Monday, May 30, 2011

சுரண்டல்

காலையிலிருந்து எல்லாமே வெறுப்பூட்டும் நிகழ்வுகளாய் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ரகுமான் மாஸ்டருக்குக் கோபமாகவே வந்தது. பத்துப் பதினைந்து நாட்களாக, நாள் தவறாமல் வீட்டின் நடுத்திண்ணையில் பரிதாபம் பூசிய முகத்துடன் வந்தமர்ந்து கொண்டிருக்கும் கதீஜா, அவரது கோபத்தை மேலும் இறுக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.

ஞாயிற்றுக்கிழமையாதலால், இன்று நீண்ட நேரம் தூங்க முடியும் என்ற புளகாங்கிதத்துடன், விழித்த கண்ணை மீண்டும் இறுக்க மூடி பெட்ஷீட்டால் இழுத்துப் போர்த்திக் கொண்டு சுருண்ட மாஸ்டர், முதுகில் அடித்துத் தட்டியெழுப்பும் மனைவியின் குரலைக் கேட்டதும், முகம் மட்டும் தெரியுமாப்போல் பெட்ஷீட்டை விலக்கி, மனைவியை வெறித்து, "என்ன?" எனச் சீறினார்.

"கதீஜா வந்திரிக்காள்; வந்து என்னெண்டு கேளுங்களன்"

அவருக்கு மிக வெறுப்பான கதீஜா எனும் பெயரை மிகச் சாவகாசமாகக் கூறிவிட்டு அப்பால் செல்லும் மனைவியின் முதுகை வெறித்துப் பார்த்தார் மாஸ்டர். நாவின் நுனிவரை வந்து முட்டிய அசிங்கமான வார்த்தைகளைப் புறுபுறுத்துத் துப்பியவாறு பெட்ஷீட்டை விலக்கி எழுந்து நின்று, சாரனைச் சரிசெய்து கொண்டு நேரத்தைப் பார்த்தார்.

"இன்னும் எட்டுமணி கூட ஆகல்ல; அதுக்குள்ள வந்திட்டாளா மூதேவி. இண்டெக்கி நாள் விடிஞ்சமாதிரித்தான்"

மேசையில் கிடந்த மூக்குக்கண்ணாடியை எடுத்து, அதன் உட்புறக்கண்ணாடியை, அணிந்திருந்த பெனியன் முனையால் அழுத்தித் துடைத்தவாறு மூக்கில் சொருகிக் கொண்டு, முன்னாலிருந்த அலமாரியின் முன்புற முழுநீளக் கண்ணாடியில் தெரிந்த தன் ஒல்லி உடலை ஆழமாக ஊடுருவினார் மாஸ்டர். ஏற்கனவே ஒல்லியாயிருந்து, பின் சவூதிக்குச் சென்று கொழுத்து வந்த தன் நானா உசனாரைப் போன்று தானும் உடற்பருமன் பெற வேண்டுமென்ற ஆதங்கத்தில் மாஸ்டர் எடுத்த மருந்து மாத்திரைகள், சத்துணவுகள் எல்லாமும் பயனற்றுப் போன கட்டத்தில், வெளிநாட்டுணவுகள்தான் உடலைப் பருக்க வைக்கும் என்ற முடிவுக்கு வந்து, தன் மூளை வலிமையால் அவற்றையெல்லாம் இலவசமாக வென்றெடுத்து உண்டுபார்த்தார் மாஸ்டர். அவை பயனளிப்பதற்குப் புறம்பாக, இருந்த உடலையும் கரைத்துக் கண் விழிகளைப் பள்ளத்துக்குள் தள்ளிய போது, இது தன் மூளை வலிமைக்குத் தோல்வியுற்றோரின் வயிற்றெரிச்சலின் உஷ்ணமாய் இருக்குமோ என்று மட்டும் அவர் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை.

