மூன்று வருடங்களுக்கு முன்பு இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எதிர்கொண்ட சிரமங்களும் அவலங்களும் ஏராளம்.
ஒரு பக்கம் அரச பயங்கரவாதத்தின் கொடுங்கரங்கள், விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் பேர்வழி என்று பொதுமக்களை நையப்புடைத்தன. போக்குவரத்துகளின் போது, நாய்கள் இறைச்சி முள்ளைக் குதறுவது போன்று, சோதனை எனும் பெயரில், பயணிகளின் பொதிகளைக் குதறியெடுத்தனர் படையினர். அரசாங்கத்திற்கு அறிவித்து கிராம சேவையாளரிடம் பாஸ் எடுத்தால் மட்டும்தான் கொழும்புக்குச் செல்ல முடியும். கொழும்பில் லாட்ஜுகளில் தங்கியிருக்கும் போது நள்ளிரவில் வந்து கதவைத் தட்டி தூங்குபவர்களை எழுப்பி விசாரணையோ விவகாரமோ செய்து விட்டுப் போவர் சிங்களப் பொலிசார். சில சமயம் ஸ்டேஷனுக்கு வா என கூடவே அழைத்தும் சென்று விடுவர்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் தமது இளைஞர்கள் திரும்பி வரும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்பர் எம் தாய்மார்.
மற்றொரு புறம் எதிரிகளைக் களையெடுக்கிறோம் பேர்வழி என்றும், படைபலத்தைப் பெருக்குகிறோம் பேர்வழி என்றும் சொந்த மக்களையே கொன்றும்,இளைஞர்களை பலவந்தப்படுத்தி படையில் சேர்த்தும் சொத்துகளைப் பறிமுதல் செய்தும் ரணகளமாக்கிற்று புலிகளமைப்பு.
எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவன் போல் இந்தச் சமூகம் இரு பக்க அடிகளையும் தாங்கிப் பொறுமையுடன் காலங்கடத்திய அந்தக் காலம் இன்னும் மனதில் கனக்கும் கசப்பான சுமைகள்.
ராஜபக்ஷவின் அதிரடியால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட இன்றைய காலப்பகுதியில், கடந்த ஆண்டுகளில் அனுபவித்த சிரமங்களும் அலைக்கழிப்புகளும் இன்றி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடிகின்றது.
தமிழ் மக்கள் எவ்விதச் சோதனைகளும் இன்றி எத்தனை கிலோ பொருட்களையும் கொழும்புக்கு எடுத்துச் செல்ல முடிகின்றது. எவ்வித பாசும் இன்றி கொழும்புக்குச் செல்லவும் கொழும்பில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நிம்மதியாகத் தங்கவும் அவர்களால் முடிகின்றது. அவர்களது பொருட்களும் இளைஞர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அரச பயங்கரவாதமோ விடுதலைப் புலிகளின் நெருக்குவாரங்களோ எதுவுமின்றி மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.
அது மட்டுமன்றி, அபிவிருத்திப் பணிகளும் வெகு சிறப்பாக நடந்தேறி வருகின்றன. குறிப்பாக நாட்டில் நெடுஞ்சாலைப் பணிகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான வீதிகள் பள்ளங்குழிகளின்றி செம்மையாக உள்ளமையால் பயணங்கள் சௌகரியமாகி, பயண நேரங்களும் குறைந்துள்ளன.
மதுபாவனை படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகின்றது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து புதிய மதுவிற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதைத் தடைசெய்துள்ளார் ஜனாதிபதி. நாட்டில் இயங்கி வந்த பாலியல் இணையத்தளங்களைக் கண்டுபிடித்து முற்றாக ஒழித்து விட்டார். அரசாங்க அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வைக் கணிசமாக வழங்கியிருக்கின்றார். பாடசாலைகளுக்கு பெருமளவான கணினி உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகின்றார்.
எனவே, நாட்டுக்கு விடுதலையையும் நாட்டு மக்களுக்கு நிம்மதியையும் அபிவிருத்தியையும் பெற்றுத் தந்த மஹிந்த ராஜபக்ஷவை நல்லவர் என்று நாம் சொல்லலாம்.
அதேவேளை,வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள், அவர்களுக்கான மீள்குடியேற்றத் திட்டங்கள், அவற்றில் காண்பிக்கப்படும் பாரபட்சங்கள் என்பன ராஜபக்ஷ மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் பெரும் சீற்றத்தைத் தோற்றுவிக்கின்றன.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது காணாமல் போன தமிழ் இளைஞர்கள் பற்றி இதுவரைக்கும் எவ்வித பொறுப்பையும் பதிலையும் அரசாங்கம் தரவில்லை.
தவிரவும், மறைமுகமாக நடக்கும் சிங்கள பேரினவாத முன்னகர்வுகளும் நில அபகரிப்புகளும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான இன அலைக்கழிப்புகளும் குறிப்பாக கொழும்பு முஸ்லிம்களின் வர்த்தக கேந்திர நிலையங்கள் மீதான தொடர் முற்றுகைகளும் ராஜபக்ஷ மீது பெரும் அவநம்பிக்கையையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளன.
ஆட்சிக்கு வரும் எந்தவொரு சிங்கள அரசும் சிங்கள பேரினவாதத்தின் கோர முகத்தை எப்போதேனும் காண்பித்தே தீரும் என்பது இலங்கையின் எழுதப்படாத நியதியாகிப் போன நிலையில்,தற்போதைய அரசின் கெடுபிடிகளும் நடவடிக்கைகளும் விலையேற்றங்களும் அனைத்துத் தரப்பு மக்களையும் கிலியில் உறைய வைத்துள்ளன.
இவற்றை வைத்துக் கொண்டு ராஜபக்ஷவை கெட்டவர் என்று நாம் சொல்லலாம்.
ஆனால், அவரது உண்மையான சொரூபம் என்னவென்பதை எம்மால் தீர்மானமாக அனுமானிக்க முடியவில்லை.
ஆகவே, நாம் அவரிடமே நேரிடையாகக் கேட்டுப் பார்த்து விட்டோம்.
மிஸ்டர் ராஜபக்ஷ! நீங்க நல்லவரா? கெட்டவரா?
5 comments:
உண்மைதான் நீங்கள் சொல்வது. அவரிடமே கேட்டு விடலாம். அவரைச் சந்திப்பதுதானே கஷ்டம்
என்ன கொடும சார் இது!
தெரியலயப்பா...
எனக்கும் இதே கேள்விதான் தலைவா
இலங்கையில் இன்று மலர்ந்திருக்கும் சமாதானம் மஹிந்த ராஜபக்ஷவினது தலைமைத்துவத்தினதும் சரத் பொன்சேகாவின் திறமையினதும் இலங்கையில் அநீதிக்குள்ளாக்கப்பட்ட மக்களுடைய உளப்பூர்வப் பிரார்த்தனைகளினதும் விளைவுகளாகும். இம்மாபெரும் வெற்றியை தனிநபர் உடமையாக்கிக் கொள்ளக் கூடாது. அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள சிங்களப் பேரினவாதப் போக்குகள் முந்தைய சிங்கள அரச தலைவர்கள் விட்டுச் சென்ற எச்ச சொச்சங்களாகும். மஹிந்த அவற்றை விடுபடாமல் தொடர்ந்து முன்கொண்டு செல்ல நினைக்கிறார்.
Post a Comment