Tuesday, May 31, 2011

றியாஸின் டைரி

15 ஜூலை 1991

இன்று, பதினோராம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடப் பரீட்சையன்றை உசனார் சேர் நடத்தினார். வழமை போல் நான்தான் முதலாமிடம். சேர் என்னை வாழ்த்தினார். “எல்லா மாணவர்களும் றியாஸை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்” என்று சேர் வகுப்பில் பகிரங்கமாகக் கூறிய போது, எனக்குப் பெருமையாகவும் கூச்சமாகவும் இருந்தது. றஹீம் மட்டும் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். எனக்கு அவனைக் கண்டால் கொஞ்சம் பயம். இரண்டு நாட்களுக்கு முன் அவன் அடித்த அடி இன்னும் முதுகில் உறுத்திக் கொண்டிருக்கிறது. பாடசாலை முடிந்து வந்ததும், சாப்பிட்டு விட்டு நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்பொல் அடித்து விளையாடினேன். கள்ளன்-பொலிஸ், கிட்டிப்பொல் இரண்டும்தான் எனக்கு விருப்பமான விளையாட்டுகள்.

16 ஜூலை 1991

இன்று றமீஸ் பாடசாலைக்கு உடுத்து வந்த புது சேர்ட் தூய வெண்ணிறத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. எனக்கும் புது சேர்ட் போட வேண்டுமென்று ஆசைதான். இரண்டு பெருநாட்கள் தவிர ஏனைய நாட்களில் புது உடுப்பு வாங்கிக் கேட்டால் வாப்பா அடித்தே போடுவார். வாப்பாவுக்குக் கோபம் வந்து விடாமல் நடந்து கொள்வதில் உம்மாவை விட நானும் தங்கையும்தான் மிகவும் கவனமாக இருப்போம். அடிக்கத் தொடங்கிவிட்டால், பிரம்பு நார்நாராகக் கிழிந்து பறந்த பிறகுதான் வாப்பாவின் கோபம் அடங்கும். அதனால் எனது புது உடுப்பு ஆசையை மனதுக்குள்ளே போட்டுப் புதைத்து விட்டேன்.
17 ஜூலை 1991

இன்று எல்.ரி.ரி.ஈ ஹாஜா எங்கள் பாடசாலைக்கு வந்திருந்தான். அவன் போன பிறகும் நண்பர்களிடையே குசுகுசுக்கப்பட்டுக் கொண்டிருந்த அவனைப் பற்றிய கதைகள் முடிவுறவில்லை. ஹாஜா எல்.ரி.ரி.ஈ இல் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவன்; எல்லாப் பயிற்சிகளும் முடித்தவன்; துவக்கால் சுட்டால் பெல்டி அடித்துக் கொண்டே தப்பிவிடுவானாம்; இலங்கை இராணுவம் பலமுறை முயற்சித்தும் ஹாஜாவைப் பிடிக்க முடியவில்லையாம் என்றெல்லாம் நண்பர்கள் பேசினார். பேச்சின் நடுவே சரிபு பற்றிய கதைகளும் வந்து விழுந்தன. ஊரிலிருக்கும் எல்.ரி.ரி.ஈ முக்கியஸ்தர்களில் சரிபு, ஹாஜா, பனையான் போன்றோர்தான் முதன்மையானவர்கள். ஊரின் சகல நிர்வாகங்களிலும் நடவடிக்கைகளிலும் தலையிடும் அதிகாரத்தை அவர்கள் தம் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் ஹாஜா பெல்டி அடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று ஆசை வந்தது. வாப்பாவுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ஏனெனில், எல்.ரி.ரி.ஈ பக்கமே போகக் கூடாதென்பது வாப்பாவின் கண்டிப்பான கட்டளை.

18 ஜூலை 1991

இன்று காய்ச்சலினால் நான் பாடசாலைக்குச் செல்லவில்லை. வாப்பாவுடன் சென்று ஹிப்பி டொக்டரிடம் மருந்து எடுத்து வந்து பாவித்தேன். பின்னேரம் காய்ச்சல் குணமாகிவிட்டது. நாளைக்கு பாடசாலைக்குச் செல்ல முடியும் என்பது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.

