Monday, May 23, 2011

காகம்


மதில் சுவரின் மேல் நின்றிருந்த காகம் தலையை அங்குமிங்கும் அசைத்து, நாலா திக்கிலும் பார்வையை எறிந்து கொண்டிருந்தது. முற்றத்தில் அகலக்கிளை விரித்து நிழல் பரப்பி நிற்கும் மாமரத்தின் கீழே விழுந்து கிடந்த சிறிய கம்புச் சுள்ளியைத்தான் அது குறிவைத்திருக்கின்றது என்பதை வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்த நான் அனுமானித்துக் கொண்டேன்.

சுற்றிவர அந்தரித்துத் திரிவதும் தன் கறுப்புச் சொண்டில் கம்புச் சுள்ளிகளைக் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து செல்வதுமாக கடந்த இரண்டொரு நாட்களாக காகம் கடின உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை நான் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்கான ஆயத்தம்.

கம்புச் சுள்ளி எனக்கு சற்று முன்னால்தான் கிடந்தது. எனது இருப்பு ஏற்படுத்திய அச்சத்தில், அதைக் கொத்தியெடுத்துச் செல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது காகம்.


எனக்கு அதன் மீது கோபம் வந்தது. முற்றத்தில் உணவுப் பொருள்கள் எதையும் உலரப்போட முடிவதில்லை. ஆடைகளைத் துவைத்துக் காய வைக்க முடிவதில்லை. சைக்கிளை வாசலில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. சகிக்க முடியாத துர்நாற்றத்தோடு எச்சமிடுவதும் உணவுப் பொருட்களைப் பதுங்கிப் பதுங்கி வந்து கொத்தித் தின்பதுமாக காகத்தின் தொல்லைகள் சொல்லி மாளாது.

இந்த இலட்சணத்தில் அது குஞ்சு பொரித்து இனத்தை விருத்தி செய்து விட்டால்....

எனக்குள் எரிச்சல் கிளர்ந்தது. எழுந்து சென்று, முன்னால் கிடந்த கம்புச் சுள்ளியைக் கையிலெடுத்தேன். இரண்டு கைகளாலும் வளைத்து துண்டு துண்டாக உடைத்துக் கீழே போட்டு விட்டு, கர்வத்துடன் மீண்டும் படிக்கட்டில் வந்தமர்ந்தேன்.

காகம் என்னை முறைத்துப் பார்த்தது. அதன் சிறிய கண்களில் கோபத்தின் அதிர்வுகள் குமுறிக் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. அந்தக் கோபம் ஏற்படுத்திய தைரியத்துடன், மதிலிலிருந்து எம்பிய அது, மிதந்து வந்து நான் உடைத்துப் போட்ட கம்புச் சுள்ளிகளுக்கு அருகில் இறங்கியது. அவற்றை தன் சொண்டினால் கிளறிப் பார்த்து விட்டு மீண்டும் என்னை முறைத்தது. அந்த முறைப்புடன் தன் கரகரத்த குரலில் காகம் வாய் திறந்து பேசிற்று.
"நீங்கள் மனிதர்களல்லவா? எங்கள் ஜீவியத்தில் இடையூறு செய்ய முனைவது உங்களுக்கு இழிவாகத் தோன்றவில்லையா?"

எனக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கேறியது. முறைத்துப் பார்த்தேன். என் முறைப்பை அலட்சியம் செய்து கொண்டே காகம் மீண்டும் பேசிற்று.
"வாழ்வையும் இருப்பையும் கேள்விக் குறியாக்கக் கூடிய, அல்லது அவற்றுக்குத் தடையை ஏற்படுத்தக் கூடிய எல்லா விடயமுமே பெரும் குற்றம்தான். அது, சிறிய கம்புச் சுள்ளியன்றை முறிப்பதன் மூலமாக ஏற்பட்டாலும் சரியே"

சகிக்க முடியாத நான் காகத்தைப் பார்த்துக் கேட்டேன்.

"சரிதான். நீ மனிதர்களுக்கு இழைக்கக்கூடியவற்றை விடப் பெரிய இடையூறுகளையா நான் செய்து விட்டேன்?"

"நான் உங்களுக்கு இடையூறு செய்வதாக நீங்களே கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் எப்படி குற்றவாளியாக முடியும்? நான் எனக்கென்று வகுக்கப்பட்ட வாழ்வுப் பாதையில் சற்றும் பிறழாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். தேவைகளை நிவர்த்திப்பதற்கான என் முயற்சிகள் சிலவேளை உங்களுக்கு முகச்சுளிப்பாக அமையலாம். அது தவிர்க்க முடியாதது. ஆனால், நான் வேண்டுமென்றே எவருக்கும் இடையூறு விளைவிப்பதில்லை. யாரையும் ஏமாற்றுவதில்லை. யாரையும் இழிவாகக் கருதி உள்ளத்தைக் காயப்படுத்துவதுமில்லை. பகுத்தறிவு கொண்ட ஜீவன் என தம்மைத்தாமே பெருமையடித்துக் கொள்ளக்கூடிய உங்களிடம்தான் இந்தப் பண்புகள் வான்தொடும் மலையெனக் குவிந்து கிடக்கின்றன"

"அப்படியானால் உன்னை விட நாங்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறுகின்றாயா?"
"அதிலென்ன சந்தேகம். நம்பிக்கையும் விட்டுக் கொடுப்பும்தான் வாழ்வின் அடிப்படைகள். அந்த அடிப்படைகளைக் களைந்து விட்டு அம்மணமாக வாழ எத்தனம் கொள்ளும் நீங்கள் தாழ்ந்தவர்களன்றி வேறு யாராக இருக்க முடியும்?"

