Friday, April 1, 2011

வெளிச்சம்

இருள் கவிந்த அந்த இரவுப் பொழுதிலே, ஊர் முழுவதும் உறங்கி, ஓசைகளும் அடங்கியிருக்க தான் மாத்திரம் தூக்கமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் றினோஸா. அவளது சிந்தனை முழுவதிலும் அஷ்ரபின் உருவமே நிரம்பியிருந்தது.

காலையில் நடந்த நிகழ்ச்சிகளை மனம் தானாக அசை போட்டுக் கொண்டிருந்ததாலும் அஷ்ரப் கூறிய அந்த வார்த்தைகள் அடிக்கடி அவளது உளச்செவிப்பறைகளில் வந்து மோதிக் கொண்டிருந்ததாலும் தன் தூக்கத்தை முற்றாக இழந்து போனாள் றினோஸா.

பல மணி நேரம் போராடியும், சிந்தனைகளை ஒருங்கிணைத்துத் தூங்க முடியாமற் போகவே, சோர்வுடன் கட்டிலில் எழுந்து அமர்ந்தாள். தலையை உயர்த்தி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவள், வியந்தாள். 'நள்ளிரவைத் தாண்டியும் இன்னுமா தூக்கம் வரவில்லை!'


அலுத்துக் கொண்டவளாக, எழுந்து வந்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். குளிர்ந்த நீர் உள்ளே சென்றதும், சற்றுத் தெம்பு வரப்பெற்ற றினோஸா, சிந்தனையில் ஆழ்ந்தவாறே, அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடக்கலானாள்.

'அஷ்ரப் அழகானவர்தான். நல்ல குணமும் திறமையும் உள்ளவர்தான். கண்ணியமான அரச உத்தியோகத்தில் இருப்பவருங்கூட. அதற்காக, என்னுடைய கொள்கைகளையும் இலட்சியங்களையும் புறக்கணித்து விட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன! அவரை நான் திருமணம் செய்து கொண்டால் நான் இதுவரை காலமும் மனதில் கொண்டிருந்த வைராக்கியம் என்னாவது!'

அவளது உள்மனது, தன்மானத்தைப் பற்றி ஒரே கோணத்திலேயே சிந்தித்துக் கொண்டிருந்தது. சிந்தனையில் ஆழ்ந்தவாறே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த றினோஸா, அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த முழுநீள நிலைக்கண்ணாடியின் முன்னால் வந்து நின்று, அதில் தெரிந்த தன் உருவத் தோற்றத்தை ஆழமாக ஊடுருவினாள்.

இருபத்து நான்கு வயதுடைய ஓர் அழகான இளம் யுவதிக்கு இருக்க வேண்டிய அத்தனை இலட்சணச் செழிப்புகளும் தன்னில் நிறைவாக இருப்பதை அவள் உணர்ந்தாள்.

'இத்தனை அழகு இருந்தும் அவற்றை ஓர் ஆண் மகனின் கைகளில் ஒப்படைக்கவில்லையெனில் அவற்றில் என்ன பிரயோசனம்தான் இருக்க முடியும்!'

அவளது பெண்மை உணர்வுகள் அவளது நிகழ்கால வாழ்வு நிலையின் பொய்மையை இலேசாகக் குத்திக்காட்டிய போது, அவள் விழித்துக் கொண்டாள்.

இல்லை! ஒரு பெண் அழகாக இருந்தால், அவள் திருமணம் செய்தேயாக வேண்டுமென்று நிர்ப்பந்தம் எதுவும் இல்லையே. கலாசாரங்களும், பகுத்தறிவுடன் சற்றும் ஒத்துணர்த்த முடியாத மரபுகளும் அத்தகைய ஓர் அழுத்தத்தைக் கொடுத்தாலும், அதற்குக் கட்டுப்பட வேண்டிய அவசியத்திலிருந்து தான் எப்போதோ தனித்து விடப்பட்டு விட்ட நிலையில் இது பற்றிய அவதானமெல்லாம் எதற்கு?

தவிரவும், திருமணம் என்பது அவரவரது மன விருப்பத்தையும், உடன்பாட்டையும் பொறுத்த தனிப்பட்ட விடயம். அதில் பிறர் தலையீடுகளோ வற்புறுத்தல்களோ நிகழ்வது எப்படிச் சாத்தியமாகும்! அது எவ்வாறு அங்கீகரிக்கப்பட முடியும்!

