Monday, April 4, 2011

வயல்


நீண்ட காலத்திற்குப் பின் கந்தசாமி வந்திருந்தான். முன்னை விடக் கறுப்பாயும் மெலிந்தும் கிழடு தட்டிய தோற்றத்துடன் திண்ணையில் போடப்பட்டிருந்த பாயில் அமர்ந்தவாறு, புற்களை நோண்டிக் கொண்டிருந்தான்.

என் மீது அவனும் அவன் மீது நானும் விரோதம் பாராட்டத் தொடங்கிய பதினைந்து வருடங்களின் பின், அவனைப் பார்க்கிறேன்.

இஸ்மாயில் போடியாருடைய வயலுக்கு உழவடிப்பதற்காக மிசினைக் கொண்டு சென்ற போது, அவரிடம் வெள்ளாமைக்காரனாக இருந்த கந்தசாமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

கலகலவென கதைத்து எல்லோரையும் சிரிக்க வைக்கும் சுபாவம். என்ன கஷ்டமான வேலையென்றாலும், மாய்ந்து மாய்ந்து செய்து முடித்து விடுவான். அவனது கோணல் வாயும், பேச்சில் இழையோடும் நக்கல் தொனியும் அவனுக்கு மட்டுமே உரிய விசேட அடையாளங்கள்.




இவ்வளவு காலத்திற்குப் பின் அவனைக் கண்ட போது, முதற்பார்வையிலேயே அடையாளங்கண்டு கொள்ள முடியவில்லைதான். அவனே எதிரில் நின்று, 'றைவர்! என்னத் தெரியலியே..?' என்று வாயைக் கோணலாக்கிக் கொண்டு கேட்ட போதுதான், சட்டென மண்டைக்குள் உறைத்தது.

''அட... நம்ம கந்தசாமியில்ல..?''

''ஓமோம்''

வாய்கொள்ளாப் புன்னகையுடன் அவனை வரவேற்றேன். பாயை விரித்து உட்காரச் சொல்லி விட்டு, எதிரில் கிடந்த மற்றொரு பாயில் அமர்ந்து கொண்டே, குசினிப்பக்கம் திரும்பி குரல் கொடுத்தேன்.

''புள்ள... ரபீக்கிடம்மா..! இஞ்சால வந்து பாரன். மிச்சங் காலத்துக்குப் புறவு நம்ம கந்தசாமி வந்திரிக்கான்''

''ஆ.. வாறன்''

சுளகிலிருந்த, நெல் பொறுக்கி முடித்த அரிசியை, அரிக்கிமிலாவிற்குள் கொட்டிய என் மனைவி, சேலைத் தலைப்பையெடுத்து தலையில் போட்டுக் கொண்டே, திண்ணைப் பக்கம் தலையை நீட்டினாள்.

''வாங்க கந்தசாமி. சோமா இருக்கீங்களா..?''

அவன் தலையசைத்து ஆமோதித்தான்.

''இவக அடிக்கடி உங்களப் பத்திக் கதெப்பாக. உங்கட முஸ்பாத்திக் கதெகள இருந்தாப் போல செல்லிச் சிரிப்பாக. என்ன செய்றது. அதெல்லாம் ஒரு காலம்'' அவள் பெருமூச்சு விட்ட போது, அவன் எதுவும் பேசாது சிரித்து வைத்தான். மனைவியின் கதையில் பழைய நினைவுகள் என்னுள் இடறின.

இஸ்மாயில் போடியார், வெள்ளாமை வெட்டி, இரண்டு சூடு வைத்திருந்தார். நான் மிசினை எடுத்துக் கொண்டு களத்துக்குப் போய்ச் சேர்ந்த போது, கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது. களஞ் செதுக்கி, நான்கு முனைகளிலும் உயரமான கம்புகள் கட்டியிருந்தார்கள்.

