Sunday, April 3, 2011

வீரத்தாய்


கழுத்து வழியே அறுந்து, குருதியில் தோய்ந்து வழியும் தலையன்று அவளது கைகளிலிருந்தது. அவள், அப்படியும் இப்படியுமாக அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். மூடியிருந்த அதன் விழிகளில் கசியும் நோய்கொண்ட மரணச் சிரிப்பை ரசித்தாள். படிந்திருந்த உதிரக் கோடுகளையும் தாண்டி, அறிவு நேர்மையில் விளைந்த கம்பீரமும், அறச்சீற்றத்தின் மின்னல் வெட்டுமான இயல்பழுந்தியிருந்த அதன் கன்னங்களின் அழகு, அவளது கண்களில் மிருதுவான ஸ்பரிசமாக இறங்கிற்று.

நன்கு அனுபவப்பட்ட கூர்வாளன்றினால் துண்டாக்கித் தூர வீசியெறியப்பட்டிருந்த அந்தத் தலையைக் கண்டு அவள் அஞ்சவில்லை; கலங்கவில்லை; கண்ணீரும் வடிக்கவில்லை. கலைந்திருந்த அதன் தலைக்கேசத்திலும், உதிரம் துப்பியிருந்த அதன் நெற்றிப் பரப்பிலும், கன்னங்களிலும் தன் உதடுகளைக் குவித்து முத்தமிட்டாள். தாய்மை மணக்க தன் நெஞ்சோடு அதை அணைத்துக் கொண்டாள். அவளது கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர்த் துளிகள் அந்தத் தலையின் மேலே விழுந்து சிதறின. சந்தேகமின்றி அவை ஆனந்தக் கண்ணீர்தான்.

மிகக் குரூரமான இந்த அனுபவம் அவளுக்குப் புதிதுதான் எனினும், அவளது இதழ்களில் குறுநகை பரவிற்று. பனிப்பாளங்களை உடைத்தெழும் அழகிய அல்லி மலராய்த் தோன்றிச் செழித்த அந்தக் குறுநகை மெல்ல மெல்லச் சிரிப்பாகப் பரவிச் சத்தமாக வெடித்தது. அவள், பார்வையை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினாள். வானக்கும்மட்டிலிருந்து தொங்கும் ஒளிவெள்ளமாய் நண்பகற் சூரியக் கதிர் அவள் கண்களைக் கூசிற்று. கண்களை இடுங்கிக் கொண்டு வீறாப்புடன் பார்வையை எறிந்தாள். புன்முறுவல் விலகாத முகச் செழிப்புடன் இதழ்களைப் பிரித்து "அல்ஹம்துலில்லாஹ்" எனச் சத்தமிட்டுக் கத்தினாள். தன் குரல் வளத்தின் உச்சகட்ட வலுவைப் பயன்படுத்தி மீண்டுமொரு முறை கத்தினாள்.

மூன்று நாட்களாகத் தண்ணீரின்றி வரண்டு கருகியிருந்த தொண்டைக்குழியிலிருந்து, அவள் எதிர்பார்க்கும் வலிமையான சத்தம் எப்படித் தோன்றும்!

தூரத்தில், இறைநேசர்களை, குதிரையில் அமர்ந்தவாறு தம் கூரிய வாளினால் வேட்டையாடி வெட்டிச் சரிக்கும் நோக்குடன் குரூரமாகப் போரிட்டுக் கொண்டிருக்கும் அதிகார வக்கிரர்களின் ஆன்மாவைக் கிலி கொள்ளச் செய்யுமாறு, தன் சத்தத்தின் வலிமை பரவிச் செறிய வேண்டுமென அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவளது எதிர்பார்ப்புக்கு முரணாக, அவளிருந்த கூடாரத்திற்கும், அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த போர்க்களத்திற்கும் நடுவிலான இடைவெளியில் அவளது சத்தம் கரைந்து நசுங்கிக் காணாமல் போயிற்று.

