காய்..? போடா... போய் வேலெயப் பார்ரா பறயா....''
அவன், கன்னத்தைத் தடவிக் கொண்டே ஓடிப் போய் மூட்டைகளைத் தூக்கி அடுக்கத் தொடங்கினான்.
போடியார் வீட்டுக்குள் நுழைந்தார். நேற்றிரவு முழுக்கக் கண் விழித்துச் சுட்ட பலகாரங்களையெல்லாம் சிறிய உரபேக்கில் கொத்தாகக் கட்டி வைத்திருந்தாள் போடியாரின் மனைவி.
அச்சிப்பலகாரம், பயித்தம்பலகாரம், எண்ணெய்ப்பலகாரம் என்பவற்றோடு, போடியார் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய வாரப்பமும் அதற்குள் துருத்திக் கொண்டிருந்தன.
வண்டிலில் போடும்படி கூறி அனுப்பி விட்டு, மனைவியிடமும், இடுப்பில் பிள்ளையை இடுங்கிக் கொண்டு கதவில் சாய்ந்து நின்றிருந்த மூத்த மகளிடமும் விடைபெற்றார்.
முதல் வண்டிலில் போடியார் ஏறிக்கொள்ள, பின்னால் நின்றவற்றில் அவரது மச்சான், மாமா, வேலையாட்களும் ஏறிக்கொண்டனர்.
''தா...... தா...... ம்...''
வண்டில் ஓட்டிகளின் உந்துதலையும் விசுக் விசுக்கென்ற ஒலியோடு மேலில் விழும் கேட்டிக்கம்புகளின் அடியையும் வாங்கிப் புறுபுறுத்துக் கொண்டே முக்கி முனகிக் கொண்டு ஓடத்தொடங்கின மாடுகள். ஆங்காங்கே சிதறிக் கிடந்த கிறவல் உடைசல்களை நசித்துத் துவம்சம் செய்த வண்டில் பட்டங்கள், மெயின் வீதிக்கு ஏறிய போது, கடகடவென்ற சப்தத்துடன் உருண்டு ஓடலாயிற்று.
பூவரசை மரங்களடர்ந்த ஊரின் தெரு, கொஞ்சங் கொஞ்சமாக தன் கண்களிலிருந்து நழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்தவாறே ஆயாசமாக அமர்ந்திருந்தார் அஹமதுலெவ்வைப் போடியார்.
தம்மன்கடுவயில் பூமிக்கூட்டம் நடைபெற்றதும் அவ்வூரைச் சேர்ந்த சின்னத்தம்பி விதானை ஒரு காணித்துண்டைப் பெற்று, புகையிலைச் செய்கைக்காக தனக்கு வழங்கியதும் அவரது நினைவுகளுக்குள் தளும்பி ஆடிற்று.
போய்ச் சேர்ந்ததும், புற்பூண்டுகளையும் செடிகொடிகளையும் வெட்டி காணியை வெளிசாக்க வேண்டும். நாற்றுமேடையில் விதைகளை நட்டு புகையிலைச் செடிகளை வளர்க்க வேண்டும்.
விதைகள் துளிர்விட்டு சற்று வளர்ந்ததும், அவற்றைப் பிடுங்கியெடுத்து பாத்திகளில் நட வேண்டும். நாள் தவறாமல் அட்டியில் தண்ணீர் மொண்டு செடிகளுக்கு ஊற்ற வேண்டும். அவை நன்கு வளர்ந்து செழிப்பதற்குள் எப்படியும் நான்கைந்து மாதங்கள் ஓடிப் போய் விடும்.
ஓட்டுப் பள்ளிவாயலிலிருந்து எழுந்து காற்றில் மிதந்து வந்த, மசலாத்தூள் மோதினாரின் சுபஹ் தொழுகைக்கான சத்தம், மெல்லென செவிகளுக்குள் புகுந்தது.