ஒவ்வொரு கம்பிலும் கட்டியிருந்த இஸ்ம் குப்பிகள் காற்றிலாடி அசைந்து கொண்டிருந்தன.

''மண்ணுக்குள்ள, நாலு மூலைக்கும் நடுவிலயும் இஸ்ம் புதெச்சிரிக்கம். இல்லாட்டி நெல்லு எல்லாத்தையும் பேய் கொண்டு பெய்த்திருமில்லுவா. மறுவா, அடுத்த முற வெளச்சல் சரியா வராது''

மிசினை விட்டுக் கீழே இறங்கிய என்னிடம் சொல்லிக் கொண்டே முன்னால் வந்து நின்றான் இலவத்தம்பி. சற்று தூரத்தில் வேலக்காரன் கம்புடன் சூடடிப்பதற்குத் தயாராக நின்ற கந்தசாமியும் அருகில் வந்தான்.

''என்ன றைவர், சுணங்கிட்டீங்க..?''

அவனுடன் பேசிச் சிரித்துக் கொண்டே வேலையைத் தொடங்கினோம்.

நான், கியரை மாற்றி மாற்றி முன்னுக்கும் பின்னுக்குமாக மிசினை செலுத்திக் கொண்டிருக்க, டயர்களின் கீழ் நசிபடும் கதிர்களை வேலக்காரன் கம்பினால் குத்திக் குத்திச் சரித்துக் கொண்டிருந்தார்கள் கீழே நின்ற எட்டுப்பேரும்.

இரண்டு சூடு இருக்கிறது. இரவும் பகலுமாக நின்றால் இரண்டு நாளுக்குள் முடித்து விடலாம். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை செய்ய வேண்டும்.

நினைத்துக் கொண்டே கீழே பார்த்த போது, கந்தசாமியைக் காணவில்லை. நாலா பக்கமும் சுழல விட்ட பார்வைக்கும் அகப்படவில்லை. மற்றவர்களும் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே, புருவங்களை நெறித்தனர்.

வேலையை அப்படியே விட்டு விட்டு, மூன்று பேரை அழைத்துக் கொண்டு அவனைத் தேடினேன்.

வைக்கோல் புதருக்குப் பின்னால் குப்புற விழுந்து, குறட்டைச் சத்தத்துடன் படுத்திருந்தான் கந்தசாமி.

''மாப்புள நித்திரயா கொள்றீங்க..! இரிங்க, உங்களுக்கு செய்யிறம் வேல''

வைக்கோல்களை உருவியெடுத்து அவன் மேல் போட்டு மூடினோம். சூட்டுக்கு மேல் போட்டு எஞ்சியிருந்த வைக்கோல் புரியால் கைகளைக் கட்டினோம்.

பெரிய வாளி நிறைய தண்ணீரை அள்ளி வந்து, அவன் மீது தபார் என கெளித்து விட்டோம்.

சடாரெனக் கண்விழித்த அவன், என்ன நடந்ததென்று தெரியாமல் எழுந்து ஓட எத்தனித்து, வைக்கோல்களுக்குள் கால் இடறிக் கீழே விழுந்து, முதலாளி.. முதலாளி என்று கைகூப்பி, எங்களைக் கண்டதும் 'அடப்பாவிகளா...' என்று பெருமூச்சு விட்டு...

இப்போது நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடிவதில்லை. நான் வாய்விட்டுச் சிரித்தேன். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவனும் சிரித்துக் கொண்டான்.

சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் பாடல்கள் படிப்பதிலும் கந்தசாமி கெட்டிக்காரன். தன் மனைவியை அடிக்கடி நினைத்துப் பார்த்து, அவளை தன் பாடலில் கொண்டு வருவான். வயலை உழும்போது அடிக்கடி இந்தப் பாடலை படித்துக் கொள்வான்.

''நடவாக் கடாவும்
நானுமிந்தப் பாடுபட்டால்
காயாப் புழுங்கலும் - என்ர
கண்மணியும் என்ன பாடோ!''