19 ஜூலை 1991

பாடசாலையில் நண்பர்கள் எல்லோரும் சுகம் விசாரித்தார்கள். ஆசிரியர்கள், மருந்தைத் தவறாமல் பாவிக்கும்படியாக ஆலோசனை கூறினார்கள். மூன்று நாட்களாக றஹீம் பாடசாலைக்கு வந்திருக்கவில்லை. அவன் எல்.ரி.ரி.ஈ இல் சேர்ந்து விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு வியப்பாகவும் பயமாகவும் இருந்தது. வெள்ளிக்கிழமை என்பதனால் 12 மணிக்கே பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து விட்டேன். வாப்பாவுடன் ஓட்டுப்பள்ளிக்கு ஜும்ஆத் தொழச் சென்ற போது, வழியில் றஹீமைக் கண்டேன். இடுப்பில் அகலமான பெல்ட் அணிந்து அதில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கிரனைட்டுகள் சொருகியவாறு ஜீப்பின் பின்னிருக்கையில் நின்று கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் சினேகமாய்க் கையசைத்தான். வாப்பாவுக்குத் தெரியாமல் நானும் பதிலுக்குக் கையசைத்துக் கொண்டேன். ஜும்ஆ முடிந்து வந்த பிறகும் அவனைப் பற்றிய நினைவுகள் மனதுக்குள் உசும்பிக் கொண்டிருந்தன. அந்த பெல்ட்டும் கிரனைட்டுகளும் அவனுக்கு நல்ல எடுப்பாகத்தான் இருந்தன.

20 ஜூலை 1991

இன்று கள்ளன்-பொலிஸ் விளையாட்டின் போது எனக்கும் நழீமுக்கும் சண்டை வந்துவிட்டது. நான் அடித்த ஒரு அடிக்குப் பதிலாக அவன் நான்கைந்து அடிகள் தாறுமாறாக என்னை அடித்து விட்டான். நான் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தேன். என்னைக் கண்டதும், ஏதோ எரிச்சலில் இருந்த வாப்பாவுக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது. ஒரு கையால் என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்று, மறு கையால் சுவரில் மாட்டியிருந்த பிரம்பை எடுத்து விசுக்கு விசுக்கென்று விளாசித் தள்ளினார். எனக்கென்றால் வலி தாங்க முடியவில்லை. கையைப் பின்புறம் வைத்துக் கொண்டே கத்தித் துடித்தேன். போட்டிருந்த காற்சட்டையின் பின்புறம் கிழிந்து தொங்கிற்று. உம்மா ஓடி வந்து என்னைப் பிடித்து வாப்பாவின் கையிலிருந்து பறித்து, அறைக்குள் தள்ளிக் கதவை மூடினா. உள்ளே வந்த நான் கட்டிலில் குப்புற விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதேன். வாப்பா எதற்காக அடிக்க வேண்டும்! அதுவும் இப்படி! எனக்கு விரக்தியாக இருந்தது. வீட்டை விட்டு எங்காவது ஓடிவிட வேண்டும் போல் தோன்றிற்று. ஓடி எங்கு செல்வது!

