Thursday, May 26, 2011

நிறங்கள்


பிரதான வீதியிலிருந்து குறுக்காகப் பிரிந்து வந்து பாலத்தைக் கடந்து ஆர்சி சாலையுடன் இணையும் அந்த ‘பெரிய பாலத்தடி வீதி’யில் கண்ணைப் பறிக்கும் செழிப்பும் வனப்பும் அழகாக மிதந்து கொண்டிருந்தன. இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட அழகிய வெண்ணிறக் கம்பளம் பாதை நெடுகவும் விரிக்கப்பட்டிருந்தது. தூய வெள்ளைச் சீலையால் வானத்தை மறைத்தாற் போல் பாதை நெடுகவும் பந்தலிடப்பட்டிருந்தது.

தென்னை ஓலைகளால் இழைக்கப்பட்ட அலங்கார சோடனைகள், மரங்களில் தொங்கியவாறு காற்றில் ஆடியும், வளைந்து நெளிந்தும் பளபளப்பாய் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. மிக அழகாக வர்ணம் பூசப்பட்ட உயரமான வீடொன்றின் உச்சியில், நான்கு திசைகளையும் உறுத்தியவாறு ஒலிபெருக்கிகள் நான்கு கட்டப்பட்டிருந்தன.

இத்தனை ஆர்ப்பாட்டத்துக்குமான காரணம், அவ்வூரின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான அஹமது ஹாஜியாரின் மூத்த மகள் மர்யமுக்கு இன்று திருமணம் என்பதுதான்.


இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பமாயிற்று. அசனார் போடியாரின் மகன் புஹாரிதான் மாப்பிள்ளை. நான்காம் வகுப்பு வரை படித்து முடித்துள்ள அவ்வூரின் அறிவாளிகளுள் புஹாரியும் ஒருவர். வசீகரமான அழகு என்றில்லாவிட்டாலும், போதிய உயரமும் கச்சிதமான உடற்கட்டுமாக, அழகான மணப்பெண் மர்யமுக்கு மிகப் பொருத்தமான மாப்பிள்ளையாக அடையாளங் காணப்பட்டிருந்தார்.

திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து வகை வகையான உணவுப் பொருட்களும் தின்பண்டங்களும் திணிக்கப்பட்ட பெட்டிகள் மாப்பிள்ளை வீட்டில் சீரான கால இடைவெளியில் தொடர்ந்து வந்திறங்கிக் கொண்டிருந்தன. திருமணத்திற்கெனக் குறிக்கப்பட்ட நாள் நெருங்க நெருங்க மணப்பெண் வீட்டில் அலங்காரக் களை தழைத்தோங்கிற்று.

அன்று திருமண நாள். அஹமது ஹாஜியாரும் மனைவி கதீஜாவும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தனர். தன் பணியாட்களை மட்டுமன்றி, குடும்பத்தினரையும் சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார் ஹாஜியார்.

ஆஜானுபாகுவான ஒருவர், கைகளை விரித்துக் கட்டிப்பிடித்தாலும் எட்ட முடியாத அளவுக்குப் பரப்பு மிக்க வட்டமான பனையோலைப் பெட்டிகள் ஏழு தயாராக இருந்தன. வாழைப்பழம், சீனி, தயிர், தேங்காய் என்பன நான்கு பெட்டிகளிலும், அப்போதுதான் அவித்தெடுக்கப்பட்ட அரிசிமா பிட்டு ஏனைய மூன்று பெட்டிகளிலும் முழுமையாக நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் ஏற்றிச் சென்று மாப்பிள்ளை வீட்டில் பறிப்பதற்காக ஒற்றை மாட்டு வண்டிலொன்றும் தயாராக இருந்தது. தனது மூத்த மகன் மீராலெவ்வையின் தலைமையில் அவற்றை அனுப்பி விட்டு மற்றப் பணிகளில் களமிறங்கினார் அஹமது ஹாஜியார்.

