Tuesday, September 6, 2011

ஏ.ஜி.எம். ஸதக்கா




1998ல் வெளியான "போர்க்காலப் பாடல்கள்" தொகுதியை 1999ல் எனக்குப் படிக்கக் கிடைத்த போது, அக்கவிதைகளை எழுதிய கவிஞரைச் சந்திக்க வேண்டுமென்ற உத்வேகம் என்னுள் கிளர்ந்ததற்கு, அவற்றில் கொட்டிக்கிடந்த யதார்த்தமும் இலாவகமும் எளிமையும் முக்கிய காரணங்களாகும். 

அதிலிருந்து 2 வருடங்கள் கழித்து, 2001ன் பிற்கூறில் முதன் முதலாக ஸதகாவைச் சந்தித்த போது, அவரது எளிமையும் முறுவலித்த முகமும், போர்க்காலப் பாடல்கள் கவிதையை எழுதியவர் இவர்தான் என்பதை நம்புவதை எனக்கு வெகு சிரமமாக்கிற்று. 

எனது பாலைவனத்து பயணங்கள் கவிதைத் தொகுதிக்கான முகவுரை ஒன்றைப் பெறும் பொருட்டு நண்பர் றிஸ்வியுடன் அவரை முதன் முதலில் சந்தித்தேன். பிரபலத்தை விரும்பாத ஸதகா, கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் அவரிடமிருந்து எனது நூலுக்கான முகவுரையையும் பெற்றுத் தந்தார். 

உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட சில ஆக்க இலக்கிய முயற்சிகளும் எனது கணினி அறிவும் அவருக்கும் எனக்கும் இடையிலான உறவையும் உரையாடலையும் அதிகரித்துக் கொள்வதற்கான களங்களை ஏற்படுத்திக் கொடுத்தன.

மட்|மீராவோடை அல்ஹிதாயா மகாவித்தியாலயத்தில் தமிழ் ஆசிரியராக அவர் கடமையாற்றி வந்த காலப்பகுதியில்தான் நான் தகவல் தொழிநுட்ப ஆசிரியனாக அங்கு கால்பதித்தேன்.

எனக்குப் பொறுப்பாக வழங்கப்பட்டிருந்த கணினிக் கற்கை நிலையமும் எம்மிருவரது கற்பித்தல் ஓய்வு நேரங்களும் நாளாந்தம் பல்வேறு தலைப்புகளில் உரையாடவும் சமூக, அரசியல், கலாசார உள்ளக்குமுறல்களைக் கொட்டித் தீர்க்கவும் இலக்கியங்கள் பற்றி பேசிக் களிக்கவும் எமக்குச் சிறந்த வாய்ப்பாகின. மற்றொரு தமிழாசிரியரான ரமீஸ் பர்ஸானும் எமது உரையாடல்களில் விருப்புடன் பங்கு கொள்வார்.

ஸதகாவின் தேர்ந்த அரசியல் நோக்கும், கூர்மையான சமூகப் பார்வையும், யதார்த்தம் வழுவாத நியாயவாதமும் என்னை அவர் பால் பெரிதும் ஈர்த்த அம்சங்கள். 

அவர் அர்ப்பண சிந்தையுடன் மேற்கொண்ட பல்வேறு சமூக, அரசியல் விழிப்புணர்வு தொடர்பான எழுத்து முயற்சிகளில் எனது ஆலோசனையும், குறைந்த பட்சம் கணினி ரீதியான பங்களிப்பும் பெரும்பாலும் இருந்து வந்தன. அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகளும் ஏராளம்.

எனது "இறுக்கம்" சிறுகதைத் தொகுதியைப் பார்த்து மெச்சிய அவர், தனது கதைகளையும் இவ்வாறு தொகுதியாக்க வேண்டுமென ஆர்வம் கொண்டு, அவரது கதைகள் பிரசுரமாகியிருந்த நாளேடுகளையும் சிற்றிதழ்களையும் சஞ்சிகைகிளையும் தேடியெடுத்து என் கைகளில் திணித்து, விரைவில் அவற்றை வெளியிடுவது உங்களது பொறுப்பு எனக் கூறிவிட்டார். 