21 ஜூலை 1991

காலையுணவை முடித்த கையோடு, பாடசாலைக்கு விளையாடச் செல்வதாக உம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். வாப்பாவின் நேற்றைய அடி தொடையிலும் பின்புறத்திலும் சிவப்புக் கோடுகளாய்க் கன்றியிருந்தது. அவை வெளியே தெரியாதவாறு நீண்ட தடிப்பான காற்சட்டை அணிந்து கொண்டுதான் வெளிப்பட்டேன். பாடசாலை செல்லும் வழியில் கிரனைட்டுகள் சகிதம் தீவிரமாக யாருடனோ பேசிக் கொண்டு நிற்கும் நசீரைக் கண்டேன். ‘இவன் எப்போது எல்.ரி.ரி.ஈ இல் சேர்ந்தான்?’ என மனதுக்குள் நான் எண்ணிக் கொண்டிருக்க, என்னைக் கண்டுவிட்ட நசீர், புன்முறுவலுடன் கையசைத்து அருகில் வரும்படி என்னை அழைத்தான். முன்பென்றால் அவனது அழைப்பை, ‘போடா’ என்று அலட்சியமாகத் தட்டிவிட்டிருப்பேன். ஆனால் இப்போது ஆயுதங்களுடனல்லவா நிற்கிறான். மனதுக்குள் வடிந்த பயத்தை வெளிப்படுத்தாது, அவனை நெருங்கினேன். கணிதப் பாடத்தில் சத்தார் சேர் கையால் அவன் அடிவாங்காத நாளேயில்லை. இப்போது எவ்வளவு திமிர்ப்புடன் நிற்கிறான். நான் நெருங்கியதும் என் தோள் மேல் கைபோட்டுக் கொண்டான் நசீர். வாப்பாவுடன் சண்டை பிடித்துக் கொண்டு இதில் வந்து சேர்ந்துவிட்டதாகக் கூறினான். மூன்று நாள் பயிற்சி முடித்துவிட்டு கிரனைட்டுகளுடன் வீட்டுக்குச் சென்ற போது, எல்லோரும் அவனைப் பார்த்துப் பயந்து விட்டதாகக் கூறிச் சிரித்தான். இப்போது வீட்டிலுள்ளவர்கள் யாரும் அவனை அடிக்க முடியாதாம். அவனிடம் விடைபெற்றுக் கொண்டு பாடசாலையை வந்தடைந்த போது, விளையாட்டில் ஈடுபாடு தோன்றவில்லை. நண்பர்களிடமிருந்து விடுபட்டு தனியாகச் சென்று கதிரையில் அமர்ந்து மேசையில் தலைகவிழ்த்து தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தேன். சிந்தித்தேனோ இல்லையோ, இரவு விழித்திருந்து அழுத களைப்பின் தாலாட்டில் நன்றாகத் தூங்கிப் போனேன். நண்பகலானதும் நண்பர்களின் தொந்தரவில் கண்விழித்து வீட்டுக்குக் கிளம்பினேன். வாசலில் வாப்பா கோபத்துடன் நின்றிருந்தார். “எங்கடா போன இவ்ளோ நேரமும்?” எனக் கடுமையுடன் கேட்டார். நான் எதுவும் பேசாது அவரை முறைத்துவிட்டு உள்ளே செல்ல முனைந்தேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. நெருங்கி வந்து, என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கன்னம் விண்விண்ணென்று வலித்தது. என்றாலும் முன்பு போல் நான் அழவில்லை. ஏதோ ஓர் அமானுஷ்ய மனத்திண்மை என் முதுகையும் முள்ளந்தண்டையும் நிமிர்த்தி விட்டிருந்தது.

22 ஜூலை 1991

காலையில் கண் விழித்த போது, நான் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். இரவு, தலையணைக்குள் முகம் புதைத்து ஆழ்ந்திருந்த சிந்தனையின் பயன் அந்த முடிவு. பாடசாலைக்குச் செல்வதாக உம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். எனது கால்கள் எல்.ரி.ரி.ஈ கேம்ப்பை நோக்கி நடந்தன. கேம்ப்பில் நின்ற இயக்க உறுப்பினர்கள், என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு என்ன என்று சைகையால் கேட்டார்கள். “எல்.ரி.ரி.ஈ இல் சேர வந்திருக்கேன்” என்று நான் கூறியதும், சிரிப்புடன் என்னை அழைத்துச் சென்று உள்ளறையிலிருந்த ஒருவரிடம் கொண்டு விட்டார்கள். “இவர்தான் காந்தன். இந்த ஏரியாவுக்குப் பொறுப்பு” என அறிமுகப்படுத்தினார்கள். முதல் வேலையாக நான் ‘அருண்’ என மாற்றப்பட்டதுடன், மூன்று நாள் கொண்ட பயிற்சியும் அன்றே ஆரம்பமாயிற்று. முதலில் ஓடுதல், பாய்தல், நீந்துதல், தவழ்ந்து முன்னேறுதல் போன்ற பயிற்சிகள் காலையில் தரப்பட்டன. பகலுணவின் ஓய்வுக்குப் பின், கிரனைட்டுகளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி தரப்பட்டது. ஹாஜா, சரிபு, பனையான் போன்றோர் அடிக்கடி அங்கு வந்து சென்றனர். என் வயதுத் தோழர்கள் பலர் அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். றஹீமும் நசீரும் என்னைக் கண்டதும், மூக்கில் விரல் வைத்துக் கொண்டே “நீ எப்படா?” என்று வியப்புக் கொட்டியது எனக்குக் கொஞ்சம் சங்கடமாகப் போய்விட்டது. இரவு தூங்கும் போது வீட்டு நினைவுகள் தொற்றிக் கொண்டன. என்னைக் காணாமல் உம்மா பதைபதைத்துப் போயிருப்பா. தங்கை அழுது கொண்டிருப்பாள். வாப்பா என்ன செய்வார்?