உரலில் இடித்து அரித்தெடுக்கப்பட்ட ஐந்து மரைக்கால் அரிசி மாவை பத்திரமாக எடுத்து வைத்த ஹாஜியாரின் மனைவியின் முகத்தில் உற்சாகம் கொப்பளித்தது. இன்றிரவு முழுக்கக் கண்விழித்து ஐந்து மரைக்கால் அரிசியையும் ஐநூறு உரொட்டிகளாகச் சுட்டெடுக்க வேண்டும். மறுநாள் காலை அவற்றை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொடர்ச்சியாக ஏழு நாட்களும் இந்தப் பணி தொடரும். இரவு முழுக்க விழித்திருந்து உணவு தயாரித்து, மறுநாள் அதிகாலையில் அவற்றைக் கொண்டு சென்று மாப்பிள்ளை வீட்டில் ஒப்படைத்துவிட வேண்டும். பிட்டும் பிறவும், உரொட்டியும் கறியும், இடியப்பமும் பாணியும், கோழியப்பம், சுக்குர்சாண் பிட்டு, அப்பம், கொழுக்கட்டை என ஏழு நாட்களுக்கும் ஏழு வகையான உணவுகள் அனுப்ப வேண்டும். நேரமும் எண்ணிக்கையும்தான் இதில் பிரதானம். கொஞ்சம் தாமதமாகிவிட்டாலோ, உணவுப் பொருட்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விட்டாலோ மாப்பிள்ளையின் தாயும் சகோதரிகளும் குமுறி எழுந்து விடுவார்கள்.

வீட்டில் முதற் திருமணம் என்றாலும் சீர்வரிசைகள் தொடர்பில் கதீஜாவுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. இருந்தாலும் தற்காப்புக்காக அனுபவமுள்ள ஐந்து பெண்களையும், தனது இரண்டாவது மகள் ரசீனாவையும் தன்னுடன் பணியில் இணைத்துக் கொண்டிருந்தாள் கதீஜா.

சூரியன் சரிந்து அஸர்ப் பொழுதாயிற்று. ஹாஜியார் தனது குடும்பப் பரிவாரங்களை அழைத்துக் கொண்டு போருக்குப் புறப்படும் தளபதியாய் மாப்பிள்ளை வீட்டுக்குக் கிளம்பினார். வாய் திறந்த புன்னகையுடன் வரவேற்கப்பட்டனர் அனைவரும்.

வீட்டு மண்டபத்தின் மத்தியில் வெள்ளை விரிக்கப்பட்டிருந்தது. தூய வெண்ணிறத்தில் சாரம், சேர்ட், தொப்பி அணிந்து உள்ளறையிலிருந்து வெளிப்பட்ட மாப்பிள்ளை புஹாரி, பவ்யமாக வெள்ளையில் அமர்த்தப்பட்டார். பெரிய பள்ளிவாயல் மௌலவியின் தலைமையில் காவின் எழுதப்பட்டது. ஐம்பது ஏக்கர் நெற்காணியும், முப்பது பவுண் தங்க நகையும், நூறு மாடுகளும் சீதனமாகப் பெற்றுக் கொண்ட களிப்புடன், ‘கபில்து’ கூறி, திருமணத்தை ஏற்றுக் கொண்டார் மாப்பிள்ளை. நிகாஹ் இனிதே நிறைவுற்றது. சபை மகிழ்ச்சியுடன் ஸலவாத்துரைத்து மணமக்களை வாழ்த்திற்று.

சிற்றுண்டி பரிமாறல்களுக்குப் பின், மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு பரிவாரங்கள் கிளம்பின. வலது பக்கமாக நின்ற மீராலெவ்வை புத்தம் புதிய வெள்ளைக் குடையன்றை மாப்பிள்ளைக்கு வெயில் படாதவாறு உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தான். இடது பக்கம் உயிர்த்தோழன் இல்யாஸ் நின்று கொண்டிருந்தான். இருவரையும் மெய்ப்பாதுகாவலர்களாக்கிக் கொண்டு, மெல்ல அடியெடுத்து மாப்பிள்ளை நடந்து வர, அவருக்கு முன்னால் நான்கு இளைஞர்கள், தமது கைகளிலிருந்த ஒரு முழ நீள வெள்ளைத் தடிகளைச் சுழற்றிச் சுழற்றி, ‘பொல்லடித்து’க் கொண்டே நகர்ந்து அவரை அழைத்துச் சென்றனர். பிரதான வீதிக்கு ஏறி, அதனூடாக நடந்து, பெரிய பாலத்தடி வீதிக்குத் திரும்பிய போது, தயாராக இருந்த மேளகாரர்கள், மணப்பெண் வீடு வரை மேளமடித்துக் கொண்டே மாப்பிள்ளையை அழைத்துச் சென்றனர்.