காவலிருக்கும் போது, அசதி நீங்கவும் களைப்பு ஏற்படாதிருக்கவும் பலரும் பாடல்கள் பாடுவது வழக்கம். பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த இலவத்தம்பி, கந்தசாமி பாட்டு படிப்பதைக் கண்டதும் தானும் மெட்டமைத்து பாட்டிசைப்பான்.

''காவற் பரணிலே
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ணான மச்சி வந்து
காலூன்றக் கனவு கண்டேன்''

வெள்ளாமை வெட்டுக் காலங்களில் கந்தசாமிக்கும் இலவத்தம்பிக்கும் இடையிலே பாடல்கள் தூள் பறக்கும். சில சமயங்களில் இலவத்தம்பியின் குரல் வசீகரத்திற்கும், உச்சஸ்தாயியின் போதும் உடையாது வெளிப்படும் அதன் கம்பீரத்திற்கும் முன்னால், கந்தசாமி தோல்வியை ஒப்பு கொண்டு விடுவான்.

அந்த சமயங்களில் இலவத்தம்பி இனிய குரலெடுத்துப் படிப்பது தேனில் குழைத்த சுகந்தமான தென்றலாக காதுகளை வருடும்.

''கத்தியெடுத்து மச்சி
கதிரரியும் வேளையும்
கண்மணியே உன் நினைப்பு - என்ர
கையரிஞ்சி போட்டுதுகா!''

நான் மனதுக்குள் அந்தப் பாடல்களைப் படித்துப் பார்த்துக் கொண்டேன்.

என் மனைவி, இரண்டு கிளாசில் தேனீர் கொண்டு வந்தாள். 'பிளேன்டீ எடு கந்தசாமி' என்று கூறிக் கொண்டே ஒன்றை நான் எடுத்துக் கொண்டேன். தேனீரை ஊதி ஊதி உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்த போது, நினைவுகள் இழுபட்டுப் பின்னோடின.

ஒரு நாள், உம்மாரிச் செய்கைக்காக உழவடிக்கச் சென்ற போது, வாடிக்குள் அடுப்பு மூட்டி தேயிலை கொதிக்க வைத்துக் கொண்டிருந்த கந்தசாமி, 'எப்படி றைவர், சௌக்கியமா..?' என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தான்.

அவன் புற்பூண்டுகளையெல்லாம் வெளிசாக்கி வைத்திருந்த நான்கு ஏக்கர் நிலத்தையும் உழவடித்து விட்டுத் திரும்பிய போது, நேர்வாளங் கொட்டைகள் சில செடியோடு பிடுங்கி வீசப்பட்டிருப்பது தெரிந்தது. இரண்டு கொட்டைகளை எடுத்து சிறுவால் பட்டிக்குள் சொருகிக் கொண்டே வாடிக்குள் நுழைந்தேன்.

கிளாசில் தேனீர் ஊற்றித் தந்தான் கந்தசாமி. வலது கையில் தேனீர் கிளாசையும் இடது கையில் சீனியையும் பெற்றுக் கொண்ட நான், நேர்வாளங் கொட்டையை எப்படி இவனுக்குக் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டே, சீனியை நக்கி நக்கி தேனீரை குடித்தேன். இன்னொரு கிளாசில் தேனீரை ஊற்றியெடுத்துக் கொண்டு, சாக்குக் கட்டிலில் அவன் போய் அமர்ந்த போதுதான் ஒரு யோசனை தோன்றியது.

''கந்தசாமி! என்ட இடுப்புவார அயத்துப் போய் மிசின்ல வெச்சிட்டன். அதுக்குள்ள காசெலாம் இரிக்கி. அதெக் கொஞ்சம் எடுத்துட்டு வாவன்''

அவன், தேனீர் கிளாசை கீழே வைத்து விட்டு வெளியே போனான். நான், நேர்வாளங் கொட்டையை எடுத்து, கல்லில் வைத்து நசித்து, அவனது தேனீர் கிளாசுக்குள் போட்டு கரைத்து விட்டேன்.