அதன்பின் உடலைக் கொழுக்க வைக்கும் ஆர்வத்தைப் புறந்தள்ளி, வீட்டைக் கொழுக்க வைக்கும் பணியில் தன் மூளையைக் கசக்கிக் கொண்டு களமிறங்கினார். சுமார் மூன்று வருட கடின உழைப்பில், ரிவி, ரேடியோ, ஃபிரிஜ், வாஷிங்மிஷின், கம்ப்யூட்டர், மைக்ரோஅவன் எனப் பெருந்தொகையான வெளிநாட்டுப் பொருட்களுடனும், மூன்றரை லட்சம் தாண்டிய வங்கி மீதியுடனும், மனைவியின் உடலெங்கும் வழியும் தங்கநகைகளுடனும் இலைமறை காயான லட்சாதிபதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாஸ்டர். இத்தனைக்கும் அவர் இதுவரை விமான நிலையத்திற்குக் கூடச் சென்று பார்த்ததில்லை. அவரது மாதாந்த சம்பளத்திலும் அவற்றை வாங்கவில்லை. அப்படியானால், இவையெல்லாம் எவ்வாறு கிடைத்தன என்றால், அதுதான் மாஸ்டரின் மூளை வலிமை.

கொடியில் தொங்கிய டவலை எடுத்துத் தோளில் போட்டு அறையிலிருந்து வெளிப்பட்ட மாஸ்டர், நடுத்திண்ணையில் தன்னை எதிர்பார்த்து அமர்ந்திருந்து, தான் வருவதைக் கண்டதும் முக்காட்டை இழுத்து விட்டுப் பல்லிளிக்கும் கதீஜாவைக் கண்டும் காணாதவர் போல் முகத்தை வெட்டிக் கொண்டு பாத்றூமுக்குள் சென்று கதவை அடித்துச் சாத்தித் தாளிட்டார்.

மூன்று வருடங்களுக்கு முன் கதீஜாவுடன் கதைப்பதற்காகவும், அவளைத் தயார்படுத்துவதற்காகவும் நாளன்றுக்கு இரண்டு தடவையாவது அவளது வீட்டுக்குச் சென்று வந்து கொண்டிருந்து விட்டு, இப்போது அதற்கு முற்றிலும் மாற்றமாக, அவளைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்குக் காட்டும் தனது பிரயத்தனம் குறித்து, மாஸ்டரின் மனச்சாட்சி சற்று உறுத்திய போதிலும், 'இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?' என்பது போல் அந்தக் குற்ற உணர்வுகளை ஒதுக்கித் தள்ளினார் மாஸ்டர்.

கதீஜாவின் குடும்ப வறுமையையும், தந்தையையிழந்த அவளது நான்கு பிள்ளைகளின் வாழ்க்கைச் சவால்களையும் சமாளிக்க ஒரே வழி, அவள் வெளிநாடு செல்வதுதான் என, அப்போது அவளுக்கு ஆலோசனை கூறிய, அவளது தூரத்து உறவினரான ரகுமான் மாஸ்டர், அவளது வெளிநாட்டுப் பயணம் எதிர்காலத்தில் தனக்கு இவ்வளவு பெரிய நன்மையாக அமையும் என்று சற்றும் எண்ணியிருக்கவில்லை.

தகவல், மற்றும் பணப் பரிமாற்றங்களுக்கு நம்பிக்கையானவராக, தான் மரியாதையுடன் 'நானா' என்றழைக்கும் ரகுமான் மாஸ்டரை இனங்கண்ட கதீஜா, அழுது வடியும் கண்களுடன் தன் பிள்ளைகளைத் தன் உம்மாவிடம் ஒப்படைத்து விட்டுக் கட்டாருக்குப் பறந்த இரண்டாவது மாதத்தில் இருபதாயிரம் ரூபாவுக்கான காசோலையுடன் அறுபது நிமிட வானொலி ஒலிநாடாவொன்றையும் மாஸ்டரின் பெயருக்கு அனுப்பியிருந்தாள்.

தன் இரண்டு மூன்று மாதச் சம்பளத்தை ஒரே நேரத்தில் கைநிறையக் கண்ட போது, புளகாங்கிதத்தில் மெய்சிலிர்த்த மாஸ்டர், திருமணமான ஐந்து வருட காலமாகத் தேங்கி நிற்கும், தன் மனைவியின் மென்மையான கைகளுக்குத் தங்க வளையல் வாங்கிப் போட வேண்டுமென்ற தன் எதிர்பார்ப்பு பற்றிய நினைவூட்டலின் சுரண்டலுக்கும், பசிக்கொடுமையால் வாடிக் கருகும் கதீஜாவின் பிள்ளைகளைக் கவனிக்க வேண்டுமென்ற எரிச்சல் மிகு மனசாட்சியின் உறுத்தலுக்குமிடையே இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தார்.

