அகலக் கிளை விரித்த பூவரசை மரங்களின் மலர்ந்து சிரிக்கும் செழிப்பான பசுமைத் தோற்றம், வீதி மருங்குகளிலும் வீட்டு முற்றங்களிலும் நறுமணம் பரப்பி நின்ற நினைவுகள், பால்யத்தின் சுகத் தழும்புகளாக இன்னும் மனதில் அழுத்துகின்றன.
அந்தப் பூவரசை மரங்களின் கிளைகளடியில் படைபடையாகத் திரண்டு, வாய்வழியே நூலிழுத்துக் கீழிறங்கி வேலியோரங்களிலும் வீட்டுப் படிக்கட்டுகளிலும் ஊர்ந்து திரிந்து உடம்பிலேறி ரோமம் களைந்து அரிப்பை ஏற்படுத்தும் மயிர்க் கொட்டிகளை, இப்போது நினைத்தாலும் எரிச்சல் கிளர்ந்து, அருவருப்பு மூழும்.
ஒரு கம்பில் துணியைச் சுற்றி, அதில் எண்ணெய் ஊற்றி, நெருப்பைக் கொழுத்தி, மயிர்க்கொட்டிகளின் படையின் மேல் வைத்து அழுத்தும் போது, தனித்தனியாகவும் குழுக்குழுவாகவும் உதிர்ந்து வீழ்ந்து துடிதுடிக்கும் அவற்றின் வேதனை, கண்களூடு நிம்மதிச் செறிமானமுற்ற மகிழ்ச்சியின் ஆசுவாசப் பெருமூச்சாக மனதில் மெல்லெனப் படரும்.
பொன் கொழித்துப் பூமி விளைந்து, போடிமார் அரசோச்சிய காலமது. ஈரம் காவிய காற்றின் தழுவலில், தலைசாய்த்துச் சிரிக்கும் நெற்கதிர்களின் பசுமை வாளிப்பில், ஏழை விவசாயிகளின் தொடருழைப்பும் வியர்வை வாடையும் நறுமணம் பரப்பி நிற்கும்.
மறுநாள் உணவை மண்பானைக்குள் நிரப்பிக் கொண்டு, அரிக்கன் லாம்பை மாட்டு வண்டிலில் கொழுவி, நள்ளிரவு தாண்டி வயலுக்குப் புறப்படும் கணவனை வழியனுப்பி விட்டு, இடுப்பில் தூக்கிச் செருகிய சேலை முனையுடன் உழைப்பில் ஈடுபடுவாள் மனைவி. நெல்குத்தி அரிசாக்கும் அவளது பரம்பரைப் பழமை வாய்ந்த அனுபவத்தின் வெளிப்பாட்டில், நெல்மணிகளெல்லாம் பதர் களைந்து அரிசாகி, பளபளப்புடன் மூலைகளில் இளைப்பாறும்.
கைக்குத்தரிசியை மண்பானைக்குள் சமைத்து காரம், உப்பிட்டு, துடிக்கத் துடிக்க ஆக்கிய மீன் கறியுடன் பீங்கானில் போட்டு, வேப்பங்குச்சியில் பற்துலக்கி விட்டு வரும் கணவனுக்கு அதனைப் பரிமாறுவாள் மனைவி. மீன்களின் முள்ளை இலாவகமாக வெளியே இழுத்துப் போட்டு விட்டு, ருசித்து ருசித்து அவன் சாப்பிடும் அழகை, நாடியைத் தாங்கிய உள்ளங்கையுடன் ஆசையோடு பார்த்திருக்கும் அந்த மனைவியரின் உளப்பூரிப்புக்கு இங்கு வேறெதுவும் ஈடாகமாட்டாது.
அறுவடை செய்து சூடடிக்கும் காலப்பகுதியைச் சரியாகக் கணிப்பிட்டு, வானத்தைப் பிளந்தாற் போல் நீரை வாரிக் கொட்டும் அடைமழை, களத்தடியில் கால் புதையுமளவு வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்து விட்டு ஓயும். சூடைப் பாதுகாக்கும் முனைப்பில், வீடு வாசல் மறந்து வயலில் தவமிருக்கும் கணவனின் உடல் நலத்துக்காக, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை வைத்த சில்லறை நாணயங்களும் பச்சை அரிசியும் துணிகளில் சுற்றப்பட்டு வீட்டின் மோட்டு வளையில் தொங்கும்.
