Thursday, November 24, 2011

ஊர்க்காவலன்


ஆசாத் கொதித்துக் கொண்டிருந்தான். 

சிகரட், கஞ்சா, பியர் எதன் போதும் இவ்வளவு கொடூரச் சிவப்பு அவனது கண்களில் மின்னியதில்லை.

வாரமொரு இரவை கமலாவின் அணைப்பில் கழித்து வந்த கடந்த ஒரு மாத சுகத்தின் கிறக்கம் முற்றாக அவனை விட்டும் தொலைந்து போயிருந்தன. 

அச்சம் கலந்த மலைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர் அவனது கூட்டாளிகள்.

இரவுக் காவலின் போது ஊர்க்கோழிகள் பல சத்தமின்றி அறுந்து பொரிந்து அவன் கூட்டும் இரவுப் பார்ட்டிகளை அலங்கரித்திருக்கின்றன.

எந்தவொரு இறைச்சியிலும் இல்லாத தனி ருசி, கள்ள மாட்டு இறைச்சியில் மட்டும் உள்ளதென்று அவன் கண்டுபிடித்துச் சொன்ன போது, சுற்றியிருந்தோர் கைதட்டி வரவேற்றிருக்கின்றார்கள். 

அவ்வாறு கைதட்டியோரை வைத்துக் கழகமொன்றை நிறுவி, அதற்குத் தலைவனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டபின், ஊரின் முக்கிய புள்ளிகளுள் ஒருவனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன், ஆசாத். 

வெளிநாடுகளுக்குக் கணவன்மாரை அனுப்பி விட்டுத் தனிமையில் வீட்டிலிருக்கும் பெண்களை மலர்த்துவதில் அவன் கண்டுள்ள வெற்றிகளை அவனது கூட்டாளிமார் இன்றும் மலைப்புடன் சிலாகிப்பர். 

செருப்பையோ, தும்புத்தடியையோ தூக்கிக் காண்பித்து முறைத்து, தனது கொழுத்த சட்டைப்பையைக் கவனிக்கத் தவறும் முட்டாள் பெண்கள் சிலரின் தவறுகளை தனக்கும் மட்டும் தெரிந்த இரகசியமாக வைத்திருந்ததனால், கூட்டாளிகள் மத்தியில் தனது இமேஜைப் பாதுகாத்துக் கொள்வதில் நல்ல வெற்றி பெற்றிருந்தான் ஆசாத். 

இப்பேற்பட்ட தமது தலைவன் என்றுமில்லாதவாறு இன்று, அடிபட்ட புலியாக உறுமிக் கொதித்துக் கொண்டிருப்பதன் காரணம் புரியாது திகைத்தனர் அவனது கூட்டாளிகள். 

"கியாஸ்..!! ஒரு பொடிப் பயல். என்ன ஓவர் டேக் பண்ணிட்டாண்டா...."

குசுகுசுப்புகளுக்குப் பின் கியாஸ் யாரென அடையாளங் காணப்பட்ட திருப்தியில் மீண்டும் தமது தலைவனை நோக்கினர் கூட்டாளிகள்.

"எனக்குத் தெரியாமப் பெய்த்தேடா...!"

"கமலாட வீட்டுக்கு அடுத்த ரோட்ல. அவள்ற பேரு என்னமோ சுகுணாவாம். அவளுக்கு வேலயக் குடுத்துட்டாண்டா இவன்...."

எல்லோர் முகத்திலும் ஆச்சரியம் கலந்த வெளிச்சமொன்று தோன்றிப் பரவிற்று.

"அவன சும்மா உடக்கூடாது. பள்ளித் தலைவர்ட்ட செல்லி, அவனெயும் அவளெயும் கூப்புட்டு விசாரிக்கணும், ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வெக்கணும். நம்மட கொன்ட்ரோல்ல இருக்கிற இந்த ஏரியாவுல நமக்குத் தெரியாம ஒரு பிழ நடந்திருக்கு. பாத்துட்டு சும்மா இருக்கலாமா?"

ஆசாதின் கொதிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அவனது கழக உறுப்பினர்களின் நரம்புகளில் உசுப்பேறத் தொடங்கிற்று.

--------------------

பிற்குறிப்பு: இரண்டு நாட்களின் பின், புதிதாத இஸ்லாத்துக்கு வந்த ரஹீமா என்கிற சுகுணாவுக்கும், முகத்தில் இரத்தக் காயங்களுடனிருந்த கியாஸுக்கும் பள்ளித்தலைவர் தலைமையில் திருமணம் இனிதே நடந்தேறியது.

6 comments:

Anonymous said...

பலே பலே

கலைமகள் said...

என்னவொரு அற்புதமான சீர்திருத்தவாதி பார்த்தேளா? இப்படியானவங்க ஊர்க்காவலனாக் கிடைக்க அந்த ஊர் என்ன தவம் செஞ்சிச்சோ... கடவுளே!

கலைஞன் said...

எல்லா ஊரிலும் எல்லா சமயத்திலும் நல்லவர்களின் எண்ணிக்கையை விட அதிகளவு தீயவர்கள் இருந்துதான் வருகின்றார்கள். அவர்களைத் தடுக்கவும் முடியாது, திருத்தவும் முடியாது.

இக்கதையில் குறிப்பிடப்படும் ஆசாத் எனும் ஆசாமி பழந்தின்று கொட்டை போட்டவர் என்பது நன்றாக விளங்குகின்றது.

எங்களது மைசூரில் இத்தகையோர் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கெல்லாம் இக்கதையை அச்சிட்டு இலவசமாக விநியோகிக்க வேண்டும் போலுள்ளது.

கருத்தைச் சொல்வதில், சிறுகதைகள், கவிதைகளை விட வேகமானவை, விளக்கமானவை, அதிக பயனுறுதி மிக்கவை என்பதற்கு உங்களது இக்கதை சிறந்த உதாரணம் என நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் ஸபீர்.

சதீஷ் said...

சிறுகதை சுவாரசியமாகவும் அற்புதமாகவும் உள்ளது. ஆசாதைக் கண்டால் நடு ரோட்டில் நாயடிப்பது போல் அடித்துத் துவைக்க வேண்டுமென புஜம் புடைக்கின்றதப்பா

சுப்ரமணியன் said...

அன்புக்குரிய ஸபீர் ஹாபிஸ்!

உங்களுடைய வலைப்பூ அண்மையில்தான் எனக்கு அறிமுகமானது. சிறுகதைகள் மீது எனக்கு நாட்டம் அதிகம். உங்களது கதைகளில் பெரும்பாலானவற்றை வாசித்து விட்டேன். அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் நன்றாகவும் இருக்கின்றன.

ஒவ்வொரு கதைக்கும் இடையே கால இடைவெளி அதிகமிருக்கும் என்பது எனது கணிப்பு. கதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகள் அவ்வாறு நினைக்கத் தோன்றுகின்றன.

அது ஏனோ தெரியவில்லை. நூல் வடிவில் சிறுகதைகளை வாசிப்பதில் கிடைக்கும் நிறைவு, வலைப்பூக்களில் வாசிக்கின்ற போது கிடைப்பதில்லை.

இருந்தாலும், இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள என் போன்றோர் இலங்கையின் ஒரு மூலையிலுள்ள உங்களைப் போன்றோரின் எழுத்துகளைப் படிக்க உதவுவது இந்த வலைப்பூக்கள்தானே.

Anonymous said...

I think this story was created based on true story

Twitter Bird Gadget