எனினும், மூன்று பவுணில் தனக்கு மிகப் பிடித்தமான வடிவத்தில் ஒரு சோடித் தங்க வளையல் வாங்கி, அதனை மனைவியின் கைகளில் மாட்டி, அவளது கைகளின் நிறத்துக்கும், வளையலின் நிறத்துக்குமிடையிலான ஒற்றுமை-வேற்றுமைகளைக் கண்டுபிடிக்கும் சுவாரஸ்யமான முயற்சியின் பழுவுக்கு மத்தியில், மாஸ்டரின் மனசாட்சி வலுவிழந்து போயிற்று. கதீஜாவின் அழுகையும், ஏக்கமும் நிறைந்த குரலின் பதிவான அந்த ஒலிநாடாவையும், தனது சொந்த அன்பளிப்பென பத்து நூறு ரூபாய்த் தாள்களையும் ரகுமான் மாஸ்டர், அவளது உம்மாவிடம் கொடுத்த போது, கெஸட்பீஸ் மட்டும் அனுப்பிய மகளை மனதுக்குள் வைதவாறு, மாஸ்டரின் தயாளத்தை வாயாரப் புகழ்ந்து அவற்றை வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டியின் முகமலர்ச்சியின் பிரகாசத்தில் மாஸ்டரின் உள்மனம் சுருண்டு கருகிற்று.

அடுத்தடுத்து வந்த மாதங்களில், கதீஜா தவறாமல் அனுப்பிய காசோலைகள், பணமாகப் பின் மாஸ்டரின் வீட்டுபகரணமாக மாறிய நிகழ்வுகளுக்கு மத்தியில், கதீஜா தனக்கு அனுப்பும் பணம் போதவில்லை என்ற ஆதங்கத்தில், கைத்தொழிலில் இறங்கித் தன் பேரப்பிள்ளைகளைக் காப்பாற்றத் துணிந்த அவளது உம்மாவின் தீர்மானத்தை, கெஸட்பீஸை அவளிடம் கொடுக்கச் சென்றிருந்த மாஸ்டர், வெளிப்படையாகப் புகழ்ந்து ஊக்குவித்த நிகழ்வுகளும் சத்தமின்றி நடந்தேறின. மிகத் தொலைவாக ஒலித்த மனசாட்சியின் எதிர்க்குரலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட திருப்தியில், மாஸ்டர் தன் கோட்டு மீசையை ஒரு தடவை தூக்கி விட்டுக் கொண்டு, அடுத்து வாங்க வேண்டிய வீட்டுபகரணம் தொடர்பான கலந்துரையாடலில் மனைவியின் ஆலோசனைகளுக்கு வால்பிடிக்கத் தொடங்கினார்.

கதீஜாவின் மூலமான அனுபவத்தின் ருசி, தனது தூரக்குடும்பங்களில் வறுமைப்பட்டு நிர்க்கதியாயுள்ள இன்னும் சில பெண்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான உந்துதலை மாஸ்டருக்கு ஏற்படுத்திற்று. அந்தத் திட்டத்தில் சில வெற்றியளித்தாலும் கதீஜாவின் அளவுக்கு அவை பயனளிக்காமற் போனதற்கு, வெளிநாட்டுக்குச் செல்பவர்கள், பணத்தை மாஸ்டர் எதிர்பார்த்தபடி அவருக்கு அனுப்பாமல் தமது குடும்பத்தில் வேறு நெருக்கமானவர்களுக்கு அனுப்பியமை முக்கிய காரணமானது. சின்னச்சின்ன வெளிநாட்டுப் பொருட்களை அவர்களிடமிருந்து உருவிக் கொள்வதில் மாஸ்டர் பிடிவாதமாக நின்று வெற்றிபெற்றிருந்த போதிலும், கதீஜாவையே தான் முழுக்கச் சார்ந்திருக்க வேண்டிய தன் நிலையை அவர் திருப்தியோடு ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. கதீஜா வெளிநாட்டில் இருக்கும் வரை தன் மகிழ்ச்சியான வாழ்வு நிலைத்திருக்கும் என்று உறுதியாக நம்பியிருந்தார் மாஸ்டர்.