சிலர், உடலிச்சையை நோக்காகக் கொண்டு திருமணம் செய்வர். வேறு சிலர், தமது சுக-துக்கங்களின் பகிர்வுக்கான துணைக்காகவும், தாய்-தந்தையரின் கட்டுப்பாடுகளிலிருந்தான விடுதலைக்காகவும் திருமணம் செய்வர்.

ஆனால், தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக றினோஸாவுக்குத் தோன்றவில்லை. அது பற்றிய சிந்தனையே அசூசையான விடயமெனத் தோன்றுமளவு அவளுள் வெறுப்பு மூண்டிருந்தது. சிறுவயதிலேயே அன்புத் தாயையும், கொடூரத் தந்தையையும் இழந்து தனியாகத் தவித்தவள் அவள்.

பெற்றோரிருவரையும் பலியெடுத்த பாவி என்ற பழிச்சொல்லுக்காளாகி, உறவினர்களின் ஆறுதல் வார்த்தைகளுக்கும் அருகதையற்றவளாக மாறி, மனமுடைந்து வெதும்பிய போதிலும், நெஞ்சுறுதியைத் தளரவிடாது, தனித்தவளாக நின்று முன்னேறி, இன்று ஊரிலுள்ள அல்முனீரா மகாவித்தியாலயத்தில் நியமனம் பெற்ற ஆசிரியையாக கடமையாற்றுமளவு சமூகத்தில் உயர்வு பெற்றிருந்தாள்.

'சிறுவயதிலிருந்தே துன்பப்பழுக்களை தனியாளாய் சுமந்து சுமந்து பழகிப்போன எனக்கு, இப்போது மட்டும் அதைப் பகிர்ந்து கொள்ளத் துணையெதற்கு! இன்று வரை சகல சுக துக்கங்களையும் மனதினுள்ளே அழுத்திப் புதைத்து, தனியாக நின்றே வாழ்வை நகர்த்தி வந்த நான், இனிமேலும் அப்படியே வாழ்ந்து மடிந்து விடப் போகிறேன். இந்த எனது கொள்கையில், எந்த சலனங்களும் ஏற்பட்டு விடக்கூடாது'

றினோஸா மனதுக்குள் உறுதியெடுத்துக் கொண்ட போது, அஷ்ரபின் முகம் மீண்டும் அவளது மனத்திரையில் படமானது. காலையில் அவன் சொன்ன வார்த்தைகள், மீண்டும் அவளது செவிப்பறைகளில் வந்து மோதி, இம்சைப்படுத்தின.

''றினோஸா! நான் உங்களத் திருமணம் முடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதில கட்டாயம் எதுவுமில்ல. நீங்க நிதானமா யோசிச்சு, நல்ல முடிவச் சொல்லுங்க!''

தலையைப் பலமாக அசைத்துக் கொண்டாள் றினோஸா. 'வேண்டாம். திருமணமும் வேண்டாம், திருமணத்தின் பின்னான கணவனின் வெறியாட்டங்களும் வேண்டாம். அவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் அடிமை வாழ்க்கையும் வேண்டாம். அதைவிட, கண்ணியம் தவறாத சுதந்திரத்துடன், தனியாகவே வாழ்ந்து விடுவது எவ்வளவு மேலானது'

அவளது மனம் தன் தீர்மானத்தைத் தெளிவாகக் கூறிய போதும், அவளது உணர்வுகளோ அதற்கு உடன்பட மறுத்து, அஷ்ரபின் நினைவுகளையே வற்புறுத்தித் திணித்தன. அவனது குரல் மீண்டும் அவளுள் அசரீரியாய் ஓங்கி ஒலிக்கலாயிற்று.

''றினோஸா! எவ்வளவு நாளைக்குத்தான் இப்பிடி தனியாகவே இருக்கப் போறீங்க. உங்களுக்கென்று ஒரு கணவன், குடும்பம், வாழ்க்கை இருக்க வேண்டாமா! ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணையாக இருப்பதுதான் உலக வாழ்க்கையில் மிக முக்கியமான நிலை. அந்த பந்தத்திற்கு வழிவகுப்பதுதான் திருமணம். நானும் இது தொடர்பாக உங்களிடம் நிறையத் தடவை பேசியிருக்கேன். ஆனா, நீங்க அதை மறுத்தும் வெறுத்துமே வருகின்றீங்களே!''

அஷ்ரப் கூறியதை நினைத்த போது, றினோஸாவுக்கு இப்போது சிரிப்பு வந்தது. கூடவே, ஆங்காரம் தொனிக்காத கோபமும் எட்டிப்பார்த்தது.