கைகளை நெற்றியின் தாழ்வாரமாக்கிக் கொண்டே மேயும் வயல் மீதான தம் பகல் நேரக் கண்காணிப்பையும் இரவில், மலவாடையுடன் வெள்ளாமையைக் குத்திக் கிளறித் துவம்சம் செய்ய வரும் பன்றிகளை, புரையில் வைத்திருக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்துக் கொண்டே விரட்டும் தம் ஆங்காரமான வீரத்தையும் கதைகதையாகச் சொல்லும் கணவர்கள், 'ம்.. மறுகா' என்று கூறி, ஆர்வத்துடன் குரலெழுப்பி உந்தி விடும் தம் மனைவியரை அன்பும் காதலும் முகிழ்க்கப் பார்த்தவாறே, தம் கதைகளைத் தொடர்வர். கணவன் உழைத்த பணத்தையும் அவன் கொண்டு வந்த நெல்லை குத்தி விற்ற பணத்தையும் பத்திரமாக முடாப்பானைக்குள் வைத்திருந்து, தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து செலவழிக்கும் மனைவியின் செயலில், குடும்ப அக்கறைக்கும் அப்பாலான கம்பீர பாவம் விரவிக் கிடக்கும்.
உறவினரை விட்டுப் பிரிந்து, தனிமையிலும் உச்சிப் பொழுதின் உடலைக் கருக்கும் தகிப்பிலுமாக மாதங்கள் பல கழிக்கும் புகையிலை வாடியிலான வாழ்க்கை, பலருக்கு நோயையும் குறைவுற்ற ஆயுளையுமே தேடிக் கொடுத்தது. பகல் முழுக்க விழிப்புடன் காவலிருப்போர், இரவுக் காவலில் அசதியுற்றுத் தூங்கி விடாதிருப்பதற்காக, அவர்களின் கண் இமைகளைக் கத்தரித்துக் கடூரமுமிழ்ந்த புகையிலை வாடிப் போடிமார், இறுதியில் கத்தரிக்கப்பட்ட அவர்களது இமை ரோமங்களாகக் கருகிக் கிடக்கும் தம் புகையிலைகளைக் கண்டு காரணமறியாது புலம்பியதுமுண்டு.
கைகளில் காசு புரள்வோரின் கௌரவத் தொழிலாக மதிக்கப்பட்ட புகையிலை வாடி, தன் உற்பத்திக்காக பல ஏக்கர் பொன்விளையும் பூமிகளை விழுங்கி ஏப்பமிட்டது.
வாடியை ஒதுங்க வைத்த பின், வெட்டிய புகையிலையை வீட்டுக்குக் கொண்டு வந்து, வட்டமாகச் சுற்றிச் சுற்றி அடுக்கி வைத்து, வாங்கிச் செல்ல வருவோரை எதிர்பார்த்து விழிபதித்திருப்பர். கறுத்த அதன் உடலும், அதன் உடலில் பட்டு உரசி வரும் காற்றின் துர்வாடையும் வீட்டில் எவருக்குமே பிடிப்பதில்லை.
பெருவிருட்சங்கள் இலையுதிர்ந்து, கிளையொடிந்து, முறிந்து வீழ்வதும் சில விதைகள் வேர்பிடித்து, துளிர் விட்டு, வளர்ந்து செழிப்பதும் இந்தத் தொழிலில் சகஜமான விடயங்கள்.
எப்போதேனும் ஒருநாள் அவர்களது மனைவி பிள்ளைகள், தமது கணவரின், தந்தையின் கைத்திறனைப் பார்க்கும் ஆவலில் வெள்ளாமை விதைத்த வயற்காணிகளுக்கு வருவர். எழுந்து வீசும் காற்றின் திமிர்ப்புக்கு ஈடு கொடுத்துக் கொண்டே, இடங்களைச் சுற்றிப் பார்த்து மகிழ்வர். உலையில் பச்சரிசிச் சோறாக்கி, அத்தாங்கில் பிடித்த குளத்து விராலை துடிக்கத் துடிக்கக் கறியாக்கி, வாடியின் முற்றத்தில் கிடக்கும் பயித்தம் புல்லுப் பாயில் அமர்ந்தவாறு, கண்களைப் பரவி, வயலைப் பார்வையால் தழுவிக் கொண்டே சாப்பிட்டுக் களிப்பர். ஊருக்குத் திரும்பியதும், முதல் வேலையாக பக்கத்து வீட்டுக்காரிகளையெல்லாம் அழைத்து, வீட்டின் முன்வாசலில் சுற்றி அமர்ந்து, தம் வயல் பயணத்தைச் சுவையான அனுபவமாகப் பகிர்ந்து கொள்ளாதவரை அவர்களுக்கு இருப்புக் கொள்ளாது.
