Thursday, September 8, 2011

காஸா


கடந்த 2010ம் வருடம் டிசம்பர் மாதத்தில், இந்திய நல்லிணக்கக் குழுவொன்று பலஸ்தீனத்தின் காஸா நகருக்குச் சென்றிருந்தது. பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளினூடே சாலை வழியாகவும் கடல் மார்க்கமாகவும் ஏறக்குறைய 8000 கி.மீ. பயணித்து காஸா சென்ற இவ் இந்திய நல்லிணக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தமிழர் பிரபல எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஆவார். அவரது நேர்காணல் "சமநிலைச் சமுதாயம்" இதழின் 2011 மே இதழில் பிரசுரமாகியிருக்கிறது. அந்நேர்காணலிலிருந்து காஸாவின் துயரத்தை விபரிக்கும் அவரது கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம்.


காஸா


திரும்பும் திசையெல்லாம் குண்டுவெடிப்பில் சேதமடைந்த கட்டிடங்கள், சிதைந்த மருத்துவமனைகள், பிளந்து கிடக்கும் பல்கலைக்கழகங்களின் துறை கட்டிடங்கள், ஊனமடைந்த சிறுவர்கள் பெரியவர்கள், குழந்தைகளைச் சுமந்தபடி உணவுப் பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் தாய்மார்கள் என...

60 ஆண்டுகளாக தொடர் தாக்குதல்களைச் சந்தித்த நிலப்பரப்பு

உலகத் தொடர்புகள் எல்லாம் முற்றாக மறுக்கப்பட்டு, ஒரு தீவைப் போல்தான் காஸ இன்று காட்சியளிக்கிறது. இஸ்ரேல் அதனை கடல், நிலம், ஆகாயம் என எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது. எகிப்துடன் அவர்களுக்கு உள்ள சுமார் 5 கி.மீ. நிலத் தொடர்பு மட்டுமே இந்த உலகத்துடன் அவர்கள் உரையாடுவதற்கான ஒரே பாதை. 

இருப்பினும், எகிப்து அதிபர் முபாரக் கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைப்பாவையாக இருந்ததால், காஸாவுக்கு இந்தப் பாதையும் முற்றாக ஒரு தடையாகவே இருந்தது. 

பொருளாதாரத் தடை, வர்த்தகத் தடை என மருத்துவத்திற்கும் கூட காஸாவை விட்டு வெளியே வர இயலாத நிலை. உயர் படிப்புக்கு வர இயலாத சூழல், வேலை வாய்ப்புகள் தேடி இளைஞர்கள் வெளியே இர இயலாத நிலை என... உலகில் உள்ள அத்தனை தடைகளும் காஸா மற்றும் மேற்குக் கரை என எங்கும் அமலில் உள்ளது.

காஸாவைப் பொறுத்தவரை அதன் 350 சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் 17 லட்சம் மக்களுக்கு அது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை என்றுதான் சொல்ல வேண்டும். போதாக்குறைக்கு, இலவச இணைப்பாக இஸ்ரேல், அம்மக்களின் வான் மீது குண்டுமழை பொழிகிறது. 

இஸ்ரேலுடனான 70 கி.மீ. எல்லை நெடுகிலும் ஏறக்குறைய சுமார் 4 கி.மீ. தூரம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத திறந்த வெளியான இந்த நிலப்பரப்பு, விவசாயத்திற்கும் தாக்குதல் காலத்தில் தற்காப்பிற்கும் பியன்படுத்தப்படுகிறது. 

மிச்சமுள்ள இடத்தில்தான் 17 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது, ஒரு சதுர கி.மீ.க்கு 4118 பேர். இதுதான் உலகின் மக்கள் மிக அடர்த்தியாக வசிக்கும் பகுதி. காஸாவில் வாழும் மக்களில் 80 சதவீதம் பேர் ஏழைகள். நிவாரணங்களை நம்பியே வாழ்பவர்கள். இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் வீடுதோறும் பலரைப் பலி கொடுத்துள்ளார்கள் அம்மக்கள். அனைவரின் வீடுகளிலும் கொல்லப்பட்ட தியாகிகளின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. அவர்களின் வீட்டின் மீது குண்டுவிழுந்து சேதமடைந்த பகுதிகளையெல்லாம் அவர்கள் மிகுந்த பெருமிதத்துடன் எடுத்துரைக்கிறார்கள். அவர்களின் வீடுகள் மீது குண்டுகள் பலமுறை விழுந்ததை ஒரு விருது பெற்ற உணர்வுடன்தான் அவர்கள் விவரிக்கிறார்கள். 

