Saturday, May 28, 2011

நட்பு



ஹனீபா, இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன், தான் கவலையுற்றுக் கண்ணீர் உகுத்ததும், இரண்டு மூன்று நாட்கள் படுக்கையில் உணவின்றித் தூக்கமின்றிப் புரண்டதும் வீண் வேலைகளாகி விட்டனவே என்ற கவலையை விட, உறவின் ஆறுதற் சுவாசங்களைத் துரத்தியடித்த பிரிவுத் துயருக்கு முற்றுப் புள்ளி வந்தாயிற்று என்ற மனநிறைவே அவரை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. அடி மனதின் ஆழத்தில் இன்னும் பசுமை குன்றாது செழித்துக் குலுங்கி நிற்கும் அந்த நினைவுகளின் திடீர் உணர்ச்சியில், அவரது உடலும் உதடுகளும் அசைவற்றுச் சிலையாயின. உள்ளம் மட்டும் கிறங்கித் துடித்தது.

உணர்ச்சி வெளிப்பாடுகளைக் கொட்டிய ஹனீபாவின் முகத்தை புன்முறுவல் மாறாத வியப்புடன் ஊடுருவினார், அவருக்கு முன்னால் நின்றிருந்த மாணிக்கம். மிக நீண்ட இடைவெளிக்குப் பின், வாழ்க்கைச் சோதனைகளால் மறக்கடிக்கப்பட முடியாது உள்ளத்தில் நிலைத்து நிற்கும் தன் பால்ய நண்பன் ஹனீபாவைக் காண்பதற்கென்று ஓடி வந்த மாணிக்கம், தன்னை வாவென்றழைக்கவும் முடியாது இன்ப அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போன ஹனீபாவின் நாவினூடு, தமது நட்பின் ஆழத்தைப் புரிந்து, தானும் உணர்ச்சி வசப்படலானார். எனினும், தன்னை சுதாகரித்துக் கொண்டு ஹனீபாவை நெருங்கி, அவரது தோள்களைப் பற்றி ஓர் உலுக்கு உலுக்கிய போது, சுயநினைவுக்குத் திரும்பிய ஹனீபா, அப்போதுதானை மாணிக்கத்தைக் கண்டவர் போலாகி, "மாணிக்கம்" என்று சத்தமிட்டழைத்தவராக, தன்னிரு கைகளையும் நீட்டி அவரை இறுக்கியணைத்துக் கொண்டார்.


அவர்களது இரு கொழுத்த உடல்களும், பிரிவுத் துயரின் ஆற்றாமைக்குள் அமுங்கிக் கனன்று கொண்டிருந்த தமது நட்பின் உணர்ச்சிக் கொதிப்புகளை, உடல் ஸ்பரிசங்களூடு பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. அந்தப் பரிமாறலிடை கடந்த கால வாழ்வின் இனிக்கும் நினைவுகள் மொட்டவிழ்ந்து அழகு சொரிந்தன.

அறபா வித்தியாலயத்தில் ஹனீபா இரண்டாம் வகுப்புப் பாடநெறிகளைப் பயில ஆரம்பித்த காலமது. பிறிதொரு பாடசாலையிலிருந்து அங்கு வந்த மாணிக்கம், தன் கொழுத்த உடல் தொடர்பாக மாணவர்களிடமிருந்து கிளர்ந்த கிண்டலினால் ஏற்பட்ட மனவிரக்தியைக் கொட்டுவதற்கும், துயரத்தைப் பகிர்வதற்குமான சிறந்த தோழனாக தன்னைப் போலவே இருந்த ஹனீபாவை இனங்கண்டான். ஹனீபாவின் தைரியம், செல்வம் என்பன அவனை மட்டுமன்றி, அவனது புதிய நண்பனான மாணிக்கத்தையும் நண்பர்களின் கிண்டலிலிருந்து காப்பாற்றத் தொடங்கின. இருவரதும் உடல், செல்வ ஒற்றுமை, ஏனைய மாணவர்களிடமிருந்து தனித்துவமானவர்களாகவும், தம்மிடையே நெருக்கமானவர்களாகவும் அவர்களை ஆக்கிற்று. கூடவே, பாடத்துறைகளில் அவர்களுக்கிருந்த திறமையின்மை, ஆசிரியர்களின் கண்டிப்புகள், தண்டிப்புகள் என்பனவும், அவர்கள் எப்போதும் பிரியாத நெருங்கிய நண்பர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தின.