கொழுத்த சீதனத்தின் கிறுகிறுப்பில் இருந்த மாப்பிள்ளைக்கு, பொல்லடி ஊர்வலமும், மேள வாத்தியமும், வெண்கம்பள வரவேற்பும் உச்சி குளிர வைத்தன. மகிழ்ச்சிக் குளத்துள் அவர் மனம் தாவித்தாவி நீச்சலடித்தது.

வளவுக்குள் வலது காலை வைத்து நுழைந்த மாப்பிள்ளையை, வீட்டில் காத்திருந்த ஆண்கள் பெரும் மரியாதையுடன் வரவேற்றனர். மணப்பெண்ணின் இளைய சகோதரன் ஆதம்லெவ்வை, தயாராக வைத்திருந்த தூய தேங்காய்ப்பாலினால் மாப்பிள்ளையின் பாதங்களைக் கழுவி, வெகு கௌரவத்துடன் அவரை உள்ளே அழைத்துச் சென்றான். மண்டபத்தில் விரிக்கப்பட்டிருந்த வெள்ளையில் இருத்தி, குளிர் நீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினான்.

மாப்பிள்ளை வந்துவிட்டார் என்பதை அறிந்ததும், முக்காட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டாள் ஹாஜியாரின் மனைவி. வந்திருந்த பெண்களைக் கவனிக்கும் பொறுப்பு ரசீனாவின் தலைக்கு மாறிற்று. ஊரின் முக்கிய புள்ளிகள் அனைவரது சைக்கிள்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஜனத்திரள் வழிந்தது. பெண்களின் சலசலப்பும், ஆண்களின் அட்டகாசச் சிரிப்பும், குழந்தைகளின் அழுகையுமாக கல்யாண வீடு திமிறிக் கொண்டிருந்தது.

சிற்றுண்டி பரிமாறிய பின், மாப்பிள்ளையை மணப்பெண் அறைக்கு அழைத்துச் சென்றார் ஹாஜியார். கட்டிலின் நடுவே வெள்ளைச் சீலை தொங்கவிடப்பட்டு, உள்ளே மிக மறைவாக அமர்த்தப்பட்டிருந்த மணப்பெண் மர்யம், தந்தையின் அழைப்புக்குப் பணிந்து மெல்ல வெளியே தலை நீட்டினாள். ஹாஜியார், மர்யமின் முன்னெற்றி முடியைப் பிடித்து, மருமகனின் கைகளில் ஒப்படைத்தார். ஒப்புதலுக்கான அடையாளமாக மணப்பெண்ணின் முடியைப் பற்றிக் கொண்ட மாப்பிள்ளை, பின் பிடியைத் தளர்த்திக் கையை விலக்கிக் கொள்ள, மர்யம் மீண்டும் வெள்ளைச் சீலைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.

மீண்டும் சபையில் வந்தமர்ந்து கொண்ட புஹாரியின் கண்களில் பணம் கொழிக்கும் செழிப்பான வாழ்வொன்றின் உதயம் வெளிச்சமிட்டுக் கொண்டிருந்தது.

