Monday, September 5, 2011

நிலவு மகன்

அண்மையில் அகால மரணமடைந்த எழுத்தாளர் ஏ.ஜி.எம். ஸதக்காவின் சிறந்த கதைகளுள் ஒன்று இது. 

அவரது மரணம் என்பது நம்ப முடியாத கொடுமுண்மையாக இன்னும் என் ஆழ்மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. 

அவர் விரைவில் வெளியிடவிருந்த சிறுகதைத் தொகுதி மற்றும் கட்டுரைத் தொகுதி என்பன எனது கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு நிறைவு பெற்று விட்டன என்ற உண்மையை அவருக்குச் சொல்லுமுன்பே முந்திக் கொண்ட துயரம் தோய்ந்த அவரது இறப்பின் செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திற்று.

------------------------------------------------------------------------------------------------------------

நிலவு மகன்


ஆந்தைகளின் அலறலும், வெளவால்களின் சிறகடிப்பும் தவிர, மயான அமைதி காத்த இராக்காலம்.... நீண்டு படுத்துக் கிடக்கும் நீலக்கடல் கக்கிய நுரைகளாய், அவிழ்த்து விடப்பட்ட பஞ்சு மூட்டையிலிருந்து சிதறிக் கடிக்கும் பஞ்சுத் துகள்களாய்.... புகை மூட்டமாய்.... எப்படி வேண்டுமானாலும் மேகத்தைச் சொல்லலாம். 

ஆகாயத்தின் அந்தப்புரத்தைத் திரையிட்டு மறைக்கின்ற மேகங்களின் அடாத செயல் அவளுக்கு சிறிது எரிச்சலை ஏற்படுத்தியது. உடம்பில் மெல்லிய சோர்வு, உள்ளமெல்லாம் உறைந்து போன ஏமாற்றம்.... ஏமாற்றமும், சோர்வும் தன் பிள்ளையின் நினைவுகளிலிருந்து தன்னைத் துரத்திவிடக்கூடும் என்ற அச்சம் அவளுக்கில்லை. என்ன செய்து விடக்கூடும் இவை?


தாய்மையின் வலிமையை உணராத தப்பிலிகள், யாரிடம் காட்டுகிறீர்கள் உங்கள் விளையாட்டை? எவ்வளவு நேரமாக அலைகிறேன். வானமே, தந்து விடு, என் பிள்ளை எனக்கு வேண்டும்.... என் பிள்ளை எனக்கு வேண்டும்.... உரத்துக் கத்தினாள். 

அவளுக்கு மேலும் கீழும் மூச்சு வாங்கியது. அவளது சப்தம் யாரையும் காயப்படுத்தியதாக இல்லை. மலை மேடுகளைத் தாண்டிப் போன கூக்குரல், ஒரு அநாதையாய் அவளிடமே திரும்பி வந்தது. 

வெறுமை, ஆயாசம், ஏமாற்றம், துக்கம்.... என இன்னோரன்ன உணர்வுக் கலவைகளால் பிசைந்த துயரம், அவள் தொண்டைக்குள் ஒரு பந்தாக வந்து இறுக்கியது. அவளுக்கு மயக்கம் வந்தது. 

நாவரண்டு, கைகால்கள் நடுங்கின. உடல் துவண்டு தள்ளாடுவது போன்ற பிரமை. கண்கள் இருட்டிக் கொண்டு வர இடுங்கிக் கொண்டு எதிரில் பார்த்தாள். 

வெறுமை படர்ந்த மணல் வெளி.... சற்றுத் தொலைவில் ஆற்றங்கரை.... அதனை அண்டியதாக மலையடிவாரம்....

நாவரட்சியும், தாகமும் போக்க தண்ணீர் வேண்டும். தொலைவில் நடந்து செல்ல கால்களுக்கு வலுவில்லை. நெஞ்சை பலமாக தடவிக் கொண்டே தலையை மறுகையால் இறுகப் பற்றினாள். கீழே குனிந்து உட்கார, சற்று ஆசுவாசமாக இருந்தது. 

