Friday, September 9, 2011

ஈரானும் பெண்ணுரிமையும்



எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன்

கடந்த 2010ம் வருடம் டிசம்பர் மாதத்தில், இந்திய நல்லிணக்கக் குழுவொன்று பலஸ்தீனத்தின் காஸா நகருக்குச் சென்றிருந்தது. பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளினூடே சாலை வழியாகவும் கடல் மார்க்கமாகவும் ஏறக்குறைய 8000 கி.மீ. பயணித்து காஸா சென்ற இவ் இந்திய நல்லிணக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தமிழர் பிரபல எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஆவார். அவரது நேர்காணல் "சமநிலைச் சமுதாயம்" இதழின் 2011 மே இதழில் பிரசுரமாகியிருக்கிறது. தாம் சென்ற இடங்களில் ஈரானிலேயே தமது குழுவுக்கு அதிக வரவேற்பும் உபசரிப்பும் கிடைத்ததெனவும் அங்குள்ள மக்களும் அரசாங்கமும் பலஸ்தீன விடயத்தில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளதெனவும் அவர் விபரித்துள்ளார். அந்நேர்காணலிலிருந்து ஈரான் பற்றியும் அங்குள்ள பெண்ணுரிமை பற்றியும் விபரிக்கும் அவரது கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம்.


ஈரானும் பெண்ணுரிமையும்


ஈரான் சென்றிருந்த போது, அந்த நாட்டின் அதிபர் அஹமதி நஜாத், எங்கள் பயணக் குழுவை தெஹ்ரான் பல்கலைக்கழகத்திற்கே நேரில் வந்து வாழ்த்தினார். அன்று இரவு அவர்களின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் எங்களுப் பெரும் அரச விருந்தும் அளித்தார். உணவுக்குப் பின் அவர்களின் தொன்மையாக பாராளுமன்றமான மஜ்லிசில் ஒரு பாராட்டு விழாவும், ஈரானின் பாரம்பரியம் மிக்க வெள்ளி மோதிரமும் எங்களுக்கு அணிவித்தார்கள். 

ஈரானின் அனைத்து நகரங்களிலும் வரவேற்பும், விருந்தும் அந்தந்த நகரங்களின் மேயர்களே ஏற்பாடு செய்தார்கள். பயணம் வரும் தகவல் ஊடகங்களில் தினமும் வெளிவர, ஏற்பாடுகளில் அவர்களுக்குள் ஒரு போட்டியே நிலவியது. 

பொதுவாக ஊடகங்களில் ஈரான் குறித்து இறுக்கமான, பழமைவாதப் பார்வைகள்தான் நிறையப் புழங்குகின்றன. எனக்கு மின்னஞ்சல்களில் வரும் செய்திகளிலும் ஈரான் குறித்தும் இஸ்லாமிய நாடுகள் குறித்தும், இஸ்லாம் சமயம் குறித்தும் எத்தனையோ அவதூறுகளை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாகப் புரிந்தது. குறிப்பாக, ஈரானில் பெண்களுடன் பேசுவது குற்றம்; பழகுவது குற்றம் என்கிற அளவில்தான் எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 


ஆனால், நாங்கள் அங்கு சென்ற போது கண்ட காட்சி முற்றிலும் வேறானதாக இருந்தது. பெண்கள்தான் ஆயிரக்கணக்கில் தெருக்களில் திரண்டு நின்று எங்களை வரவேற்றனர். அங்கு வாழ்த்துக் கோஷங்களை எழுப்பியதும் பெண்கள்தான். பலஸ்தீனத்திற்கான பெண்களின் பிரத்தியேக ஓவியக் கண்காட்சி உள்ளிட்ட எல்லாமே எங்களைப் பிரமிக்க வைத்தன. எங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட பெண் மொழிபெயர்ப்பாளர்கள் ஈரானில் நாங்கள் இருந்த காலம் முழுவதும் உடன் இருந்தனர். நாம் ஈரானிய சினிமாக்களில் காண்பது போலவே அவர்கள் மிக சுதந்திரமானவர்களாக இருந்தனர். ஈரானின் மிகப் பெரிய மசூதிகளில் கூட அதனைப் பராமரிப்பவர்களாக பெண்கள் இருந்தனர்.

தெஹ்ரானில் உள்ள அவர்களது அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் சென்ற போது, அங்கும் எனக்கு பெரும் ஆச்சரியமே காத்திருந்தது. நான பங்கு பெறும் நிகழ்ச்சிக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்ததால், நான் அங்கு மாடிகளில் உள்ள படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டேன். அத்தனை மாடிகளிலும் தொழிநுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவு செய்பவர்கள், செய்தி வாசிப்பவர்கள், உதவியாளர்கள் என அந்தத் தளம் முழுவதும் பெண்களே நிரம்பி இருந்தனர். இப்படி ஒரு படப்பிடிப்புத் தளம் என்பது இந்தியாவில் கூட யோசித்துப் பார்க்க இயலாது. 

ஈரானில் பல பெண் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களைச் சந்தித்து அங்குள்ள பெண்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்கள் காலத்தின் புரட்சி, போர்கள் என எங்களுடன் மிக இலாவகமாக உரையாடினார்கள். ஒரு நாட்டை கட்டமைப்பதில் பெண்களி பாத்திரம் பற்றி அவர்கள் அரசியல் கூர்மையுடன் கூறிய விஷயங்கள் வியக்கத்தக்கவை.

No comments:

Twitter Bird Gadget