-----------------------------------------------------

மேசையில் கிடந்த மிசின் சாவி மீது மொய்த்திருந்தது புஹாரியின் பார்வை. சொத்துகளை விழுங்கி ஏப்பமிடும் புகையிலைச் செய்கையிலிருந்து பரிதாபமாக எஞ்சியிருப்பது அந்த மிசினொன்றுதான். இன்று அதுவும் கைமாறிக் காணாமல் போக இருப்பதை நினைக்கையில் அவரது நெஞ்சம் கனத்தது. சகிக்க முடியாத உவர் ஜந்தொன்று உள்ளுக்குள் உருண்டு பிரண்டு அந்தரித்துக் கொண்டிருந்தது.

முதன்முதலாக மிசின் சாவியைக் கைப்பற்றிக் கொண்ட போது, தனது தந்திரோபாயத்தை நினைத்து அவருக்கே பிரமிப்பேற்பட்டது. ஆனால், கைப்பற்றியதைக் காப்பாற்றத் தெரியாத தன் கையாலாகாத் தனத்தை நினைத்து இப்போது அழவேண்டும் போல் அவருக்குத் தோன்றிற்று.

தனது மைத்துணியின் கணவரான இஸ்மாயிலுடன் சினேகபூர்வமான உறவைப் பேணிவந்த போதிலும், குடும்பத்தில் பொருளாதார, அந்தஸ்து ரீதியான தனது முதன்மை ஸ்தானத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர் எப்போதும் அவதானமாகவே இருந்து வந்தார். இஸ்மாயில்-ரசீனா திருமணத்தின் போது, சீதனமாக ஓர் உழவு இயந்திரம் வாங்கித் தருவதென வாக்களித்திருந்தார் மாமனார் அஹமது ஹாஜியார். திருமணத்தின் போது எல்லோர் முகத்திலுமிருந்த மகிழ்ச்சி ஆரவாரத்திற்குப் புறம்பாக, இறுக்கமான சோகக் கீறலொன்றுடன் புஹாரி உலவியமைக்கு இந்த வாக்கு முக்கிய காரணமாயிற்று.

எனினும், திருமணத்திற்குப் பின்னர் மாமனாரின் காதில் மிக இலாவகமாக ஊதிவிட்டார். ‘குடும்பத்திற்குப் புதியவர். குண நலன்கள் எப்படியென்று தெரியாது. அதனால் மிசினை வாங்கி என் பேரில் எழுதுவோம். அவரில் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, நான் மாற்றி எழுதிக் கொடுக்கிறேன்’

மூத்த மருமகனின் கூற்றில் நியாயத்தைக் கண்ட ஹாஜியார், மகள் ரசீனாவின் வாதங்களைப் புறந்தள்ளி, புதிய மிசினை புஹாரியின் பெயரில் பதிவு செய்தார். ரசீனாவின் திருமணத்தின் போது புஹாரியின் முகத்திலேறி உட்கார்ந்திருந்த இறுக்கம் அன்றுதான் தளர்ந்து இளகிற்று. சாதித்து விட்ட பெருமிதத்துடன் நிம்மதிப் பெருமூச்செறிந்தார் புஹாரி.

அடுத்து, இரண்டாம் கட்டத் திட்டத்தில் இறங்கினார். தந்திரோபாயமாக மிசினைக் கைப்பற்றியாயிற்று. அதைத் தக்க வைத்துக் கொள்வதெப்படி. ரசீனாவும் இஸ்மாயிலும் சேர்ந்திருக்கும் வரை தனது மிசின் உரிமம் நிலைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தார் புஹாரி. விவசாயத்தில் ஊன்றியிருந்த சிந்தனையைப் பிடுங்கி, தம்பதியரிடை விரிசலைக் கிளர்த்தும் பணியில் நட்டார்.

கணவரின் பெரும்பாலான விடயங்களில் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லும் மர்யம், மிசின் பெறுமதியையுணர்ந்து கணவருக்கு ஒத்துழைக்க முன்வந்தாள்.

ஜீரணிக்க முடியாததும், முகஞ் சுளிக்கத் தக்கதுமான கனமான கதைகளும், அசூசையான சம்பவங்களும் குடும்பத்தினரின் நாவுகளில் மிதக்கத் தொடங்கின.