ஆனால், அவரது மகிழ்ச்சிக்கு பலத்த அடிதரும் செய்தியைத் தாங்கி, கதீஜாவின் கெஸட்பீஸ் வந்தது. வெளிநாட்டுக்கு வந்து இரண்டரை வருடங்கள் முடிந்துவிட்டமையால், அடுத்த மாதமே திரும்பி வரப் போவதாகவும், தான் அனுப்பிய மூன்றரை லட்சம் ரூபாவை முழுதாக விழுங்கிவிட்டு, இவ்வளவு காலத்திற்கும் ஒரு கெஸட் கூடப் பேசி அனுப்பாத தன் உம்மாவைத் தான் வந்த மறுகணமே வீட்டை விட்டே துரத்தி விடப் போவதாகவும் காரசாரமாகக் குளறியிருந்த கதீஜாவின் குரலின் இறுக்கமும், 'எனக்காக இல்லாட்டியும் உன்ட புள்ளெகளுக்காகவாச்சும் கொஞ்சம் காச அனுப்புடி' என்பதையே முதலும் முடிவுமாய்க் கொண்ட, கதீஜாவின் உம்மா பேசிப் பதிந்து தந்த இருபதுக்கும் மேற்பட்ட கெஸட்பீஸ்களின், தூசுபடிந்த அலமாரிக்கு மேல் எலிகளுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் பரிதாபமும் இணைந்து மாஸ்டரின் உள்ளத்தில் பீதியையும் கலவரத்தையும் தோற்றுவித்தன.

கெஸட்பீஸ் விஷயத்தை, தபால்காரனிலோ அரசாங்கத்திலே பழியைப் போட்டு எப்படியாவது சமாளித்து விடலாம். பண விஷயத்தை எப்படிச் சமாளிப்பது? கதீஜா, பணம் அனுப்பும் மறுவாரமே, "நீ அனுப்பிய பணமும் கெஸட்டும் கிடைத்தன. உடனே உன் உம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டேன். ரெண்டொரு நாளில் கெஸட் பேசி அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறா" என்று பதில் அனுப்புவதும், இன்னும் இரண்டு வாரங்களில் "பிள்ளைகளைக் கவனிப்பது, வீட்டைக் கவனிப்பது, சமைப்பது, பாய்-தட்டு இழைப்பது எனப் பல வேலைகளுக்கு மத்தியில் கெஸட் பேச முடியல்ல என உன் உம்மா சொன்னா. புள்ளெகளெல்லாம் சுகமாகத்தான் இருக்கிறாங்க. நீ கவலப்பட வேண்டாம்" என இரண்டாவது கடிதம் அனுப்புவதும் மாஸ்டரின் வழக்கம். இந்த இரண்டு கடிதங்களை எழுதுவது மட்டுமே அவரது பணியாக இருந்தது. இரண்டாவது கடிதத்திற்கான பதில், காசோலையுடனும், உம்மாவைக் கடிந்து உறுமும் கெஸட்பீஸ§டனும் கதீஜாவிடமிருந்து வரும். கெஸட்டைத் தூக்கி அலமாரிக்கு மேல் போட்டுவிட்டு, பக்கெட் நிரம்பிய பணத்துடனும், கன்னங் கொழுக்கும் சிரிப்புடனும் வங்கியிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து, புதிய சேர்ட் சாரனோடு மனைவி முன்தோன்றிக் கண்ணடிப்பார் மாஸ்டர். ஒவ்வொரு முறை வங்கிக்குச் சென்று வரும் போதும் மனைவியைக் குளிர்விக்கும் விலையுயர்ந்த அன்பளிப்புப் பொருளன்றை வாங்கிவரவும் அவர் தவறுவதில்லை. சில மாதங்களில், கதீஜா அனுப்பும் பணத்திலிருந்து ஆயிரம், இரண்டாயிரம் ரூபாவை அவளது உம்மாவுக்குக் கொடுக்கும் பெருந்தன்மையும் மாஸ்டருக்கு இருந்தது.

இப்போது என்ன செய்வது என்று இரண்டு வாரங்களுக்கு மேலாக மாஸ்டர் யோசித்துக் கொண்டேயிருக்க, அவருக்கு மேலும் யோசிக்க அவகாசம் கொடுக்காமல், கதீஜா நாட்டில் கால்பதித்தாள். கொழும்புக்குச் சென்றனுபவப்பட்ட ஒருவரை வழிகாட்டியாய் இருத்திக் கொண்டு, கதீஜாவை அழைத்துவரப் புறப்பட்ட மாஸ்டர், கொழும்பின் உயர்ந்த மாடிக்கட்டடங்கள், ஏர்போட்டின் பளபளப்பு, விமானங்களின் இரைச்சல் முதலான தன் புதிய அனுபவங்களின் பிரமிப்புக்கு மத்தியிலும், நடை, உடை, பேச்சு என்பவற்றில் முற்றிலும் வித்தியாசப்பட்டு வந்திருக்கும் கதீஜாவின் மிடுக்கையும், அவளது கைகளிலும் தோள்களிலும் தொங்கிய சூட்கேஸ், மற்றும் ஹேன்ட்பேக்குகளின் கனதியையும் கண்டு அச்சமும் ஆசையும் ஒரு சேரத் தன்னுள் கிளர்வதை உணர்ந்து நெளிந்தார்.

