Saturday, October 1, 2011

குறை குடம்


“ஏண்டா மச்சான், இப்பிடி கோவமாவே இருக்காய்? நான் அப்பிடி என்னடா செஞ்சிட்டன் உனக்கு? ஏன் என்னோட கதெக்காம இருக்காய்?”

“…………………..”

“என்ன பிரச்சினயெண்டு சென்னாத்தானடா விளங்கும்! இப்பிடி சும்மாவே போனீயெண்டா நான் என்னடா செய்ற? அன்வர்…! டேய் மச்சான் அன்வர்…! நில்லுடா, ஏதாவது செல்லிப்போட்டுப் போடா”

ஹஸனின் கெஞ்சல்கள் எதுவும் அன்வரின் காதுகளை நெருடவில்லை. வாக்களிக்கப்பட்ட சீதனம் கிடைக்காமற் போன பழைய மாப்பிள்ளை போல சிடுசிடுவென அவன் நடந்து மறைந்தான்.

பாடசாலை வகுப்பு, பள்ளிவாயல் தொழுகை, ஆற்றோரப் பொதுழுபோக்கு, ஞாயிறு பாசிக்குடா என உடலும் உள்ளமும் பிணைந்து மகிழ்ந்து கிடந்தவர்களை அரபு மத்ரஸா என்ற பெயரில் அவர்களது பெற்றோர் பிரித்துப் போட்ட போது, இருவரும் விட்ட கண்ணீரும் கதறலும், அடுத்து வந்த ஒரு வருடம் வரை தளர்வின்றி அவர்களிடையே நீடித்திருந்தது. வெவ்வேறு மத்ரஸாக்கள், வேறுபட்ட விடுமுறைகள், தூர அமைவிடங்கள், முரண்பட்ட பாடபோதனைகள் என எல்லாமும் இணைந்து அவர்களிடையிலான ஆழ்ந்த நட்பில் படிப்படியாக விரிசலைக் கவிழ்த்து விட்டன.

வருடத்திற்கு இரு முறை வரும் பெருநாள் தினங்கள் மட்டுமே அவர்களது நட்பை இழுத்துச் செல்லத் தோதான களத்தைப் புலர்த்தியிருந்தன. அதுவும் இரண்டு வருடங்களே நீடித்தது. மூன்றாவது வருடத்திலிருந்து அன்வரின் செயலிலும் போக்கிலும் தென்பட்ட மாற்றம் ஹஸனை ஆச்சரியத்திலும் கவலையிலும் பிடித்துத் தள்ளிற்று.

மௌலவிப்பட்டம் முடித்து வந்த இரண்டு மாதங்களில் இரு நூறு தடவைகளுக்கு மேல் முயற்சித்து விட்டான் ஹஸன். உலக்கையை விழுங்கியவன் போல முறைத்துச் செல்லும் அன்வரைப் பார்க்குந் தோறும் எரிச்சலன்றிக் கவலையும் ஏக்கமுமே ஹஸனைத் தாக்கிச் சென்றன.

அவனது இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாயிருக்கக் கூடும் என்றெண்ணி எண்ணி விடை தெரியாது கலங்கினான் அவன்.

‘மத்ரஸாவில் ஹஸ்ரத்மாரினால் பாதிக்கப்பட்டிருப்பானோ…’

‘யாரையாவது லவ் பண்ணி ஏமாந்து விட்டானோ…’

‘கல்யாணம் முடிச்சிக் கேட்டு வீட்டாக்களோட சண்ட புடிச்சித் திரியிறானோ…’

‘கைச்செலவுக்குக் காசில்லாத கவலையாயிருக்குமோ…’

முடியவில்லை அவனால்.

அன்வரின் வாப்பாவைச் சந்தித்துக் கேட்டுப் பார்த்தான்.

“போட்டு வேலயப் பார்ரா தம்பி. அவனொரு ஈயாப் பிசின். உன்னோட கதெச்சிப் பேசினா, பழகினா, காசு செலவு போவுமெண்டு பயத்தில அப்பிடித் திரியிறானாக்கும். நீ என்னத்துக்கு இவனெல்லாம் ஒரு ஆளெண்டு இவனுக்குப் பின்னுக்குத் திரியிறா? ஆ? ரெண்டுருவா இருந்தாலே ஊர்ல நாந்தான் பெரிய காசிக்காரனெண்டு செல்லிட்டுத் திரியிறவன், இப்ப சவூதியில இருந்து இருவதாயிரம் ருவா வருவுது. மறுவா எங்க அவனப் புடிக்கிற…! இவனெப் பெத்துப் போட்டு நாங்க பர்ர கஷ்டம்…”

அவர் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்த போதும் திருப்தி ஏற்படவில்லை ஹஸனுக்கு. அன்வர் மிக நெருக்கமாகப் பழகும் அவனது ராத்தாவிடம் போய்க் கேட்டான்.

அவர் சொன்னார்: “நீ ஓதின மத்ரஸா சியா மத்ரஸாவாமே. நீ ஒரு சியாவாமே…!”


No comments:

Twitter Bird Gadget