அவற்றுக்கான மூலங்கள் பற்றி விசாரிக்கப்பட்ட போது, இஸ்மாயில்-ரசீனா பக்கம் சுட்டு விரல்கள் நீட்டப்பட்டன. ‘இஸ்மாயில் இவ்வளவு மோசமானவரா!’ என மூக்கில் விரல் வைப்பவர்கள், கொடுப்புக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் புஹாரியின் குள்ளச் சிரிப்பைக் கண்டு கொள்ளத் தவறினர்.

பரஸ்பர கதைகள் தடிப்புப் பெற்றன. மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு அடிக்க வந்த மாமியாவைக் கண்டு உள்ளம் நொந்து போனார் இஸ்மாயில். பறித்துத் திருப்பியடிக்க அவருக்கு அதிக நேரம் எடுக்காது. வயல்வெளி வேலைகளினால் முறுக்கேறிப் போன உடல் அவரது. ஆனாலும், மரியாதை நிமித்தம், புறுபுறுத்த தன் கைகளை அடக்கிக் கொண்டார். தன் உடைகளை அள்ளிக் கட்டிக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.

புஹாரிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. கரேஜுக்குள் நுழைந்தார். அமைதியாக நின்றிருந்த மிசினை பார்வையால் தழுவினார். வெற்றிப் புளகாங்கிதம் அவரது நெஞ்சுக்குள் விம்மி வெடித்தது. இனி, மிசின் உரிமம் பற்றி யாரும் எதுவும் கதைக்கக் கூடாது என்று புஹாரியும் ஹாஜியாரும் சேர்ந்து இட்ட கட்டளை, சமரசத்திற்குப் பின்னரான இஸ்மாயில்-ரசீனா தம்பதியினரின் இணைவுக்குப் பின்னரும் அமுலில் நீடித்தது.

புஹாரி, அந்த மிசின் மூலம் அதிகமாகப் பணம் உழைக்க முயற்சித்தார். வயலில் இறங்கி வெள்ளாமை விதைத்துப் பார்த்தார். கட்டுவன்விலவில் மாட்டுப் பண்ணை வைத்துப் பார்த்தார். தம்மன்கடுவயில் புகையிலைச் செய்கை செய்து பார்த்தார். எல்லாவற்றிலும் அவருக்குக் கால் சறுக்கிற்று. சறுக்கிய கால் பொருளாதாரத்தையும் பாதாளத்துக்கு இறக்கிற்று.

இறுதியாக நெல்லுக்கடையன்றை வைத்தார். வெள்ளையனை கடையில் வேலைக்கமர்த்தினார். அவனோ, அவரது நெல்லு மூடைகளைக் களவாடி அவருக்கே கிரயமாக விற்றான். தனது மகளுக்கு பெரிய வீடு கட்டி, கோலாகலமாக திருமணம் நடத்துவதற்கு அந்தக் கடை அவனுக்கு உதவிற்று.

நஷ்டத்தை சகிக்க முடியாமல் கடையை இழுத்து மூடினார் புஹாரி. கடன் ஏறிற்று. வயற் காணிகளும் மாடுகளும் செட்டிகளின் கைக்கு மாறின. மாமனாரின் மறைவுக்குப் பின் கைதூக்கிவிடவும் ஆளின்றித் துவண்டு போனார் புஹாரி.

இப்போது புஹாரிக்கு எஞ்சியிருப்பது இருக்கும் வீடும், அந்த மிசினும் மட்டும்தான். வெளியே யாரோ சத்தமிடுவது கேட்கிறது. கடன்காரனாகத்தான் இருக்க வேண்டும். மிசின் மீது, பரிதாபம் கொழிக்கும் கடைசிப் பார்வையன்றை வீசினார் புஹாரி.

-----------------------------------------------------

வெளிநாட்டுக்குச் சென்றிருந்த இரண்டு பெண் மக்களும் வந்து விட்டார்கள். அங்கிருந்து அனுப்பியதும், இங்கிருந்தவர்கள் அழித்ததும் போக எஞ்சியது எதுவுமில்லை. என்ன கஷ்டமென்றாலும், தனது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதில்லை என்பதில் புஹாரி கொண்டிருந்த பிடிவாதத்தை வறுமையும், கடன் தொல்லையும் முற்றாகத் தகர்த்தெறிந்தன.