பாடசாலையில் துவங்கிய அவர்களது நட்பு, வீடு வரை நீண்டது. பெற்றோர் உறவினர்களையும் தாண்டிச் சென்றது. உணவு, படுக்கைகளைப் பரிமாறிக் கொள்ளுமளவு இரு வீடுகளுக்கும் சொந்தமானவர்களாயினர்.

வார நாட்களில் இருவருக்கும் மிகவும் பிடித்தது வெள்ளிக்கிழமைதான். அந்நாட்களில்தான் அவர்களது சுற்றுலா இடம்பெறும். நண்பகற் சூரியன் சரிந்து வெயில் குறையத் தொடங்கும் போது, இருவரும் சைக்கிளில் ஏறி, ஒருவர் மிதிக்க மற்றவர் முன்னால் இருக்க, 15 நிமிட துரித ஓட்டத்தில் ரயில் பாதையைக் கடந்து நகரத்திலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியை வந்தடைவர். சைக்கிளை மரமொன்றில் சாய்த்து வைத்து விட்டு, ஓடியாடி விளையாடுவர். பாலப்பழம், வீரப்பழம், பணிச்சம்பழங்களைப் பறித்து வாய்க்குளிட்டுக் குதப்புவர். புதர்களிடையே முட்டையிட்டு மறைந்திருக்கும் குருவிகளைப் பதுங்கிப் பதுங்கிச் சென்று பிடிப்பர். பிடித்தவற்றை, பின் பறக்க விட்டு வேடிக்கை பார்ப்பர். முழங்காலளவு புதையும் கறுப்பு நீர்த்தேக்கங்களில் தைரியமாக இறங்கி, சுங்கான் மீன் பிடிப்பர். அப்போதெல்லாம் பாம்பைத் தவிர மற்றெந்தப் பயமும் அவர்களுக்கிருந்ததில்லை. அந்தக் காட்டுப் பகுதிக்குள்ளிருக்கும் நேரம் முழுவதும் மகிழ்ச்சிச் செழுமையுற்ற சுதந்திரப் பசுமையை தமது ஒவ்வொரு மூச்சிலும் அவர்கள் உணர்வர். அங்கிருந்து வெளிப்பட்டு வீட்டை வந்தடையும் போது, இருள் கவியத் தொடங்கும் இரவின் ஆரம்பமும், இருவரதும் வரவை எதிர்பார்த்து வாசலில் நிற்கும் தாயின் கண்டிப்பும் அவர்களை வரவேற்கும்.

ஏதேனும் ஆபத்துகளோ திடுக்கங்களோ ஏற்படும் போது, ஹனீபா "அல்லாஹ்" எனக் கையேந்துவதும், மாணிக்கம் "முருகா" என அழைப்பதும் புதிதாகப் பார்ப்போரில் நெற்றிச் சுருக்கத்துடனான வியப்பைக் கிளறும்.