திரும்பி வந்து தேனீரை குடித்தவன், உடல் நெளிந்து, வயிற்றைத் தடவி, முகம் சுளித்தான். ''என்ன கந்தசாமி..?'' என்று கேட்டபோது, ''என்னயோ வயித்தக் கலக்குது றைவர்'' என்று கூறிக் கொண்டே ஆற்றுப் பக்கம் ஓடினான். வாடியில் வந்து குந்த முடியவில்லை அவனால். ஆற்றுப் பக்கமே ஓடியோடித் திரிந்து களைத்து விட்டான்.

நான் உண்மையைச் சொன்னதும், ''நீங்க பொல்லாத ஆள் றைவர்'' என்று சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்துச் சொன்னான்.

என்ன செய்தாலும் கோபமே வருவதில்லை அவனுக்கு. அவனுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கலாம்.

ஆயிலங்குடாவில் எனக்கு நாலு ஏக்கரில் ஒரு வயல் இருக்கிறது. இரண்டு போகத்துக்கும் குறைவில்லாமல் விளைச்சல் தரக்கூடிய பொன்கொழிக்கும் பூமி. திருமணத்தின் போது மாமா சீதனமாகத் தந்தது.

கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன், கந்தசாமியையும் இன்னும் நாலைந்து ஆட்களையும் போட்டு, அதில் வெள்ளாமை செய்தேன். நன்றாக விளைந்தது. பச்சைப் பசேலென்றிருந்த வயல், நெல்மணிகள் நிரம்பி தங்க நிறமாக தகதகப்பதைப் பார்க்க பார்க்க மனதுக்குள் ஊமை மகிழ்ச்சி ஊறிக் கொப்பளித்தது.

இரண்டொரு நாட்களில் வெட்டலாம். நாலு ஏக்கருக்கும் இருநூறு மூடைக்குக் குறைவில்லாமல் தேறும் போல் இருந்தது.

சில கதிர்களை அறுத்தெடுத்து, இரண்டு கையும் கொள்ளுமளவு சேர்த்துக் கட்டியெடுத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தேன். கிணற்றடி வேலிக்கம்பில் அதைக் கட்டித் தொங்கவிட்டேன்.

கதிரின் கீழ் தொங்கிக் கொண்டிருக்கும் விம்மிப் புடைத்து நீண்டு கிடந்த நெல்மணிகளைப் பார்த்த போது, என் மனைவிக்கு சந்தோஷம் தாளவில்லை.

இரவானதும், உள்ளறைக்குள் குப்பி விளக்கொன்றை ஏற்றி வைத்து, அருகில் வெள்ளை விரித்து, அதில் கொண்டு வந்த கதிர்களையெல்லாம் வைத்தோம்.

இரவு முழுக்க விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். கதிர்களை இப்படி கௌரவித்தால்தான், தொடர்ந்து அடுத்த போகத்திலும் விளைச்சல் அதிகரிக்கும்.

மறுநாள், நானும் நண்பர்களும் குடும்பத்தினருடன் சோறாக்கித் தின்பதற்காக மாட்டுவண்டிலில் ஏறி வயலுக்குப் புறப்பட்டோம். முற்றியிருந்த கதிர்களை அறுத்து அரிசாக்கி, சோறு சமைத்தார்கள் பெண்கள். நானும் கந்தசாமியும் துறையடிக்குச் சென்று நீண்டு கொளுத்த பெரிய விரால் மீனொன்று வாங்கி வந்தோம். பச்சரிசிச் சோறும் பாலாண மீன் கறியும் நாவைச் சுண்டியிழுத்து சுவை கக்கியது. சிரிப்பும் கதையுமாக எல்லோரும் சுவைத்து சுவைத்து சாப்பிட்டார்கள்.