பைக்குள் தொப்பியும் முசல்லாவும் எடுத்து வைத்ததா என்று யோசித்துப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டார் போடியார்.
சென்றமுறை போன்றில்லாமல், இம்முறை வேலையாட்களோடும் பொடியன்களோடும் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொள்ள வேண்டுமென்று மனதுக்குள் எண்ணிக் கொண்டார். அடர்த்தியான அனுபவங்களின் அறிவுறுத்தல்கள் அவருக்கு முன்னால் சடைத்து நின்றன.
சென்றமுறை, மீரான் என்ற பொடியனை வாடிக் காவலுக்கு வைத்திருந்தார். பாத்திக்குள் தண்ணீர் பாய விட்டுவிட்டு, உள்ளே இறங்கி நடந்து சென்றவனை வெகுநேரமாகியும் காணவில்லை.
தேடிக்கொண்டு போன போடியார், வரப்பினடியில் பாத்திகளில் ஓடி வரும் நீரில் பாதி உறுப்புகள் மூழ்கியதும் தெரியாமல் மல்லாந்து படுத்துக் கிடக்கும் மீரானைக் கண்டார். அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
பக்கத்தில் கிடந்த சுள்ளிப் பிரம்பை எடுத்து விசுக்கு விசுக்கென்று, அவனது முதுகிலும் தொடையிலும் இரத்தக் கோடுகள் பதிய விசுக்கினார்.
சொவியில் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று, புகையிலை சீவும் கத்தியை எடுத்து, கதறக்கதற அவனது கண் இமைகளைக் கத்தரித்து விட்டார். அவற்றைக் கையிலெடுத்து உயர்த்தி வாயினால் ஊதி, காற்றில் பறக்கவிட்டார்.
'போடா நாயே..... போய் வேலெயப் பார்ரா....' என்று தூஷண வார்த்தையால் திட்டிக் கொண்டே அவனது பிட்டத்தில் கால்களால் உதைத்துத் தள்ளினார்.
இப்படியெல்லாம் கடினமாக நடந்து கொள்வது தவறென்று எப்போதுமே அவர் எண்ணியதில்லை. கண்டிப்பு இல்லாவிட்டால் வேலை நடக்காது என்பது அவர் நன்கறிந்ததுதான்.
பொழுது, வெளிச்சம் பரப்பி மெல்ல மெல்ல மேலுயர்ந்து உச்சிக்கு வந்திருந்தது. ஓட்டமாவடி பாலத்தைத் தாண்டி நாவலடிச் சந்தி வந்து விட்டதை உணர்ந்ததும், பயணத்தை நிறுத்தினார் போடியார்.
எல்லோரும் வண்டிலை விட்டுக் கீழே இறங்கினார்கள். வண்டிலிலிருந்து மாடுகளை அவிழ்த்து, மரங்களில் கட்டிப்போட்டு மேய விட்டார்கள்.
இருபுறங்களிலும் அடர்ந்து சடைத்து நின்ற காட்டு மரங்களிடையில் போய் அமர்ந்து கொண்ட போடியார்,
இடுப்பில் செருகி வைத்திருந்த வெற்றிலைக் குட்டானை எடுத்து விரித்தார். அதற்குள்ளிருந்த பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை, கைப்பு இத்யாதிகளை எடுத்து, வெற்றிலைக்குள் வைத்துச் சுற்றி கொடுப்புக்குள் தள்ளினார். வலுவான பற்களால் கடித்துக் குதப்பிக் கொண்டே அருகில் விரலால் மண் தோண்டித் துப்பிவிட்டு மூடினார்.
பகல் சாப்பாட்டுக்கான சமையலுக்குத் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கினார்கள் வேலையாட்கள். கடைவாயால் வழிந்த வெற்றிலைப் பாணியை புறங்கையால் அழுத்தித் துடைத்து விட்டவாறே போடியார் கத்தினார்.