ஒருவாறு சிரமப்பட்டு, பத்தாம் வகுப்புக்குச் சித்தியடைந்த ஹனீபாவும் மாணிக்கமும், இரண்டு தடவை முயற்சித்தும் அதைத் தாண்டிச் செல்ல முடியாது போகவே பாடசாலையிலிருந்து விலகிக் கொண்டனர். அதன் பின் சில காலங்கள் பெற்றோர் உழைப்பில் உல்லாசமாகச் சுற்றித் திரிந்ததும், பின்னர் பொறுப்புடன் இருவரும் இணைந்து சொந்தமாக இரும்புக் கடையன்றை ஆரம்பித்ததும், அதன் மூலம் நிறைய வருமானங்களை ஈட்டியதும், இருவரும் ஒரு வார இடைவெளிக்குள் திருமணம் புரிந்து கொண்டதுமாக அவர்களது காலங்கள் மகிழ்ச்சிச் சிதறல்களாய்ப் பரந்து பூத்து மணம் பரப்பின. எதிர்நோக்கிய சராசரி சிரமங்கள், பிரச்சினைகளில் அவர்களது வாழ்க்கைப் பரப்பு மாற்றங் கண்ட போதும், இருவருக்குமிடையிலான நட்பு மட்டும் புத்தம் புதிதாகவே இருந்து வந்தது. தமது வெள்ளிக்கிழமைச் சுற்றுலாவை அவர்கள் தொடர்ந்தும் பேணி வந்தனர். எனினும் வாழ்க்கைக் கட்ட வளர்ச்சியும், புதிய போக்குகளும் அவர்களது சுற்றுலாத் தளத்தை மாற்றியமைக்க நிர்ப்பந்தித்த போது ஆற்றங்கரை, கடற்கரை, வயல் வெளிகள் என அவர்களது சுற்றுலாத் தளங்கள் மாற்றமுற்றன. தம்முடன் தமது மனைவி பிள்ளைகளையும் அவர்கள் இணைத்துக் கொண்டனர். ஆற்றங்கரையின், கடற்கரையின் அழகு மணலிலும், வயல் வெளிகளின் வரப்புகளிலும் உலாவும் போது, சுதந்திரப் பறவையன்றின் இனிப்பான சுகானுபவத்தில் அவர்கள் மகிழ்வுடன் மிதப்பர். அந்த மகிழ்ச்சியின் மிதப்பில் காலங்கள் பல உருண்டோடின.

அன்றும் ஒரு வெள்ளிக்கிழமைதான்.

ஜும்ஆத் தொழுது முடித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பிய ஹனீபாவை, ஏற்கனவே அங்கு வந்திருந்த மாணிக்கம் மகிழ்ச்சி ததும்ப வரவேற்றார். மாணிக்கத்தினதும் ஹனீபாவினதும் மனைவியர் இணைந்து தயாரித்திருந்த பகலுணவை எல்லோரும் ருசித்துச் சுவைத்துச் சாப்பிட்டனர். உண்ட களைப்புத் தீர சற்று ஓய்வெடுத்த பின், கடற்கரைக்குச் செல்ல ஆயத்தமாயினர். கடற்கரையில் ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கத் திட்டமிட்டிருந்த அவ்விரு குடும்பத்தினரும், தம் ஆனந்தத் தேடலை அறுப்பது போல் தூரத்தே உரத்து ஒலிக்கத் தொடங்கிய துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டுத் திடுக்கிட்டனர். நடைபெற்ற அல்லது நடைபெறப் போகின்ற ஏதோ ஓர் அசம்பாவிதத்தை உணர்த்தும் அந்தச் சத்தங்கள் எல்லோர் உள்ளங்களிலும் திடுக்கத்தைத் திணித்து, முகக் குறிகளில் கலவரத்தைப் புகுத்தின. தொடர்ந்து ஹனீபாவின் நண்பரொருவர் கொண்டு வந்த செய்தி அவர்களது உள்ளங்களை உறைய வைத்தது.

அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற சண்டைகளும் பயனற்ற இழப்புகளும் அவர்கள் அறிந்ததுதான். ஆனால், அவை இப்படியரு பெரும் சங்கடத்துள் தம்மை ஆட்படுத்தும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டமும் அப்போராட்டத்தைத் துரிதப்படுத்துவதற்காக, அல்லது நசுக்குவதற்காக செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடுகளும் இத்தகைய பெரும் விஸ்வரூபத்தைப் பகிரங்கப்படுத்தத் தொடங்கியது, அவர்களளவில் சொல்லொணா ரணத் துயருடனான வலியாயிற்று.