ஆனாலும், அவள் தைரியம் இழக்கவில்லை. அவளது நெஞ்சின் மத்தியில் ஆன்ம திருப்தி செறிந்தது. இறைத்தூதரின் பேரர் மேற்கொண்டுள்ள சீர்திருத்தப் புரட்சியின் பாதையில் தன் அருமைப் புதல்வனின் வீரத்தைக் களமிறக்கிப் பெருமிதம் காணத்துடிக்கும் ஒரு வீரத்தாய்க்கு இந்த ஆன்ம திருப்தி எவ்வாறு ஏற்படாதிருக்க முடியும்.

உமையாச் சண்டாளன் யஸீதின் சமய விரோத இருப்பையும், சர்வாதிகார ஆட்சியையும் எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த இறைத்தூதரின் பேரர் இமாம் ஹ§ஸைனின் சுவர்க்கம் நோக்கிய பயணத்தில், உண்மையான ஆர்வத்துடன் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டவர்களுள் அவளது குடும்பமும் ஒன்று. திருமணம் முடித்து இரண்டே நாட்கள் ஆகியிருந்த தன் புதல்வனையும், அவனது இளம் மனைவியையும் அழைத்துக் கொண்டு, கூபா நோக்கிப் புறப்பட்ட இமாம் ஹ§ஸைனின் அணியுடன் அவளும் இணைந்து கொண்டாள்.

எதிர்ப்பட்ட காடுகளையும் மலைமுகடுகளையும் தாண்டிப் பயணித்துக் களைத்த அவர்களது உடல்களை, கூபா நகர மக்கள் தொடர்பான முரண்பட்ட எதிர்வுகூறல்கள் மேலும் வாட்டிச் சரித்தன. ஒரு தீங்கு இடம்பெறுகையில் அதனைத் தடுக்க வேண்டியுள்ள சமயப் பொறுப்பை, என்னைப் போன்றோர், உங்களைப் போன்றோர் அலட்சியப்படுத்தலாம். இறைத்தூதரின் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்ட இமாம் ஹ§ஸைன் போன்றோர் அதை அலட்சியப்படுத்த முடியுமா? எதிர்காலத் தலைமுறை குறித்த கவலையும், அதிகார வர்க்கத்தினரின் முரண்சமயப் போக்கு குறித்த விசனமும் இமாம் ஹ§ஸைனின் புரட்சி வாக்கியங்களூடாக வெளிப்பட்ட போது, அவற்றிலிருந்த உணர்ச்சிக் கொதிப்பு அவளில் மட்டுமன்றி, அங்கிருந்த எல்லோர் மனங்களிலும் உத்வேகத்தைக் கிளர்த்திற்று.

ஆனாலும், கடலலையாய்ப் பெருகிவரும் ஆயுதக் காட்டேரிகளின் முன்னால், இரண்டொரு சிறுதுளிகளான இந்த நல்லோரால் என்ன செய்துவிட முடியும்!

எதிரிகள், அவர்களை முற்றுகையிட்டனர். தண்ணீரையும் உணவையும் தடுத்து, தாகத்தையும் பசியையும் அவர்களுக்குப் பரிசளிக்க முயன்றனர்.

சற்றுத் தொலைவில்தான், என்றுமே வற்றாத புராத் நதி, தன் மதுரமான நீர்ப்பரப்பைச் சுழித்துச் சுழித்து, அப்போதுதான் நீரருந்தியவர்களையும் தாகம் கொள்ளச் செய்யும் இதமான சலசலப்பு இழையோட, தாயைக் கண்ட குழந்தையாய் தவழ்ந்து நெளிந்து அவிழ்ந்தோடிக் கொண்டிருக்கிறது. வனத்திலிருந்து வெளிப்பட்ட நாய்களும் நரிகளும் அதிலிருந்து தாகம் தணித்துச் செல்கின்றன. புதர்களிடை மண்டிக் கிடக்கும் விஷஜந்துகளும் தடையின்றி நதி நீரைப் பருகிக் களிக்கின்றன. உலகோர்க்கு அருட்கொடையான இறைத்தூதரின் பேரருக்கு மட்டும், அதிலிருந்து ஒரு சொட்டு நீர்தானும் பருக அனுமதியில்லை.