நடந்தவற்றையெல்லாம் ஒரு பாட்டம் கொட்டி முடித்து விட்டு நிமிரும் போது, அவர்களது கண்களில் பெருமிதம் திமிறிக் கொண்டு நிற்பது பட்டவர்த்தனமாகத் தெரியும்.
மாடுகளும், மாட்டுப் பண்ணைகளும் அவர்களது முதன்மையான பொருள் வளமாகத் திகழ்ந்தன. கறக்கும் பால் தொடக்கம், கழிக்கும் சாணி வரைக்கும் தம் உடலையும் வாழ்வையும் பல்வேறு கோணங்களிலே மனிதர்களுக்குப் பயனுடையதாக்கிக் கொடுக்கும் அவற்றின் இருப்பு, தம் எண்ணிக்கைக்கேற்ப சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்திக் கொடுத்தது. திருமணச் சீதனமாகவும், மாப்பிள்ளையின் தர நிர்ணயமாகவும் கூட அதுவே திகழ்ந்தது.
பண்ணைகளில் பசு மாடுகளே நிரம்பிக் கிடக்கும். அறுவைக்குச் செல்லும் எருதுகளைத் தவிர்த்து, கம்பீரமும் ஆகிருதியான கொம்புத் தோற்றமும் கொண்ட மாப்பிள்ளைக் கிடாவொன்று பண்ணைக்குள் வளைய வந்து எல்லா பசுக்களிலும் தன் வித்துகளைப் பதித்து, இனத்தை விருத்தி செய்யும்.
காலையில், 'ம்மா...' என அணுங்கி அலறும் கன்றுகளை ஓரத்தில் கட்டிப் போட்டு விட்டு, தாய்ப்பசுவை நெருங்கி, அதன் மடியை தண்ணீரால் தடவியவாறு காம்புகளைப் பற்றியிழுத்துப் பால் கறக்கும் பெண்களின் அழகு, கோப்பைக்குள் வடியும் பாலின் செழுமை போலாகிப் பளபளக்கும்.
இவை ஒரு காலம்.
மனதில் பசுமை விதைக்கும் அந்த இனிமையான நிகழ்வுகளெல்லாம், வெறும் நினைவுகளாகவே மனதுள் புதைந்து போய்விட்ட நிகழ்காலம், பலரது கண்களை பனிக்கச் செய்து களைத்துப் போய்விட்டது.
வயற்காணிகளும், புகையிலை வாடிகளும் மாட்டுப் பண்ணைகளுமே மக்களின் சுயகௌரவத்தைத் தீர்மானிக்கும் ஆதிக்கச் சக்திகளாயிருந்த வீழ்ச்சி நிலையைத் தலைகீழாக்கி, அந்தச் சக்தியைக் கல்விக்கும் படிப்புக்கும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் தூண்டலையும் வழங்கியதில், இப்பகுதிகளில் வெடித்துப் பரந்த வன்செயல்களுக்கும் இனக்கலவரங்களுக்கும் முதன்மையான பங்கு இருக்கின்றது.
ஆனாலும், வயற்காடுகளையும் புல்வெளிகளையும் தழுவிக் கிடந்த நாட்களில், கண்களில் உயிர்ப்பெடுத்து, இதயத்தை ஊடறுத்த மென்மையான சுகானுபவங்களின் பிரிவும் இழப்பும் மனதின் ஒரு மூலையில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கின்றன. அடுத்த தலைமுறையின் இதயங்களில் இந்தச் சலனங்களின் சாயல் பதியுமா என்ற ஐயம் மனதில் வலி மிக்க அரிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
No comments:
Post a Comment