பொதுவாக, காஸாவில் உள்ள மக்கள், தங்களை இந்த உலகம் கைவிட்டது போல் உணருகிறார்கள். பலஸ்தீனுடன் நல்லுறவில் இருந்த பல நாடுகள் இன்று இஸ்ரேலின் நட்பு நாடுகளாக மாறிவருவது குறித்து அவர்களுக்கு பெரும் வருத்தமுள்ளது. இருப்பினும் காஸாவின் ஓர் அங்குலத்தைக்கூட இனி விட்டுக்கொடுக்க இயலாது என்பதில் அம்மக்கள் அனைவரும் மிக உறுதியாக உள்ளனர். 

ஒரு திறந்த வெளி சிறைச்சாலையில் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவுகளற்ற பின்புலத்தில், அவர்கள் இன்றைய உலக ஏகாதிபத்தியமான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து வீரத்துடன் போரிடுவதைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. 

அங்குள்ள பள்ளிவாயல்கள் அடிக்கடி இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகம் ஆகியவை பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் கட்டிடம்தான் இஸ்ரேலியர்களின் முதன்மை இலக்கு. மருத்துவமனைகளும் அவர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்தது இல்லை. படுக்கை வசிகள் இல்லாததால், ஏராளமான நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டிய பலர் மருந்துகளும் கருவிகளும் இல்லாததால் தினமும் செத்து மடிகிறார்கள். உயிர் காக்கும் பலவகை மருந்துகள் தொடர்ந்து இல்லை அல்லது பற்றாக்குறையாகவே உள்ளது. ஆனால் அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் பிற ஊழியர்களும் ராணுவ வீரர்கள் போல் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறார்கள். லட்சகணக்கானவர்களுக்கு மருத்துவ உதவி கிடைத்தால் இன்னும் கொஞ்ச காலம் நிம்மதியா வாழ்ந்து மறைவார்கள்.

அங்குள்ள ரஃபாவின் இரு புறங்களிலும் உள்ள வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் சுரங்கம் அமைத்து, அது வழியாகத்தான் எல்லாப் பொருட்களையும் இங்கு எடுத்து வருகிறார்கள். எகிப்து - ரஃபா பக்கம் இருக்கும் சுரங்கத்தின் வாயிலில் உள்ளே நுழையும் பொருள், காஸாவுக்கு வரும் பொழுது அதன் விலை பல மடங்காக உயர்கிறது. 

அதேபோல் இங்கு மின்சாரம்தான் பெரும் தட்டுப்பாடான விஷயம். மின்சாரத்தை மிகக் கவனமாகவே செலவிடுகிறார்கள். அங்கு பல மணி நேரம் மின்வெட்டு உள்ளது. ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாள், காஸாவின் முக்கிய மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. எகிப்து, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளில் இருந்துதான் பெரும் விலை கொடுத்து மின்சாரமும், எண்ணெயும் வாங்குகிறார்கள். உலகம் முழுவதிலிருந்தும் அங்கு ஏராளமான குழுக்கள் பலவித நிவாரணப் பொருட்களைக் கொடுத்து வந்தாலும், அங்கு யாரும் கட்டுமானப் பொருட்களையோ மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர்களையோ எடுத்துச் செல்ல முடியாதபடி தடை உள்ளது. 

காஸாவில் ஹமாஸ்தான் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அமைப்பாக உள்ளது. அவர்கள் காஸாவின் நிருவாகத்தைத் திடம்பட நடத்துகிறார்கள். பத்ஹ் மேற்குக்கரையில் ஆட்சியில் உள்ள போதும், கொள்கை ரீதியாக மிகவும் நீர்த்து விட்டார்கள். மேற்குக் கரையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸின் பல தலைவர்களை பத்ஹ் சிறை வைத்துள்ளது. இந்த இரு பெரும் அரசியல் இயக்கங்களின் பிளவு இஸ்ரேலுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.

No comments:

Twitter Bird Gadget