23 ஜூலை 1991

இன்று இரண்டாம் நாள் பயிற்சி தொடங்கிற்று. நேற்று பயிற்சி செய்யும் போது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. இரவு நன்றாகத் தூக்கம் இறுக்கியணைத்தது. காலையில் விழித்தெழுந்த போதுதான் உடலின் ஒவ்வொரு தசையையும் யாரோ கொக்கி போட்டுக் கொழுவி இழுப்பது போல் அசுரவலி தோன்றிற்று. என்னால் நடக்கக்கூட முடியவில்லை. இந்த நிலையில் பயிற்சி வேறு செய்ய வேண்டும். காந்தன் என்னை நிர்ப்பந்தித்த போது எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. இன்றைக்கு மட்டும்தான் இப்படியிருக்கும். நாளைக்கு எல்லாம் சரியாயிடும் என றஹீமும் நசீரும் என்னைத் தேற்றி பயிற்சி மைதானத்தில் கொண்டு சென்று விட்டனர். ஒருவாறு முக்கி முனகி, காந்தனின் பூட்ஸ் காலால் உதையும் வாங்கி அன்றைய நாள் பயிற்சியையும் முடித்தேன். உடற்பயிற்சிகளுடன், சொட்கன் துவக்கு சுடுவதற்கான பயிற்சியும் இன்று தந்தார்கள். துவக்கைக் கையிலேந்திய போது, எனது கையில் நடுக்கம் தொற்றிக் கொண்டது. பயிற்சியின் களைப்பு வேறு நடுக்கத்தைத் தூண்டிவிட்டது. கூட இருந்தவர்கள் என்னைப் பார்த்துக் கேலியாக நகைக்க ஆரம்பித்து விட்டார்கள். முதன்முதலாக ஹாஜாவிடம்தான் துவக்கைக் கண்டிருக்கிறேன். அப்போதே துவக்கைத் தூக்கிப் பிடித்தவாறு ஒரு போட்டோ எடுத்து அல்பத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசை. இப்போது துவக்கு இருக்கிறது. ஆனால் வெளியே கொண்டு போக விடமாட்டார்கள். பழைய உறுப்பினர்களுக்கு மட்டும்தான் துவக்கு வெளியே கொண்டு செல்ல அனுமதி. புதிதாக வருபவர்களுக்கெல்லாம் இரண்டு கிரனைட்டுகள் மட்டும்தான்.