'இவ்வளவு காலமும் யாருடைய துணையுமில்லாமல் தனியாகத்தானே வாழ்ந்து வந்தேன். அப்போதெல்லாம் என்னவென்றும் கண்டு கொள்ளாத இவர்கள், இப்போது நான் சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்திற்கு வந்தவுடன் அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்களே. கரை சேர்ந்தபின் கைகொடுக்க வரும் இவர்களின் பரிவுகளும் பரிதாபங்களும் யாருக்கு வேண்டும். நான் இன்னும் முன்னேற வேண்டும். சமூகத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு வர வேண்டும். எல்லோரும் என்னை நிமிர்ந்து அண்ணாந்து பார்க்க வேண்டும். இதுவே எனது லட்சியம். இந்த லட்சியத்திற்குக் குறுக்கே திருமணமோ, கணவன்-பிள்ளைகளுடனான குடும்ப வாழ்க்கையோ எதுவும் குறுக்கிட்டு விடக்கூடாது'

உள்மனதில் உறுதியெடுத்துக் கொண்டாள் றினோஸா.

ஆயினும், திருமணம் என்றதும் துளிர்விட்ட பழைய காயம்பட்ட நினைவுகளெல்லாம், அவளது மென்னுள்ளத்தில் ரணவலியை ஏற்படுத்தி, சகிக்க முடியாத சோகக் கொதிப்பை அவள் மேல் கவிழ்த்து விட்டுக் கண்ணடித்தன.

'என்ட உம்மா....!' என்ற அவளது தாயாரின் ஓலக்குரலும், 'அடியேய் தேவடியாள்....!' என்ற அவளது தந்தையின் கர்ணகடூரக் கர்ஜிப்பும் படமெடுத்த பாம்பின் சீற்றமிகு தாக்குதலாய் அவளுள் வலி கொடுத்தன.

ஆறு வயதுச் சிறுமியாக இருக்கும் போதே, அந்த ஹிம்சைகளையெல்லாம் பார்த்துப் பார்த்து விரக்தியின் உச்சியில் தடுமாற்றமுற்றுத் தள்ளாடிக் கொண்டிருந்த றினோஸாவுக்கு, அப்போதே திருமணத்தின் மீது வெறுப்பும், குடும்ப வாழ்க்கை மீது எரிச்சலும் ஏற்பட்டுவிட்டிருந்தன. தாயின் வழிகாட்டலால் அவள் பாடசாலையில் சேர்ந்து 'அ' படிக்க ஆரம்பித்த போது, அவளை வற்புறுத்தி அழைத்து வந்து, வேற்று வீடொன்றில் வேலைக்கமர்த்தி, அதன் மூலம் பணம் சம்பாதிக்க முயன்ற தன் தந்தையின் மீது அவளுக்கு தீராத ஆத்திரமே தோன்றியது.

அப்போதிருந்த நிலையில் வெறுமனே ஆத்திரப்பட்டு உள்ளுக்குள் புழுங்குவதைத் தவிர அவளால் வேறெதுவும் செய்ய முடியுமாக இருக்கவில்லை. தான் பெண்ணாகப் பிறந்ததால்தான் இந்த அவலநிலையோ என்று, அந்தச் சிறுவயதிலும் அவளுக்குள் சிந்தனை உருவெடுத்து, ஆழமான உளக்காயங்களைத் தோற்றுவித்தது. காலப்போக்கில், அவையே மணவாழ்க்கை மீதான வெறுப்பாகவும் பரிணாமமுற்றன.

றினோஸா, இப்போதும் நினைப்பதுண்டு. மதுபானம் அருந்தி விட்டு நிறைபோதையில் வந்த தன் தந்தை என்ற அம்மனிதன் கீழே விழுந்து இறந்து போவதற்கு முன், தாயை அடிக்காது விட்டிருக்கலாம். அவ்வாறு விட்டிருந்தால், அவள் தன் தாயை இழந்து தவிப்புக்குள்ளாக வேண்டிய பரிதாப நிலைக்காளாகியிருக்க மாட்டாள். தாயையும், தந்தையையும் இழந்த பிறகு, நாதியற்று நிர்க்கதிக்குள்ளாகியிருந்த அவள், வயிற்றுப் பசிக்கு வீடுகளில் வேலை பார்த்துக் கொண்டும், அறிவுப்பசிக்கு பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டும் நெஞ்சுறுதியுடன் முன்னேறி, இன்று போதிய வசதிகளுடன் கூடிய ஓர் ஆசிரியையாக உயர்ந்திருக்கின்றாள்.