''தேய்... பதயதுகாள்... கெதியா சமையத பாதுங்கதா...''
வெற்றிலை அதக்கிய கொடுப்புடன் அவர் பேசியது அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால், ஏதோ ஏசுகின்றார் என்பதை அனுமானித்துக் கொண்டு, சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டனர். அடுப்பு மூட்டி, அரிசரித்து சோறாக்கி, கொண்டு வந்த சுங்கான் கருவாடையும் மய்யர் கிழங்கையும் போட்டு பாலாணக் கறிசமைத்து, திராயில் ஒரு சுண்டலும் செய்து, சமையல் வேலையை முடித்தார்கள்.
உண்டு முடித்து களைப்பாறி விட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கிய போது, பொழுது மறைந்து, வெள்ளி முளைக்கும் இருட்பொழுது மெல்ல மெல்லக் கவிந்து கொண்டிருந்தது.
அரிக்கன் லாம்பைக் கொழுத்தி வண்டிலில் தொங்க விட்டுக் கொண்டே, அதன் வறிய வெளிச்சத்தில் வீதியை இனங்கண்டு புறப்பட்டார்கள்.
ஓட்டமும் நடையுமான மாடுகளின் இழுப்புக்கு ஏற்ப ஆடியசைந்து கொடுத்துக் கொண்டே வண்டில் நகர்ந்தது. வண்டில்காரன் கேட்டிக் கம்பினால் ஓங்கி அடிக்கையில் வேகம் பிடித்து ஓடுவதும் சிறிது தூரம் சென்றதும் வேகத்தைக் குறைத்துக் கொள்ள முயற்சிப்பதும் பின், அடிவாங்கிக் கொண்டு மீண்டும் வேகம் காட்டுவதுமாக மாடுகள் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தன.
நேரமாக ஆக, தூக்கக் கலக்கம் போடியாரின் கண்களை வாட்டியெடுக்கத் தொடங்கிற்று.
புகையிலைவாடித் தொழில், உடம்பைக் கசக்கிப் பிழியும் மிகக் கஷ்டமான தொழில்தான். இரவிலும்
பகலிலும் தூங்காமல் வாரக்கணக்காக விழித்திருந்து வேலை செய்ய வேண்டும்.
செடிகளை பாத்தியில் நட்டுவிட்டால், பிறகு கொஞ்ச நேரம் குந்துவதற்குக் கூட அவகாசம் கிடைக்காது. நேரத்துக்கு சாப்பாடும் இல்லாமல், வெயிலில் முறுகிச் சவுங்க வேண்டும்.
சடைவுற்றுத் துவண்டு போகும் மனம், தூக்கத்திலும் ஓய்விலுமான எதிர்பார்ப்பில் வித்திக்கொண்டு நிற்கும். நின்று கொண்டே தூங்குவது, நடந்து கொண்டே தூங்குவது என்பதெல்லாம் இங்கு வெகு சகஜம்.
செடிகள் நன்றாக வளர்ந்து செழித்து விட்டால், வேலைகளெல்லாம் பன்மடங்காகப் பெருகி விடும். சில செடிகளின் இலைகள் பெரிய சுளகின் அளவுக்கு அகன்று விரிந்து கிடக்கும். அதைப் பார்க்கப் பார்க்க மனதுக்குள் மகிழ்ச்சி குபுகுபுவென ஊறும்.
குறிப்பிட்ட காலம் வந்ததும் செடிகளிலிருந்து தண்டுகளோடு இலைகளை வெட்டியெடுப்பார்கள். அகன்ற ஆழமான குழி தோண்டி, மேலும் கீழும் செடிக்காம்புகளைப் போட்டு, நடுவில் புகையிலைகளை வைத்து மண்ணை மூடி விடுவார்கள்.
