சிரேஷ்ட எகிப்திய அரசியல் அவதானி அஷ்ரப் பயூமி, இக்னா செய்தி வலையமைப்புக்கு
வழங்கியுள்ள நேர்காணலில், பல மில்லியன் எகிப்திய மக்கள், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின்
கொள்கைகள் தொடர்பில் அதிருப்தியுற்றே வீதிகளில் இறங்கிப் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன் டிசியில் வசிக்கும் பயூமி மேலும் தெரிவிக்கையில்,
எகிப்தின் நிலைமையும் அங்கு இடம்பெற்று வரும் நிகழ்வுகளும் கிளர்ச்சியாக அல்லது புரட்சியாக
அல்லது அமெரிக்க ஊடகங்களுக்கான சவாலாக பெயரிடப்படக்கூடும் என்றார்.
இதற்கு என்ன பெயர் வைப்பது என்பது முக்கியமல்ல என நான் நினைக்கிறேன்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆட்சிக்கெதிராக 22 மில்லியன் எகிப்திய மக்களென்னும்
மாபெரும் மக்கள் அணியினர் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர் என்பது மட்டும் உண்மையாகும்.
இம்மக்களின் கோரிக்கை, முர்சியின் அரசாங்கம் ஜனவரி 25, 2011 புரட்சியின் குறிக்கோள்களை
அடையத் தவறியுள்ளமையினால் மீண்டுமொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
ஜூன் 30ம் திகதி எகிப்தில் இடம்பெற்றது வெறும் புரட்சி மட்டுமல்ல,
மாறாக அது, இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அவற்றின் கொள்கையையும் நோக்கிச் சென்று கொண்டிருந்த
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கொள்கைகளுக்கெதிரான மாபெரும் இந்திபாதாவாகும்.
நாட்டின் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு ஒரு வருடம் என்பது
பூர்த்தியான காலமல்ல என்ற போதிலும், அரசாங்கம் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான
சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிவதற்கு ஒரு வருடம் என்பது
மக்களுக்குப் போதுமானதாகும் எனவும் பயூமி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, புரட்சியாளர்களின் தேவையாக இருந்த அம்சங்களுக்கு எதிரான
பாதையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆட்சியை நகர்த்திச் செல்கின்றது என்ற முடிவுக்கு
எகிப்திய மக்கள் வந்திருந்தனர்.
இதனாலேயே ஜனவரி 25 எழுச்சியை விடவும் பாரியளவில் ஜூன் 30 எழுச்சியில்
எகிப்திய மக்கள் பங்குகொண்டனர்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கைகளைப்
பின்பற்றத் தொடங்கியமையே முர்சியின் அரசாங்கத்தை மக்கள் வீழ்த்துவதற்குப் பிரதான காரணமாயிற்று.
கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தியமையும், ஷிமன் பெரசுக்கு
முர்சி எழுதிய கடிதமும் முர்சியின் அரசாங்கம் அமெரிக்க சார்பு அரசாங்கம் என்பதைப் பிரகடனம்
செய்வதாக அமைந்தன எனவும் பயூமி குறிப்பிட்டார்.
பலஸ்தீன விவகாரத்தில் முர்சியின் ஒத்துழைப்பின்மை, முஸ்லிம்
சகோதரத்துவ அமைப்பின் சர்வாதிகாரப்போக்கு, அரசாங்க நிறுவனங்களில் மக்களின் வெறுப்புக்குரியவர்கள்
தலைவர்களாக நியமிக்கப்பட்டமை, சிரியா விவகாரத்தில் முர்சியின் நியாயமற்ற போக்கு, அசாதுக்கு
எதிரான குழுவுடன் முர்சி இணைந்து கொண்டமை போன்றனவும் முர்சியின் அரசாங்கத்தின் மீது
மக்கள் சீற்றம் கொள்ளக் காரணமாக அமைந்தன.
மற்றொரு காரணம், கடந்த மாதத்தில் எகிப்தில் இடம்பெற்ற ஷீஆ முஸ்லிம்கள்
மீதான படுகொலை நடவடிக்கைகளாகும். சலபிகளினால் முடுக்கி விடப்பட்ட இப்படுகொலை நடவடிக்கைகள்
தொடர்பான கூட்டங்களில் முர்சியும் கலந்து கொண்டிருந்தார்.
எகிப்திய மக்கள், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை நிராகரித்து
விட்டு ஆட்சி அமைக்க முடியுமா எனக் கேட்கப்பட்ட போது பதிலளித்த பயூமி, முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பின் ஆதரவாளர்களும் சலபிகளும் இணைந்து எகிப்து மக்களின் மொத்த சனத்தொகையில்
25 வீதமே உள்ளனர் என்பதனால் அவர்களால் பாரிய ஆபத்துகளை அம்மக்களுக்கு ஏற்படுத்த முடியாது
என்றார்.
No comments:
Post a Comment