24 ஜூலை 1991

இன்று நண்பகலோடு பயிற்சிகளெல்லாம் முடிந்துவிட்டன. இப்போது எனக்கு கிரனைட் எறியத் தெரியும்; துவக்கு சுடத் தெரியும். “எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். யாருக்கும் அஞ்சக் கூடாது. அப்போதுதான் எதிரியை நாம் வெல்லலாம்” என்று, பயிற்சி நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட தாஸ் பேசினான். ஆனால் ‘எதிரி’ என்றால் யார் என்பதை மட்டும் அவன் சொல்லவில்லை. விழாவின் முடிவில் எங்கள் ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து, சயனைட் மாலைகளை காந்தன் அணிவித்து விட்டான். அதன் உபயோகம் பற்றி தாஸ் விளக்கிய போது எனக்குத் திக்கென்று ஆயிற்று. அகலமான பெல்ட்டும், விலாப்பக்கங்களில் தொங்கும் இரண்டு கிரனைட்டுகளாக நான் வெளியே வந்தேன். வாப்பா, இரண்டு மூன்று தடவைகள் கேம்ப்புக்கு வந்து என்னை விசாரித்து அழுததாகவும், உள்ளிருந்தவர்கள் ஏசித் துரத்தியதாகவும் பளீல் சொன்னான். வாப்பா எதற்காக என்னைப் பார்க்க வரவேண்டும். வாப்பாவின் முன்கோபமும், என்னை அடிக்கும் போது அவரது கண்களில் தெறிக்கும் வெறியும் என் பற்களை நறநறக்க வைத்தன. வீட்டுக்குச் சென்று, வாப்பாவை ஒரு உலுக்கு உலுக்கி விட்டு வரவேண்டும் என்று மனம் துடித்தது. ஜீப்பில் ரோந்து வரும் போது முகுந்தனிடம் சொல்லிக் கொண்டு, நானும் கபீரும் இறங்கினோம். கபீர் அவனது வீட்டுக்குச் சென்றான். நான் எனது வீட்டை நோக்கி நடந்தேன். கேம்ப்பில் இரவு தூங்கும் போது நானும் கபீரும் அருகருகில்தான் படுத்திருந்தோம். அழுதழுது முகம் வீங்கிக் கண்கள் சிவந்திருந்த உம்மாவின் பரிதாபத் தோற்றம், தங்கையின் கண்ணீர் விசும்பல், தந்தையின் கெஞ்சல் என வீட்டில் என்னைப் பாதித்து நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கும் விடயங்களையெல்லாம் அவனுடன் பகிர்ந்து கொண்டேன். “போகாதே, எங்களை விட்டுப் போகாதே” என்று காலைப் பிடித்துக் கொண்டு உம்மா கதறிய போது, என் நெஞ்சம் இளகியது; பதைபதைத்தது; கண்களில் நீர் முட்டியது. அழுதுவிடுவேன் போல் தோன்றியது. “பயிற்சி முடித்து விட்டு இயக்கத்துக்கு வரமாட்டேன் என அடம்பிடித்தால், ஈவிரக்கம் பார்க்காமல் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். உடம்பை மின்கம்பத்தில் தொங்கவிடுவார்கள்” என கபீர் அச்சுறுத்திய போது, நான் மனதைக் கல்லாக்கிக் கொண்டே கேம்ப்புக்குத் திரும்பிவிட்டேன். வந்த பிறகுதான் கபீர் சொன்னான்; அவனது வீட்டிலும் இதே நிலைமைதானாம். பெரும் பாறாங்கல்லொன்றைத் தூக்கி வைத்தாற் போல் மனம் கனத்தது; அவசரப்பட்டு விட்டேனோ என்று உள்ளுக்குள் புளித்தது. நான் நொந்து போனேன்.