இரண்டு மூன்று நாட்களுக்கு வெளிக்காற்றுத் தொடர்பின்றி, முழுக்க மூடிய மண்ணின் இருளுக்குள் புதையுண்டு அவியும் அந்த இலைகள், தம் பச்சை நிறம் களைந்து கறுப்பாய் பிசுபிசுக்கத் தொடங்கி விடும்.
மண்ணைத் தோண்டி அவற்றை வெளியே எடுத்து ஒவ்வொரு தண்டாக கட்டித் தொங்கவிடுவார்கள். காய்ந்த பின், கையிலெடுத்து கத்தியால் சீவி இலைகளை மட்டும் வேறாக்கி எடுப்பார்கள்.
மூடத் துடிக்கும் இமைகளை முரண்டு பிடித்து விரித்து வைத்துக் கொண்ட தூக்கத் திரட்சியுடன் இலைகளை சீவும்போது, கத்தி பிசகி அதன் பளபளக்கும் கூர்முனை உள்ளங்கைத் தோலை ஒதுக்கி விட்டு, இரத்தம் கொப்பளிக்கச் செய்வதுமுண்டு.
குழியிலிருந்து இலைகளை அள்ளி வருபவர்கள், தூக்கத்தின் முரட்டுப் பிடிக்குள் சிக்குண்டு, வழிதவறி வேறு வாடிகளுக்குச் சென்று வேலிகளில் முட்டித் திரும்புவதுமுண்டு.
இச்சந்தர்ப்பங்களிலெல்லாம், போடியார் அங்கு இல்லையென்றால் எந்த வேலையும் நடக்காது. போட்டது போட்டபடி அப்படியே கிடக்க, எல்லோரும் விழுந்த விழுந்த இடத்திலேயே குப்புறக் கிடந்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
போட்ட முதலை, இலாபத்துடன் மீட்டெடுக்க வேண்டுமானால், கடினத்தன்மையையும் கண்டிப்பையும் முகமூடியாகவேனும் அணிந்து கொண்டேயாக வேண்டிய கட்டாயம் தனக்கிருப்பதை போடியார் நன்கறிவார்.
ஓட்டமும் நடையுமான மாடுகளின் இழுப்பில், வண்டில்கள் புணானையை வந்தடைந்த போது, நிலவு உச்சத்தில் நின்று காய்ந்து கொண்டிருந்தது. போடியார் அசதியாக உணர்ந்தார். பசி வயிற்றை நகம் நீட்டி நோண்டத் தொடங்கியிருந்தது.
வண்டிலை விட்டுக் கீழே இறங்கியவர், கொடுப்புக்குள் அதக்கி வைத்திருந்த வெற்றிலை பாக்கைத் துப்பி விட்டு சத்தம் போட்டார்.
''டேய்... பறயனுகாள்... சும்மா பிலாக்குப் பாத்துக்கிட்டு நிக்காம, இறங்கி சோறாக்கிற வேலெயப் பாருங்கடா... ம்...''
எல்லோரும் இறங்கினார்கள். மாடுகளை அவிழ்த்துக் கட்டிவிட்டு சமையல் வேலையைத் துவங்கினார்கள். பச்சரிசிச் சோறும் விரால் கருவாட்டுக் கறியும். போடியார் ஒரு பிடி பிடித்தார். வயிறு முடாப்பானையாக உப்பி, புளித்த ஏப்பம் சத்தமாக எழுந்து காற்றில் கரைந்தது.
துண்டை விரித்துக் கொண்டு அனைவரும் தரையில் சாய்ந்து ஆர்ப்பாட்டமான குறட்டைச் சத்தத்துடன் உறங்கிப் போனார்கள்.
மறுநாள், கண் விழித்து கடமைகளையும் முடித்துக் கொண்டு, குறுணல் கஞ்சி காய்ச்சிக் குடித்து காலைப் பசியைத் தீர்த்த கையோடு, பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
எதிர்ப்பட்ட காடு மேடுகளையும் பசுமை குமையும் மலை முகடுகளையும் தாண்டி கடகடத்து ஊர்ந்த வண்டில்கள், வெலிகந்தையிலும் கடவத்தமடுவிலும் தங்கி ஓய்வெடுத்து, மீண்டும் புறப்பட்டு தம்மன்கடுவையை வந்தடைகின்ற போது, மூன்றாவது நாளின் பின்னேர இருள் எங்கும் அப்பிக் கொண்டிருந்தது.