பசியினாலும், தாகத்தினாலும் ஈமானிய வீரச் செம்மல்களின் வலிமையைத் தளர்த்திவிட முடியும் என்ற உமையாச் சண்டாளர்களின் கனவு, யுத்தம் தொடங்கிய நேரம் தொடக்கம் பொடிப்பொடியாகச் சிதறுண்டு போகத் தொடங்கிற்று. இமாம் ஹ§ஸைனதும் அவரது ஆதரவாளர்களதும் வலிமையென்பது, அவர்களது உடலிலன்றி, உள்ளத்திலல்லவா இருக்கிறது!

கூடாரங்களில் இருந்த வண்ணம் தந்தையை, கணவனை, சகோதரனை, புதல்வனை புனித பாதையில் களமிறக்கிக் கொண்டிருந்த வீரத்தாய்களில் அவளும் ஒருத்தியானாள். தன்னுயிரை விடவும் தான் பெற்றெடுத்த உயிரை உயர்வாகக் கருதுவது தாய்மையின் பண்பு. அந்த உயிரை, இமாம் ஹ§ஸைனுக்காக அர்ப்பணிப்பதென்பது எத்துணை அரிய சிறப்பு!

அவள் தன் மகனை அழைத்தாள். பிடரி தாண்டி வழியும் அவனது தலைக்கேசத்தைப் பற்றி, அவன் முகத்தைத் தன் தோள் மீது அழுத்தி அணைத்துக் கொண்டு, கண்கள் பளபளக்கப் புன்னகை சொரிந்தாள். விண்மீன்களைப் பிரதிபலிக்கும் ஏரி போல் அவள் விழிக்குளம் மின்னிற்று. பிரசவத்தின் போதான பெருமூச்சை அவளது நாசித்துவாரங்கள் நினைவுபடுத்த, சுவர்க்கத்திலிருந்து தொங்கவிடப்பட்ட வெள்ளிச்சரடு ஒன்று அவள் கண்களைக் கௌவிற்று.

அகன்றுயர்ந்த நெஞ்சும், முறுக்கேறிய கைகளில் இறுக்கிப் பிடித்த வாளுமாய் நின்றிருந்த தன் புதல்வனைப் பார்த்து அவள் கூறினாள்;

"பேராசை குடிகொண்ட சுயநலக் குகையிலிருந்து இரத்த வெறி பிடித்த குள்ளநரிக் கும்பலொன்று எம் இமாமை வீழ்த்தி, இஸ்லாத்தை வேரறுக்கப் புறப்பட்டு வந்துள்ளது. படைத்தவனாலும் சகிக்க முடியாத இந்த மாபாதகச் செயலைத் தடுத்து நிறுத்துவதில் உன் வீரம் மறக்க முடியா வரலாற்றுப் பங்களிப்பொன்றை வழங்கட்டும். காயத்தின் மேல் விழுந்த நச்சுத் துளிகள், அவர்கள். கழுவித் துடைத்து உலர்த்த வேண்டிய கடமை, உன்னுடையது. புறப்படு, ஒரு புனிதப் போருக்கு!"

தாயின் உரமூட்டலில் உணர்ச்சி பொங்க, கைகள் பற்றியிருந்த வாளை மேலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கிய அவனது அகன்ற புயங்களை, அவனது இளம் மனைவியின் உதடுகளைப் பிளந்து துள்ளி விழுந்த சிணுங்கலொலி பிடித்து நிறுத்தியது. அவன் நின்று திரும்பினான். வானிருளின் முற்றுகையைத் துரத்தியளிரும் பிரகாசமான முழுநிலவான அவளது முகத்தையும், உதிரும் பனித்துளிகளை உற்பவித்துக் கொண்டிருக்கும் அவளது அகன்ற கண்களையும் அவன் கூர்ந்து நோக்கித் தயங்கி நின்றான்.