படபடப்பும் மெல்லக் குறைந்து கொண்டு வந்தது. தலையை நிமிர்த்தி பார்வையால் ஆகாயத்தில் அலைந்தாள். 

இரக்கமற்ற இரவு தனது இறுக்கம் தளர்ந்து நிர்மலமாக இருந்தது. ‘இருள் கரைந்து போகிறதோ? மேகங்கள் ஓடி ஒழியாதோ? நட்சத்திரங்கள் எல்லாம் எனக்குப் பழிப்புக் காட்டுகின்றனவே, என்ன செய்ய, என் விதி!’

கிழக்கு வான் தொலைவில், கருவுண்ட தாய்மையின் பவரசத்தோடு இராட்சத மேகமொன்று தலை நீட்டியது. அவள் ஆர்வமானாள். மெல்ல மெல்ல மேலே தள்ளாடியபடி வரத்தொடங்கின. அதன் வயிற்றுப் பகுதியில், புகையை எரித்துப் பொசுக்கும் ஆக்ரோசமிக்க வெளிச்சப் பிறப்பு பரவி வந்தது. மேகம் மெல்ல அசைந்தது. அதன் ஓரமாக வெளிச்சம் ஒழுகி வழிந்தது. அவளுக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அவள் கவனமாகக் கூர்ந்து நோக்கத் தொடங்கினாள். மேகம் அசைய, அதன் முதுகுப் புறமிருந்து ஒரு தங்கப் பந்தாய் முகம் காட்டியது அவள் நிலா. 

துள்ளி எழுந்தாள். கைகளை உயர்த்தி அசைத்தாள். “என் பிள்ளை, என் பிள்ளை வந்து விட்டான்”

நிலவு நின்றது, நிதானித்தது, கீழே குனிந்து பார்த்தது, தன் ஒளியால் உலகைக் குளிப்பாட்டியது, மணல் பால் பொழிந்தது, ஆறு மினுமினுங்கியது. 

அவள் உற்சாகத்திற்கு அளவேயில்லை. “என் பிள்ளை களைத்துப் போய் வந்திருக்கிறான். அவனைக் குளிப்பாட்டி அமுதூட்டுவேன்”

முந்தானையை இடுப்பிலே சொருகிக் கொண்டாள். உற்சாகமாக நடக்கத் தொடங்கினாள். கால்களுக்கு இறக்கை கட்டிவிட்டாற் போன்ற பரவசம். நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

அவள் பிள்ளையின் மீதான பாச உணர்வும், அவனைக் காண்கின்ற போது உள்ளம் சிலிர்த்து அவள் அடைகிற புளகாங்கிதமும்... நீங்கள் அனுபவித்ததுண்டா? எப்படிச் சொல்ல அதை?

கண்கள் எட்டிய தூரத்தில் இருக்கும் ஆற்றை நெருங்க, நெருங்க அவள் மனம் பரபரத்தது. ஆற்றங்கரையில் இதமான காற்று ஆரத்தழுவி அவளை வரவேற்றது. கால்கள் ஈரலித்த ஆற்று மணலில் புதைந்து, புதைந்து நடந்த போது குளிர்ச்சி உடம்பினை ஆட்கொண்டது. தண்ணீரில் கால் வைத்தாள், சில்லிட்டது. 

அதோ என் பிள்ளை சின்ன அலைகளின் அசைவுகளில் அழகாக ஆடிக் கொண்டிருக்கிறான். என்னை அழைக்கிறான். 

ஆர்வத்தில் தண்ணீரில் குதித்தாள். சே, என்ன என் முட்டாள்தனம். என் பிள்ளையின் அழகு சுடரும் அற்புதக் கோலத்தை நீரலைகள் கலைத்துப் போட்டு விட்டனவே. குற்றம் என் மேல்தான். அவள் மீது அவளுக்கு சினம் வந்தது. 