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காகத்தின் மீதான என் கோபத்தின் முதுகில் வியப்பின் சுமை ஏறி அழுத்திற்று. லஜ்ஜையான அந்த சுமையுடன் அதனைப் பார்த்துக் கேட்டேன்;

"நாங்கள் பேசுகின்றோம். உரையாடுகின்றோம். ஒருவர் மற்றவரது உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றோம். பரஸ்பர உதவியையும் அன்பையும் பரிமாறிக் கொண்டுதான் வாழுகின்றோம். இதைவிடச் சிறப்பான ஒரு வாழ்க்கையை எப்படி வாழ முடியும்?"

"நீங்கள் அழகான முகமூடி அணிந்து உங்கள் அசிங்கங்களை மறைத்துக் கொள்ள முனைகின்றீர்கள். பேசுவதும், உரையாடுவதும் மட்டுமே வாழ்க்கையாகி விட முடியுமா? அப்படியே பேசினாலும் கபடத்தனமின்றி வெளிப்படையாகப் பேசுவோர் எத்தனை பேர்? முன்னால் குழைந்து பின்னால் குழி தோண்டும் குணமுடையோர் உங்களிலன்றி வேறு இனங்களில் கிடையாது"

"இல்லை. உன் அனுமானம் பிழையானது. சிலரை வைத்து பலரை எடைபோட முனைவது எவ்வகையில் நியாயமாகும்?"

"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது உங்கள் பழமொழிதானே. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் நீங்கள் அணிந்து கொள்ளும் முகமூடிகள்தான் எத்தனை! அரசியல்வாதி, ஆன்மீகவாதி, படித்தவன், பாமரன், ஏழை, செல்வந்தன், கீழ்சாதி, மேல்சாதி, கறுப்பன், வெள்ளையன்..... இன்னும் என்னென்னவோ.... உட்தோற்ற அசிங்கங்களை மறைத்து வெளித்தோற்ற அழகைப் பாடும் உங்களை மனிதர்கள் எனாமல் முகமூடியர்கள் என்றால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்!"

"நீ மிகக் கடுமையாக எங்களை இழித்துரைக்கின்றாய். கட்டுப்பாடின்றி எள்ளி நகையாடுகின்றாய். மனிதர்கள் மீது இவ்வளவு கோபமென்றால் எதற்காக அவர்களது வாழிடங்களிலேயே சுற்றித் திரிகின்றாய். மனித சஞ்சாரமற்ற வனாந்தரங்களில் உன் வாழ்வை ஓட்டிச் செல்லலாமே!"

"இந்தப் பூமியோ ஆகாயமோ தனிப்பட்ட எவருக்கும் சொந்தமானதல்ல. அது உணர்வுகளுக்குள் அகப்படாத பரமாத்மாவின் அடையாளத் தடங்கள். அவற்றின் மீதான உரிமை பாராட்டுதல், ஒன்றில், எல்லோருக்கும் சாத்தியமானதே. அல்லது எவருக்கும் சாத்தியமற்றதே. எங்கள் இருப்பை நீங்களோ, உங்கள் இருப்பை நாங்களோ தடை செய்வதற்கும் தகர்த்தெறிவதற்கும் யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இந்தப் பகுதியின் பூர்வீக குடிகள் நீங்களாக இருக்கலாம். வந்தேறு குடிகள் நாங்களாக இருக்கலாம். அல்லது இதற்கு மாற்றமாகவும் இருக்கலாம். காலத்தால் முந்தி விட்டமைக்காக உரிமையும் அதிகாரமும் பெற்றுவிட முடியும் என்று நினைப்பது நியாயமெனக் கொள்ள முடியுமா? நான், பூமியில் எனக்குப் பிடித்தமான இடத்தில் வாழுகின்றேன். நானாகப் போனாலன்றி என்னைப் போகச் சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் ஏது?"

எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை, குத்திட்டு நின்ற என் ரோமங்களின் சிலிர்ப்பு உணர்த்திற்று. காகத்தின் வார்த்தைகளது தகிப்பில் நியாயத்தின் சாட்டை தோன்றிற்று. முதுகில் ஊர்ந்த அதன் அமானுஷ்ய ஸ்பரிச வலியுடன் காகத்தைப் பார்த்துக் கேட்டேன்;

"நீ இப்போது என்னதான் சொல்ல வருகின்றாய்?"