அவளோடு கடமையாற்றுகின்ற சக ஆசிரியர்களில் ஒருவனான அஷ்ரப், சில மாதங்களுக்கு முன்பே மாற்றலாகி, அவளது பாடசாலைக்கு வந்திருந்தான். தன்னைப் பற்றி அறிந்ததிலிருந்து, பரிதாபம் கொண்டவன் போல், அவன் தன்னையே சுற்றிச்சுற்றி வருவதை றினோஸாவினால் ஜீரணிக்க முடியவில்லையாயினும், அதை வாய்விட்டுச் சொல்லி, அவன் மனதைப் புண்படுத்தி விடக்கூடாதே என்பதற்காக சலிப்புடன் அவனை அனுமதித்து வந்தாள்.

'நானும் ஓர் அநாதைதான்' என்று கூறி, தன்னை அறிமுகம் செய்து கொண்டே நட்பைத் தொடங்கிய அஷ்ரப், இறுதியில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியாகக் கேட்டபோது, அது அவள் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்த போதிலும், ஏனோ அது அவளுக்கு அதிர்ச்சியையே தந்தது.

'நாளை பாடசாலைக்குச் செல்லும்போது ஒரு தீர்க்கமான முடிவோடுதான் செல்ல வேண்டும். அந்த தீர்க்கமான முடிவு என்ன என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும். அம்முடிவு எனது கொள்கைகளயும், லட்சியங்களையும் எந்த வகையிலும் பாதிக்காததாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் யோசித்த றினோஸாவுக்கு அஷ்ரபின் மீது பரிதாபம் ஏற்பட்டது.

'பாவம் அஷ்ரப்! அவரது மனதில் எந்தத் தீய எண்ணமும் கிடையாது. அநாதையாக நிற்கும் ஓர் அபலைப் பெண்ணுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அதற்காகவே என் மீது பரிவும் காட்டுகிறார். சொல்லப் போனால், ஏனைய யாரும் என் மீது காட்டாத அன்பையும், பாசத்தையும் அவர் என் மீது காட்டுகிறார். இந்நிலையில், அவரது வேண்டுகோளை மதிக்காது, எனது கொள்கையிலேயே நான் பிடிவாதமாக நின்றால், அவரது உள்ளம் எவ்வளவு காயங்களுக்கு உள்ளாகும்!'

அஷ்ரப் சொன்ன சில கருத்துகள், இப்போது அவளுக்கு நியாயமாகவே பட்டது. ''ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணையாக இருப்பதென்பது இயற்கையின் நியதி, வாழ்க்கை என்பது எப்போதும் சமாந்தரமாகவே இருப்பதில்லை. மேடுகளை விட பள்ளங்களே அதிகம். தவறுதலாகவோ, தவிர்க்க முடியாமலோ அந்தப் பள்ளங்களில் விழுந்து விடுகின்ற போது, கைகொடுத்து தூக்கிவிடுவதற்கு ஒரு துணை அவசியம். அந்தத் துணை வாழ்க்கை முழுவதும் வர வேண்டுமானால், அதற்கு ஒரே வழி திருமணம்தான்.

''றினோஸா நான் உங்களையே திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்புவதற்குக் காரணம், நீங்க மிகவும் அழகாயிருக்கிறீங்க என்பதற்காக அல்ல. உங்களைப்போல் நானும் ஓர் அநாதை. ஓர் அநாதையினுடைய மன உளைச்சலும், விரக்தியுணர்வும் இன்னொரு அநாதைக்குத்தான் நன்கு தெரியும். அதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால், புரிந்துணர்வோடு சந்தோஷமாக வாழ முடியுமென்று நான் நினைக்கிறேன்''

றினோஸா, தலையைப் பிடித்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தாள். இந்த விடயத்தில் என்ன முடிவெடுப்பதென்று தெரியாமல் அவளது உள்ளம் தடுமாற்றமுற்றுத் தத்தளித்தது.

'இறைவனே! இந்த விடயத்தில் நான் நல்லதொரு முடிவை எடுக்க எனக்கு நீதான் வழிகாட்ட வேண்டும்' என்று மனதால் இறைவனை வேண்டிக் கொண்டவள், சோர்வுடன் கட்டிலில் சரிந்தாள்.