அதன்பின் வீட்டுக்குத் திரும்பி வந்ததும், வாடிக்கருகியிருந்த தன் பிள்ளைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதீஜா அழுததும், உம்மாவுடன் சண்டையிடச் சென்று உண்மை உடைபட்டதும், மாஸ்டர் தம்மை ஏமாற்றி விட்டாரென்று அவர்கள் உணர்ந்து கதறிக் கொண்டு அவரிடம் நியாயம் கேட்கச் சென்றதும், பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து, கடல் கடந்து சென்று சொல்ல முடியாத துக்கங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியில் கஷ்டப்பட்டு நான் உழைத்த பணம் முழுவதையும் திருப்பித்தர வேண்டுமென்று கதீஜா வாதாடியதும், விவசாயம் செய்து எல்லாம் நஷ்டம் போய்விட்டது, அடுத்தமுறை விவசாயத்தில் இலாபம் கிடைத்தால் கொஞ்சம் கொஞ்சமாப் பணத்தைத் தாரன் என மாஸ்டர் கதையளந்ததுமாக ஆறு மாதங்கள் ஓடிவிட்டன.

நாள்தவறாமல் வருவதும், மாஸ்டரிடமிருந்து தன் பணத்தை வசூலிப்பதுமே இப்போது கதீஜாவின் பிரதானப் பணியாயிற்று. ஆரம்பத்தில், கதீஜாவின் கதைகளுக்கு அலட்சியமாகப் பதில் கூறிக் கொண்டிருந்த மாஸ்டர், இப்போதெல்லாம் எடுத்தெறிந்து பேசத் தொடங்கிவிட்டார். கதீஜாவின் நிலை பரிதாபமாயிற்று.

மாஸ்டர், பாத்றூம் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்ட போது, நேரம் ஒன்பது தாண்டி விட்டதையும், அப்போதும் தன்னைக் கண்டு கொள்ளாமலேயே நழுவும் அவரது அலட்சியச் சொரூபத்தையும் கண்ணுற்ற போது, உள்ளூர எரிச்சல் கிளர்ந்தெழுந்தாலும், அவசரப்பட்டு விடாதே என்ற புத்தியின் எச்சரிக்கைக்குப் பணிந்து, உணர்வுகளை, உதட்டுடன் இணைத்துப் பற்களிடை கடித்து அடக்கினாள் கதீஜா. 'பணமெல்லாம் தரமுடியாது. ஆனதைப் பாத்துக்கோ!' என்று மாஸ்டர் கூறிவிட்டால், அழுவதொன்றுதான் அவளால் ஆனது என்றிருக்க, வேறென்ன செய்துவிட முடியும், அவளால்!

"என்ன கதீஜா நீ! இப்பிடிக் காலங்காத்தால வந்து கழுத்தறுக்கிறா. நீ அனுப்பின காச, உன்ட உம்மாக்கிட்ட குடுத்தன். கொஞ்சத்த எடுத்து, வெள்ளாம செஞ்சி பாத்தன். இலாபம் வந்தா உனக்கும் அதில பங்கு தாரதெண்டுதான் எண்ணியிருந்தன். ஆனா உன்ட துரதிர்ஷ்டம், வயல் நஷ்டம் பெய்த்து. ஊர்லயும் ரெண்டு மூன்று பேர்கிட்ட கடன் வாங்கிட்டன். அதெயும் குடுக்கணும். எல்லாத்தையும் பாத்து, உன்ட காச மெல்ல மெல்ல தாரன். அதனால நீ அடிக்கடி இஞ்ச வந்து என்னக் கஷ்டப்படுத்திற வேலய உட்றணும்"

பெட்றூமிலிருந்து, தூய வெண்ணிறத்தில் சாரனும் பெனியனும் அணிந்து வெளிப்பட்ட மாஸ்டர், ஹாலில் போடப்பட்டிருந்த கதிரையில் வந்தமர்வதற்கு முன் இவ்வளவையும் பேசி முடித்தார்.