கந்தசாமி, மூக்கால் வழிந்த நீரை மேற்துண்டால் பிடித்து விட்டுக் கொண்டவாறே அள்ளி அள்ளிச் சாப்பிட்டான். பீங்கானை நீட்டிக் கொண்டேயிருந்தான். பெண்களும் சளைக்காமல் அவனுக்கு சோற்றையும் கறியையும் அள்ளி வைத்துக் கொண்டேயிருந்தனர்.

போதும் என்று அவன் பீங்கானை வைத்த போது, கொழுத்த எருமை மாட்டு அளவுக்கு வயிறு உப்பிப் போய்விட்டது. எழுந்து நடக்கவும் முடியாமல் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க இருந்த இடத்திலேயே மல்லாந்து விட்டான்.

கந்தசாமியின் பேச்சும் செயலும் எல்லோருக்குமே பெரிய நகைச்சுவையாக இருக்கும். போடியார் உட்பட எல்லோருக்குமே அவன் மீது கொள்ளைப் பிரியம். ஒரு பொறுப்புக் கொடுத்தால், யாரும் குறையே காண முடியாதபடி அதை திறம்பட செய்து முடிப்பான்.

சில நேரங்களில் போடியார், பொஞ்சாதியிடம் பிடித்து வந்த சண்டையின் கோபத்தை இவன் மீது காட்டுவார். பளீர் பளீர் என அவனது கன்னத்தில் அறை விழும். அறையை வாங்கிக் கொண்டு மௌனமாக அப்பால் செல்லும் அவனது செயலில் போடியாருக்கு மனது இளகிவிடும். 'இஞ்ச வாடா' என்று கூப்பிட்டு, இரண்டு மரைக்கால் நெல்லை அள்ளிக் கொடுப்பார்.

கந்தசாமி, அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவான். கறுப்பு மாமா வந்திரிக்காரென்று எனது மூத்த மகன் சொல்லும் போது, சிரித்துக் கொண்டே அவனது சொக்கில் இடுங்கி விட்டு உள்ளே நுழைவான்.

தண்ணிச் சோறும் எருமைத் தயிருமென்றால், பசிக்கா விட்டாலும் வயிறு முட்டச் சாப்பிடுவான். எப்போது வீட்டுக்கு வந்தாலும், என் மனைவியின் கையால் சோறு தின்னாமல் போக மாட்டான்.

வேலை செய்து செய்து உடல் முறுக்கேறித் திரட்சியுற்றிருந்த அவன், இப்போது சக்தியெல்லாம் உறிஞ்சப்பட்ட வெறும் சக்கை போல் சுருண்டு போயிருக்கிறான். அவனது செயலை எண்ணிப் பார்த்து நான் சிரித்துக் கொண்டிருக்க, அவனோ ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக முகம் இறுகி இருக்கிறான்.

''கந்தசாமி. செல்றாப்பா. ஏதோ விசயமாத்தான் வந்திரிக்காய் போல இரிக்கி''

''ஓம் றைவர். உங்களுக்கு ஆயிலங்குடாவில நாலு ஏக்கர் காணி இரிக்குதில்லே?. அதில இந்த முற காலபோகம் செய்வமெண்டு யோசிச்ச நான்''

''நாங்க அங்காலப் பக்கம் வந்து மிச்சங் காலமாப் பெய்த்தே. இப்ப அந்த வயலெல்லாம் எப்படிக் கிடக்கு கந்தசாமி?''