கஷ்டப்பட்டு கண்களை மூடிக்கொண்டபோது, ஒப்பாரி வைத்து அழும் அவளது தாயும், சாராய நெடியுடன் அவளது கன்னங்களில் அறையும் தந்தையும் மனக்கண் முன்னே வந்து வந்து போயினர். நீண்ட நேரமாகக் கண்களை மூடியவாறே சிந்தனையில் ஆழ்ந்திருந்தவள். தன்னையறியாமலேயே தூங்கிப் போனாள்.

காலையில், ஐந்தரை மணிக்கு அலாரம் சத்தமிட்டபோது, களைப்புடன் கண்விழித்த றினோஸா, எரிச்சல் போகுமாறு கண்களை கசக்கி விட்டுக்கொண்டே, எழுந்த சென்று காலைக் கடன்களை முடித்தாள். அவசரமாக உணவையும் சமைத்து சாப்பிட்டு முடித்தபோது, பாடசாலை செல்லும் நேரம் அண்மித்து விட்டதை உணர்ந்தாள். பரபரப்புடன் உடை மாற்றிக் கொண்டு, வீட்டை விட்டுப் புறப்பட்டாள்.

வெயிலுக்குக் குடை பிடித்தவாறே, வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்த றினோஸாவின் மனதில், மீண்டும் அஷ்ரபின் நினைவுகள் தொற்றிக் கொண்டன. இரவு நீண்ட நேரம் தூங்காதிருந்து சிந்தித்ததில், இப்போது ஒரு நல்ல முடிவு தென்படுவது போல் உணர்ந்தாள். அதனை அஷ்ரபிடம் தெரிவிக்கும் போது என்ன நுட்பத்தைக் கையாளுவது என்று தீவிரமாக யோசித்தவாறே பாடசாலையை வந்தடைந்தவள், காரியாலயத்திற்குச் சென்று, தன் கையப்பத்தைப பதித்துவிட்டு, வகுப்புக்கு வந்தாள்.

மாணவர்களின் 'குட்மோர்னிங்'கிற்குப் பதில் சொல்லிவிட்டு, கதிரையில் அமர்ந்த றினோஸா, அஷ்ரப் எங்காவது தென்படுகின்றானா என்று பார்வையைச் சுழலவிட்டாள். தூரத்து வகுப்பறையில் இருந்தவாறு, தன்னையே நோட்டமிட்டுக் கொண்டிருந்த அஷ்ரபைக் கதண்டதும், சற்று தடுமாறிப்போனவள், பார்வையைத் திருப்பிக் கொண்டு மாணவர்களை முன்னோக்கினாள்.

றினோஸாவின் செய்கைகளையே பார்த்துக் கொண்டிருந்த அஷ்ரப், தன் மீது அவளுக்கேற்பட்டு விட்ட ஈர்ப்பை மறைக்கத் தெரியாத அனுபவமற்ற அவளது உள்ளத்துணர்வுகளையெண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டான். தான் வெற்றி பெறுவதற்கான முன்னறிகுறியென அது அவனுக்குத் தோன்றிற்று.

பதினொரு மணிக்கு இடைவேளை விட்டபோது, வகுப்பறையை விட்டு எழுந்த அஷ்ரப், ஒரு மாணவனை அழைத்து, இரண்டு ரீ வாங்கி வரும்படி பணித்து விட்டு, றினோஸாவின் வகுப்பறைக்கு வந்தான்.

படிப்பது போல், ஏதோவொரு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு சிந்தனை வயப்பட்டிருந்த றினோஸா, யாரோ வருவதை உணர்ந்ததும், அஷ்ரபாகத்தான் இருக்கும் என்று எண்ணியவளாகத் தலையை உயர்த்தினாள்.

புன்னகையுடன் நின்றிருந்த அஷ்ரபைக் கண்டதும், பதிலுக்குப் புன்னகைத்தவாறே, எதிரேயிருந்த நாற்காலியைக் காட்டினாள். மௌனமாக அமர்ந்து கொண்ட அஷ்ரப், எதுவும் பேசாது அவளையே ஆழமாக ஊடுருவினான். அவளது முகமாற்றங்களினூடாக அவளது மனத்தைப் படித்து விட முனைந்தான்.

யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்று இருவருமே தயங்கிக் கொண்டிருக்க, மனதைத் திடப்படுத்திக் கொண்ட அஷ்ரப், பரிவுடன் றினோஸாவை நோக்கினான்.