இரண்டு நாட்களில் அவற்றை கணினியில் தட்டச்சு செய்து முடித்து விட்டேன். எனினும், ஸதகாவின் கதைகளுள் பெரும்பாலானவை 90களைச் சேர்ந்தவையாக இருந்தன. 

2000க்குப் பிந்திய நவீன இலக்கியப் போக்கும் புதிய சொல்லாக்க உத்திகளும் அற்ற பாரம்பரியக் கதைகள் அவை என்பதை எனது ஆலோசனையாக அவருக்கு நான் கூறிய போது, அதனை வாசித்து முடித்த சக ஆசிரியர் ரமீஸ் பர்ஸானும் அதனை வழிமொழிந்தமையினால், தேறிய "நிலவு மகன்" எனும் கதையுடன் இன்னும் சில கதைகளைப் புதிதாக எழுதி தொகுதியை வெளியிடுவதென நாம் மூவரும் தீர்மானித்தோம். 

ஸதக்காவின் சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை விட அவரது கட்டுரைகளே அதிக வீச்சும் வீரியமும் கொண்டவை என்பது எனது கருத்து. 

சிறுகதைத் தொகுதி ஒத்திவைக்கப்பட்ட பின், அவரது கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து, அவற்றை அரசியல், சமூகம், கலாசாரம், இலக்கியம் ஆகிய தலைப்புகளில் பிரித்து தொகுதியாக வெளியிடுவதென்ற தீர்மானத்திற்கு நாம் வந்தோம். 

அவர் தேடியெடுத்துத் தந்த நாளிதழ்களும் சிற்றேடுகளும் நூல்களும் சஞ்சிகைகளும் இன்னும் என்னிடம் இருக்கின்றன. அவற்றில் பிரசுரமாகியிருந்த அவரது கட்டுரைகள் அனைத்தும் எனது கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. 

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட முன் இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் அது தொகுதியாக வெளிக்ககொணரப்பட்டிருந்தால் சமூகத்தில் பெரும் அதிர்வையும் ஸதகாவுக்கு உயிர் அச்சுறுத்தலையும் அது ஏற்படுத்தியிருக்கக் கூடும். 

குறைந்தபட்சம் அவர் உயிரோடிக்கும் காலப்பகுதியிலேனும் அது வெளிக்கொணரப்பட்டிருந்தால் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் பதிலளிப்புகளும் ஆக்கபூர்வமானதாகவும் சுவாரசியமானதாகவும் அமைந்திருக்கக் கூடும். 

துரதிஷ்டவசமாக அவர் இறந்து விட்ட இக்காலப்பகுதியில் அது தொகுதியாக்கப்படுவதில் வீரியம் குறைந்த வியப்புகளும் அனுதாபங்களுமே மிஞ்சும் என நான் கருதுகிறேன். 

எவ்வாறாயினும், தேங்கிக் கிடக்கும் ஸதக்காவின் கனதியான சமுதாய உணர்வுள்ள கட்டுரைகளை சமூகமயப்படுத்தி அவரது சிந்தனைகளுக்கு வலுவூட்டுவதும் அவற்றை பிரசாரம் செய்வது நாம் அவருக்காற்றும் கைம்மாறாக அமையும். 

ஒழுக்கக் கட்டுக்கோப்பும், சமூக சிந்தையும் சுயகௌரவமும் உரிமைகளும் கொண்ட ஓர் உண்மையான இஸ்லாமிய சமுதாயமாக நாம் மிளிர வேண்டுமென்பதே அவரது அவாவாகயிருந்தது. 

No comments:

Twitter Bird Gadget