"என்ன ஹனீபா! இப்படி ஆடாம அசையாம நிக்கிறீங்க. தமிழ்ப் பகுதிக்குள்ள போன முஸ்லிமாக்களுக்கு என்ன ஆயிற்றோ தெரியல்ல. முஸ்லிம் பகுதிக்குள்ள வந்த தமிழ்ச் சனங்களுக்கு என்ன நடக்குமோ தெரியல்ல. இந்த நேரத்தில மாணிக்கம் இங்க இருக்கிறது அவ்வளவு நல்லதில்ல. எப்படியாவது யாரு கண்லயும் படாம பத்திரமா அவங்க இடத்தில கொண்டு விட்டுட்டு வாறதுதான் நல்லது. இன்னும் சுணங்காம கெதியா கிளம்புங்க. இந்தத் தேவல்லாத சண்டையால நம்மளப் போல ஆக்களுக்குத்தான் கஷ்டம். எவ்வளவு ஒத்துமையா சந்தோஷமா இருந்தம். யாரு கண் பட்டிச்சோ"

நண்பர் அரற்றிக் கொண்டு அப்பால் சென்ற போது, வீட்டிலிருந்த எல்லோர் கண்களும் குளமாயின. ஒருவரையருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதனர்.

"மாணிக்கம்! இது முடியிற பிரச்சின இல்ல. இவ்வளவு காலமும் எது நடக்கப் போடாதென்டு துஆக் கேட்டு வந்தனோ அது இன்டெக்கு நடக்கும் போல இருக்கு. நீ உடனே கிளம்பு. நம்மட வேன்லயே போவலாம். உங்கள வீட்டில விட்டுட்டு வந்திர்ரன். நிலம சீராகிற வரைக்கும் நாம சந்திச்சிக்காம இருக்கிறது நல்லது. இந்தப் பிரச்சின இன்னும் பெரிசாகிடாம அல்லாஹ்தான் காப்பாத்தனும். பெரிசாயிட்டா, பிறகு நாம சந்திச்சிக்கவே ஏலாமப் போயிடும்" சொல்லி முடிக்கும் போது தன்னையுமறியாமல் அழுது விட்டார் ஹனீபா.

அதன்பின், மாணிக்கத்தையும் அவரது மனைவி மக்களையும் வேனில் ஏற்றிச் சென்று இரு ஊர்களுக்குமிடையிலான எல்லையில் பத்திரமாக இறக்கியதும், கண்ணீர்க் கன்னங்களுடன் விடைபெற்றுத் திரும்பியதும் ஆறாத ரணமாக அவர் மனதில் அழுந்திப் போயிருக்கிறது.

அன்றிலிருந்து இரண்டாவது நாள் ஹனீபாவைத் தேடி வந்த செய்தி, அவரது குரல் வளையைக் கடித்துக் குதறிற்று. இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் மாணிக்கத்தின் வீடும், அதனுள் இருந்த அவரது குடும்பமும் மொத்தமாகச் செத்துப் போனார்களார். ஹனீபா, தன் வாழ்க்கையில் மிகக் கடுமையாகத் துயருற்றழுதது அன்றுதான். அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் எவராலும் அவரது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உணவும், தண்ணீரும் அவரது தொண்டைக் குழியைத் தாண்டிச் செல்ல முடியாமல் பிதுங்கி வழிந்தன. விவரிக்க முடியாத அவர்களது நட்பின் ஆழத்தையும், உறவின் பிடிப்பையும் உணர்ந்து எல்லோரும் வியந்து போயினர்.

ஹனீபாவின் நட்புவாழ்வில் பாலைவன வரட்சியைத் தோற்றுவித்து விட்டுக் காணாமல் போன மாணிக்கம், இதோ முன்னால் வந்து நிற்கிறான். இறந்து போனவன் திரும்பி வந்திருக்கிறான். அதே கொழுத்த உடல், வழியும் மீசை, குறுகுறுக்கும் புன்னகைப் பார்வை. பத்து வருடமென்ற காலவோட்டம் தலையில் சில நரைமுடிகளைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் அவனில் ஏற்படுத்தி விடவில்லை.