''றினோஸா! நேற்று நான் என் விருப்பத்தைத் தெரிவிச்சிட்டேன். நீங்களும் இரவு நிறையவே யோசனை பண்ணியிருப்பீங்க. நல்ல முடிவும் எடுத்திருப்பீங்க. இந்த திருமண விஷயத்தில உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காதென்று நினைக்கிறேன். நான் சொல்றது சரிதானே றினோஸா?''

அஷ்ரப் அன்புடன் வினவிய போது, மெல்ல அவனை ஏறெடுத்து நோக்கினாள் றினோஸா. உடலில் தொற்றிக் கொண்ட பதட்டத்தை மறைக்க அவள் பலவாறு முயன்றும், முடியாமற் போகவே, சிவந்திருந்த அவளது கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு, கன்னங்களில் கோடிழுத்தது.

''அஷ்ரப்! நீங்க என் மேல வைத்திருக்கிற மதிப்பும், அன்பும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு புதிய அனுபவம்தான். ஏனென்றால், என்மீது இவ்வளவு பாசம் காட்டிய எவரையுமே இதுவரையில் நான் சந்தித்ததில்லை. அதனால், உங்களது தூய்மையான இந்த அன்பையும், பாசத்தையும் உணர்ந்து நான் ஆனந்தப்படுகிறேன். அதேவேளை, இந்த அன்பு, பாசமெல்லாம் நிரந்தரமானதுதானா என்ற சந்தேகமும் எனக்கு வருகிறது...''

அவள் நிதானமாகக் கூறிக்கொண்டிருந்த போது, ரீ தம்ளர்களுடன் வந்த மாணவனைக் கண்டதும் பேச்சை நிறுத்தினாள்.

கொண்டு வரப்பட்ட இரண்டு ரீ தம்ளர்களில் ஒன்றை எடுத்து றினோஸாவிடம் கொடுத்த அஷ்ரப், மற்றொன்றைத் தான் எடுத்துக்கொண்டே அவளை நோக்கினான்.

''றினோஸா! நீங்க எதை மனசில வைத்துக்கொண்டு பேசுறீங்களென்று எனக்குத் தெரியும். உங்களது வாப்பா, உங்களது உம்மாவை மிக மோசமாக நடத்தினதாவும், அதனாலேயே அவங்க மௌத்தாப் போனதாவும் நான் கேள்விப்பட்டேன். ஆனா, அந்த சம்பவத்த மட்டுமே வைத்துக் கொண்டு உலகத்தில உள்ள எல்லா ஆண்களுமே அப்படித்தான் இருப்பாங்களென்று நீங்க நினைக்கிறது மகா தவறு றினோஸா. ஏனென்றால், உலகத்தில எத்தனையோ தம்பதிகள் மனக்கசப்புகளோ, சண்டை சச்சரவுகளோயில்லாம, புரிந்துணர்வோட மகிழ்ச்சிகரமா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. நாமும் அப்படியான ஒரு வாழ்க்கையையே தேர்ந்தெடுப்போமே. அது நம்ம கையிலதானே இருக்குது. அது தவிர, நீங்க நினைக்கிறது போலில்லாம, ஆண்கள்ள மனிதாபிமானமுள்ளவங்களும் நிறையப்பேர் இருக்கிறாங்க றினோஸா!''

அஷ்ரப் சற்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய போது, சாந்தமாக அவனை நோக்கினாள் றினோஸா.

''எனக்கு ஆண்கள் மேல எந்தத் தனிப்பட்ட வெறுப்புமில்ல அஷ்ரப். ஆனா, திருமணம் முடித்து வாழுகின்ற அந்தக் குடும்ப வாழ்க்கையிருக்குதே, அதைத்தான் என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அத்தோட, திருமணம் செய்வது என் முன்னேற்றங்களுக்குத் தடையா அமையுமென்று நான் நினைக்கிறேன். நான் சாதிக்க வேண்டிய விடயங்கள் இன்னும் எத்தனையோ இருக்குது அஷ்ரப். அதனால், என்னை திருமணம் முடிக்க வேண்டுமென்ற உங்களது எண்ணத்த தயவுசெய்து விட்டு விடுங்கள்''

பரிதாபத் தொனியுடன் அவள் வேண்டிக் கொண்ட போது, அவன் தலையசைத்து மறுத்தான்.