25 ஜூலை 1991

காலையில் விழித்தெழுந்த போது கேம்ப் முழுவதும் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. கும்புறுமூலை இராணுவ கேம்ப்பில் எல்.ரி.ரி.ஈ இனருக்கும், இலங்கை ஆர்மிக்கும் இடையில் ஆரம்பமாகியிருந்த சண்டைதான் பரபரப்புக் காரணம். காந்தனும் முகுந்தனும் குமுறிக் கொண்டிருந்தனர். சிங்களவனுகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று சத்தமிட்டனர். கேம்ப்பில் இருந்த உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கண்ணனின் தலைமையில் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். றஹீம், நசீர், கபீர் உட்பட என்னுடைய வயதையத்தவர்களே அதில் அதிகமிருந்தனர். தலையில் அணிந்திருந்த தொப்பிகளைக் கழற்றி வைத்து விட்டு, ஏகே 47, சொட்கன், கிரனைட்டுகள் சகிதம் புறப்பட்ட அந்த சிறுவர் பட்டாளத்தை வழியனுப்பி வைத்து விட்டு காந்தன் தலைமையிலான குழுவொன்று பிரசாரத்துக்குக் கிளம்பிற்று. ஊரெங்கும் பிரசாரம் பொறிவைத்தது. “இதுதான் கடைசி யுத்தம். வாலிபர்களே! எமது மண்ணைப் பாதுகாக்க அணிதிரண்டு வாருங்கள்” ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட ஜீப்பில் இருந்து கொண்டு பெரும் குரலெடுத்து அலறியவர்கள், நண்பகலில் கேம்ப்புக்குத் திரும்பி களைப்பு தீர நன்றாகக் குடித்து விட்டு, குறட்டையுடன் தூங்கி வழிந்தனர். அன்று மாலை செய்தி வந்தது; கும்புறுமூலைக்குச் சென்றவர்களில் ஒருவரும் மிஞ்சவில்லையாம். கண்ணன் மட்டும் பத்திரமாகத் திரும்பி வந்திருந்தான். கவலையும் அச்சமும் என்னைப் பீடித்தன. பகிர்ந்து கொள்ள ஆளுமின்றித் தவித்தேன். எஞ்சியிருப்பவர்களெல்லாம் நாளைக்கு யுத்தத்திற்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்று காந்தன் கூறிச் சென்றுள்ளான். நாளைக்கும் கண்ணன்தான் தலைமை தாங்கிச் செல்வானாம். ஹாஜா, சரிபு, பனையான் போன்றோரும் நாளைக்கு வருவார்கள் என நினைக்கிறேன்.

வாப்பா சற்று நேரத்திற்கு முன்னர்தான் வந்து சென்றார். மகனை விட்டுவிடும்படியாக காந்தனின் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். அவனோ அவரைக் காலால் உதைத்துத் தள்ளினான். எனக்கு நெஞ்சுக்குள் நெருப்புப் பற்றியெரிந்தது. “இயக்கத்த விட்டுப் போக நினைச்சா, உன்ன மட்டுமில்ல, உன் குடும்பத்தையே சுட்டுத் தள்ளிப் போடுவன்” என காந்தன் ஏற்கனவே என்னை எச்சரித்திருந்தான். அதனால் மூடிய விழிகளுக்குள் நான் கண்ணீர் விட்டுக் கதறினேன். ஏன்தான் இதில் வந்து சேர்ந்தேனோ என்று என்னை நானே நொந்து கொண்டேன். நாளை யுத்தத்திற்குச் சென்றால் திரும்பி வருவேனோ தெரியாது. இந்த யுத்தம் எதற்காக நடக்கிறது என்றும் தெரியாது. யார் இதில் வெற்றி பெறப் போகிறார்கள் என்றும் தெரியாது. இராணுவம் வெற்றி பெற்றால் நாங்கள் திரும்பி வரப்போவதில்லை. ஒருவேளை வெற்றி எங்களுக்குக் கிடைத்தால் திரும்பி வருவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கக் கூடும். திரும்பி வந்தால் உம்மா, வாப்பா, தங்கையை அழைத்துக் கொண்டு காந்தனின் கண்ணில் பட்டுவிடாமல் இரகசியமாக ஊரைவிட்டே ஓடிவிட வேண்டும். எங்காவது தூரத்துக்குச் சென்று நிம்மதியாக இருக்க வேண்டும். வாப்பா அடிப்பது, உம்மா பறித்து விடுவது, தங்கை சீண்டுவது இவற்றிலெல்லாம் ஒரு சுகம் இருக்கிறது. காந்தனின் அழுக்கு பூட்ஸை விட வாப்பாவின் மெல்லிய பிரம்பு எவ்வளவோ பரவாயில்லை. நாளையின் முடிவு எப்படியிருக்குமோ என்ற ஆதங்கமும் அச்சமும் மனதை நெருடிக் கொண்டிருக்க, தூங்குவதற்கு முயற்சிக்கிறேன்.

பிற்குறிப்பு: மறுநாள் நடைபெற்ற யுத்தத்தில் றியாஸ§ம் ஏனையோரும் கொல்லப்பட்டனர். யுத்தத்தின் முடிவில் இராணுவம் வெற்றி பெற்றது.

No comments:

Twitter Bird Gadget