Tuesday, September 20, 2011

ஸதக்காவின் சிறுகதைகள்



சிறந்த அரசியல் கட்டுரையாளராக, கவிஞராக மட்டும் அடையாளப்படுத்தப்படும் மறைந்த ஏ.ஜி.எம். ஸதக்கா, நல்லதொரு சிறுகதை எழுத்தாளரும் என்பது பலரும் அறியாத ஒரு விடயம். 1990களிலிருந்து 2002ம் ஆண்டு வரையான 22 வருடங்களில் மொத்தமாக ஒன்பது கதைகளையே அவரது எழுத்துகள் பிரசவித்திருந்த போதிலும், அவற்றின் கதைக்கருக்கள் சமூக வேர்களை ஆழ ஊடுருவும் வீரியத்துடன் சிறந்த கருத்துக்களையும் சிந்தனைகளையும் போதிப்பனவாக விளங்கின. 

பனி விழும் இரவில்.... (1988), கனவில் உழுது நினைவில் எழுது (1990), பிச்சைக்காரர்கள் (1991), ஒரு நீண்ட பயணத்தின் ஓரடி (1992), விறகுகள் (1993), கனவுகளின் தேசம் (1995), மனித விதை (1996), வானுக்கு வந்த பறவைகள் (1998), நிலவு மகன் (2002) என காலத்தின் அடிப்படையில் ஸதக்காவின் கதைகளை ஒழுங்குபடுத்தலாம். 

ஸதக்காவின் கதைகள் அவரது காலத்தில் பரவலாகத் தோன்றிப் பிரபலம் பெற்று வந்த கற்பனையின் பொய்மைக்குள் அடங்காது யதார்த்தத்தை முழுமையாக உள்வாங்கியிருந்தமை அவரது கதைகளின் கருத்தியல்களை செழுமைப்படுத்தியிருந்த முக்கிய பண்பொன்றாகும். நியாயவாதம் பூசிக் கொண்ட உஷ்ணமும் அழகியலைப் படம்பிடிக்கும் வார்த்தை ஜாலங்களும் அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்கோஷங்களும் முற்போக்குச் சிந்தனை தழுவிய வாதங்களும் அவரது கதைகளில் செறிந்து கிடந்தன. 


வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் அகதிகளின் அவலங்களையும் பிற்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பதிவு செய்யும் "ஒரு நீண்ட பயணத்தின் ஓரடி" எனும் சிறுகதை, பெண்ணியல் சார்ந்த கருத்துகளையும் சமூகப் பொறுப்புகளையும் அசைபோடுகின்றது. "கனவுகளின் தேசம்", "விறகுகள்", "கனவில் உழுது நினைவில் எழுது", "மனித விதை" ஆகிய சிறுகதைகள், இன்று சகிக்க முடியாத சங்கடமாக்கப்பட்டு விட்ட தமிழ்-முஸ்லிம்களின் பாரம்பரிய நட்பு, ஆழ்மனங்களில் படிந்து கிடக்கும் வன்மம், இன உறவுகளில் மிகைத்து நிற்கும் போலித்தன்மை, மனிதநேயத்தின் மீதான அவநம்பிக்கை என்பவற்றைப் பகிரங்கப்படுத்துகின்றன. பிச்சைக்காரர்கள், வானுக்கு வந்த பறவைகள் என்பன சமூக அவலங்களையும் போலி வாழ்க்கையின் இறுமாப்பில் விளையும் மனவலிகளையும் காட்சிப்படுத்துகின்றன. இறுதியாக எழுதப்பட்ட நிலவு மகன் எனும் சிறுகதை மாத்திரம், முந்தைய அனைத்துக் கதைகளிலிருந்தும் தனித்து நின்று மிளிர்வதற்கு, ஜனரஞ்சகப் போக்கு, தமிழ் சினிமாக்களின் தாக்கம் என்பவற்றிலிருந்து அது முற்றாக விடுபட்டிருந்தமையைக் காரணமாகக் குறிப்பிடலாம். சொல்லாடல், உத்தி, கருப்பொருள் என அனைத்திலும் நவீன சிறுகதைகளின் இயல்பை முழுமையாக உள்வாங்கியிருந்த அவரது இறுதிச் சிறுகதை, மிக நம்பிக்கை தருகின்ற அற்புதமான கதையாக உணரப்பட்டிருந்த போதிலும், துரதிஷ்டவசமாக, அதன் பிறகு சிறுகதைகளை எழுதுவதிலன்றி வாசிப்பதில் மட்டுமே தன் இலக்கியத் தாகத்தைத் தணித்துக் கொள்ள முயன்ற ஸதக்காவின் மாற்றம் நல்ல பல கதைகள் தமிழுலகுக்குக் கிடைக்காமற் போகக் காரணமாயிற்று. 

ஆரம்பகால ஸதக்காவின் சிறுகதைகள், ஏதோவொரு வகையில் இந்திய சினிமாக்களின் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. தினகரன், அமுது போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் இவ்வியல்பைக் கணிசமாகத் தரிசிக்க முடிந்தது. அதேவேளை எழுச்சிக்குரல், தேசிய மீலாத் விழா சிறப்பு மலர் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியான சிறுகதைகள் சமய ஆர்வத்தையும் சமூக உரத்தையும் கொண்டிருந்தன. இது, பத்திரிகைகளின் இயல்புக்கேற்ப கதையெழுதிப் பிழைக்கும் சாமான்ய எழுத்தாளனின் பண்பொன்றுதானெனினும், ஸதக்கா தனது கதைகளை பிழைப்புக்காக அன்றி, தனது உள்ளுணர்வின் வெளிப்பாடுகளாக அல்லது தனது சமூகப் பொறுப்பாக மட்டுமே பறைசாற்றப் பிரயத்தனப்பட்டிருப்பதை அவரது கதைகளை ஆழ வாசிக்கும் போது உணர முடியும்.

எவ்வாறாயினும், ஸதக்காவை சிறந்ததொரு கவிஞனாக நிரூபிக்கும் அவரது கதைகள், பல்லின மக்கள் வாழும் இலங்கையின் அரசியல் சூழலையும் சமூக வரலாற்றையும் பதிவு செய்யும் முக்கிய இலக்கிய ஆவணங்களாக விளங்குகின்றன என்பதில் ஐயமில்லை. 

No comments:

Twitter Bird Gadget