''இல்ல றினோஸா! நீங்க எல்லாவற்றையும் பிழையான கோணத்திலேயே சிந்தித்துப் பார்க்கிறீங்க. அதனாலதான், இப்படிப் பேசுறீங்க. ஒரு இளம்பெண், யாருடைய உதவியுமில்லாம, தனித்தவளாக நின்று, பல சாதனைகளைப் புரிவதும், முன்னேற்றம் காண்பதும் மிகச் சிரமமான விடயம். சொல்லப்போனா அது சாத்தியமில்லாத விடயமும் கூட'' அஷ்ரப் சாவதானமாகக் கூறிய போது, இலேசாக முகம் சிவந்தாள் றினோஸா.

''பெண்களென்றால் பலவீனமானவர்கள் என்று மட்டுந்தான் நீங்க எண்ணிக்கொண்டிருக்கிறீங்க. ஆனா, பெண்களால் தனித்து நின்றும் பல சாதனைகளை மேற்கொள்ள முடியும் அஷ்ரப். அதற்கு நானும் ஒரு உதாரணமா இருக்கப்போறேன்'' உறுதியான குரலில் தெளிவாகக் கூறினாள் றினோஸா.

''றினோஸா! நீங்க மேற்கொள்கின்ற எல்லா முயற்சிகளுக்கும் நான் உறுதுணையாயிருப்பேன். இதில உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனென்றால், ஒரு பெண், யாருடைய உதவியுமில்லாம தனித்து வாழ்வது பாரதூரமான பின் விளைவுகள ஏற்படுத்தும். அவளது வாழ்க்கையின் விடியல்களையும் முற்றாக அழித்து விடும். அதனால உங்களது முடிவ மாற்றிக் கொள்ளுங்க றினோஸா!'' கெஞ்சாத குறையாக வேண்டி நின்றான் அஷ்ரப்.

றினோஸா இப்போது அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். ''எனக்கு உதவியா இருக்க வேண்டுமென்று நீங்க நினைக்கிறீங்க. அப்படியரு உதவி தேவையில்லையென்று நான் நினைக்கிறேன். ஆனாலும், நீங்க விடுவதாக இல்ல. அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன்...'' கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள ஆவலுடன் அவளை நோக்கினான் அஷ்ரப்.

''எனக்கு அரை மணி நேரம் அவகாசம் கொடுங்க, நான் இப்போ வெளியே கிளம்புறேன். போய் வந்ததும், என் முடிவை நீங்களே அறிந்து கொள்வீங்க!'' என்று கூறியவாறு விருட்டென்று கதிரையை விட்டெழுந்தவள், வாயிலை நோக்கி நடக்கலானாள்.

''எங்கே போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?'' அஷ்ரப் ஆர்வத்துடன் கேட்டபோது, கதவருகில் நின்று திரும்பிய றினோஸா, ''அருகிலுள்ள அநாதை ஆசிரமத்துக்கு'' என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறினாள். 

குழம்பியவனாக தன் வகுப்பறையில் வந்தமர்ந்தான் அஷ்ரப். 'றினோஸா எதற்காக அநாதை ஆசிரமத்திற்குச் செல்ல வேண்டும். அதுவும் திருமண விடயம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த இந்த சந்தர்ப்பத்தில்!

ஒருவேளை... ஒருவேளை... றினோஸா தனக்குப் பிறந்த குழந்தையை இரகசியமாக ஆசிரமத்தில் சேர்த்து விட்டிருக்கிறாளோ. திருமணத்தை மறுப்பதற்கு அதையே காரணமாகக் காண்பிக்கப் போகின்றாளோ. தனியாக வாழ்ந்தவள்தானே, யாராவது வற்புறுத்திக் கற்பழித்து விட்டார்களோ!'

நினைத்த போது, அஷ்ரபின் நெஞ்சு முழுவதும் பதைபதைப்பு தொற்றிக்கொண்டது. நாவரண்டு, தொண்டை அடைத்துக் கொண்டது. உடலில் ஒருவித நடுக்கமும் எகிறலாயிற்று.

'இறைவனே! இது என்ன சோதனை. திடுதிப்பென குழந்தையும் கையுமாக றினோஸா வந்து நின்றால், நான் என்ன செய்வேன். அவளை மறக்கவும் முடியாமல், குழந்தையை ஏற்கவும் முடியாமல் வெந்து கருக வேண்டிய நிலையல்லவா எனக்கேற்படும்!' மனதுக்குள்ளே அழுதுகொண்டு கைகளைப் பிசையத் தொடங்கினான் அஷ்ரப்.