'போய்த்தான் ஆக வேண்டுமா?' என்று பரிவும் ஒட்டுணர்ச்சியும் இழையோடக் கேட்கும் அவளது கண்களின் எழில் நடத்துள் அவனது இறுக்கம் அவிழ்ந்து வழியத் தலைப்பட்டது.

தாய்க்குப் பொறுக்கவில்லை. வேகமாக நடந்து வந்து, அவன் முன்னே நிமிர்ந்து நின்றாள். தனது பார்வையை அவனது கண்களின் ஆழத்தை ஊடுருவிப் பாயவிட்டாள்.

"மகனே! இளம் மனைவியின் அருகாமைச் சுகத்தை விட, இமாம் ஹ§ஸைனுக்கான உயிர்த்தியாகம் முற்றிலும் உயர்ந்தது என்பதை உனக்கு நினைவுபடுத்துகிறேன். நிகழ்கால ஆட்சியின் இழிவு, ஊமைக் காயமாய் உன்னுள்ளே கனக்கவில்லையா? இருட்டில் வாழப் பழகிவிட்ட வெளவாலைப் போன்ற இந்த ஈனர்களின் அதிகாரத்தின் கீழ் ஈமானோடு வாழ முடியுமென நினைத்துவிட்டாயா? நீ குழந்தையாய் இருந்த போது நான் உனக்கூட்டிய தாய்ப்பால்தான் உன்னை வளர்த்தெடுத்து வீரனாக்கியது. அந்தத் தாய்ப்பால் உனக்கு ஹலாலாக வேண்டுமானால், இப்போதே புறப்படு. எதிரிகளைத் துவம்சம் செய்துவிட்டு மடி. இல்லையெனில் என்னிலிருந்து நீ அருந்தி வளர்ந்த தாய்ப்பால் உனக்கு ஹராமாகும். இமாம் ஹ§ஸைனுக்காகப் போராடித் தியாகியாவதை விடச் சிறந்த சுகம் உனக்கு வேறில்லை. நினைவிருக்கட்டும்; இமாம் ஹ§ஸைன்தான் உன் தலைவர்; வழிகாட்டி எல்லாமே. மரண வாயிலிலும் தளராத இறுக்கத்துடன் போராடு. போர்க்களத்தில் நீ போராடி உன் உடலிலிருந்து உயிர் பிரியும்போது, அல்லது உன் மேனியிலிருந்து சிரசு அறுந்து விழும்போது, அதில் தெறிக்கும் உதிரத்துளிகளிடை உன் வாழ்வின் இலட்சியமும் நோக்கமும் பூர்த்தியடையும்"

அவள், அவனது தலையைக் கோதி வீரக்கனைப்புடன் அனுப்பி வைத்தாள். வானுயர எழுந்து நிற்கும் புழுதிப் படலத்தை ஊடறுத்துப் பாய்ந்து கொண்டு அவன் போர்க்களத்தில் கால் பதித்தான். எதிர்ப்பட்ட இறைவிரோதிகளை, தன் கைவலிமையும் வாள் கூர்மையும் இணைந்த ஆக்ரோஷத் தாக்குதலில் குழுக்குழுவாகப் பலியெடுத்துக் கொண்டே முன்னேறிச் சீறும் அவனது வீரத்தினவைக் கூடாரத்தின் வெளியே வந்து நின்றவாறு மகிழ்ச்சியும் பதட்டமும் உந்தித் தள்ளும் உணர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தாய்.

ஒரு மாபெரும் வீரனைப் பெற்று வளர்த்து, இமாம் ஹ§ஸைனின் புரட்சிக்காய் அர்ப்பணித்த வீரத்தாய் என வரலாறு அவளைக் கொண்டாடுமே. அவளைப் போன்றோர்க்கு இதைவிடச் சிறந்த பிறவிப் பயன் வேறென்ன இருக்க முடியும்.