அவள் பொறுமையோடு காத்திருக்க ஆரம்பித்தாள். அலைகள் அங்குமிங்கும் அலைந்தன. மெதுமெதுவாக கலைந்த அவள் மகனின் வெளிச்சக் கோலத்தை அலைகள் சேகரிக்கத் தொடங்கின. அலைகளின் உற்சாகமும் பொறுமையும் அவளைக் கவர்ந்தன. தொலைவில் ஆந்தைகள் அலறும் சத்தம் கேட்டன. மலைமுகட்டின் மேற்குப் பக்கம் காற்று ‘ஊ’ என இரைந்து வீசத்தொடங்கியது. காற்றை எச்சரித்தாள். 

ஆற்றில் காற்று எந்தக் கலவரத்தையும் ஏற்படுத்தவில்லை. அவள் மகிழ்ச்சி கொண்டாள். அலைகள் தம் பணியில் கண்ணும் கருத்துமாக சிரத்தையோடு உழைத்துக் கொண்டிருந்தன. அவள் கால்களை இரையென நம்பி மீன்கள் வந்து கடித்தன. அசையாது ஆர்வமிகுதியால் சிலையாகி நின்றாள். 

அலைகள் பணி முடித்தன. அவள் பிள்ளை அவளை சிறிது சிறிதாக பார்த்து வந்தான். முழுமை பொருந்திய அவன் முக தரிசனம் ஒளி சுடரும் பிரதிபிம்பமாய் அவள் முகத்தைத் தழுவிக் கொண்டது. கண்ணுக்குத் தெரியாத பாசத்துடிப்பை, உயிரின் உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்தத் திராணியற்று, கண்களை இறுக மூடி மௌனித்திருந்தாள். 

சிறிது நேரம்தான். ஒரு யுகத்தைப் போல்.... கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள். அவள் பிள்ளை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன அவஸ்தை இது, எங்கோ தொலைந்து போன தன் மகனை காட்டிலும், மேட்டிலும், ஆற்றிலும், ஆகாயத்திலும்.... தேடியலையும் இந்த அவஸ்தை, எந்தத் தாய்க்கும் வரக்கூடாது!

அவனைத் தழுவிக் கொள்ள கைகளை நீட்டினாள். அவளால் நம்ப முடியவில்லை. என்ன நடந்தது. ஏன், என் பிள்ளையின் நெஞ்சில் இரத்தம் கொட்டுகிறதே, இறைவா என்ன கொடுமையிது. ஆற்றில் கலந்த இரத்தத் துளிகள் நீரோடு ஓடி வந்து, அவள் கால்களின் நரம்புகளில் புகுந்து ஊசிகளாய் மேலெழுந்து இதயத்தைத் தைத்து விட்டாற் போல்...! எந்தப் பாவிகள் இதனைச் செய்தனர். ஆகாயத்திலும் உன்னை அமைதியாக வாழ விடாமல், இந்தப் பூமியில் கொடியவர்களின் கொடூரம் எல்லை தாண்டிவிட்டதா? அவளின் மகனின் நெஞ்சைத் தழுவிக் கொள்ள முன்னே நடந்தாள். 

“அந்த, அந்த பைத்தியம் ஆத்துல நிக்கி, ஓடி வாங்கடா”

பின்னால யாரோ சத்தமிடுவது கேட்கிறது. மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். அவள் காதுகள் புடைத்தெழுந்தன....

“என்ன சத்தம்.... யார் இவர்கள்.... ஏன் என்னிடம் ஓடி வருகிறார்கள்?”

அவள் பிரக்ஞை கலைந்தது. உணர்வுக் கால்கள் சிலிர்த்துக் கொண்டன. உலகின் புதிர் முடிச்சு அவளுக்குள் அவிழத் தொடங்கிற்று.

“அந்தோ, என் இழிவு - மனிதர்கள் வடிவெடுத்து என்னைத் துரத்துகிறது”

சபித்தவாறு மறுபடியும் அவள் ஓடத்தொடங்கினாள். 

06.12.2002

No comments:

Twitter Bird Gadget