சிறுது நேரத்தின் பின், வாயிற்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவே, பதட்டத்துடன் திரும்பிப் பார்த்தவன், யாரோ தன் உச்சந்தலையில் சம்மட்டியால் ஓங்கியடித்தாற் போல், வலியிலும் அதிர்ச்சியிலும் உறைந்து போனான். அவன் நினைத்தது போலவே, ஐந்தாறு வயது மதிக்கத்தக்க அழகான ஒரு சிறுமியின் கையைப் பிடித்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தாள் றினோஸா.

கண்களை அகல விரித்தவாறு, கைகளைப் பிசைந்து கொண்டு எழுந்து நின்ற அஷ்ரபின் முன்னால் வந்த றினோஸா, சிறுமியைத் தனக்கு அருகில் நிறுத்திவிட்டு, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அதிர்ச்சியிலிருந்து மீளாதவன் போல், சிறுமியையும் றினோஸாவையும் மாறி மாறிப் பார்த்தான் அஷ்ரப்.

''என்ன அஷ்ரப்! ஆச்சரியமாயிருக்கா? இது என் குழந்தைதான். ஆசிரமத்தில் படித்துக் கொண்டிருந்தாள். இனிமேல் எனக்கு உதவியாக என்னோடுதான் இருக்கப் போகிறாள். எனக்கென்று உதவிக்கு ஒருவர் இருக்க வேண்டுமென்று நீங்க விரும்பினீங்க. அப்படியான ஒரு உதவியாளரா இனி இவள் இருப்பாள். ஒரு பெண்ணுக்குத் துணையில்லையென்றால், அவளது வாழ்க்கையில் விடியல்களே இருக்காதென்று நீங்க சொன்னீங்க. என்னைப் பொறுத்தவரை, விடியல் என்பது, வாழ்க்கையில் ஏற்படுகின்ற சந்தோஷம்தான். அந்த வகையில், இவள் எனது வாழ்க்கைக்கு விடியலாக இருப்பாள் என்றே நினைக்கிறேன். அதனால, நான் இனி திருமணமே செய்துக்கப் போறதில்ல.

''இது என்னுடைய தனிப்பட்ட கருத்துத்தான். என்னைப் போல பாதிக்கப்படுகின்ற எல்லாப் பெண்களும் இப்படித்தான் முடிவெடுக்க வேண்டுமென்று எனது கருத்தை நான் யாரிலும் திணிக்கவில்லை. ஏனென்றால், எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பது அவரவரது கைகளிலேதான் தங்கியுள்ளது. அதனால, இன்றோடு என்னைப் பற்றிய எண்ணங்களையெல்லாம் உங்க மனசிலிருந்து முற்றாக அகற்றிவிட்டு, உங்களுக்குப் பொருத்தமான நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்து, திருமணமும் செய்து கொள்ளுங்கள். என்ன அஷ்ரப்! நான் சொல்றது சரிதானே?''

புன்சிரிப்புடன் அவள் வினவியபோது, தலையசைத்து அதனை ஆமோதித்தான் அஷ்ரப்.

நிம்மதிப் பெருமூச்சுவிட்ட றினோஸா, அவனிடம் விடைபெற்றுக்கொண்டே, சிறுமியின் கையைப் பிடித்தவாறு அங்கிருந்து நடக்கவாரம்பித்தாள். சிறுமியின் மென்மையான கையின் ஸ்பரிசமும், தனக்குத் துணை கிடைத்து விட்டாள் என்ற உணர்வில் அவளில் ஏற்பட்டிருந்த குதூகலமும் தன்னுள்ளே சுகமான புதிய அனுபவமொன்றை படம்பிடித்துக் காட்டுவதாக உணர்ந்தாள் றினோஸா. 'உன் வாழ்க்கையின் விடியல்கள் வெகு தூரத்திலில்லை' என்ற மனதின் கூற்று, அவளுள் உவகை நிறைந்த இனிய சுகத்தை முழுக்க நிரப்பலாயிற்று.

எதிர்கால வெளிச்ச விடியல்களை நினைத்தவாறே நடந்து சென்ற றினோஸா, வாயிற்கதவை அடைந்ததும் நின்று திரும்பினாள். திக்பிரமை பிடித்தவன்போல், தன்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த அஷ்ரபைப் பார்த்து அவள் சொன்னாள்.

''அஷ்ரப்! ஒரு உண்மையைச் சொல்ல மறந்திட்டேன். இது என் குழந்தைதான். ஆனால், நான் பெற்றெடுத்த குழந்தையில்லை. ஆசிரமத்திலிருந்து நான் தத்தெடுத்த குழந்தை!''

No comments:

Twitter Bird Gadget