"ஷெல் விழுந்ததென்னவோ எங்கட வீட்லதான். அன்டைக்கு ஒரே பதட்டமா இருந்ததால, ஒரு நாள் முந்தியே நாங்க அந்த வீட்டுக்குப் போயிட்டம். அதனால தப்பிச்சிட்டம். அதுக்குப் பிறகு எங்கெல்லாமோ அலைஞ்சி, கஷ்டப்பட்டம். மகன் கனடாவுக்குப் போனான். அடுத்த வருஷம் வந்து எங்க எல்லாரையும் கூட்டிட்டுப் போயிட்டான். அங்கேயே எங்கட காலம் ஓடிப் பெய்த்து. நடுவில உன்னப் பத்திக் கேள்விப்பட்டன். ஊர்ல நடந்த படுகொலச் சம்பவத்தில நீயும் உன்ட குடும்பமும் இறந்து போயிட்டீங்களாமெண்டு. எவ்வளவு அழுதேன் தெரியுமா? ரெண்டு மூணு நாளா தூக்கமேயில்ல. சாப்பிடவும் முடியல்ல. எனக்கு ஆறுதல் கூறிக் கூறி எல்லாரும் சோந்து போனாங்க. நீ இல்லேன்டு கேள்விப் பட்டதும் வாழ்க்கையே வெறுத்துப் போச்சி. ஏதோ ஜடம் மாதிரி காலத்தக் கழிச்சிட்டு இருந்தன். ரெண்டு மாச லீவில போன கிழமதான் நாட்டுக்கு வந்தம். இன்டைக்கு காலையிலதான் கேள்விப்பட்டன். நீ உசிரோடதான் இருக்கிறாயென்டு. எவ்வளவு சந்தோஷமாய இருந்திச்சி தெரியுமா? போன உசிரு திரும்பி வந்தமாதிரி. சந்தோஷம் தாங்க முடியல்ல. அதுதான் உடனே புறப்பட்டு வந்திட்டன். எப்படி இருக்காய் ஹனீபா! தலை லேசா நரச்சிருக்கு. மத்தப்படி உடம்பில மாற்றமொண்டுமில்ல. இன்னும் இளமையாவே இருக்கிறியே, எப்படிடா?"

ஹனீபாவுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. தான் காண்பது கனவா நனவா என யூகிக்க முடியாமற் திணறினார். உள்ளமெங்கும் சந்தோஷ உணர்ச்சிகள் பொங்கிப் பிரவகிக்க கண்களூடு அவற்றைக் கொட்டினார்.

நீண்ட நேரமாக இருவரும் பேசினர். தமது கடந்த கால பசுமை நினைவுகளை மீட்டினர். பிரிவுத் துயரின் கொடுமையை உணர்ச்சி கொப்பளிக்கக் கொட்டினர். குடும்ப நலன்களை அக்கறையுடன் விசாரித்தனர். நாட்டு நடப்புகளை அலசினர். அந்தப் பொழுது, மிகச் செழிப்பான சோலையில் அமர்ந்திருக்கும் இனிய இன்ப அனுபவமாய் அவர்களது உள்ளங்களை நிறைத்தது.

"மாணிக்கம்! நாளைக்கு என்ன நாள் தெரியுமா? வெள்ளிக்கிழம. நம்மட பழைய வழம ஞாபகமிருக்குதானே? நான் குடும்பத்தோட உன்ட வீட்டுக்கு வாறன். எல்லாருமா சேர்ந்து எங்கேயாச்சும் போய் சந்தோஷமா பொழுதக் கழிக்கலாம்"

மகிழ்ச்சிப் புளகாங்கிதத்துடன் ஆமோதித்த மாணிக்கம், உள்ளம் நிறைந்த உவகையோடு அவனிடமிருந்து விடைபெற்று வெளியேறினார்.

மறுநாள், காலையிலிருந்து மாணிக்கம் எதிர்பார்த்திருந்தார். நண்பகலாகியும் ஹனீபாவும் குடும்பத்தினரும் வரவில்லை. ஒருவேளை ஜும்ஆத் தொழுதுவிட்டு வரக்கூடும் என எதிர்பார்த்தார். சூரியன் சரிந்து இருள் கவியத் தொடங்கிற்று. அப்போதும் அவர்கள் வரவில்லை.

மாணிக்கம் காத்திருக்கிறார். வழியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுவெடிப்பில் ஹனீபாவும் அவரது குடும்பத்தினரும் மொத்தமாகப் பலியாகிப் போன உண்மைத் துயரறியாது, மாணிக்கம் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

No comments:

Twitter Bird Gadget