"அதில்ல நானா, இந்த ஆறு மாசமா ஊட்ல சாப்பிட்டது, ஏற்கனவே அக்கம் பக்கத்தில கைமாத்தா வாங்கியிருந்தது, பேங்கில ஈடு வெச்சிருந்தது எல்லாமா சேந்து ரெண்டு லச்சத்துக்கு மேல கடன் இருக்கு. திரும்ப வெளிநாட்டுக்குப் போறத்துக்குப் புறப்பட்டா, கடனத் தந்தாத்தான் வெளிய போக உடுவமெண்டு கடன்காராக்காள் செல்றாங்க. அதுதான், எப்படியாவது ரெண்டு லச்சம் தருவீங்களெண்டா, கடனக் குடுத்துப் போட்டு, திரும்ப வெளிநாட்டுக்கே போயிடுவன். வெளிய போனா உங்களுக்குத்தான காச அனுப்பணும். அதில வேணுமிண்டா நீங்க தேவையானத எடுத்துக் கொள்ளுங்களன்"

கதீஜாவின் பேச்சு, மாஸ்டரை நிமிர்ந்து உட்கார வைத்தது. ஆறு மாதங்களுக்கு முன் கதீஜா கையோடு கொண்டு வந்த சூட்கேஸ், அவரது பெட்றூமில் வாசனைத் திரவியமாக இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. மீண்டும் அவள் வெளிநாடு சென்றால் இன்னும் பல பெட்டிகள்; பெட்டிகளுக்குள் திரவியங்கள்.... நினைக்கும் போது மாஸ்டரின் காலையுணவும் உண்ணாத நாவில் எச்சிலூறிற்று. மனைவி, குசினிப்பக்கம் நின்று இவரை அழைக்க, இருவரும் ஒரு பத்து நிமிடம் குசுகுசுத்த பின்னர், வெளியே வந்தார் மாஸ்டர்.

"நீ திரும்பவும் வெளிநாடு போறது நல்ல யோசனதான் கதீஜா. அப்பதான் புள்ளெகள வளர்க்கலாம். மூத்தவளுக்கு இப்பயிருந்தே ஊடுகட்ட ஆரம்பிச்சாத்தான் அவளுக்கு கல்யாண வயசு வார நேரத்தில எல்லாம் சரியா அமையும். ம்.... நீ வெளிய போறண்டு செல்ற படியால, ஒராலுக்குக் குடுக்க வெச்சிருந்த ரெண்டு லச்சம் ரூபாய உனக்கு நான் தாரன். நீ வெளிய போனவுடன, கெதியில அந்தக் காசெல்லாத்தையும் அனுப்பிப் போட்டுரு. இல்லாட்டி கடன்காரன் என்னக் கிடக்க உடமாட்டான்"

சந்தோஷத்துடன் தலையாட்டிய கதீஜாவைப் புன்முறுவலால் தழுவிவிட்டு எழுந்து பெட்றூமுக்குள் சென்ற மாஸ்டர், சரியாக பத்து நிமிடம் கழித்து, தாளினால் சுற்றி நூலால் கட்டப்பட்டிருந்த பணத்தாள்ப் பொதியுடன் வந்து, அதனை கதீஜாவின் கைகளில் கொடுத்தார். முகம் நிறைந்து வழியும் புன்னகையுடன், அதனை வாங்கிக் கொண்ட கதீஜா, தாமதமின்றி அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளிப்பட்டாள்.

இரண்டு மாதங்களின் பின், கதீஜா வெளிநாடு போய்விட்டதாகக் கேள்வியுற்று வியப்படைந்தார் மாஸ்டர். அதைவிடவும் அவருக்கு வியப்பாக இருந்தது, வெளியூரில் அவள் ஒருவனைத் திருமணம் முடித்துள்ளாளாம் என்பதும், அவர்கள் இருவரும் இணைந்துதான் வெளிநாடு சென்றுள்ளார்களாம் என்பதும், இவருவரும் செல்வதற்காக ஒன்றரை லட்சம் ஏஜென்சிக்குப் பணம் கட்டினார்களாம் என்பதும்தான்.

No comments:

Twitter Bird Gadget