"மனிதர்கள் நல்லவர்களல்ல என்று கூறுகின்றேன். ஒரு துளி விஷம் விழுந்த செழிப்பான பாற்குடமாக முழுச் சமூகமுமே கெட்டுப் போய்க் கிடக்கிறது. நம்பிக்கையில்லை, விட்டுக்கொடுப்பு இல்லை, பரஸ்பர அன்புணர்வு இல்லை, ஒற்றுமையில்லை. எல்லாமும் இருக்க வேண்டுமென ஆராதித்துக் கொண்டே எதையும் கைக்கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்"

"இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; கெட்டவர்களும் இருக்கின்றார்கள். கெட்டவர்களைத் திருத்துவதற்கு நல்லவர்கள் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்"
"முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சிகளின் தொடர் தோல்விக்கு அந்த நல்லவர்களின் போலித்தனம்தான் பிரதான காரணமென்பது உங்களுக்குத் தெரியுமா? பிறரை இழிவாகக் கருதும் பண்பு ஒன்றே ஒரு சமூகத்தின் வீழ்ச்சிக்கான விஸ்வரூபக் குறியீடென்பதை எப்படி நீங்கள் அறியாதிருக்கலாம்?"

"எங்களைப் பற்றி தாறுமாறாகப் பேசுகின்றாயே, உன்னிடமுள்ள அழுக்குகளையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டுமல்லவா! எவ்வளவு இழிவான பழக்க வழக்கங்களை நீ கொண்டிருக்கிறாய்! உன் இன ஒற்றுமையிலும் எத்தனை கபடங்கள் இருக்கின்றன!"

"காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகவே தெரியும் என்பதும் உங்கள் பழமொழிதான். எங்களிடையே நேர்த்தியான வாழ்வொழுங்கு இருக்கிறது. கூட்டணியாக இருந்து செய்ய வேண்டியவை எவை, சுயேச்சையாக இருந்து செய்ய வேண்டியவை எவை என்ற விடயங்களில் நாம் தெளிவு கண்டிருக்கின்றோம். காலமோ கவர்ச்சியோ எமது தெளிவில் இருளை விழுத்த முடியாது. எடுத்ததற்கெல்லாம் பயனின்றி கத்தி ஆர்ப்பரிப்பதோ, அவசியமான நேரத்தில் கமுக்கமாக இருந்து வாய்மூடி மௌனம் காப்பதோ எங்களது பண்புகள் அல்ல"

"அப்படியானால் சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும் என்கிறாயா?"
"ஏலவே தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்ந்த நோக்கத்திற்கான பாதை அதுவாக இருக்குமானால் அதைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால், அதுவே ஒட்டுமொத்த வாழ்க்கைப் பண்பாக ஆகிவிடக்கூடாது என்கிறேன்"
"சரி நாங்கள் எப்படி வாழ வேண்டுமென்று நீ விரும்புகிறாய்?"

"உங்களது வாழ்க்கை பற்றி எனக்கெதற்கு கவலையும் அக்கறையும். உங்களுக்கு அறிவு இருக்கிறது. அந்த அறிவைப் பயன்படுத்தி மனசாட்சியின் உசும்பல்களுக்கு செவிசாய்த்து வாழப் பழகிக் கொள்வது உங்களுக்கு நீங்களே செய்து கொள்கின்ற நன்மையாக அமையும். சமூக உணர்வைக் களையாத, பொதுநலனை அலட்சியப்படுத்தாத பரந்த வாழ்வின் வேர்களே அழுத்தமாகப் புரையோடி உங்கள் வம்சத்தை செழிக்கச் செய்யும். ஆனால், இந்தப் பண்புகளை உள்வாங்கிக் கொள்வதற்குத் தடையாக இருப்பது மனிதன் கர்வங் கொள்ளக் காரணமான அவனது பகுத்தறிவு ஒன்றுதான்"

நான் குழப்பமாக உணர்ந்தேன். புலன்களுக்கு அப்பாற்பட்ட மாயைக்குள் சிறைவைக்கப்பட்ட சிந்தனையின் தவிப்பு மனதினூடு உள்ளத்தைத் தாக்கிற்று. அந்த அவஸ்தையுடன் காகத்தைப் பார்த்துச் சொன்னேன்;
"சரி, ஏதோ நல்ல விடயத்தைப் பேசியிருக்கின்றாய். நீ தூக்கிச் செல்லக் காத்திருந்த கம்புச் சுள்ளியை உடைத்தமைக்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். பதிலாக, நல்லதொன்றை எடுத்துத் தருகின்றேன்"
படிக்கட்டிலிருந்து எழுந்த நான், நடந்து சென்று மாமரத்தை அணுகி, கால்களால் எம்பி மரத்தின் கிளையிலிருந்த கம்புச் சுள்ளியன்றை உடைத்தெடுத்து அதனை நோக்கி நீட்டினேன்.

பறந்து வந்து என் கையிலிருந்த கம்புச் சுள்ளியை சொட்டிக் கொண்ட காகம், மேலுயர்ந்து சரியாக என் தலையில் நச்சென எச்சமிட்டு விட்டு விர்ரெனப் பறந்து விரைந்து மறைந்தது.

No comments:

Twitter Bird Gadget