இரண்டு பிள்ளைகள் சவூதிக்குப் பறந்தனர். அங்கிருந்து செக்குகள் அனுப்பினர். நீண்ட நாட்களுக்குப் பின் கத்தையாகப் பணத்தைக் கண்டதும் புஹாரிக்கு தைரியம் பிறந்தது. மகிழ்ச்சி விம்மிற்று.

மனைவியின் பேச்சை அலட்சியப்படுத்தி விட்டு மீண்டும் புகையிலைச் செய்கையில் இறங்கினார். பிள்ளைகள் அனுப்பியவற்றையெல்லாம் தம்மன்கடுவயில் கொண்டு சென்று கொட்டினார். தேவை அதிகமான போது, தைரியமாகக் கடன் வாங்கினார்.

புகையிலை செழித்தது. அறுவடைக்குத் தயாரானது. விளைச்சலை வெட்டியெடுத்து சுருட்டு விற்பவர்களுக்கு மொத்தமாக விற்றார். பாதிப் பணத்தைக் கொடுத்து, மீதிப் பணத்தை நாளை தருவதாகக் கூறிப் புகையிலையை வாங்கிச் சென்றவர்களை அதன் பிறகு புஹாரி காணவேயில்லை. முகவரி தெரியாத அந்தப் புதியவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் வழி தெரியாது நொறுங்கிப் போனார் புஹாரி. கடன் சுமை மேலும் ஏறிற்று.

தந்தையின் கையாலாகாத் தனத்தையறிந்து விசனத்திற்குள்ளான இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பினர். தமது கோபத்தையும் குமுறலையும் அவருக்கு முன் கொட்டித் தீர்த்தனர். கழுத்தில் கை வைக்காத குறையாக, தாம் கஷ்டப்பட்டு உழைத்தனுப்பிய பணத்தைத் திரும்பத் தரவேண்டுமெனக் கொதித்தனர்.

புஹாரிக்கு அன்றிரவு தூக்கம் தவறிற்று. சிந்தனைகள் அறுந்து தொங்கின. பச்சைப் புண்ணாக உள்ளம் வலித்தது. தன் பழைய தவறுகளை நினைத்து பச்சாதாபப்பட்டார். தன் வாழ்வின் எல்லா வெளிச்ச வாயில்களும் அடைக்கப்பட்டு விட்டதாக உணர்ந்தார். இனியும் வாழ்வதில் பயனில்லை என்ற கருத்து அவரது சிந்தனையின் முடிவில் பெரும் நியாயமாக நிமிர்ந்தெழும்பிற்று. கண்களை மூடிக் கொண்டார்.

-----------------------------------------------------

மறுநாள் காலை, புஹாரியின் நண்பர் இல்யாஸ், அங்கு சோகம் துளிர்க்கக் குழுமியிருந்தவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார்; “இரவு இசாத் தொழுதிட்டு வரக்குல லேசா நெஞ்சு நோவுதுண்டு சென்னாரு. நான் இண்டைக்கு மௌத்தாப் பெய்த்திருவன் எண்டும் சென்னாரு. தேவல்லாத கதெயெலாம் கதைக்காதீங்க எண்டு போட்டு, நான்தான் கூட்டிட்டு வந்து ஊட்ட உட்டுட்டுப் போன. சென்ன மாதிரியே மனிசன் மௌத்தாப் பெய்த்திட்டாரு”

தன் மரணத்தை புஹாரி முன்கூட்டியே அறிவித்திருக்கிறார் என்பது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. ஏனெனில், கடந்தகாலச் செழுமை பற்றிய நினைவுகள், கழுத்தையிறுக்கும் நிகழ்கால வரட்சியின் கொடுங்கரங்களை மேலும் அழுத்தும் என்பது அவர்கள் எல்லோரும் அறிந்ததுதான்.

No comments:

Twitter Bird Gadget