Tuesday, February 2, 2010

என் கதைகள்

ஒரு கதையைச் சொல்லும் போது, ஆன்ம திருப்தியும், தான் ஏலவே நிர்ணயித்து விட்ட தரமும் கருவும் நழுவி விடாதிருப்பதற்கான உறுதியான பிடிமானமும் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும். அதனுடன், சிறந்த உத்தியும் இணைந்து கொள்வது அவசியம்.

இந்த அம்சத்தைப் பார்வையிலிருந்து விலகிச் செல்ல விடாதிருப்பதற்காக நான் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியை எனது சிறுகதைகளின் ஒவ்வொரு வரியிலும் வாசகர்கள் உணர முடியும். மனித சமுதாயத்தின் மீதான அக்கறையை அடிப்படையாகக் கொண்டதாக எழுத்து அமைய வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பையும் இவற்றில் உள்வாங்கியுள்ளேன்.

எனது கதைகளில் உலாவுகின்ற ஒவ்வொரு கதை மாந்தரும், முழுக்க முழுக்க யதார்த்த வாழ்வின் பிரதி பிம்பங்கள். நான், என் வாழ்வில் பார்த்த, ரசித்து துயருற்று அனுபவித்த ஆன்மாக்களை முன்னுதாரணங்களாகக் கொண்டே இவை படைக்கப்பட்டுள்ளன. இதில் கற்பனையின் கலப்புக்கு மிகச்சிறிய அளவைத்தவிர இடம் கொடுக்கப்படவில்லை. அந்தக் கற்பனையும் கூட, என்னுடைய புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்டிருந்தமையின் காரணத்தால், நிர்ப்பந்திக்கப்பட்ட உண்மை தழுவிய யூகங்களேயாகும். ஏனெனில், இயல்பு நிலையை இழந்து விடுகின்ற போது, செயற்கைத்தனம் கோலோச்சி, கதாபாத்திரம் செத்துப் போய் விடும் நிலையை அடைந்து விடுகின்றது.


சமூகத்தில் நிலவுகின்ற ஒவ்வொரு முரண்பாடுமே, எழுத்தாளனுக்கு கருவாக அமைகின்றன. பிற சமூகத்தின் அடக்குமுறைகளும், அதனால் முகிழ்க்கும் போர்ச்சூழலும் அந்தக் கருக்களில் ஆக்ரோஷம் மிக்க உயிர்த்துடிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அத்தகைய ஓர் உயிர்த்துடிப்பின் அசைவை சிறிய - மிகச்சிறிய அளவேனும் என் கதைகளில் உங்களால் உணரமுடியும் என நினைக்கின்றேன். இது தவிர, இயல்பு வாழ்வின் கலாசார ஆன்மீக வீழ்ச்சிகளையும் உங்கள் முன் படம் பிடித்துக்காட்ட விழைந்திருக்கின்றேன். மனோபாவம் ஊடாக பின்னப்படும் உணர்வின் ஊடாட்டங்கள் மொழிகின்ற கதைகளும் இவற்றுள் உள்ளன.

உண்மையைச் சொல்வதானால், சிறுகதை இலக்கியத்தில் நான் பூரண அறிவு பெற்றிருக்கின்றேனா என்ற சந்தேகம் என்னுள் அடிக்கடி கிளர்ந்தெழும். ஈழத்திலும் இந்தியாவிலும் உள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்கும்போது, நான் எவ்வளவு பின் தங்கியிருக்கின்றேன் என்ற குற்றவுணர்வு என்னுள் அழுத்தம் கொடுக்கும்.

இது பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு ஏற்படக்கூடிய நிலைதானெனினும், சுயபுராணத்திலும் ஒருவர் முதுகை ஒருவர் சொறியும் சுகத்திலும் மூழ்கிக் கிடக்கும் அவர்களுக்கு, இது பற்றியெல்லாம் சிந்திக்கவும் கவலைப்படவும் நேரமிருப்பதில்லை.

என்னுடைய சகோதரர் உசனார் எம். பஷீரின் வழிகாட்டுதலில் இலக்கியப் பரப்பில் கால்பதித்த நான், சிறுவர் கதைகளையும் தொடர்ந்து சிறுகதைகளையும் அதன் பின்பே கவிதைகளையும் எழுதினேன். கவிதைத் தொகுதியை விட சிறு கதைத்தொகுதி சற்று பிந்திக் கொண்டதெனினும், முன்னையதில் கிடைக்காத திருப்தியும் மகிழ்வும் பின்னையதில் ஏற்பட்டுள்ளது உண்மையாகும்.

பத்திரிகைகளில் பிரசுரமாபவற்றையே வாசித்து, சிறுகதைகள் தொடர்பில் நான் கொண்டிருந்த தவறான புரிதலை நீக்கி, தரமான சிருஷ்டிகள் என் மூலமாகப் பிரசவமாகக் காரணமாக அமைந்தவர் என் மரியாதைக்குரிய பெரியப்பா, சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள். சிறுகதைகளை சரியாக இனங்காண்பித்ததோடு மாத்திரமல்லாமல், பல அற்புதமான சிறுகதை நூல்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி அவற்றைப் படிக்க உற்சாகமூட்டினார். எனது சிறுகதைகளின் பல்வேறு பரிமாணங்களிலும் எனது தொகுதிகளின் கனதியிலும் அவரின் பங்களிப்பு கணிசமானதாகும்.

பல சந்தர்ப்பங்களில், சிறந்த சிறுகதை எழுத்தாளன் என பிறரிடம் என்னைப் பற்றி அவர் அறிமுகம் செய்து வைக்கும் போதெல்லாம், வசிட்டரிடம் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விசுவாமித்திர முனிவரின் உள்ளத்துவகையை என்னால் உணர முடிந்தது.

சிறுகதைகள் எழுதுவது எப்போதுமே எனக்கு சந்தோஷமான, இலகுவான விடயமாக இருந்ததில்லை. மனதுக்குள் ஒரு கதை கருக்கட்டிக் கொள்ளும் போது, அதை எழுத்தில் வடிக்க வேண்டுமே என்ற ஏக்கமும், எழுத முடியுமா என்ற தயக்கமும் மனதின் இரு புறங்களிலும் வலியாக அழுத்தி சிலிர்ப்பை ஏற்படுத்தும். கருக்கள் பல சேர்ந்து விடும் போது, வரிசையாய் நின்று அவை அவஸ்தையாய் மனதை அரிக்கும். ஒவ்வொரு கதையின் முற்றுப் புள்ளியின் போதும், ஆசுவாசப் பெருமூச்சொன்று கிளர்ந்தெழும். ஆனால், எழுதிய பின்னாலான வாசிப்பில் எந்தக் கதையுமே என்னுள் திருப்தியை ஏற்படுத்தியதில்லை. சிறந்த கதைகளுடனான ஒப்புநோக்கில் இயல்பாகவே இறங்கி விடும் மனதின் முகச்சுளிப்பே, இதற்கு முக்கிய காரணமாய் இருக்கக் கூடும்.

ஆனாலும், அலுப்பை அண்ட விடாத வாசிப்பும் இடையறாத் தேடலும் கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டிருப்பேன்.

No comments:

Twitter Bird Gadget