புழுதிப் படலம் உயர்ந்து செறிந்து, அவளது புதல்வனை மறைத்துக் கொண்டது. அவனை, கண்களிலிருந்து தவற விட்டு விட்ட தவிப்பில் அவள் நெளிந்தாள். காற்று வீசுகையில் நடுங்கும் காய்ந்த மரக்கிளையின் ஓசையாய் அவளுள்ளம் துடித்துச் சத்தமெழுப்பிற்று. மேலெழும் பதட்டத்தைப் பிசையும் கைகளுள் புதைத்துக் கொண்டு, இதயத்தின் விதைக்குள் சோக வண்டல் கரிக்க எச்சில் விழுங்கியவாறு அவள் காத்திருந்தாள்.

சற்று நேரம் சென்றிருக்கும். போர்க்களத்தின் புழுதிப் படலத்தைக் கிழித்துக் கொண்டு, உடலிலிருந்து வேறாக அறுத்தெறியப்பட்ட தலையன்று அவளது கூடார முற்றத்தில் திடீரென வந்து விழுந்து புரண்டது. நெஞ்சு பதைபதைக்க அவள் அதை நோக்கி ஓடினாள். குப்புறக் கிடந்த தலையை மறுபுறம் திருப்பிப் பார்த்தாள். அது, அவளது புதல்வனின் தலைதான்.

ஓவென்ற அழுகை கதறும் அவலக்குரல், அவளது தோள்களைத் தாண்டிச் சென்று கீழே கிடந்த தலையை நோக்கி வந்து விழுந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். அவனது இளம் மனைவி, இரண்டே நாட்களில் முற்றுப் பெற்றுக் கருகிப் போன தன் வாழ்வின் சோகத்தை, நீரருவி கொட்டும் வெண்ணுரைகளாய், தன் கண்களூடு கொட்டிக் கொண்டிருந்தாள்.

தாயோ அழவில்லை. இதய ஆழத்தில் சம்மட்டி அடி விழுந்த கொடூர வலி உறுத்திய போதிலும், தளராத இறுக்கத்துடன் அவள் தன் புதல்வனின் வேறாக்கப்பட்ட தலையைக் கூர்ந்து நோக்கினாள். ஏன் அழவேண்டும்! அவள் எதிர்பார்த்த பேறு கிடைத்து விட்டது. பிறவிப் பயனை அடைந்தாயிற்று. இனி, ஆனந்தக் கண்ணீர் உதிர்ப்பதையன்றி, ஆறாத்துயருற்று அழுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்.

அவள், அந்தத் தலையை எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்தாள். நெற்றியிலும் கன்னங்களிலும் உச்சந்தலையிலும் மென்மையாக முத்தமிட்டாள். தாய்மை உணர்வுகள் பூரிக்கப் பெருமூச்செறிந்தாள்.

'பெற்ற பிள்ளைதான். இமாம் ஹ§ஸைனுக்காக பிள்ளையை குர்பான் கொடுத்தாயிற்று. குர்பான் கொடுத்ததை மீளவும் நான் வைத்துக் கொண்டிருப்பது சரியாகுமா?'

அவள், அந்தத் தலையைக் கையிலெடுத்து உயர்த்தினாள். வாட்களும் ஈட்டிகளும் மோதிக் கொள்ளும் மரணச் சத்தங்கள் முழங்கிக் கொண்டிருந்த கர்பலாத் திடலை நோக்கி, தலையை வேகமாக வீசியெறிந்தாள். அந்தரத்தில் மிதந்தவாறு உயரப் பயணித்துக் கொண்டிருக்கும் தலை, எதிரிகளில் ஒருவன் மீது விழுந்து அவனை நசுக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன், திரும்பி, கூடாரத்தை நோக்கி நடக்கவாரம்பித்தாள், அந்த வீரத்தாய்.

No comments:

Twitter Bird Gadget