போகின்ற போதுதான் இந்தத் தாமதம். புகையிலையை அறுத்தெடுத்து, வாடியை ஒதுங்க வைத்துக் கொண்டு வரும்போது இப்படியெல்லாம் தங்கி ஓய்வெடுப்பதில்லை அவர்கள். இடைவிடாமல் இரவிலும் பகலிலுமாக ஓடி, ஒரே நாளுக்குள் ஊரை வந்தடைந்து விடுவார்கள்.
'போறத்தில இருக்கிற அவசரம் வாறத்தில இருக்கிறதில்ல' என்பது அவர்களளவில் பொய்த்துப் போன வாழ்க்கைத் தத்துவமாயிற்று.
எல்லோரும் வண்டிலை விட்டு இறங்கினார்கள். சின்னத்தம்பி விதானையார் பெற்றுத் தந்த அந்தக் காணித் துண்டை, போடியார் சுற்றிவர நோட்டமிட்டார். செடிகொடிகளும் புற்பூண்டுகளும் நடுநடுவே சிறு மரங்களுமாக, நாலு ஏக்கருக்கு பசுமை பரப்பி நின்ற அந்தக் காணி, அடர்த்தியான பச்சைச் சிரிப்பை அவரது முகத்தில் உமிழ்ந்து கொண்டிருந்தது.
'இதை வெளிசாக்குவதற்கு இரண்டு மூன்று நாட்களாவது தேவைப்படும்'
மனதுக்குள் எண்ணிக் கொண்டவர், மறு பக்கம் திரும்பி குரல் கொடுத்தார்.
''டேய்... பேயன் பிலாக்காயப் பாக்கிற மாதிரி என்னத்தடா பாத்துக்கிட்டு நிக்கிறீங்க. சாமானெல்லாத்தெயும் இறக்கி வெச்சிப்போட்டு வேலெய ஆரம்பிங்கடா...''
எல்லோரும் புறுபுறுவென்று மூடைகளையும் கூடைகளையும் இறக்கி வைக்கத் தொடங்கினார்கள்.
''மம்மனிவா இஞ்செ வாடா...''
அவன் வந்தான்.
''அடுப்ப மூட்டி சுடச்சுட தேயிலெ வெச்சிக் கொண்டா. இஞ்சிய கொள்ளெயா போட்றாதெடா. அதோட, பேக்குக்குள்ள பணியாரமெலாம் இரிக்கி. அதெயும் எட்டுத்துட்டு வா''
அவன் பவ்யமாய் தலையாட்டிக் கொண்டே அப்பால் சென்றான்.
போடியார், அங்கு கிடந்த மரக்குற்றி ஒன்றில் போய் அமர்ந்து கொண்டார். மரங்களையும் செடிகளையும் தழுவி வந்த தென்றல் காற்று, பசுமையான இயற்கை வாசனையாக அவர் முகத்தில் பரவிச் சென்றது.
இனி ஒரு ஆறு மாதத்திற்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாத இயந்திர வாழ்க்கை. எல்லோரையும் மேய்த்து, தானும் மேய்ந்து........ இருக்கின்ற பணத்தை கணக்குப் பார்த்து செலவழித்து........ முடிந்ததும் ஊருக்கு ஓடிச் சென்று பேங்கைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு மறுநாளே வாடிக்கு ஓடி வந்து.........
போடியார் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். இனி இந்த ஆசுவாசம் எப்போது கிடைக்குமோ என்ற ஆதங்கத்துடன்.

No comments:
Post a Comment