''வயல் நல்லாத்தான் கிடக்கு. போன முற இயக்கத்தால செஞ்சவங்கள். நல்ல லாபம். அதான், இந்த முற நாம செய்வமெண்டு எடுத்த நான். அவங்களுக்கு ரெண்டாயிரம் ருவா கட்டிட்டன். நியாயப்படி ஆயக்காசி உங்களுக்குத்தான தரணும். அதான், நாலு ஏக்கருக்கும் ரெண்டாயிரம் ருவா கொண்டாந்திரிக்கன். கதிர் அறுத்தவுன, புதிரு மூட ஒண்டும் கொண்டாறன்''

''நாங்க இல்லெண்டு சென்னாப்போல என்ன ஆவப்போவுது. வயலப் பாக்க வாறத்துக்கே பயத்தில இரிக்கம். சாவுங்காலத்திலயாவது சீவனமா இருக்கமெண்டு நினெச்சிருந்தம். இப்பிடி, இருக்கிற காலத்திலெயே பிரயோசனமில்லாமக் கிடக்குது''

''எங்களுக்கும் கஷ்டந்தான் றைவர். என்ன செய்றது. உங்கட ஆக்கள் மரப்பாலத்தில, கரடியனாருல, இலுப்படிச்சேனயில, மத்த மத்த இடத்தில இரிக்கிற தங்கட வயலயெல்லாம் குறெஞ்ச விலயில வித்துப் போட்டினம். சிலவை, விக்கிறத்துக்கு இரிக்கினம்''

''வேற என்ன செய்ற..! வித்தா கொஞ்சங் காசாவது கிடெக்கும். இல்லாட்டி, காசிமில்ல, வயலுமில்ல''

''நீங்களும் விக்கிறண்டா செல்லுங்க றைவர். நிறையப் பேர் வாங்கிறத்துக்கு இரிக்கினம். இயக்கத்துக்கும் ஒரு தொக கட்டிப் போட்டுத்தான் நாங்களும் வாங்கணும். நான் ஆக்கள கூட்டியாறன். நீங்களே விலயப் பேசிக்கலாம்''

''எவ்வளவுக்கு குடுக்கலாம் கந்தசாமி?''

''வயல் நல்ல வயல்தான். மழ இல்லாம உட்டாலும், வெள்ளாம தீஞ்சி போவாத வயல். தண்ணி புடிச்ச இடம். கோட காலமெண்டாலும், கால் வெச்சா முழங்காலுக்கு மேல புதெயும். எண்டாலும், சரிவு மாதிரி ஏத்த இறக்கமா இரிக்கிறத்தால, தண்ணிய தேக்கி வெச்சிக்க ஏலாது. எவ்வளவு உசரமா வரப்பக் கட்டினாலும், ஒரு பக்கம் தண்ணி வழியத்தான் பாக்கும்''

''சரி, அதெல்லாம் எனக்குத் தெரியாததா? எவ்வளவுக்கு குடுக்கலாமெண்டு செல்லன்''

''என்ன, ஒரு பத்திலயிருந்து பதினஞ்சுக்குள்ள பாக்கலாம்''

''என்ன கந்தசாமி நீ செல்ற கதெ. பதினஞ்சி வருசத்துக்கு முன்னாலயே இருவதுக்கு கேட்டவனுகள்''

''என்ன செய்ற றைவர். இப்ப நிலம அப்பிடிப் பெய்த்து. அறா விலைக்கெண்டாலும், குடுத்துப் போட்டு இதாவது கிடெச்சிச்சே எண்டு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்''

அவன், சட்டைப் பையிலிருந்த பணத்தை எடுத்து நீட்டினான். நாலு ஏக்கர் நிலத்துக்கு ரெண்டாயிரம் ரூபா ஆயம். பழிபோட்டால், அதுவும் இல்லையென்றாகி விடும். வாங்கி எண்ணிப் பார்த்து விட்டு மனைவியிடம் கொடுத்தேன்.

''அப்ப நான் போட்டு வாறன் றைவர்''

எங்கள் இருவரதும் சிரிப்பை வாங்கிக் கொண்டே, அவன் கடப்பைத் தாண்டி வெளியே சென்று கொண்டிருந்தான்.

No comments:

Twitter Bird Gadget